காந்தியின் அஹிம்சைத் தத்துவத்தை குறைந்த பட்சம் அவரது சீடர்களாவது பின்பற்றினார்கள். ஆனால் அவர்களுக்கும் அவ்வப்போது அதில் சந்தேகம் வந்து விடும். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அஹிம்சையை எப்படிப் பிரயோகப்படுத்துவது என்பது குறித்த சந்தேகம். ஆள் ஆளுக்கு ஒரு யோசனை சொல்வார்கள். பிறகு எதிலுமே திருப்தி காணாமல் காந்தியையே நாடுவார்கள். அப்போது அவருக்கு வருத்தம் ஏற்படும். நான் போதிக்கும் தத்துவம் உங்கள் குருதி நாளங்களுக்குள் சென்றிருந்தால் இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் எப்படி ஹிம்சையைத் தவிர்த்து நடந்து கொள்வது என்று கேட்டுக் கொண்டிருக்க மாட்டீர்கள் என்பார்.
என் அம்மா அடிக்கடி சொல்லும் ஒரு பழமொழி உண்டு. யானைக்கு அர்ரம்னா குதிரைக்குக் குர்ரம்பானே இவன். அதாவது, சுயபுத்தி இல்லாமல், எதை எப்படி எப்போது செய்வது என்ற சமயோஜித எதார்த்த குணம் இல்லாதவர்களை அப்படிச் சொல்வார்கள் அம்மா. அப்படித்தான் பல நண்பர்கள் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஒரு அன்பர் சற்று விரிவாகவே எழுதியிருக்கிறார். நண்பருக்கு நல்ல ஞாபக சக்தி போல. நான் சிங்கப்பூர் சென்றிருந்த போது நண்பர்கள் அனைவரும் தாங்கள் எழுதிய புத்தகங்கள் அனைத்தையும் கொடுத்தார்கள். என்னால் எடை தூக்க முடியாது, ஒரு கிலோ கூட தூக்க முடியாது, ஹ்ருதயத்தில் ஐம்பது சத அடைப்போடு வாழ்கிறேன் என்று பலமுறை எழுதி விட்டேன். யாரும் அதையெல்லாம் படிப்பதே இல்லை. மேலும், அவர்களிடம் ”சிங்கப்பூரிலிருந்து நான் சென்னை திரும்பவில்லை. தாய்லாந்தில் உள்ள கோசுமாய் என்ற தீவுக்குப் போகிறேன். பாங்காக் போய் அங்கே இருந்து இன்னொரு விமானம் பிடித்து ஒரு ஊருக்குப் போய் அங்கேயிருந்து கடலிலும் சாலை வழியாகவும் எக்கச்சக்கமாக பயணம் செய்ய வேண்டும்” என்றும் சொல்லி விட்டேன். இருந்தாலும் பல எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய முக்கியமான புத்தகங்கள் அனைத்தையும் எனக்கு அன்புடன் கொடுத்து விட்டார்கள்.
சிங்கப்பூர் விமான நிலையத்திலேயே பாதி புத்தகங்களைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டான். அளவுக்கு மீறிய எடை. இதில் அதியற்புதமான வைன்களும் போச்சு. மீதி புத்தகங்களைப் பொதிமூட்டை மாதிரி சுமந்து கொண்டு பஸ்ஸில் போய் படகில் ஏறினேன். அது ஒரு சிறிய கப்பல். மேல் தளத்தில்தான் பயணிகளுக்கான இடம். கீழ்த்தளம் மாலுமிகளுக்கானது. மேல் தளத்தில் ஏற ஒரு செங்குத்தான ஏணி. என்னால் ஒரு படி கூட ஏற முடியவில்லை. முதுகில் பெரும் புத்தகச் சுமை. பயணங்களில் நான் சுமை எடுத்துச் செல்ல மாட்டேன். ஒரு ஜீன்ஸ், மூணு சட்டை, பத்து ஜட்டி. இவ்வளவுதான் மொத்த எடையுமே. ஆனால் புத்தக மூட்டை இருக்கும் இருபது கிலோ. எல்லா புத்தகங்களையும் எடுத்துக் கடலில் வீசி விட்டு படி ஏறினேன்.
