அன்பிற்குரிய சாரு,
முகமூடிகளின் பள்ளத்தாக்கு வாங்கிவிட்டேன். புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்த நண்பர் ஒருவர் புத்தகத்தை வாங்கி ஹைதராபாத்திற்குக் கொண்டுவந்து சேர்த்துள்ளார். கையோடு முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். நீங்கள் நூல் அறிமுகத்தில் கூறியது போலவே, நாவலின் நடை அபாரமான கவித்துவத்துடன் நவீன கவிதையை வாசிப்பது போலவே உள்ளது. அத்துடன், நுண்ணிய விஷயங்கள், அற்புதமான உவமைகளுடன் கூடிய சித்தரிப்புகளாக மாறியுள்ளதும், வாசிப்பில் புதிய அனுபவத்தை அதாவது fresh dimension-ஐத் தந்துள்ளது. கிரிஸ்டோபர் நோலனின் Inception படத்தைப் போல ஒரு அதிசய அனுபவத்தை காணப்போகிறோம் என்ற ஆவல் தற்போது ஏற்பட்டுள்ளது. வாசித்து முடித்த பின் வாசிப்பு அனுபவத்தை அடுத்த கடிதத்தில் தெரிவிக்கிறேன்.
அன்புடன்,
கண்ணன்.வ
***
நான் சொல்ல வேண்டாம் என்று இருந்தேன். முகமூடிகளின் பள்ளத்தாக்கை முதல் முறை படித்து விட்டு இரண்டாவது முறை வாசித்தால் வேறொரு தளத்தில் வைத்துப் புரிந்து கொள்ளலாம். அந்த சுழல் வட்டப் புதிர் அவிழ்ந்த பிறகு நாவல் வேறொரு பரிமாணம் எடுக்கும். அது வேறோர் விதமான வாசிப்பு.
உங்கள் அனுபவங்களுக்காகக் காத்திருக்கிறேன்.