அன்புள்ள சாரு நிவேதிதா அவர்களுக்கு,
வணக்கம், நலம் விழைகிறேன்.
என்னுடைய 17 வயதில் முதன்முதலாக உங்களை வாசித்தேன். இப்போது 25 வயதில் இருக்கிறேன். இத்தனை ஆண்டுகால வாசிப்பில் விடுபட்டவற்றையும், ஏற்கெனவே வாசித்தவற்றை மீள்வாசிப்பு செய்வதற்கும் உங்கள் புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் ஏற்கெனவே இருந்த உங்கள் புத்தகங்கள் நண்பர்களிடம் வாசிக்கக் கொடுக்க, அவை அப்படியே கைமாறிச் சென்றுவிட்டன. நான் புத்தகங்களைக் கடனளிக்கிறவன் அல்லன் என்றபோதிலும், புதிதாக வாசிக்கத் தொடங்கும் நண்பர்களுக்கு உங்கள் கட்டுரைத் தொகுப்புகளைத் தருவது வழக்கம். அந்த வகையில் கைவிட்டுப் போன நூல்களை ஒவ்வொன்றாக தற்சமயம் வாங்கிக் கொண்டிருக்கிறேன்.
எழுத்து பிரசுரம் வெளியிட்டுள்ள வரம்பு மீறிய பிரதிகள், கனவுகளின் மொழிபெயர்ப்பாளன், ஊரின் மிக அழகான பெண் உள்ளிட்ட உங்கள் நூல்கள் சிலவற்றைச் சமீபத்தில் வாங்கினேன். இவற்றில் ‘வரம்பு மீறிய பிரதிகள்’ தொகுப்பில் (உயிர்மை முதல் பதிப்பில் இடம்பெற்றிருக்கும்) புதுமைப்பித்தனின் படைப்புகள் பற்றிய நீண்ட கட்டுரையைக் காணாமல் மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளானேன். அக்கட்டுரை இந்தத் தொகுப்பில் தான் இருக்கிறது என்று புத்தகத்தை வைத்திருக்கும் நண்பர் ஒருவரிடம் கேட்டு உறுதிபடுத்திக் கொண்ட பிறகே புத்தகத்தை வாங்கினேன். கட்டுரை விடுபட்டிருப்பதற்கான நியாயமான காரணத்தை அறியும் தார்மீக உரிமை உங்கள் வாசகனான எனக்கு இருக்கிறது என்று நம்புகிறேன்.
தமிழ்நாட்டில் உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் மட்டுமல்ல, என்னைப் போன்ற வாசகர்களும் வறுமையில்தான் வாசிப்பை விடாமல் தொடர்ந்து வருகிறோம். கொரோனா நெருக்கடியால் பணியிழந்த போதிலும், பணியில் கடைசி மாதச் சம்பளத்தைச் சேமித்து புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறேன். பதிப்பகம் சலுகைகளை அறிவித்திருந்தாலும், என்னைப் போன்ற நிலையிலுள்ள ஒருவனுக்கு இந்தச் சமயத்தில் புத்தகங்கள் வாங்குவது எவ்வளவு சிரமம் என்பது, சார்த்ரின் க்ரிடிக்-ஐ இரண்டு மாதச் சம்பளத்துக்கு வாங்கிய உங்களைப் போன்ற ஒருவர் அறியாததல்ல. இந்நிலையில், வரம்பு மீறிய பிரதிகளில் புதுமைப்பித்தன் பற்றிய கட்டுரை இல்லாதது எனக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.
எனக்கு அந்தக் கட்டுரை வேண்டும், என்ன செய்வது?
குறிப்பு: தற்சமயம் என்னிடம் உள்ள உங்கள் புத்தகங்களின் ஒளிப்படத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.
அன்பன்
பிரசாத்
டியர் பிரசாத்,
உங்கள் கடிதம் என்னை மிகவும் நெகிழச் செய்து விட்டது. இப்படியும் இளம் வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்து இன்னொரு புறம் ஆச்சரியமும் ஆனந்தமும் ஏற்பட்டது. நிற்க.
புதுமைப்பித்தன் விஷயம். இது பற்றி ஏற்கனவே பலமுறை இணையதளத்தில் விளக்கி விட்டேன். உங்கள் பார்வைக்கு வந்திருக்காதாக இருக்கலாம். அந்தக் குறிப்பிட்ட கட்டுரையை நான் ரத்து செய்து விட்டேன். இப்படி நான் என்னுடைய ஐம்பது அறுபது புத்தகங்களிலும் ரத்து செய்த கட்டுரைகள் அநேகம். மம்மி ரிட்டர்ன்ஸ் என்ற புத்தகம் அளவு நீண்ட கட்டுரையையும் ரத்து செய்து விட்டேன். Literary polemics எதுவுமே தேவையில்லை என்ற நிலைப்பாடே காரணம். ஆனால் புதுமைப்பித்தன் கட்டுரையை நீக்கியதற்கு வேறு காரணம் உண்டு. அதாவது, அந்தக் குறிப்பிட்ட கட்டுரையை எழுதியது 25 ஆண்டுகளுக்கு முன்பு. அதற்கும் முன்பாகக் கூட இருக்கலாம். அப்போதைய என் அரசியல் நிலைப்பாடு வேறு. எல்லா இலக்கியப் பிரதிகளையும் ஒரு அரசியல் பார்வைக்கு உட்படுத்தி நிராகரித்துக் கொண்டிருந்தால் அப்புறம் திருவள்ளுவரைக் கூட ஏற்க முடியாது. தேவாரத்தையும் ஏற்க முடியாது. புதுமைப்பித்தனின் பிரதியில் சில சாதீயக் கருத்துக்கள் உண்டு. அதனால் புதுமைப்பித்தனை ஒட்டு மொத்தமாக நிராகரிக்க முடியாது. அப்படி நிராகரிப்பது மடமை. எல்லா இலக்கியப் பிரதிகளுமே political correctnessஓடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. இன்றைய பொலிட்டிகல் கரெக்ட்னெஸ் இன்னும் ஐம்பது ஆண்டுகள் சென்று தவறாகப் போகலாம். அதனால்தான் அந்தக் கட்டுரையை நீக்கி விட்டேன். அடுத்த மாதம் – அதாவது அக்டோபர் மாத மாதாந்திர ஸூம் சந்திப்புக்கு புதுமைப்பித்தன் தான் சப்ஜெக்ட். அப்போது விரிவாக இது பற்றிப் பேசுவேன். எனவே அந்தக் குறிப்பிட்ட புதுமைப்பித்தன் கட்டுரையைப் பொருட்படுத்த வேண்டாம்.
அடுத்த மாதம் கடைசி சனிக்கிழமை அன்று ஸூம் மூலம் நடக்கும் புதுமைப்பித்தன் குறித்த என் பேச்சைக் கேட்டு விடுங்கள். இந்த மாதம் 26-ஆம் தேதி – வருகின்ற சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு கோபி கிருஷ்ணன் பற்றிப் பேச இருக்கிறேன். இந்த மாத ஆரம்பத்தில் பாதியில் விட்ட பேச்சு. அதிலும் கலந்து கொள்ளுங்கள்.
***
சாருவுக்கு,
பூச்சி 133 படித்தேன். அதில் வணிக எழுத்துக்கும் இலக்கியத்துக்குமுள்ள வித்தியாசத்தைக் கூறியிருக்கிறீர்கள். அதைக் குறித்து என் நண்பன் எழுதிய கடிதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நேரமிருந்தால் தொடர்ந்து படியுங்கள்.