இப்படி எத்தனையோ மூத்த எழுத்தாளர்களை அவர்களின் பயண காலத்தில் சந்தித்து நம் புத்தகங்களைக் கொடுத்து அவர்களைச் சித்ரவதை செய்து வருகிறோம். அவர்களும் நாகரீகம் கருதி இதை வெளியே சொல்லாமல் தங்களுக்குள்ளேயே குமைந்து கொண்டிருக்கிறார்கள். நான் ஒரு ஆள் தான் வெளியே சொல்கிறேன்.
உடனே என்ன செய்தார்கள் தெரியுமா? சொல்லி வைத்தாற்போல் யாருமே எனக்குப் புத்தகம் கொடுப்பதில்லை. அடப் பாவிகளா! யானைக்கு அர்ரம் என்றால் குதிரைக்குக் குர்ரமா? அதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். என் பேரன் வயது, என் மகன் வயது எழுத்தாளர்களின் புத்தகங்களையெல்லாம் நான் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு நம் எழுத்துக்குக் காசு கொடுக்கிறார்களா? ஒரு ஜப்பானிய ஆங்கிலப் பத்திரிகையில் 500 வார்த்தைகளில் ஒரு பத்தி எழுத என்னை அழைத்தார்கள். 500 டாலர் சன்மானம். ஆனால் அவர்கள் போட்ட ஒரு நிபந்தனையால் அது தவறி விட்டது. சென்ற மாதம் நடந்த ஒரு கலாச்சார நிகழ்வைப் பற்றி இந்த மாதம் எழுத வேண்டும். அப்பா சாமிகளா, எங்கள் நாட்டில் கலாச்சார நிகழ்வே நடப்பது இல்லை, சென்ற மாதம் எங்கள் ரஜினி அரசியலில் குதிக்கும் முன்பாகவே விலகி விட்டதாக அறிவித்தது மட்டும்தான் எனக்குத் தெரிந்து நடந்த ஒரே ஒரு கலாச்சார நிகழ்வு, ரொம்ப யோசித்தால் கமல்ஹாசன் எழுதிய கவிதை ஒன்று விகடனில் வெளிவந்தது, அதை வைரமுத்து பாராட்டி ஒரு வாழ்த்துக் கவிதை எழுதினார். இதையும் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம். எழுதித் தரவா என்று கேட்டேன். பிறகு இப்படியே ஒரு பஞ்சாயத்து ஓடி கடைசியில் நான் “இப்படி நிபந்தனையெல்லாம் போட்டால் எழுத முடியாது, நான் எழுதுவதை நீங்கள் போடுவீர்களா?” என்று கேட்க, விஷயம் தொங்கலில் உள்ளது.
ஒரு வார்த்தைக்கு ஒரு டாலர் தருகிறான் வெளிநாடுகளில். இங்கே ஒரு வார்த்தைக்கு ஒரு ரூபாய். பல பத்திரிகைகளில் அம்பது பைசா. அதனால்தான் ஷோபா சக்தியின் இச்சாவை 300 ரூ. கொடுத்து வாங்கிய போது நம்மிடமிருந்து வித்தை கற்றுக் கொண்ட நம்முடைய தம்பி நமக்கு ஒரு பிரதி தரவில்லையே என ஆதங்கப்பட்டேன்.
இதெல்லாம் இளைய எழுத்தாளர்கள் ஆசிரியர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை. உங்களுக்கு வித்தை தந்ததோடு உங்கள் புத்தகங்களையும் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டுமா?
நான் எழுதியது என்ன? பயணம் செய்யும் போது கொடுக்காதீர்கள். சுமை தூக்க வைக்காதீர்கள். எங்காவது யாரையாவது அகஸ்மாத்தாகச் சந்திக்கும்போதா திருமணப் பத்திரிகையைக் கொடுப்பீர்கள்? ஏன் என் விலாசத்துக்கு ஒரு கொரியரிலோ தபாலிலோ அனுப்பினால் என்ன குறைந்து விடும்? என் தோழியும் உலகப் புகழ் பெற்ற நடனக்காரருமான டிஷானி தோஷியின் முதல் நாவலுக்கு அணிந்துரை சல்மான் ருஷ்டி. எப்படி அவரைப் பிடித்தீர்கள் என்று கேட்டேன். அவரை நேரில் பார்த்துக் கொடுப்பதற்காகவே லண்டன் சென்றேன் என்றார் டிஷானி. ருஷ்டி அணிந்துரை கொடுப்பதும் நான் உங்கள் புத்தகம் பற்றி எழுதுவதும் ஒன்று அல்ல. மேலும், நான் உங்கள் புத்தகத்தைப் படிக்காமலேயே போகவும் வாய்ப்பு இருக்கிறது. ப்ரமோஷன் என்று வந்தால் இதையெல்லாம் பார்க்கக் கூடாது. மார்ஜினல் மேன் நாவலை நான் சுமார் 30 வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்குக் கடும் செலவு செய்து அனுப்பினேன். குரியர் செலவே ஒரு லட்சம் ரூபாய் ஆகியிருக்கும். ArtReview Asiaவில் மட்டும் மதிப்புரை வந்தது. இன்னொரு பத்திரிகை (Music & Literature) ஒரு நேர்காணல் கேட்டார்கள். நாவலிலிருந்து ஒரு பகுதியை வெளியிட்டு பேட்டி எடுத்தால் தருகிறேன் என்று சொன்னேன். பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால், சல்மான் ருஷ்டி, ஹாருகி முராகாமி போன்றவர்களின் பேட்டியை அந்தப் பத்திரிகையில் போட்டால் அவர்களின் நாவலிலிருந்து Excerpts போடுகிறார்கள். நமக்கு மட்டும் என்ன?
ஆங்கிலத்தில் எப்படித் தெரியுமா? என்னுடைய Lust Stories of K. Perumal & Some Footnotes என்ற நாவல் விரைவில் வெளிவர இருக்கிறது. இதற்காக நான் ஒரு ஐம்பது விமர்சகர்களுக்குப் பணம் கொடுத்து மதிப்புரை எழுதச் சொல்ல வேண்டும். இது ஏதோ லஞ்ச ஊழல் விவகாரம் என்று நினைத்து விடாதீர்கள். அவர்கள் அனைவருமே மதிப்புரை எழுதுவதைத் தொழிலாகக் கொண்டவர்கள். மதிப்புரை எழுதுவது மட்டுமே அவர்களின் தொழில். நாம் செலுத்துவது கட்டணமே ஒழிய லஞ்சம் அல்ல. அவர்களுக்கு அந்த நூல் பிடிக்கவில்லை என்றால் திட்டியும் எழுதுவார்கள். பிடித்தால் பாராட்டுவார்கள். அவர்கள் செலவிடும் நேரத்துக்கான கட்டணமே நாம் செலுத்தும் பணம். இதற்காக எனக்கு ஒன்றிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும். அவர்களிடம் அதிக பணம் கொடுத்து, கோல்மால் பண்ணி, பாராட்டி எழுத வைக்க முடியாது. அவர்கள் நினைப்பதை எழுதுவதுதான் அந்தத் தொழிலின் தர்மம்.
இம்மாதிரி வழிமுறைகளெல்லாம் தமிழில் இல்லை. திருடன் மணியன் பிள்ளை என்று ஒரு புத்தகம். நான் அது பற்றித் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பிரச்சாரம் செய்தேன். ஒரு திருச்சபை ஊழியனைப் போல் பிரச்சாரம் பண்ணினேன். என் பிரச்சாரத்தினாலேயே தனியாக 2000 பிரதிகள் விற்றிருக்கும். ஆனால் அந்தப் புத்தகத்தை என் நண்பர் அருணாசலம்தான் எனக்காகக் காசு போட்டு வாங்கித் தந்தார். இப்போது இச்சா. 2000 பிரதிகள் அல்ல. ஒரு 200 பிரதியாவது நான் சொன்னதற்காகத் தனியாக விற்கும். கருப்புப் பிரதிகள் பதிப்பகத்திற்கு மேலும் நல்ல புத்தகங்களை வெளியிட அந்தத் தொகை உதவும். ஆனால் நான் இச்சாவை காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டியிருக்கிறது.
இதுவே இந்தப் புத்தகங்களைப் பற்றி வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதினால் இந்த நூல்கள் இன்னும் அதிகமாக விற்கும். அதற்கும் நான் காசு கொடுத்துத்தான் புத்தகம் வாங்க வேண்டும். எனக்குக் கடிதம் எழுதி என்னைக் கண்டிக்கும் என் அன்பான வாசகர்களுக்கு இந்த எளிய விஷயம் ஏன் புரிய மாட்டேன் என்கிறது? நான் உங்கள் புத்தகம் பற்றிப் பல தளங்களில் எழுதுகிறேன். அதற்கு ஒரு மதிப்பு இருக்கிறது. புத்தகமும் விற்கிறது. அதை நானே எப்படி காசு கொடுத்து வாங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? உங்களை விட எனக்குத்தான் புரிய மாட்டேன் என்கிறது.
முன்பெல்லாம் மதிப்புரைக்கென்றே 200 பிரதிகள் தனியாக அச்சிடுவார்கள். அதாவது 1200 என்பது கணக்கு. ஆயிரம் விற்பனைக்கு. 200 மதிப்புரைக்கு. இப்போது அச்சடிக்கும் பிரதிகளே 200 தான் என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும், மதிப்புரைக்கு என்று அதில் பத்தை எடுத்து வைக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை.
பா. வெங்கடேசன் அவருடைய புத்தகங்களை உடனுக்குடன் அனுப்பி வைத்து விடுவார். லக்ஷ்மி சரவணகுமார் நேரிலேயே கொண்டு வந்து கொடுத்து விடுவார். ஒரு புத்தகத்தை லக்ஷ்மி எனக்கு பிடிஎஃப் ஆகவே அனுப்பினார். சரவண கார்த்திகேயன் என்னை நேரில் பார்த்தால் கொடுப்பார். (அதை மட்டும் தவிர்த்து விடுங்கள் நண்பர்களே!) ஆனால் நானே காசு கொடுத்து வாங்குவது நியாயம் அல்ல. நேற்று சுனில் கிருஷ்ணன் அவரது நூல்களை அனுப்பி எழுதியிருந்த கடிதம் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. ”நீங்கள் இதையெல்லாம் படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டேன். உங்கள் நூலகத்தில் இவை இருந்தாலே போதுமானது.” இந்தியப் பாரம்பரியத்தில் ஊறின ஒரு மனம்தான் இப்படி எழுதும்.
க.நா.சு.வின் பாதங்களில் கரிச்சான் குஞ்சு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினாராம். உன்னை விட நான் ஏழு வயதுதான் மூத்தவன், தெரியுமா என்று கேட்டாராம் க.நா.சு. ”வணங்கியது வயதுக்கல்ல; உங்கள் எழுத்துக்கு” என்று பதில் அளித்தார் கரிச்சான் குஞ்சு. இதுதான் இந்திய மரபு. இதற்காக எல்லோரும் எல்லார் காலிலும் விழ வேண்டுமா என்று கொனஷ்டை பேசக் கூடாது. இதன் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள். ஐயாயிரம் ஆண்டுகளாக வந்து கொண்டேயிருக்கும் ஒரு தொடர் சங்கிலியைப் போன்ற மரபணுவின் வாரிசுகள் நாம்.
தீராக்காதலி என்பது என் நூல் ஒன்றின் பெயர். இந்தத் தீரா என்றால் என்ன? இதையெல்லாம் நாம் சிந்தித்துப் பயன்படுத்துவதில்லை. நமது நினைவிலி மனதில் இந்த ஐயாயிரமாண்டு மரபின் நதி ஓடிக் கொண்டிருக்கிறது. தீர் என்பதன் எதிர்ப் பதம் தீரா. தீர் என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. முற்றுப் பெறுதல், நோய் தீர்தல், உறவு அற்றுப் போதல், ஒன்று இல்லாமல் ஆதல், அழிதல், கழிதல், உரிமையாதல், நிச்சயம் செய்தல், தீர்மானம் செய்தல், தேர்ந்த (தீர்த்த வாசகன்), முதிர்தல் (தீர்ந்த ஞானி), விட்டு விடுதல், வரி போடுதல், சாயமிடுதல் என்று இன்னும் எக்கச்சக்கமாக உள்ளன. சாணை போடுதல் என்று கூட ஒரு அர்த்தம் உள்ளது.
இவ்வார்த்தை இலக்கியத்தில் எந்தெந்த இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று நிகண்டு சொல்கிறது. திருவினைத் தீராமை யார்க்குங் கயிறு. குறள் 482.
பாய்ந்தூதிப் படர்தீர்ந்து – கலித்தொகை 66
சென்று தீர்வன வெனைப்பல கோடியுஞ்சிந்தி – கம்பராமாயணம் முதல் போர் 238
ஆயிரயோசனையாழமுந் தீர – கம்பர் சேதுபந்தனம் 45
தீர்ந்தவாறென்கொல் – திவ்யப் பிரபந்தம் 1, 42
தீர்தலும் தீர்த்தலும் விடற் பொருட்டாகும் – தொல்காப்பியம் – சொல் – 318
நம் காலத்தில் தர்மு சிவராமு இந்தத் தீராத என்ற வார்த்தையை நம் எல்லோர் மனதிலும் மறக்கவே முடியாதபடி பொதிந்து விட்டுப் போய் விட்டார்.
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.
இந்த மரபின் நதி, ஞாபகக் கிடங்கு போன்றவை பற்றி உங்களுக்கு நேரமிருந்தால் ஜாக் தெரிதாவின் Archive Fever: Freaudian Impression என்ற புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். அதில் அவர் ஞாபகங்களின் கிடங்கு, ஞாபகங்களின் பெருவெளி, ஞாபகங்களின் புதையலறை, ஞாபகங்களின் குகை என்று ஏராளமான படிமங்களை உருவாக்கிக் கொண்டு செல்கிறார். அது எல்லாமே நான் மேலே சொன்னதுதான். மேற்கத்தியர்களுக்கு மொழிக் கிடங்கு என்பது ஒரு பருப்பொருள். கீழை தேசத்தவர்களுக்கு அது வணக்கத்திற்குரியது. காரணம், மேற்கத்தியர் எதையுமே ஒரு பயன்பாட்டு ரீதியில்தான் பார்க்கப் பழகியிருக்கிறார்கள். அதற்குள் நான் இப்போது சென்றால் இது ஒரு தனி நூலாகி விடும்.
இதற்கெல்லாம் அர்த்தம், கண்ணை மூடிக் கொண்டு வழிபடுதல் என்பது அல்ல. என்னுடைய பிரதான மாணாக்கர்களான சீனியும் காயத்ரியும் என்னுடைய 90 சதம் அபிப்பிராயங்களை மறுப்பவர்களே ஆவர். ஆனால் என்னுடைய அடிப்படையான அறிதல் முறையை அறிந்து கொண்டவர்களாக அவர்களை நான் பார்க்கிறேன். என்னுடையது ஏதோ ஒரு இலக்கியக் கோட்பாடு அல்ல. வாழ்வியல் கோட்பாடு. அந்த இருவராலும் பண விஷயத்தில் ஒருத்தரை ஏமாற்ற முடியாது. பொய் சொல்ல முடியாது. காரியம் ஆவதற்காகக் கூழைக் கும்பிடு போட முடியாது. யாரையும் ஒருபோதும் சுரண்டுவதற்குத் துணை போக முடியாது. என் எழுத்தின் அடியோட்டத்தை ஸ்பரிசித்து விட்டால் இது அத்தனையும் உங்களை அறியாமலேயே உங்கள் குருதியில் கலந்து விடும்.
நான் ஒரு கதை எழுதிக் கொடுத்தால் ”இதை ரத்து செய்து விடுங்கள்” என்று சொல்லிக் குப்பையில் போடும் உரிமையும் இவர்களுக்கு உண்டு. இது நான் கொடுத்தது அல்ல. இதுதான் இந்தப் பள்ளியின் அடியோட்டம். என்ன இது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம். ஆசிரியர் – மாணாக்கர் இடையிலான அதிகாரம் இங்கே இல்லை என்கிறேன். அவ்வளவுதான். யு.ஜி. கிருஷ்ணமூர்த்தி இதை நடைமுறைப்படுத்தியிருக்கிறார். ஆனால் அவரைச் சூழ்ந்திருந்த அத்தனை பேரும் யு.ஜி. அல்ல என்பது அத்தனை பேருக்கும் தெரியும். உலகிலேயே பயங்கரமான புலி யு.ஜி.யிடம் பூனைக்குட்டியைப் போல் தழைந்து நடக்கும். அந்தப் புலி அவரது மாணாக்கர்களிடம் அப்படி நடக்குமா? ஆனால் யு.ஜி.யைப் பார்த்து, ”என்ன யு.ஜி. முட்டாள்தனமாக உளறுகிறீர்கள்?” என்று பூஜா பட்டால் கேட்க முடியும். மகேஷ் பட்டாலும் கேட்க முடியும். அந்த சமத்துவத்தையே நான் சொல்கிறேன். என்னை எல்லோரும் சாரு என்று அழைப்பது ஒரு உதாரணம்.
