அ-காலம்

bynge.in என்ற செயலியில் அ-காலம் என்ற ஒரு தொடர் எழுதி வருகிறேன். கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. சமகால அரபி இலக்கியம் பற்றிய தொடர். இதற்காக நான் படித்த புத்தகங்கள் ஏராளம். செய்த பயணங்களும் நிறைய. லெபனான், சிரியா, பாலஸ்தீனம், இஸ்ரேல் போன்ற நாடுகளில் எழுதப்படும் அரபி இலக்கியம் பற்றிய அறிமுகத் தொடர். இதை ஒன்றிரண்டு முஸ்லீம் நண்பர்களே வாசிப்பதை பின்னூட்டத்திலிருந்து அறிந்தேன். இதைப் பெருவாரியான முஸ்லீம் நண்பர்கள் படிக்க வேண்டாமா? அரபி பேசும் நாடுகளில் இலக்கியமும் வாழ்வும் எப்படி இருக்கிறது என்று ஒரு முஸ்லீம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

நீங்கள் ஒரு தமிழர் என்று வைத்துக் கொள்வோம். பொலிவியா என்ற ஏதோ ஒரு நாட்டில் ஒரு தமிழ்ப் பேச்சு காதில் விழுந்தால் உங்கள் உணர்வு எப்படி இருக்கும்? அப்படித்தானே ஒரு முஸ்லீமுக்கு அரபியும்? அல்லது, நான் ஏதாவது தவறாகச் சொல்கிறேனா? தவறு என்றால் சொல்லுங்கள். யோசிக்கலாம்.

நான் தவறான இடத்தில் இருந்து கொண்டு எழுதுகிறேன் என்று தோன்றுகிறது. இதையே நான் மாத்யமம் பத்திரிகையில் எழுதியிருந்தால் மலபார் பூராவும் இதைப் படிக்காத ஒருவரைப் பார்க்க முடியாது. மாத்யமம் பத்திரிகையில் நான் சமகால அரபி இலக்கியம் பற்றி எழுதிய போது (தப்புத் தாளங்கள் என்ற தலைப்பில்) அங்கே மாதம் ஒரு இலக்கியக் கூட்டத்தில் அழைத்தார்கள். மம்முட்டி அந்தத் தொடர் பற்றி என்னிடம் பேசினார். சரி, விடுங்கள். இதையும் நான் சிவசுப்ரமணியம், ராமசேஷன், ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன், ஸ்ரீரங்கம் கோபாலன், ஆதிசேஷன், ஸ்ரீனிவாசன், நப்பின்னை, காயத்ரி, சுகந்தா போன்றவர்களிடமே விவாதித்துக் கொள்கிறேன்.

வணக்கம்.