நேற்று பின்வருமாறு ஒரு பதிவு எழுதியிருந்தேன்:
bynge.in என்ற செயலியில் அ-காலம் என்ற ஒரு தொடர் எழுதி வருகிறேன். கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. சமகால அரபி இலக்கியம் பற்றிய தொடர். இதற்காக நான் படித்த புத்தகங்கள் ஏராளம். செய்த பயணங்களும் நிறைய. லெபனான், சிரியா, பாலஸ்தீனம், இஸ்ரேல் போன்ற நாடுகளில் எழுதப்படும் அரபி இலக்கியம் பற்றிய அறிமுகத் தொடர். இதை ஒன்றிரண்டு முஸ்லீம் நண்பர்களே வாசிப்பதை பின்னூட்டத்திலிருந்து அறிந்தேன். இதைப் பெருவாரியான முஸ்லீம் நண்பர்கள் படிக்க வேண்டாமா? அரபி பேசும் நாடுகளில் இலக்கியமும் வாழ்வும் எப்படி இருக்கிறது என்று ஒரு முஸ்லீம் தெரிந்து கொள்ள வேண்டாமா? நீங்கள் ஒரு தமிழர் என்று வைத்துக் கொள்வோம். பொலிவியா என்ற ஏதோ ஒரு நாட்டில் ஒரு தமிழ்ப் பேச்சு காதில் விழுந்தால் உங்கள் உணர்வு எப்படி இருக்கும்? அப்படித்தானே ஒரு முஸ்லீமுக்கு அரபியும்? அல்லது, நான் ஏதாவது தவறாகச் சொல்கிறேனா? தவறு என்றால் சொல்லுங்கள். யோசிக்கலாம்.
நான் தவறான இடத்தில் இருந்து கொண்டு எழுதுகிறேன் என்று தோன்றுகிறது. இதையே நான் மாத்யமம் பத்திரிகையில் எழுதியிருந்தால் மலபார் பூராவும் இதைப் படிக்காத ஒருவரைப் பார்க்க முடியாது. மாத்யமம் பத்திரிகையில் நான் சமகால அரபி இலக்கியம் பற்றி எழுதிய போது (தப்புத் தாளங்கள் என்ற தலைப்பில்) அங்கே மாதம் ஒரு இலக்கியக் கூட்டத்தில் அழைத்தார்கள். மம்முட்டி அந்தத் தொடர் பற்றி என்னிடம் பேசினார். சரி, விடுங்கள். இதையும் நான் சிவசுப்ரமணியம், ராமசேஷன், ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன், ஸ்ரீரங்கம் கோபாலன், ஆதிசேஷன், ஸ்ரீனிவாசன், நப்பின்னை, காயத்ரி, சுகந்தா போன்றவர்களிடமே விவாதித்துக் கொள்கிறேன்.
வணக்கம்.
மேற்கண்ட பதிவுக்கு நண்பர் அபூபக்கர் பின்வரும் கருத்தை எழுதியிருந்தார்:
Sorry Charu. I disagree with you. நான் தமிழ் பேசும் முஸ்லிம். எல்லா மற்ற மொழி இலக்கியம் போலவேதான் அரபியும் எனக்கு. தமிழில்தான் அதிகம் வாசிக்கிறேன் . பிற மொழியில் என்றால் எனக்கு மலையாள இலக்கியம் பரிச்சயம். எல்லோருக்கும் அடுத்த மொழி இலக்கியங்கள் எந்த அளவுக்கு விருப்பமோ அவ்வளவே அரபியும். Nothing special.பெரும்பான்மையான முஸ்லீம்களுக்கு அரபி தெரியாது.குர்ஆன் வாசிப்பது என்பது முற்றிலும் வேறுபட்டது.
அபூபக்கருக்கு என் பதில்:
முஸ்லீம், இந்து, கிறித்தவன் என்ற மத அடையாளத்தைத் தாண்டி விட்டால் அதை விட பெரிய விஷயம் எதுவும் இல்லை. ஆனால் கலாச்சார ரீதியாக தன் இனத்தை முன்னிறுத்திக் கொள்ளாத ஒரு பெரும் மக்கள் திரளைப் பற்றியே நான் கவலை கொள்கிறேன். உதாரணமாக, தமிழ் சினிமாவில் முஸ்லீம் அடையாளத்தோடு முஸ்லீம் வாழ்வைச் சொல்லும் ஒரு படம் கிடையாது. தஞ்சை முஸ்லீம்கள் பற்றி வண்டி வண்டியாக எழுதிய தஞ்சை ப்ரகாஷ் பற்றி இங்கே ஒரு முஸ்லீமுக்கும் தெரியாது. கேட்டால் எனக்கு எல்லாமே ஒன்றுதான். ஓகே. நான் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். திரும்பிச் செல்கிறேன்.