இதை எழுதும் போது என் மனதில் பட்ட பெயர்களைச் சொல்லியிருக்கிறேன். மற்றும் பலர் இருக்கிறார்கள். வெகு தூரத்தில் கூட இருப்பார்கள். என் அருகில் இருக்கும் ஒருத்தர் நாளை ஏதேனும் மோசடிச் செயலில் மாட்டினார் என்றால், அவர் வெறுமனே என்னுடைய ”ஒளிவட்ட”த்துக்காக என்னருகே நடமாடிக் கொண்டிருக்கிறார் என்றுதான் பொருள். என் எழுத்தின் ஒரு அட்சரத்தைக் கூட அவர் உள்வாங்கிக் கொள்ளவில்லை. அவர்களை எனக்கு ஆரம்பத்திலேயே அடையாளம் தெரிந்து விடும். அப்பாலே போ என்று என்னால் விரட்ட இயலாது. நான் நிறுவனம் அல்ல. எத்தனையோ பேர் என்னை வாசிக்கிறார்கள். என்னோடு பயணம் வருகிறார்கள். சீலேவுக்கு என் கூட வந்த நண்பர் சாந்த்தியாகோ நகரில் இருந்த ஒரு தமிழ் ஓட்டல் பணியாளரிடம் போய் நீ வா போ என்று மரியாதைக் குறைவாகப் பேசி நடந்து கொண்டார். ஒரு தேர்ந்த பண்ணையார் மனோபாவத்தை நான் நேரில் கண்டேன். பணியாளர் சென்ற பிறகு அவரைக் கடிந்து கொண்டேன். அடுத்த முறை அவரோடு பயணிக்க மாட்டேன். அவ்வளவுதான் என்னால் கவனம் எடுத்துக் கொள்ள முடியும்.
மூத்தோரை மதித்தல் எனில் கண்மூடித்தனமான பக்தி அல்ல. ஆனால் அதே சமயம் மக்காலே கல்வி முறை சொல்லித்தரும் நன்றி கெட்டத்தனமும் அல்ல. குரு நிந்தனை என்பது பஞ்ச பாவங்களையும் விட கொடியது என்கின்றன கீழைத் தேய நூல்கள். மீண்டும் விவேகானந்தரிடமிருந்தே உதாரணம் சொல்கிறேன். ஒரு அமெரிக்க தனவந்தர் விவேகானந்தரின் அறப்பணிகளுக்குப் பெரும் பொருள் தானம் செய்த பிறகு நன்றி என்ற சொல்லை எதிர்பார்த்திருக்கிறார். ஞானி சொல்லவில்லை. அவர் அது பற்றி ஞானியைக் கேட்டபோது, ”கொடுக்கும் கரம் தாழ்ந்து இருக்க வேண்டும் என்பதே இந்திய மரபு” என்றார் ஞானி.
தத்துவார்த்த விஷயங்களை விட்டு விட்டு லௌகீகமாகப் பேசுவோம். எனக்கு சில புத்தகங்கள் வாங்க வேண்டும், ஒருநாளாவது புத்தக விழா போய் வருகிறேன் என்றேன் அவந்திகாவிடம். கூடவே எண்பது வயதான வண்ணநிலவனும், எழுபது வயதான கலாப்ரியாவும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றேன். என்ன, வண்ணநிலவனுக்கு எண்பது வயதா, எங்கே கூகிளைத் திற என்றாள். எழுபத்து இரண்டுதான். அதெல்லாம் நீ போகக் கூடாது, உனக்கு ஏற்கனவே மூச்சு விடுவதில் பிரச்சினை இருக்கிறது என்று மூடி விட்டாள் கடையை.
எனக்கு கலாப்ரியா எழுதிய நாவல்களை வாங்க வேண்டுமாக இருக்கிறது. என்னிடம் ஏற்கனவே அவரது முதல் நாவலான வேனல் இருக்கிறது. அவரோ வருஷத்திற்கு ஒரு நாவல் எழுதுகிறாற்போல் தெரிகிறது. அப்படி வேனலை அடுத்து இரண்டு நாவல்கள் வந்து விட்டன. சிறுகதைகளும், சினிமா பற்றிய புத்தகமும் கூட. இது அத்தனையும் நான் உடனடியாகப் படித்தாக வேண்டும். இதற்கு ஒரு விசேஷமான காரணம் உண்டு. இரண்டு காரணங்கள். ஒன்று, கலாப்ரியாவுக்குக் கிட்டத்தட்ட என் வயது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையெல்லாம் பார்த்தவர். மட்டுமல்லாமல் திராவிட இயக்கத்தின் எழுச்சியை அவர் எவ்வாறு மதிப்பிடுகிறார் என்று எனக்குத் தெரிந்து கொள்ள ஆசை. அவர் பிராமணர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது எனக்குக் கூடுதல் ஆர்வத்தைத் தருகிறது. நிச்சயமாக அவர் பார்வை ஞானக்கூத்தனின் பார்வைக்கு எதிரானதாகவே இருக்கும்.
இன்னொரு காரணம், இப்போது மனுஷ்ய புத்திரன் ஒரு நாவல் எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த நாவலை உடனடியாக நமக்குப் படிக்கத் தோன்றும்தானே? அது கிட்டத்தட்ட அடுத்தவரின் டயரிப் புத்தகத்தைப் படிக்கும் ஆர்வம் இல்லையா? அதிலும் இவர்களெல்லாம் வாழ்நாள் கவிஞர்கள். அப்படிப்பட்ட கலாப்ரியா தன் அறுபத்தைந்து வயதுக்கு மேல் நாவலாக எழுதிக் குவிக்கிறார் என்றால் அதைப் படிக்க வேண்டும்தானே?
நேற்றுதான் சந்தியா நடராஜன் மாயவரம் பற்றி எழுதிய நூல் வாங்க வேண்டும் என்று முகநூலில் எழுதினேன். உடனே ஒரு வாசகி தொடர்பு கொண்டார். என் நண்பரும் கூட. நான் வாங்கித் தருகிறேன் என்றவரைத் தடுத்தேன். காரணம், அவர் இன்னமும் ஒரு மாணவி. ஒரு மாணவி எப்படி எனக்காக 220 ரூ. செலவு செய்யலாம்? ஜிபேயில் அனுப்பி விடுகிறேன் என்றேன். அதெல்லாம் பிரச்சினை இல்லை, அனுப்ப வேண்டாம் என்று சொல்லி விட்டார். இருந்தாலும் எனக்கு மனசு ஆகவில்லை. இது தெரிந்த இன்னொரு நண்பர் என்னை கோபித்துக் கொண்டார். ஏன் இப்படி சிரமப்படுகிறீர்கள்? என்னிடம் ஒரு வார்த்தை சொன்னால் என் டிரைவரை விட்டு வாங்கச் செய்து உங்கள் வீட்டில் சேர்த்திருப்பேனே என்றார். உடனே நான் அவரிடம், ”உங்களிடம் இது போன்ற வேலைகளைச் சொன்னால் எனக்கு மன உளைச்சல் அல்லவா உண்டாகி விடுகிறது? நீங்கள் அத்தனை பிஸி ஆயிற்றே? அதனால்தான் சொல்லவில்லை” என்றேன். இது என்ன சாரு, புத்தக விழா நடக்கும் மைதானத்துக்கு எதிரேதானே என் அலுவலகம்? என் டிரைவரிடம் சொன்னால் அஞ்சு நிமிடத்தில் வாங்கிக் கொண்டு வந்து உங்களிடம் சேர்ப்பித்து விடப் போகிறார் என்றார். அவர் சொல்வதில் எனக்கு ஏதோ நெருடியது. இருந்தாலும் அது என்ன நெருடல் என்று புரியாததால் விட்டு விட்டேன்.
இன்று காலை முதல் வேலையாக கலாப்ரியாவின் கட்டுரைத் தொகுப்புகளையும் வேனல் தவிர மற்ற இரண்டு நாவல்களையும் (பெயரிடப்படாத படம், பேரருவி- எல்லாமே சந்தியா பதிப்பக வெளியீடு) வாங்கி விடச் சொல்லலாம் என்று ஒன்பது மணிக்கு நண்பருக்கு போன் செய்தேன். காலை அவசரம் போல, போனை எடுக்கவில்லை. உடனே எனக்கு நேற்று ஏன் நெருடியது என்பது புரிந்து போனது. நண்பரை போனில் பிடிக்கவே முடியாது. அது அவர் பேசும்போது எனக்கு ஞாபகம் வரவில்லை.
பிறகு ஒன்பதரை மணிக்கு போன் பண்ணினேன். நான் இந்த விஷயத்தை மறந்து விடக் கூடாது என்று கலாப்ரியா நாவல் கலாப்ரியா நாவல் கலாப்ரியா நாவல் கலாப்ரியா நாவல் கலாப்ரியா நாவல் கலாப்ரியா நாவல் என்று மனம் ஜெபித்தவண்ணமே இருந்தது. ஜெப சத்தம் எனக்கே தாங்க முடியாமல் போய் ஒன்பதரை மணிக்கு நண்பருக்கு மீண்டும் போன் பண்ணினேன். நண்பரின் மனைவி எடுத்தார். க்ஷேம லாபம் விசாரித்தார். புக்ஃபேர் போனீங்களா, ஏன் போகவில்லை, போன வருஷம் நீங்கள் போனதால் கலகலவென்று இருந்ததே என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். நண்பர் குளித்துக் கொண்டிருக்கிறார். வந்ததும் பேசுவார். சரி என்று வைத்து விட்டேன். மீண்டும் கலாப்ரியா நாவல் கலாப்ரியா நாவல் கலாப்ரியா நாவல். கலாப்ரியா நாவல். ஜெபம் ஆரம்பமானது. தப்பாக நினைக்காதீர்கள். எனக்கு மறந்து தொலைத்து விடும். ஏகப்பட்ட எழுத்து வேலை கிடக்கிறது.
பிறகு பத்து மணிக்கு நானே போன் பண்ணினேன். நண்பர் ஆஃபீசுக்குப் போகும் அவசரத்தில் இருப்பார். அவருக்கு ஞாயிற்றுக்கிழமையும் அலுவலகம் உண்டு. வேறு ஏதோ ஒரு நாளில்தான் விடுமுறை. இந்த முறை எடுத்தார். குரலில் அவசரம். பரபரப்பு. சொல்லுங்க சாரு என்றார் படு அவசரக் குரலில். புரிந்து கொண்டேன். சரி, அவசரமா இருக்கீங்க, காரில் போகும்போது கூப்பிடுங்க என்று சொன்னேன். நான் அவரைத் தவறாக நினைத்து விடக் கூடாது என்று அதற்கும் பதில் சொன்னார். ”பத்தரைக்கு ஒரு மீட்டிங். ஓடிக் கொண்டிருக்கிறேன். கூப்பிடுகிறேன்.”
அவ்வளவுதான். இன்று பூராவும் கூப்பிடவில்லை. அவரால் கூப்பிடவும் முடியாது. கடவுளிடம் போய் பத்து ரூபாய் கடன் கேட்கும் பைத்தியக்காரம்தான் நான் செய்தது. அந்த நண்பரிடம் நான் டோக்யோவுக்கு டிக்கட் வாங்கித் தாருங்கள் என்றால், உடனே வாங்கிக் கொடுத்து விடுவார். அவரிடம் போய் புத்தகம் வாங்கித் தாருங்கள் என்றால் எப்படி? இது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவரைப் பற்றி அவருக்கு அல்லவா தெரிந்திருக்க வேண்டும்? இதில் இன்னொரு மிக மிக மிக முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்து போனேன். அவருக்கு மகா பயங்கரமான மறதி உண்டு. வாஸ்தவத்தில் அவரிடம் நான் இம்மாதிரி சின்ன வேலைகளைக் கேட்காததற்குக் காரணமே அவருடைய புகழ் பெற்ற மறதியால்தான். நாளை பேசும் போது எப்படியும் ஸாரி சொல்லி விடுவார், பார்த்துக் கொள்ளுங்கள்.
சரி, விஷயத்துக்கு வருகிறேன். யாராவது மேற்கண்ட நூல்களை வாங்கி ஸீரோ டிகிரி காயத்ரியிடம் சேர்ப்பித்து விட்டால் நான் உங்களுக்கு ஜீபேயில் பணத்தை அனுப்பி விடுகிறேன். காயத்ரி வீடு எங்கள் வீட்டுக்குப் பக்கத்துத் தெரு என்பதால் கொடுத்து அனுப்பி விடுவார்.
(கலாப்ரியாவின் கட்டுரைத் தொகுப்புகளையும் வேனல் தவிர மற்ற இரண்டு நாவல்களையும் (பெயரிடப்படாத படம், பேரருவி- எல்லாமே சந்தியா பதிப்பக வெளியீடு)
***
சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai