ஒரு அக்கப்போர்

சமீபமாக ப்ளாகில் எதுவும் எழுதுவதில்லை என்பதை கவனித்திருப்பீர்கள்.  காரணம், ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  தியாகராஜாவோடு கூட.  நான்கு ஆண்டுகளில் படிக்க வேண்டியதை நான்கு மாதங்களில் படித்தேன்.  அதனால் இரவு பன்னிரண்டுக்குப் படுப்பது காலையில் ஆறு மணிக்கு எழுந்து கொள்வது, உடனேயே தியானமோ நடைப்பயிற்சியோ செய்யாமல் எழுத ஆரம்பிப்பது என்று வெறி பிடித்தது போல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  ஆனால் உங்களுக்கு நான் எழுதியதைப் படிக்க bynge.in செயலியில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்று கட்டுரைகளைக் கொடுத்து விட்டேன். 

இத்தனை வேகமாக வேலை செய்து கொண்டிருக்கையில் இப்போது ஒரு அக்கப்போர் விஷயம்.  இது பற்றி எழுதக் கூடாது என்றுதான் இருந்தேன்.  ஆனாலும் அக்கிரமம் நடக்கும்போது என் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை.  நான் யாருக்கும் அஞ்சலிக் கட்டுரைகள் எழுதுவதில்லை.  காரணம் ஒன்றும் இல்லை.  ஏனோ பிடிக்கவில்லை. அவ்வளவுதான். இந்த நிலையில் கி.ரா.வின் மரணத்தை ஒட்டி என் மன ஓட்டம் இப்படி இருந்தது: தமிழகமே நேரில் போய் கொண்டாடி இருக்க வேண்டிய கல்யாணச் சாவு அது.  ஆனால் இப்படி பேய் ஊழிக் காலத்தில் விடை பெற்று விட்டாரே.  யாருமே போக முடியாமல் போய் விட்டதே.

இன்னொரு விஷயம், இப்போதுதான் முதல் முறையாக ஒரு எழுத்தாளரின் மரணத்துக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்டிருக்கிறது.  இது அசோகமித்திரனுக்கும் ஞானக்கூத்தனுக்கும் ந. முத்துசாமிக்கும் நடந்திருக்க வேண்டும்.  ஆனால் அப்போது இருந்தது ’இலக்கியம் என்றால் வீசை என்ன விலை?’ என்று கேட்பவர்களின் ஆட்சி.  அப்படிப்பட்டவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.  ஆனால் இப்படி பல ஆண்டுக் காலமாக மறுக்கப்பட்டு வந்த மரியாதையை முதல்வர் ஸ்டாலின் முதல் முறையாகச் செய்திருக்கிறார்.  இதற்காக அவரைப் பாராட்டுவதை விட்டு விட்டு, கி.ரா. ஒன்றும் இதற்குத் தகுதியானவர் இல்லை, அவர் ஒன்றும் அவ்வளவு பெரிய இலக்கியவாதி இல்லை என்று வண்ணநிலவன் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறார். 

வண்ணநிலவன் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்.  முக்கியமான என்பதெல்லாம் சாதாரண வார்த்தை.  அவருடைய எஸ்தர் என்ற சிறுகதை, உலகின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றாக வரக் கூடியது.  ஆனால் சிறந்த கதை எழுதுபவன் சிறந்த மனிதனாகவோ சிறந்த சிந்தனையாளனாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  அசோகமித்திரன் என் குரு, என் ஆசான், என் தந்தை.  ஆனால் அரசியல் பற்றிக் கருத்து கேட்டால் ஹெச். ராஜா மாதிரி, எஸ்.வி. சேகர் மாதிரி பேசுவார்.  ஆனால் அவர் கதைகளில் இது எதுவுமே தெரியாது.  புலிக் கலைஞன் என்ற கதையில் ஒரு விளிம்பு நிலை முஸ்லீம் பற்றித்தானே எழுதியிருக்கிறார்?  ஆனால் பேசும் போது ஆர்.எஸ்.எஸ். வாடை அடிக்கும்.  அப்படித்தான் வண்ணநிலவனும் என்று நினைக்கிறேன்.  இது போன்ற கிழடுகட்டைகள் வயதான பிறகு வாயை மூடிக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும்.  இல்லாவிட்டால் இருக்கவே இருக்கின்றன, பேரன் பேத்திகள். அவைகளோடு சொப்பு வைத்து விளையாடிக் கொண்டு இருக்க வேண்டியதுதானே? 

உம்மை எவன் ஐயா இதற்கெல்லாம் கூப்பிட்டான்?  ஒரு வயதுக் குழந்தையைப் பார்த்து எவனாவது இது நாசமாப் போக என்று சபித்தால் அவனை ஊரார் என்ன சொல்வார்கள்?  அப்படித்தான் உம்மை இப்போது சபிக்கிறார்கள்.  ஏனென்றால், பல ஆண்டுகளாக தமிழ்நாட்டு அரசு அமைப்புகள் எழுத்தாளர்களைக் கண்டு கொண்டதில்லை.  இங்கே எழுத்தாளன் என்றாலே சினிமாவில் எழுதுபவன்தான்.  மற்றபடி சிந்தனையாளன், தத்துவவாதி அல்லாமே சினிமாக்காரர் தான்.  சினிமாக்காரர் செத்தால் அரசு மரியாதை.  கொடிக் கம்பம் அரை உயரத்தில் பறக்கும்.  விடுமுறை கூட விடுவார்கள்.  இப்போதுதான் முதல் முதலாக ஒருவர் அதை மாற்றி இருக்கிறார்.  கருணாநிதியிடம் யாரும் இது பற்றிப் பேசியிருக்க முடியாது.  “யோவ், நானே ஒரு எழுத்தாளன் தான்யா, எனக்குத் தெரியாதா?  விட்டுத் தள்ளு, அவங்களுக்கெல்லாம் அரசு மரியாதை கொடுத்தால் அரசுக்கு மரியாதை கிடைக்காது” என்று சிலேடையாக ஏதாவது சொல்லிச் சிரிக்க வைத்து விட்டுப் போய் விடுவார்.  இத்தனைக்கும் கருணாநிதி இலக்கிய வாசகர்.  அவருக்குத் தெரியாத இலக்கியவாதி இல்லை. ஸ்டாலின் இலக்கியம் படிக்காதவர்.  ஆனால் கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் என்ன வித்தியாசம் என்றால், ஸ்டாலின் மற்றவர்களது ஆலோசனையைக் கேட்பார்.  கனிமொழி, மனுஷ்ய புத்திரன், தமிழச்சி, தங்கம் தென்னரசு, முதன்மைச் செயலாளர் இறையன்பு, தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த ரவிக்குமார், சு. வெங்கடேசன் போன்ற ஏராளமான பேர் அவர் அருகில் இருக்கிறார்கள்.  அதனால் நடந்த ஒரு நல்ல மாற்றம் இது.  இதுக்குப் போய் எவனாவது சங்கு ஊதுவானா ஐயா?

வண்ணநிலவனின் உளறலை அவர் முகநூலிலிருந்து நீக்கி விட்டாலும் அது பரவலாக ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.  இதை அவர் நீக்கினால் மட்டும் போதாது.  ”எனக்கு வயதாகி விட்டதால் அவ்வப்போது இப்படித்தான் வாய்க்கு வந்த படி உளறுகிறேன், கண்டு கொள்ளாதீர்கள்” என்ற அறிவிப்பையும் கொடுக்க வேண்டும். ஏனென்றால், சாஹித்ய அகாதமி போன்ற நிறுவனங்களில் தமிழுக்கு விருது கொடுப்பதற்காகப் பேச்சு நடக்கும் போது தமிழ் எழுத்தாளர்களுக்குள் அங்கே அடிதடி நடந்து விடுகிறதாம்.  இந்த நிலையில் இப்படி முதல் முதலாக ஒரு நல்ல காரியம் நடக்கும் போது சங்கு ஊதினால் யாராவது எழுத்தாளன் பக்கம் எட்டிப் பார்ப்பார்களா?  நமக்கு ஏன் வம்பு என்றுதானே தள்ளிப் போவார்கள்? 

ஜெயமோகனுக்கு பத்மஸ்ரீ கொடுத்து, அவர் அதை மறுத்தபோது கூட நான் அவரிடம், நீங்கள் மறுத்தால் ‘இந்த மதறாஸிகளே இப்படித்தான்’ என்று முடிவு கட்டி இனிமேல் எழுத்தாளர்களுக்கு பத்மஸ்ரீயே கொடுக்க மாட்டார்கள் என்றுதான் சொன்னேன்.  அதுவாவது ஒரு தனிப்பட்ட விஷயம்.  இப்போது வண்ணநிலவன் செய்திருப்பது பச்சை அயோக்கியத்தனம்.  ஏன் ஐயா, சினிமா நடிகர்களின் மரணத்தின் போது அரசு மரியாதை செய்ததே, அப்போதெல்லாம் உம் பின்பக்கத்தை மூடிக் கொண்டிருந்தீரே ஏன்?  அப்போது ஏன் உம்முடைய தார்மீகக் கோபம் பொங்கி எழவில்லை? ஆக, சினிமாக்காரர்களையே காலம் காலமாக துதி பாடிக் கொண்டிருக்க வேண்டும்?  அப்படித்தானே? 

பொதுவாக ஒருவர் இறந்து போனால் அவரை யாரும் விமர்சிக்கக் கூடாது என்று சொல்லக் கூடிய ஆள் அல்ல நான்.  அண்ணாதுரை இறந்த போது ஜெயகாந்தனின் அதிரடிப் பேச்சை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.  கி.ரா. ஒரு எழுத்தாளரே இல்லை என்று கூட வண்ணநிலவன் எழுதட்டும்.  இறந்த அன்றே கூட எழுதட்டும்.  ஆனால் அரசு மரியாதை செய்வதை நீர் யார் ஐயா தடுப்பதற்கு?  உமக்கு அந்த உரிமையை யார் கொடுத்தது?  நீர் எழுத்திலிருந்து ஓய்வு பெற்று பல காலம் ஆகிறது.  இல்லையா?  எனவே வெறுமனே நடமாடிக் கொண்டிருப்பவர்களுக்கு இப்படியெல்லாம் சொல்ல உரிமை இல்லை.  கி.ரா. தான் சாகும் வரை எழுதிக் கொண்டிருந்தவர்.  அவர் எழுதியது இலக்கியம் இல்லை என்றால், நீர் உதாரணம் காட்டும் ஜெயகாந்தன் மட்டும் இலக்கியமாக்கும்?  யார் ஐயா சொன்னது அப்படி?