மேற்கண்ட சிறிய பதிலை எழுதினாலும் எனக்குத் திருப்தியாகவில்லை. முக்கியமான விஷயம், நான் என்ன அ-காலம் தொடரை அரபியிலா எழுதுகிறேன்? சிரியா என்ற நாட்டில் தொடர்ந்து மக்கள் ஏன் அகதிகளாக மாறிக் கொண்டே இருக்கிறார்கள் என் பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டால், ”முஸ்லீம்கள் அப்படித்தான் தகறாரு பண்ணிக் கொண்டே இருப்பார்கள்” என்று முடித்துக் கொள்வார். சிரியாவில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து குண்டு விழுந்து கொண்டே இருக்கிறது. அதன் தலைநகர் டமாஸ்கஸோ புராதனமான நகரங்களில் ஒன்று. கால இடைவெளியே இல்லாமல் பெரும் மக்கள் திரள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மாநகரம். அங்கே இருந்து வரும் இலக்கியப் படைப்புகள் எப்படி இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள ஒரு முஸ்லீம் ஆர்வம் காட்ட வேண்டாமா? நான் முஸ்லீம் என்ற அடையாளத்தையே தாண்டி விட்டேன் என்று சொன்னால் அதை விடப் பெரிய விஷயம் எதுவும் இல்லை. அது கிட்டத்தட்ட இறைநிலை.
நான் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாக சமகால அரபி இலக்கியத்தைத் தமிழில் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறேன். தாஹர் பென் ஜெலோன் (Tahar Ben Jelloun) என்ற மொராக்கோ எழுத்தாளரின் The Blinding Absence of Light என்ற நாவலைப் படித்துதான் நான் ஒரு நம்பிக்கையாளனாகவே மாறினேன். அந்த நாவல் பற்றி தொழுகையின் அரசியல் என்ற நீண்டதொரு கட்டுரை எழுதினேன். அதைப் படித்த பிறகுதான் அந்த நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது என்று அறிந்தேன். தாஹர் பென் ஜெலோன் ஆகட்டும், முஹம்மது ஷுக்ரி ஆகட்டும், லெபனானைச் சேர்ந்த காதா ஸம்மான் ஆகட்டும், சவூதியைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான் மூனீஃப் ஆகட்டும், எல்லோருமே என்னுடைய அறிமுகத்துக்குப் பிறகுதான் தமிழில் தெரிய வந்தார்கள். அந்தப் பணியை நான் செய்யாவிட்டால் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இவர்களின் பெயர் தமிழில் தெரிய வந்திருக்காது என்பதே எதார்த்தம். இதையெல்லாம் படிப்பதோ படிக்காமல் விடுவதோ உங்கள் விருப்பம்.
மேலும் ஒரு முக்கியமான விஷயம், இஸ்லாம் என்றால் வன்முறை என்று மேற்கத்திய ஊடகங்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. நான் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாக என்னுடைய இலக்கியப் பணியின் மூலம் இஸ்லாம் என்றால் அன்பு என்று நான் தேடிக் கண்டடைந்த இலக்கிய ஆதாரங்களின் மூலம் வலியுறுத்திக் கொண்டு இருக்கிறேன். உடனே, ஒரு முஸ்லீம் நண்பர் வந்து “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சாரு, இலக்கியத்தில் போய் அரபி இலக்கியம், தமிழ் இலக்கியம் என்றெல்லாம் பார்க்கக் கூடாது” என்று சொல்கிறார். இதற்கு ஏழெட்டு முஸ்லீம் நண்பர்கள் விருப்பக்குறி இடுகிறார்கள் என்றால் நான் என்ன செய்யட்டும்? ஒரு காஃப்காவையோ ஒரு இத்தாலோ கால்வினோவையோ ஒரு காப்ரியா மார்க்கேஸையோ அறிமுகம் செய்வதும் ஒரு அப்துர்ரஹ்மான் முனீஃபை அறிமுகம் செய்வதும் ஒன்றா? அப்துர்ரஹ்மான் முனீஃப் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர். நோபல் வாங்கியிருக்க வேண்டியவர். தஸ்தயேவ்ஸ்கிக்கு நிகரானவர் என்று அவரைப் படித்த ஒன்றிரண்டு மேற்கத்தியர்கள் சொல்கிறார்கள். எனக்குமே அவரைப் படித்தபோது அப்படித்தான் தோன்றியது. மீண்டும் மீண்டும் அவரைப் படித்த போது தஸ்தயேவ்ஸ்கியை விட பல்ஸாக், தாமஸ் ஹார்டி போன்ற பழைய மேதைகளைத்தான் முனீஃபோடு ஒப்பிடத் தோன்றியது. தஸ்தயேவ்ஸ்கி முனீஃபின் உயரத்துக்குக் கம்மி. அப்படி இருந்தும் ஏன் மேற்கத்திய புத்திஜீவிகளும் ஊடகங்களும் இவர்களைக் கண்டு கொள்வதில்லை? இவர்கள் அரபியில் எழுதுவதால் மட்டுமே. ஏன் தாஹர் பென் ஜெலோனின் பெயர் மட்டும் வெளியே தெரிகிறது என்றால் அவர் ஃப்ரெஞ்சிலும் எழுதுகிறார். ஃப்ரான்ஸில் வசிக்கிறார். எப்படியாவது உங்களுக்கு ஒரு ஐரோப்பியத் தொடர்பு இருந்தால்தான் பெயர் வெளியே வரும். முனீஃபுக்கு அப்படிப்பட்ட ஐரோப்பியத் தொடர்பு இல்லை. அவர் பெயரும் தெரியவில்லை…
இவர்களையெல்லாம் கண்டு பிடிப்பதற்கு நான் எத்தனை படிக்கிறேன் என்று யாருக்குமே தெரியாது. எத்தனை முறை மூழ்கினால் முத்து கிடைக்கும்? ஆனால் அதிர்ஷ்டவசமாக அரபி இலக்கியம் ஒரு முத்துச் சுரங்கம். இருந்தாலும் அதிலிருந்து சிறந்ததைத் தேர்ந்தெடுக்க படித்துக் கொண்டே இருக்க வேண்டும். சிரியாவின் பத்து நாவலாசிரியர்களிலிருந்துதான் – அவர்களின் மிகச் சிறந்த ஒரு நாவலைப் படித்தாலும் பத்து நாவல் கணக்கு வந்து விடும் – அதிலிருந்துதான் ஒரே ஒரு நாவலைப் பற்றி எழுத முடியும். இப்படியாக எழுதிய தொடர் அது. சும்மா போகிற போக்கில் ஹெமிங்வே பற்றியோ ஆல்பெர் கம்யூ பற்றியோ எழுதுவது போல் இந்த அரபி இலக்கியக் கட்டுரைகள். இந்தத் தேர்ந்தெடுப்பில் ஒரு அரசியல் இருக்கிறது. என் வாழ்வு இருக்கிறது.
அ-காலம் தொடர் பற்றி நேற்று வந்த ஒரு கடிதம்:
அன்பு சாரு,
மீண்டும் ஸ்ரீதர் மணியன் தருமபுரியிலிருந்து…
அ-காலம் மிகச்சிறப்பாக தொடர்கிறது. நேற்று அது முடிவுக்கு வரப்போகிறது என்று நீங்கள் கூறியிருப்பது சற்று வருத்தமளிப்பதாக இருந்தது. வழக்கமாக ஒரு நாட்டைப் பற்றி எழுதும்போது வாழ்வுமுறை, நாகரீகம், கலாச்சாரம் என பதிவுகள் இருக்கும். ஆனால், அ-காலம் முற்றிலும் மாறுபட்டு மேற்கூறியவற்றுடன் வாழ்வின் அடிநாதமாகத் திகழும் இலக்கிய மேதமைகள் குறித்து நிறைய பேசுகிறது. அதுவும், மேலோட்டமாக அல்லாது அவர்களது வாழ்வு, சூழல், அரபி மற்றும் பிரான்ஸ் நாட்டுடனுனான அவர்களது தொடர்புகள் என ஆழமாகக் கூறுகிறது. கடந்த 2020 நவம்பர் 03 அன்று தங்களது வலைப்பக்கத்தில் வளனரசு பதிவிட்டபடி உங்களது எழுத்து references செறிந்த சுரஙக்ம். இதுவே மற்ற படைப்புகளிலிருந்தும், படைப்பாளிகளிலிருந்தும் தங்களைப் பிரித்துக் காட்டுகிற அம்சம். இதைச் சொல்லிவிட்டுக் கடந்து செல்வது மிக எளிது. அதற்குப் பின்னால் உங்களது உழைப்பு, ஈடுபாடு, அதற்குச் நீங்கள் செலவழித்த விலை மதிப்பற்ற நேரம் என எவ்வளவோ அடங்கியுள்ளதை எவ்வாறு மறுக்கவியலும். முக்கியமாக இதனால் தாங்கள் பதிலுக்கு என்ன பெறுவீர்கள் எனில், ஏதுமில்லை என்பதே துவர்ப்புமிக்க உண்மை.
ஐரோப்பிய இலக்கியங்களை அறிமுகப்படுத்துவதனை பெருமையாகவும், கடமையாகவும் கொண்டுள்ள இலக்கிய தளத்தில் அவற்றிற்கீடான, இது போன்ற சிறந்த நூல்கள், எழுத்தாளர்கள் என அ-காலம் பல புதிய திறப்புகளை எங்களுக்கு காட்டியுள்ளது. இது குறித்த உங்களது மனக்கசப்பினை நேற்றைய பதிவில் பார்த்தேன். அதாவது தாங்கள் எனது உள்வட்ட நண்பர்களுடனே அ-காலம் குறித்து விவாதித்துக் கொள்கிறேன் என்ற பதிவே அது. தாங்கள் அவ்வாறு கொள்ள வேண்டாம். என் போன்றோர் அதை மவுனமாக உள்வாங்கி அனுபவித்துக் கொண்டுள்ளோம் என தங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது எனது கடமை என நினைக்கிநேன். அ-காலம் தொடர வேண்டும் என்பது மட்டுமின்றி அது புத்தகமாக வெளிவர வேண்டும். அது எங்களது சேகரிப்பில் இடம் பெற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
அன்புடன்,
ஸ்ரீதர் மணியன்
***
சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai