இன்னும் இந்த வணிக எழுத்து விஷயம் கையை விடாது போல் தெரிகிறது. சுஜாதாவைப் பற்றிய ஒரு முக்கிய விஷயம் சுஜாதா ரசிகர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. சுஜாதாவுக்கு அது வசதியாக மறந்து போய் இருக்கும். காரணம், புகழ் என்பது மிகப் பெரிய போதை. அதை அடித்துக் கொள்ள வேறு எந்த போதையும் இல்லை. சுஜாதா மறந்து போன, அவரது ரசிகர்களுக்குத் தெரியவே தெரியாத விஷயம் என்னவென்றால், கணையாழியில் எழுதிக் கொண்டிருந்த சுஜாதா வேறு; வணிகப் பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்த சுஜாதா வேறு. ஒரே ஆள், பார்வை வேறு. கோணம் வேறு. தத்துவம் வேறு. மொழி வேறு. கணையாழியில் சிவாஜியின் நடிப்பையே கிண்டல் செய்திருக்கிறார். கண்ணதாசனின் பாடல்களையும் பீம்சிங்கின் இயக்கத்தையும் இன்னும் மிகப் பலரையும் கிண்டல் செய்திருக்கிறார். அவர் கிண்டலுக்கு ஆட்படாத பிரமுகர்களே இல்லை. கணையாழியில். அப்போது அவர் தில்லியில். சென்னை வந்தார். பிரபல வாரப் பத்திரிகைகளில் மூழ்கினார். பிரமுகர் ஆனார். அப்புறம் சிவாஜி இல்லை, ஜெய்சங்கரின் நடிப்பையெல்லாம் பாராட்ட ஆரம்பித்து விட்டார். ஷங்கரின் இயக்கம் உலகத் தரம் என்றார். ஆளே வேறு ஆள் ஆனார். அதுதான் வெகுஜன உலகம். இதற்கு ஆட்படாத மூன்றே பேர் நாங்கள்தான். உயிர்மையில் எழுதக் கூடியதைத்தான் நான் குமுதத்தில் எழுதுகிறேன். நான்கு ஆண்டுகளாக. நிறுத்திக் கொள்ளலாம் என்று சொல்லும் வரை எழுதுவேன். வாசகர்கள் இதைப் படிக்கத் தயாராகவே இருந்தார்கள், இருக்கிறார்கள். சுஜாதாதான் ஜாங்கிரி கொடுத்தார். அஃப்கோர்ஸ், மரியா பர்கஸ் யோசா போல் அவர் எழுதியிருக்க முடியாது. ஆனால் அதை அவர் கணையாழியில் செய்திருக்கலாம். கணையாழியில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அவர் ஜாங்கிரி பிழிவதில்தான் குறியாக இருந்தார். ஒரு ப்ரிவியூ ஷோ முடிந்து அவரும் நானும் வெளியே வருகிறோம். அப்போது நான் பிரபலம் இல்லை. அவருக்கு முன்னே மைக் நீட்டப்படுகிறது. அந்தப் படம் நரகலை மிதித்தது போல் இருந்தது என்றுதான் கணையாழியில் எழுதியிருப்பார். எனக்கு அப்படித்தான் இருந்தது. ஆனால் மைக்கின் முன்னே அவர் படத்தை ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தார். ஏனென்றால், அவர் அப்போது பல படங்களுக்கு வஜனம் எழுதிக் கொண்டிருந்தார். என் முன்னாலும் இப்போது மைக் நீட்டப்படுகிறது. இயக்குனர் அல்லது ஹீரோ என் மிக நெருங்கின நண்பர். இதோ அவசரமாக பாத்ரூம் போக வேண்டும், ஓடி வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டுத் தப்பி வந்து விடுகிறேன். நான் எப்படி சாமி பொய் சொல்ல முடியும்? கோடி ரூபாய் கொடுத்தாலும் முடியாது. இதுதான் வணிக எழுத்தாளனுக்கும் இலக்கியவாதிக்குமான வித்தியாசம்.
இப்போது ஒரு கடிதம். ஆச்சரியமான கடிதம். இந்தக் கடிதத்தில் பல அபூர்வமான விஷயங்கள் உள்ளன. பொறுமையாகப் படியுங்கள்.
டியர் சாரு,
உங்கள் பதில் கண்டேன்.
தன்னுடைய எழுத்து எதிலிருந்து/ எங்கிருந்து தொடங்குகிறது என்பது குறித்த சுயபிரக்ஞை ஓர் எழுத்தாளனுக்கு நிச்சயம் தேவை. பள்ளி ஆண்டு மலருக்கு எழுதியதில் இருந்து என்னுடைய இலக்கியப் பயணம் தொடங்குகிறது என்று ‘எழுத்தாளர்கள்’ பலர் கூறுவதைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படி அல்லாமல், ‘அக்ரஹாரத்தில் கழுதை’க்கு எழுதிய விமர்சனத்தில் இருந்து உங்கள் எழுத்துப் பணி ஆரம்பமாவதாகப் பல இடங்களில் எழுதியுள்ளீர்கள். போலவே, இலக்கிய ஆக்கங்களில் கணையாழியில் வெளியான ‘முள்’ சிறுகதை. அதற்கு முன்பு எழுதியவற்றை ‘ரத்து’ (இது மிகவும் அழகான, பொருத்தமான பிரயோகம்) செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். [ஆனால், ‘லத்தீன் அமெரிக்க சினிமா: ஓர் அறிமுகம்’ மட்டும் விதிவிலக்கு என்று நம்புகிறேன்; இது வெளியான ஆண்டு 1975, சரிதானே?]
இந்தப் பின்னணியில் புதுமைப்பித்தன் கட்டுரையின் நீக்கம் குறித்த உங்கள் விளக்கம் எனக்கு மிகவும் convincingஆக இருந்தது. எழுத்தாளர்கள் தங்களை, தங்கள் ஆக்கங்களை காலத்துக்கேற்ப மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதன் அவசியத்தை உங்கள் பதில் உணர்த்துகிறது.
ஜே.ஜே: சில குறிப்புகள், ஜெயகாந்தன், சுஜாதா வரிசையில் புதுமைப்பித்தனைப் பற்றிய உங்கள் நீண்ட விமர்சனக் கட்டுரை குறிப்பிடத் தகுந்த ஒன்று. நான் முந்தைய மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்ததைப் போல், உங்கள் கட்டுரைகளை ஒருசேர வாசித்துக் கொண்டிருந்தபோது புதுமைப்பித்தன் கட்டுரையைக் காணாததாலேயே கடிதம் எழுதினேன். தொடர்ந்து உங்கள் தளத்தை வாசித்துவருகிறேன் என்றாலும், இதுகுறித்து நீங்கள் எழுதியவற்றைத் தவறவிட்டு விட்டேன். உங்கள் கறாரான நேரக் கடைப்பிடித்தல்களுக்கிடையில், என்னுடைய கடிதத்தின் பேசுபொருள் உங்களிடம் கோபத்தையோ வேறு எதிர்மறையான உணர்வுகளை ஏற்படுத்தி எழுத்துப் பணியை பாதித்துவிடுமோ என்று அஞ்சினேன். இருந்தும் உங்களிடம் இருந்து எனக்கு விளக்கம் தேவைப்பட்டதால் கடிதத்தை அனுப்பிவிட்டேன். உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி, சாரு!
முள் – கணையாழி
மவுண்ட் ரோடு – பிளாக்கர்ஸ் ரோடு சந்திப்பில் இருக்கும் சிவா பழைய புத்தகக் கடையில் சில மாதங்களுக்கு முன்பு பழைய (’70கள்) கணையாழி, தீபம் உள்ளிட்ட இதழ்கள் சிலவற்றை வாங்கினேன். அவற்றுள் உங்கள் ‘முள்’ சிறுகதை வெளியான டிசம்பர் 1979 கணையாழியும் ஒன்று; நிவேதிதா என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. இதே இதழில் ஆதவனின் ‘புதுமைப்பித்தனின் துரோகம்’ சிறுகதை, நாஞ்சில் நாடனின் ‘தொண்டை வலி’ சிறுகதை, ‘உதிரிப்பூக்கள்‘ திரைப்படத்துக்கு அசோகமித்திரனின் விமர்சனம், இந்திரா பார்த்தசாரதியின் ‘சுதந்திர பூமி – II‘ தொடர், ஆ. கணேசன் என்பவர் எழுதியுள்ள ‘தமிழ்ப் பழமொழிகளில் சாதிய உணர்வு’ என்னும் கட்டுரை, ஞானக்கூத்தனின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு ‘மீண்டும் அவர்க’ளுக்கு ழ வெளியீட்டின் அறிவிப்பு, ‘பரீக்ஷா’வின் டிசம்பர் மாதச் செயல்பாடுகள் குறித்த ஞாநியின் அறிவிப்பு, புதிதாக வெளிவரவிருக்கும் ‘சினிமா இண்டியா’ என்ற பத்திரிகை குறித்த அறிவிப்பு, புதிய புத்தகங்கள் பகுதியில், கி.ரா.,வின் ‘பிஞ்சுகள்’, நாஞ்சில் நாடனின் ‘என்பிலதனை வெயில் காயும்’, அசோகமித்திரனின் ‘விடுதலை’ (நான்கு குறுநாவல்கள்) ‘உண்மை வேட்கை’ [“பெரும்பான்மையான வாசகர்கள் முன்னால் படித்திருக்க வாய்ப்பில்லாத நல்ல கதைகள் பல உள்ளன” – கணையாழி] என இந்த ஒரு இதழ் மட்டுமே மிகுந்த கிளர்ச்சியை உண்டு பண்ணுகிறது.
மற்றோர் இதழில் ஆதவனின் ‘என் பெயர் ராமசேஷன்’ தொடர், இன்னொன்றில் தி.ஜா.,வின் 1978 ‘நளபாகம்’ தொடர் (ஏப்ரல் ‘72 இதழில் ‘மரப்பசு’), ஆகஸ்டு 1978 இதழில் ஆர். சூடாமணியின் ‘நாகலிங்க மரம்’ சிறுகதை, க.நா.சு.,வின் ‘இலக்கியச் சிந்தனைகள்’ தொடர், டிசம்பர் 1978 இதழின் கடிதங்களில் ஒன்று:
“‘தமிழ் உயிரை விடப் போகிறது’ கட்டுரை பற்றி கொஞ்சம் சொல்லியாகணும். மொழி சம்பந்தமாக நாம் செய்திருப்பது பற்றி ஒரு புதிய கோணத்தில்-யாருடைய ப்ரக்ஞைக்கும் இதுவரை எட்டாத ஒரு கோணம்-எழுதப்பட்டுள்ள கட்டுரை. அக்கறையுடன் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை மீது மண் வாரித் தூற்றுவதை விடுத்து யாரும் விசால மனதுடன் அணுகப் போவதில்லை. (இந்த Chavinism தானே நம் சாபத்தீடு!)
கட்டுரையாளர் சொல்கிறாற்போல் “ரெக்கார்டுக்கு இசைத் தட்டு என்று மொழிபெயர்க்கப் போக பேச்சுக்களைப் பதிவு செய்கின்ற காலத்தில் அதை இசைத் தட்டு என்று சொல்ல முடியாமல் தவிக்கிறோம்.” இது ஒரு சின்ன உதாரணம்தான். இருக்கு இன்னும் நிறைய. தனித்தமிழ்க்காரர்களும், மொழிபெயர்ப்பாளர்களும் – தமிழர்களாகிய நாமும்தான் இதையெல்லாம் பற்றிச் சிந்திக்கப் போகிறோமா? இன்ஷா அல்லாஹ்!”
– புதுடெல்லி நிவேதிதா
மேற்கண்ட உங்கள் கடிதம் வெளியாகி இருக்கும் இதழில், சென்னை முத்துக்குமாரசாமியின் கடிதமும் வெளியாகியிருக்கிறது!
சாரு, இவற்றை எல்லாம் ஏன் குறிப்பிட்டு எழுதுகிறேன் என்றால், மிகச் சிறிய வயதிலேயே இலக்கியம் அறிமுகமாகிவிட்ட ஒருவனுக்கு, அவனுடைய ஆதர்சங்களின் எழுத்துக்கள் நேரடியாக வெளியான இதழ்களில் வாசிக்கக் கிடைப்பதென்பது எத்தகைய பரவசத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும், எண்பதுகளில் மெட்ராஸில் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற விசித்திர ஏக்கம் என்னுள் ஆழ்ந்துவிட்டதும், அப்போதைய மெட்ராஸின் இலக்கியச் சூழல் குறித்த உங்களைப் போன்றவர்களின் நினைவுக் குறிப்புகளும் மேற்கண்ட இதழ்களில் என்னைத் தொலைந்து போகச் செய்கின்றன.
நீங்கள் அந்தக் காலகட்டம் குறித்து பல்வேறு இடங்களில் தொடர்ந்து பதிவுசெய்து வந்திருக்கிறீர்கள். ஆனால், அவை போதுமானவை அல்ல என்பது என்னுடைய கருத்து. சென்னை குறித்து காணொளித் தொடர் ஒன்றை வெளியிட்டுவரும் எஸ். ராமகிருஷ்ணன் சமீபத்திய காணொளி ஒன்றில் சென்னையில் நடைபெற்ற இலக்கியக் கூட்டங்களைப் பற்றிப் பேசியுள்ளார். நடந்த ஆயிரமாயிரம் கூட்டங்கள் குறித்த எந்தப் பதிவும் நம்மிடம் இல்லையே என்பதை வேதனையுடன் பதிவு செய்கிறார். உங்கள் தலைமுறை எழுத்தாளர்கள் 1970களின் பிற்பகுதி தொடங்கி (நீங்கள் அப்போது தில்லியில் இருந்தீர்கள் என்றாலும்) நடந்த இலக்கியக் கூட்டங்கள், செயல்பாடுகள், சிற்றிதழ்கள் உள்ளிட்டவை சார்ந்த உங்கள் நினைவுகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பது என்னைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பும் கோரிக்கையும். நீங்கள் அனுமதித்தால், இந்தக் கொரோனா நெருக்கடி முற்றிலுமாக நீங்கிய பிறகு, அதைப் பதிவு செய்வதில் நான் உங்களுக்கு உதவுகிறேன். சார்வாகனிடம் நீங்கள் வேண்டியதைப் போல் என்னுடைய இந்தக் கோரிக்கையை நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
உங்களிடம் சொல்வதற்கும் கேட்பதற்கும் நிறைய இருக்கிறது. ஏற்கெனவே இக்கடிதம் நீண்டுவிட்டதால், அடுத்தடுத்த கடிதங்களில் எழுதுகிறேன். நேரம் அனுமதிக்கும்போது எழுதுங்கள், சாரு. மிக்க நன்றி!
அன்பன்,
பிரசாத்.
எழுபதுகளில் – குறிப்பாக 1976-77இல் சென்னையில் இருந்தேன். அப்போது நான் கலந்து கொண்ட ஒரு ஜெயகாந்தன் கூட்டத்தின் காணொளிப் பதிவு ஒன்றில் நான் நின்று கொண்டிருக்கிறேன். அதை ராகவன் எனக்கு அனுப்பியிருந்தார். இப்போது அசோகா என்ற நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு மாதத்தில் முடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். அது முடிந்ததும் நிச்சயம் இந்த மெட்ராஸ் வேலையைச் செய்யலாம். லத்தீன் அமெரிக்க சினிமாவும் வரும். அசோகாவுக்குப் பிறகு.
***
பிரசாதின் இன்னொரு முக்கியமான கடிதம்:
டியர் சாரு,
என்னால் நம்பமுடியவில்லை. முந்தைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த பழைய கணையாழி இதழ்கள்
ஒன்றின் (ஜனவரி 1980) கடைசி பக்கத்தில் சுஜாதா இலக்கியம்-வணிக எழுத்து
பற்றி எழுதியிருக்கிறார். மிரண்டுவிட்டேன். என்னுடைய மிரட்சிக்குக் காரணம், நான் உங்களை
வாசிக்கத் தொடங்கி இத்தனை ஆண்டுகளில் முதன்முறையாக இப்போதுதான் உங்களுக்குக் கடிதம்
எழுதுவதும், அதையொட்டிய வேளையில் நீங்கள் இலக்கியம்-வணிக எழுத்து தொடர்பான உரையாடலை
உங்கள் தளத்தில் முன்னெடுத்திருப்பதும், அதில் விவாதிக்கப்படும் நபர், இதே விஷயம் குறித்து
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது எதேச்சையாக என் கையில் அகப்பட்டதும்
என எல்லாம் சர்ரியலாக இருக்கிறது, சாரு!
சுஜாதாவின் கட்டுரையை இங்கு இணைக்கிறேன். இதையொட்டிய விவாதங்கள் மேலும் தீவிரமடையும்
என்று தோன்றுகிறது!
பிரசாத்
===
கடைசி பக்கம் – கணையாழி, ஜனவரி 1980
ஒவ்வொரு வருஷமும் டில்லி மாறுகிறது. அதிகாலை புகைப்படலம் அதிகமாகி இருக்கிறது. கட்டிடங்கள் உயர்ந்திருக்கின்றன. முன்பெல்லாம் குளிரில் பிளாட்பாரத்தில் சேலத்து சிறுமிகள் தூங்குவார்கள். இப்போது அவர்கள் தங்கைகளும் உடன் தூங்குகிறார்கள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை முற்பகல் டில்லி இலக்கிய வாசகர் கூட்டத்தில் “ரைட்டிங் ஃபார் கமர்ஷியல் மாகஸின்ஸ்” (writing for commercial Magazines) என்பது பற்றி டில்லி இலக்கியக் கூட்ட மணிப்பிரவாளத்தில் பேசினேன். ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்தேன், எத்தனை நேரம் இப்படி பேசப் போகிறார் என்று ஆதவன் கவலைப்பட்டார். குறுக்கீட்டுக்கு வந்தனித்து விவாதத்தைத் துவக்கி வைத்தேன். எழுத்தாளன் ஒரு இரண்டாயிரம் இன்டலெக்சுவல் (intellectual) வாசகர்களுக்கா லட்சக்கணக்கான சாதாரண வாசகர்களுக்கா எழுதுகிறான் என்று நான் துவக்கியதும் அந்த இரண்டாயிரம் எப்படி கணக்கு என்று கவலையாக ஒருவரும் இந்தத் தரமான வாசகர் கூட்டத்தைக் கொச்சைப்படுத்தாதே என்று ஆதவனும் கோடப்பட கூட்டம் சூடுபிடித்தது (வெயில்). இந்திரா பார்த்தசாரதி கிரிக்கெட் ஸ்கோர் என்ன என்று கேட்டார். என். எஸ். ஜே. எனக்கு ‘விஷன் ஸ்கோர்’ இருக்கிறதா என்று கேட்டார். வாசந்தி நீங்கள் கணேஷ் வசந்த் கதை கணையாழிக்கு எழுதுவீர்களா என்றார். மனைவிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மற்றவர் அடிக்கடி கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, நண்பர் ஜெயராமன் தன் – ஒரு வயது பையனுக்கு ‘தோபார்ளு’ ‘இன்டலக்சுவல்’ என்று வேடிக்கை காட்ட கூட்டம் தொடர்ந்தது.
‘நீ பிரபலமாயிருக்கிறாய். அதனால் உன்னால் இலக்கியம் படைக்க முடியாது’. இப்படி சித்தாந்தத்தை நான் அடிக்கடி சந்தித்து விட்டேன். பிரபலத்தை உடனே தாக்குவதும் சம்பிரதாய சந்தோஷங்களில் ஒன்று. டில்லி பண்டிதர்கள் விதி விலக்கல்ல என்பது தெரிந்தது. ராமநாதனின் சில கேள்விகள் என்னைக் கவர்ந்தன. ‘கதை எழுதும்போது பத்திரிகையை நான் நினைவில் வைப்பதில்லை’ என்று நான் சொன்னதை அவர் நம்ப மறுத்தார். ‘நம்ப விரும்புகிறேன்’ என்றார். ‘குருபிரசாதை’ நான் விகடனில் வெளியிட்டிருக்க முடியும்; ஆனால் ஒன்றிரண்டு வாக்கியங்கள் நிச்சயம் நீக்கப்பட்டிருக்கும் என்பது எனக்குத் தெரியும். அந்த நீக்கத்தால் கதை பாதிக்கப்படும் என்று நான் நினைத்ததால் கணையாழிக்கு அனுப்பினேன். ஆரம்பத்திலேயே அது கணையாழிக் கதை என்று பிரத்யேகமாக முனைந்து எழுதவில்லை என்றேன். எழுதினபின் எந்தப் பத்திரிகை என்று தீர்மானிக்கலாம். பாலசுப்பிரமணியன் ”எதிர்காலத்துக்கு எழுத தீர்மானிக்க வேண்டாமா நீங்கள்” என்றார். அதையும் எழுதும்போது தீர்மானிக்க முடியாது, கூடாது. இந்த தருணத்தில் சாகாத இலக்கியம் படைக்கப் போகிறேன் என்று கெடிகாரத்தை பார்த்துக் கொண்டு எழுத முடியாது என்றும் சொன்னேன்.
மற்றொரு நாள். மாலை தில்லித் தமிழ் எழுத்தாளர் சங்கக் கூட்டம். மறுபடி என். எஸ். ஜே.யின் கேள்விகள் மற்ற எழுத்தாளர்கள் சிலரே விவாதத்தில் பங்கு பெற்றார்கள், காரணம் தலைப்பும் குளிரும் என்று நினைத்தேன். முன்னது ‘எழுத்தின் நோக்கம்’. நோக்கம் இருக்க வேண்டும் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்று நான் ஆரம்பித்ததே விவாதத்தின் வீச்சை வெட்டிவிட்டது. கூட்டம் முடிந்ததும் ஒரு இளைஞர் ‘சிலப்பதிகாரம் இன்றைக்கும் பேசப்படுகிறது என்றால் அதற்கு என்ன காரணம்’ என்றார். காரணம் யோசிப்பதற்குள் கஸ்தூரி ரங்கன் காரைக் கிளப்பிவிட்டார்.
குளிர் எலும்பைத் தொடுகிறது. ஆரம்பத்தில் குறிப்பிட்ட புகைப்படலம் நகரத்தைக் கவ்வுகிறது. அந்தச் சேலத்துச் சிறுமி சாக்குப் பையைத் தன்மேல் சுற்றிக் கொண்டு தன் தங்கச்சியையும் அணைத்துக் கொண்டு மரத்தடியில் தூங்குவதற்கு ஆயத்தம் செய்கிறாள். இலக்கியம் என்பதே ஒரு தேவையில்லாத சமாச்சாரமாகப் படுகிறது, அப்போது. எல்லாக் கதைகளையும் கவிதைகளையும் எரித்து அவளைச் சூடு பண்ண வேண்டும் போலிருக்கிறது.
***
சுஜாதா நாற்பது ஆண்டுகளுக்கு முன்னே எழுதியது சும்மா போங்கு என்பது அவருக்கே தெரியும். மற்றபடி அவருடைய வாதங்களுக்கு நான் ஆரம்பத்திலேயே பதில் சொல்லி விட்டேன்.