அக்கடிதத்தின் ஒரு பகுதி:
…இலக்கியத்தை வாசித்திருக்க வேண்டியவர்கள் சுஜாதா, பாலகுமாரனை மட்டுமே வாசித்தனர். வாசிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு கூட இவர்களைத் தாண்டி ஒருவரையும் தெரியவில்லை என்று சாரு கூறியுள்ளார். எனக்கும் இப்படிப்பட்ட வாசகர்கள் பரிச்சியம் உண்டு. என் நண்பர் தன் புத்தக அலமாரி நிறைய ராஜேஷ் குமார் நாவல்களை மட்டும் வைத்திருந்தார். அவருக்கு ராஜேஷ் குமாருடன் வாசிப்பு முடிந்து விட்டது. நானும் ராஜேஷ் குமாரிலிருந்து வாசிப்பைத் தொடங்கியதால் இதைக் குறிப்பிடுகிறேன். தொலைக்காட்சியில் வெறுப்பு ஏற்பட்டு வாசிக்க ஆரம்பித்த எனக்கு ராஜேஷ் குமார் சிறந்த கதைசொல்லியாக இருந்தார். ஜெயகாந்தனை வாசித்தவுடன் எனக்கு ஒரு வேறுபாடு புலப்பட்டது. ‘இலக்கியம்’ என்ற விஷயம் அதன் பின்னர்தான் எனக்கு அறிமுகமானது. அப்படி ஒன்று உள்ளது என்பதைக் கண்ட பின்பே ‘இலக்கியம்’ நோக்கி என் வாசிப்பு நகர்ந்தது. சாருவை நான் கண்டடைந்ததும் கூட அப்படித்தான் என்று நினைக்கிறேன். முதலில் எங்கு வாசித்தேன் என்று ஞாபகமில்லை. முதல் நாவலிலிருந்தே வாசிப்பைத் தொடங்கலாம் என்று நீண்ட தேடலுக்கு பிறகு ‘எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்’ நாவலின் ஒரு பழுப்பு நிறப் பிரதியைக் கண்டடைந்தேன். அநேகமாக அது சாருவே பதிப்பித்ததாக இருக்கலாம். இதெல்லாம் ‘Zero degree publishing’ தொடங்கப்படுவதற்கு முன்னால். அதன் பிறகு தொடர்ந்து சாருவை வாசித்து வருகிறேன். நான் சொல்ல வந்தது இதுவல்ல. இலக்கியம் என்ற ஒன்று இருக்கிறது என்பதைக் கண்ட பின்னே அதை நோக்கி தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு ஆரம்ப கட்ட வாசகனுக்கு இலக்கியம் என்ற ஒன்று இருப்பதே தெரியவில்லை. அவ்வளவு ஏன், கதைப் புத்தகம் அதிகம் படிக்காதே என்றுதான் என் ஆசிரியரே நான் வாசிக்கும் புத்தகத்தைக் குறிப்பிட்டுக் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரையில் ராஜேஷ் குமாரும் அசோகமித்திரனும் சாரு நிவேதிதாவும் ஒன்று தான். ‘ஏன் கதை புத்தகம் வாசிக்கற, வேற ஏதாவது பயனுள்ளதா வாசிக்கலாமே?’ பயனுள்ள நூல் எதுவென்று எனக்குத் தெரியவில்லை. அவருக்குப் புரியவைப்பது எப்படி என்றும் எனக்குத் தெரியவில்லை. இலக்கியம் என்ற ஒன்று இருப்பது தெரியாமலேயே வாசித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு சாரு சொன்ன கல்கியே போதுமானதாக இருக்கிறது.
சாருவின் ‘கலகம் காதல் இசை’ புத்தகம் இன்றுதான் வாசித்து முடித்தேன். அதைப் பற்றி பிறகு உனக்கு விரிவாக எழுதுகிறேன். ஒரே ஒரு விஷயம் மட்டும் இப்பொழுதே சொல்கிறேன், அப்புத்தகத்தை வாசித்து விட்டு 12 பக்கத்துக்குக் குறிப்புக்கள் மட்டும் எடுத்துள்ளேன். குறிப்புகளைக் கொண்டு அவர் எழுதியுள்ளவற்றைத் தேட வேண்டும். இதற்கே மலைப்பாக இருக்கிறது. இணையதளம் பரவலாக இல்லாத காலகட்டத்தில் எப்படித்தான் எழுதினாரோ தெரியவில்லை. சரி, விஷயத்திற்கு வருகிறேன். அதற்கு நடுவில்தான் இக்கட்டுரையை சாருவின் இணையதளத்தில் படித்தேன்.
மேலும் ஒரு விஷயம், இலக்கியம் என்ற ஒன்றைக் கண்டுகொள்கிறவர், அது கூட வேண்டாம் – மிகப் பெரிய தேடலில் இருப்பவர் சாருவைப் போல சுஜாதாவின் கட்டுரையில் கூட அல்ல, அவரின் கதையின் வாயிலாக ‘நியாட்ஷே’ என்பவரைத் தேடி வாசித்து அவர் ‘நீட்ஷே’ என்பதைக் கண்டுகொண்டு தன் ஆசானாகவும் கொள்ளலாம் (கலகம் காதல் இசை-யின் முன்னுரையில் எழுதியிருக்கிறார்). அது சாரு போன்ற ஒரு சிலருக்கே சாத்தியமாகிறது. பெரும்பாலானோர் ‘நியாட்ஷே’ என்று வாசித்துவிட்டுக் கடந்துவிடுகின்றனர். அவர்கள் தொடர்ந்து சுஜாதாவை வாசிப்பார்கள். ஆனால் அவர் சொன்னதை ‘நியாட்ஷே’வைத் தேடிச் செல்லமாட்டார்கள். இல்லாவிட்டால் சுஜாதாவின் வாசகர்கள் அனைவரும் இன்று தேர்ந்த இலக்கிய வாசகர்களாக உருமாறியிருப்பார்களே? சுஜாதா இலக்கியத்தைக் குறித்துத் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். ஒருவேளை இலக்கியம் என்பதே சிறு குழுவினருக்கானதுதானோ? இவ்வளவு ஏன்? சாருவின் எழுத்தில் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர்களை நான் இன்னும் வாசிக்கவில்லை. என் வாசிப்பு வேகத்துக்கு அவரின் ‘வரம்பு மீறிய பிரதிகள்’ புத்தகத்தை வாசிக்கவே 10 ஆண்டுகள் ஆகும் போலத் தெரிகிறது…
சாரு, ஒருவேளை இலக்கியம் என்பதே சிறு குழுவினருக்கானது தானோ? என் நண்பன் சொல்வது போல் சுஜாதா தொடர்ந்து இலக்கியம் குறித்துத் தன் பத்தியில் எழுதியுள்ளார். பாலகுமாரனும் தன் வாசகர்களுக்குப் பரிந்துரை செய்துள்ளார். பின் ஏன் இந்த இலக்கியப் புறக்கணிப்பு? இவர்களைக் குறைசொல்ல முடியாது தானே? தமிழ் வணிக எழுத்தைச் சீரழிவு என்று சொன்னால் அதன் மூலகமாவே இலக்கியத்தை அறிந்த என் நண்பனைப் போன்றோர் (நானும் தான்) இலக்கியத்தையே அறியாமல் போகும் வாய்ப்பும் உள்ளது தானே? இதை எப்படி எடுத்துக்கொள்வது?
-நேஹால்
நேஹால், உங்கள் நண்பரின் கேள்விகளைக் கண்டு பிரமித்தேன். இத்தனை உன்னிப்பாக வாசிப்பார்களா? சம்ஸ்கிருதம் அறிஞர்களால் வாழ்வது போல் தமிழும் உங்களைப் போன்ற தீவிரமான வாசகர்களால் வாழும். இப்போது கேள்விகளுக்கு வருவோம்.
இப்போதைய கலாச்சார சீரழிவு நிலைக்குக் காரணம், அந்த இரண்டு அசுரர்கள் மட்டும் அல்ல. (அவர்கள் எழுதிய மலை மலையான பிரதிகள் அப்படிச் சொல்ல வைக்கிறது. சுஜாதாவைப் போல் ஒரே வாரத்தில் ஏழு வாரப் பத்திரிகைகளுக்கு எழுதிய நபர் உலகிலேயே இருக்க முடியாது என்று நினைக்கிறேன்.) ஆசிரியர்களும்தான் காரணம். ஆசிரியர்கள் மட்டும் நன்றாக இருந்திருந்தால் எத்தனை சுஜாதாக்கள் வந்திருந்தாலும் சூழலை ஒன்றும் செய்திருக்க முடியாது. அது கூட வேண்டாம். எங்கள் காலத்தில் ஜெயகாந்தன் இருந்தார். பிறகு ஜெயகாந்தன் இடத்தில் யாரும் வரவில்லை. சுஜாதா ஜெயகாந்தன் இல்லை. ஜேகே வாசிப்புப் பழக்கத்தைக் காயடிக்கவில்லை.
மிக நிச்சயமாக சுஜாதா வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்தார். மூணாங்கிளாஸ் படித்த என் அம்மாவே சுஜாதாவின் விசிறி. அவருக்கு சுஜாதா என்று கூட சொல்ல வராது. பார்வதி என்ற அவருடைய பெயரையே கையெழுத்துப் போடும்போது தவறாகத்தான் எழுதுவார். சுஜாதாவை ஜுஜாதா என்றுதான் சொல்ல வரும். ஸ’வுக்கு அடுத்து ஜ’வை உச்சரிப்பது கொஞ்சம் சிரமம். இப்படி பாமர மக்களிடையே வாசிப்பை அதிகப்படுத்திய சுஜாதா அதே சமயத்தில் எல்லோரையுமாகச் சேர்த்து இலக்கியத்திலிருந்தே அப்புறப்படுத்தி விட்டார். அவ்வப்போது அவர் இலக்கியவாதிகளின் பெயர்களை, புத்தகங்களை அறிமுகம் செய்தாலும் அதெல்லாம் நம்முடைய டி.எம். கிருஷ்ணா சேரியில் போய் சங்கீதம் சொல்லிக் கொடுப்பது மாதிரிதான் ஆனது. யாருமே சுஜாதா சொன்ன பெயர்களைக் கண்டு கொள்ளவில்லை. ஏன் சொல்லுங்கள்? நிலத்தில் வெந்நீரையும் சுண்ணாம்பையும் கொட்டி விட்டு அதன் மேலே விதையைப் போட்டால் முளைக்குமா? நீங்கள் உற்பத்தி செய்வது இலக்கியத்துக்கு எதிரான பிரதிகளை. பிளாஸ்டிக்கில் வரும் கக்கூஸ் மக் செய்யும் ஃபேக்டரியிலிருந்து ஒரே மாதிரி ஒரே அளவில் வெவ்வேறு கலர்களில் வரும் பிளாஸ்டிக் குவளைகளைப் போல் வாரம் ஏழு நாளில் ஏழு தொடர்கதைகளை எழுதிக் கொண்டு அதில் சுந்தர ராமசாமி பெயரையும் மௌனி பெயரையும் தெளித்தால் ஆயிற்றா? ஒரு சாரு நிவேதிதா வேண்டுமானால் யார்ரா அது நியாட்ஷே என்று தேடுவான்? ஏனென்றால், அவன் எழுத்தாளன் ஆவது என்று பதினைந்து வயதிலேயே முடிவு செய்து விட்டான். அதற்காகப் பாடுபட்டபோது கிடைத்தது நியாட்ஷே. அந்தப் பெயரை N என்ற எழுத்தை வைத்துக் கொண்டு காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி நூலகத்தில் இருந்த என்ஸைக்ளோபீடியாவில் மணிக்கணக்கில் அமர்ந்து தேடியது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அதேபோல் இன்னொரு விஷயம். 1976-77இல் நான் சாவியின் ஆசீர்வாதத்துடன் கமர்ஷியல் கதைகளை எழுதத் தொடங்கினேன். அப்போது ஒரு பத்திரிகைப் பேட்டியில் கமல் பிரக்ஞை என்ற பத்திரிகையின் ஆயுள் சந்தாதாரர் என்று சொல்லியிருந்தார். உடனே தஞ்சாவூரில் உள்ள அரசு நூலகத்தில் பிரக்ஞை பத்திரிகையைத் தேடி எடுத்து – அந்த க்ஷணத்திலிருந்து இலக்கிய ஞானஸ்நானம் பெற்றேன். ஆக, நான் இலக்கியவாதி ஆனதற்குக் கமலா காரணம்? கமலின் பேட்டி இல்லையேல் வேறு எப்படியாவது வேறு பத்திரிகை கிடைத்திருக்கும். பிரக்ஞைக்குப் பதிலாக கணையாழி என்று வைத்துக் கொள்ளுங்கள். தேடுபவனுக்கு எந்த ரூபத்திலிருந்தாவது கிடைக்கும்.
சென்னை ஒருமுறை வெள்ளத்தில் மிதந்தது. எத்தனையோ பிராணிகளும் மனிதர்களும் இறந்தனர். எவ்வளவோ பொருள் நாசம் ஏற்பட்டது. ஆனால் வெள்ளம் வடிந்து ஒரு பதினைந்து நாட்கள் சென்னையில் தண்ணிப் பஞ்சம் இல்லை. அதேபோல் இப்போதைய கொரோனாவினால் இந்தியாவின் பொருளாதாரமே வீழ்ந்து விட்டது. இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குத் தலைதூக்க முடியாது. எத்தனையோ லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை சீரழிந்து விட்டது. பலர் இறந்து விட்டனர். ஆனால் வாகனங்கள் ஆறு மாதம் ஓடாததால் சுற்றுச் சூழல் மாசு குறைந்தது. இது போல இலக்கியம் தமிழ்நாட்டிலிருந்து விரட்டப்பட்டது என்றாலும், என்னையும் உங்கள் நண்பரையும் போல ஒரு நூறு பேருக்கு இந்த சுஜாதா பாலகுமாரன்களால் இலக்கியப் பெயர்கள் தெரிய வந்தன. அது கூட சுஜாதா மட்டும்தான் அதைச் செய்தார் என்று நினைக்கிறேன். பாலா தன்னையே இலக்கியவாதி என்று நினைத்ததால் அவர் ஒன்றும் மற்றவர்களை அறிமுகப்படுத்தினார் என்று தெரியவில்லை. அதற்கான வாய்ப்பும் அவருக்கு இல்லை. அவருடைய பாத்திரங்கள் காமாட்சி அம்மன் வாசலில் பக்தி சிரத்தையோடு நிற்கும் பெண்கள். அவர்கள் எப்படி புதுமைப்பித்தனையும் மௌனியையும் வாசிக்க முடியும்? அப்படியாக பாலா தனது பாத்திரங்களை வார்க்க முடியாது. பொய் எழுதினால் அவர்களின் வாசகர்கள் அவரிடம் தங்க மாட்டார்கள். பாலா பொய்யே எழுதவில்லை. நிஜத்தை மட்டுமே எழுதினார். அந்த நிஜம் தட்டையாக இருந்தது. மேம்போக்காக இருந்தது. அதில் இலக்கியம் இல்லை. அது வெறும் பொழுதுபோக்கு. அவ்வளவுதான்.
சுஜாதாவின் வசந்த் சரோஜாதேவியும் படிப்பான். நியாட்ஷேவும் படிப்பான். சுந்தர ராமசாமியும் படிப்பான். அவன் நவீனமானவன். பாலாவின் protoganist பெண். சுஜாதாவின் protoganist ஆண். அந்த வசதி சுஜாதாவுக்கு இருந்தது. முடிந்தால் பிராத்தலுக்குக் கூடப் போகலாம். பாலாவின் பெண்ணோ கண்ணைத்தான் கசக்கும். ஆனால் நிச்சயம் பாலாவின் லக்ஷ்மியின் அல்லது ரமணிசந்திரனின் அழுகுணி ஹீரோயின் அல்ல. பாலா தனது பெண்களுக்கு ஒரு தீர்வை வழங்கினார். அந்தப் பெண்கள் பாலாவிடம் தங்கள் வாழ்க்கையை வழங்கினார்கள். மேலும், பாலா ஒரு சனாதனி. அவருடைய மகனோ மகளோ ஒரு முஸ்லீமைத் திருமணம் செய்து கொண்டிருந்தால் அவரால் அதைத் தாங்கியிருக்க முடியாது. அவர் ஒரு மரபான பிராமணர். ரொம்ப நல்லவர். ஆனால் தீவிரமான இந்து சநாதனி. சுஜாதா அப்படி அல்ல. அவருடைய ஒரு மகனுக்கு சுஜாதா இருக்கும் வரை திருமணம் நடக்கவில்லை. பிறகு செய்து கொண்டார். அப்போது சுஜாதா இல்லை. இன்னொரு பையன் ஒரு ஜப்பானியப் பெண்ணை மணந்து அமெரிக்காவில் குடியேறினார். அது பற்றியெல்லாம் சுஜாதாவுக்குப் புகார் இல்லை. அவர் ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாத நவீனமான நகரவாசி. ஜோதிடத்திலும் நம்பிக்கை இல்லை. இந்திய மரபையே முற்றாக ஒதுக்கியவர். கிட்டத்தட்ட ஒரு பிராமண பெரியாரிஸ்ட். அதனால்தான் கமலும் அவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இருவரும் அய்யங்கார்கள்.
ஆனால் தாங்கள் ஒரு கலாச்சார சீரழிவை நடத்தி முடித்தவர்கள் என்பது இருவருக்குமே தெரியாது. எனவே சுஜாதாவின் எழுத்தினால் இலக்கியத்தை அறிந்த நீங்கள், நான் ஆகிய நூறு பேரை விட ஒட்டு மொத்த சமூகமே இலக்கியத்தைத் தூக்கி எறிவதற்குக் காரணமாக இருந்த போதையை அளித்தவர்கள் அவர்கள் இருவரும். அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் நம்மைப் போல் ஊருக்கு நூறு பேர் இருந்திருப்பார்கள். சுஜாதாவைப் படித்தவர்கள் அசோகமித்திரனையும் ஆதவனையும் படித்திருப்பார்கள். பாலாவைப் படித்தவர்கள் தி. ஜானகிராமனைப் படித்திருப்பார்கள். கோபி கிருஷ்ணனும் தி.ஜ. ரங்கநாதனும் இப்படிப் பட்டினி கிடந்து செத்திருக்க மாட்டார்கள்.
திரும்பவும் சொல்கிறேன். நான் சுஜாதா, பாலகுமாரன் இருவரை மட்டும் குற்றம் சாட்டவில்லை. பாரதியை ஒதுக்கி விட்ட, பாரதியைப் பட்டினி போட்ட காங்கிரஸ்காரர்களிலிருந்து, ராஜாஜியிலிருந்தும் கல்கியிலிருந்தும் இது தொடங்குகிறது. கல்கியின் வாரிசுதான் சுஜாதாவும் பாலாவும். நல்லவேளை, அவர்களோடு அந்த வகையான எழுத்து முடிந்து விட்டது. இப்போது ரமணி சந்திரன்கள்தான் இருக்கிறார்கள். அதனால் சமூகத்துக்குத் தீங்கு அல்ல. இம்மாதிரி நான் இலக்கியமும் அல்ல; நாலாந்தரக் குப்பையும் அல்ல என்ற ரெண்டுங்கெட்டான்களால்தான் இலக்கியம் அழிந்து போகும்.
மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன். ஒரு சமூகத்துக்கு சுஜாதாவும் பாலகுமாரன்களும் தேவைதான். ஆனால் அவர்களை ஆயிரம் பேர் வாசித்தால் அசோகமித்திரனை நூறு பேராவது வாசிக்க வேண்டும். ஆனால் நடந்தது என்னவென்றால், சுஜாதாவின் வாழ்நாளில் அவரை குறைந்தது ஐந்து கோடி பேர் படித்தனர். குமுதம் ஒரு காலத்தில் நாலு லட்சம் பிரதி விற்றது. அவர் அதில் முப்பது ஆண்டுகள் எழுதினார். அதேபோல் இன்னும் ஐந்தாறு பத்திரிகைகளில் எழுதினார். கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். அசோகமித்திரனை அவரது வாழ்நாளில் ஒரு ஆயிரம் பேர் படித்திருப்போம். அவர் மரணத்துக்கு இருபது பேர் சென்றிருந்தோம். பாரதிக்கு எட்டு; அசோகமித்திரனுக்கு இருபது.
சரி, இதற்கு சுஜாதா என்ன பண்ணுவார்?
நான் தான் சுஜாதா என்று வைத்துக் கொள்வோம். சுஜாதா ஒன்றும் ஏனைய எழுத்தாளர்களைப் போல் சோற்றுக்கு சிங்கியடிக்கவில்லை. அப்துல் கலாமின் நண்பர். ஒரு ஆய்வகத்தில் விஞ்ஞானி. மெத்தப் படித்தவர். வாக்கு எண்ணும் எந்திரத்தையே கண்டு பிடித்தவர். கணினிப் பயன்பாட்டின் ஆரம்ப கால விற்பன்னர். நான் சுஜாதா. இத்தனையும் என் கையில். எனக்கு உலக இலக்கியம் அத்துப்படி. சமகால இலக்கியமும் அத்துப்படி. வணிகப் பத்திரிகைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு நான் எங்கிருந்து வந்தேனோ (கணையாழி) அங்கேயே எழுதியிருப்பேன். தி.ஜானகிராமன் தன் அத்தனை நாவல்களையும் கணையாழியில்தான் எழுதினார். ஆதவனும் அப்படியே. குமுதத்தில் சுஜாதாவின் தொடர் வந்தது. குறிப்பிட்ட சாதியினர் எதிர்த்தனர். உடனே நான் (சுஜாதா) அதை சிறுபத்திரிகையில் எழுதி அந்தக் காலத்திலேயே பெருமாள் முருகன் ஆகி, நியூயார்க் டைம்ஸை எட்டி, நோபல் பரிசையே தட்டியிருப்பேன். சுஜாதாவுக்கு அதற்கான அத்தனை திறமையும் இருந்தது. அவரால் மிக நிச்சயமாக ஒரு மரியோ பர்கஸ் யோசாவாக ஆகியிருக்க முடியும். இதை நான் இங்கே சுஜாதா இறந்த பிறகு எழுதவில்லை. அவரிடமே நேரில் சொன்னேன். பதில் சொல்லவில்லை. சிரித்துக் கொண்டார். கமர்ஷியல் பத்திரிகைகளில் உங்கள் திறமையை வீணடித்து விட்டீர்கள் என்றே சொன்னேன். அதற்கு மேல் நாங்கள் சந்திக்கவில்லை.
இன்னொரு விஷயம். கலகம் காதல் இசை என்ற நூலை மலையாளத்தில் வரும் மாத்ருபூமி வார இதழில் 20 ஆண்டுகளுக்கு முன் தொடராக எழுதினேன். அப்போது என்னிடம் கணினி இல்லை. காகிதத்தில்தான் எழுதினேன். நெட்செண்டருக்கெல்லாம் போக முடியாது. அங்கே பெரும் கூட்டமாக இருக்கும். எல்லாவற்றையும் புத்தகங்கள் வாயிலாகவே கற்றேன். எனக்காக அமெரிக்காவில் வசிக்கும் என் வாசகர்கள் பல கடைகளில் தேடித் தேடி சி.டி.க்களை வாங்கி அனுப்புவார்கள். அங்கே கூட எல்லா கடைகளிலும் கிடைக்காது. தென்னமெரிக்காவிலிருந்து வரவழைப்பார்கள். இதெல்லாம் தெரியாத சிலர் நான் கணினியிலிருந்து டவுன்லோட் செய்வதாக கேரளத்தில் புரளி கிளப்பியதால் தொடரைப் பாதியில் நிறுத்தி விட்டேன். கணினி வைத்திருந்தால் கூட Cheb Hasni என்ற பெயர் ஒருவருக்கு எப்படித் தெரியும்? Rai இசை பற்றி எப்படித் தெரியும்? இது என்ன மந்திரமா, மாயமா? படிப்பு, படிப்பு, படிப்பு. ரத்தத்திலேயே தென்னமெரிக்க இசை ஓடிக் கொண்டிருக்கும் ஒருவரால்தான் அந்த நூலை எழுத முடியும்.
சுய புராணம் போதும். முடிக்கிறேன்.
***
மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai