சாருநிவேதிதா பேட்டி, தி இந்து வில் (24-05-2014)
உங்களைப் பொருத்தவரை மகிழ்ச்சி என்பதன் வரையறை என்ன?
காமம் என்றால் பிணம்கூட எழுந்து கொள்ளும் என்கிறார் பர்த்ருஹரி. காமத்தை விடவும் தீவிரமானது பசி. ஆக, பிற உயிர்களின் பசி ஆற்றுவதே எல்லையற்ற மகிழ்ச்சி.
மிகப் பெரிய அச்சமாக இருப்பது எது?
அச்சம் அறிந்ததில்லை. ஆனாலும் சிறை அச்சம் தருகிறது; காரணம், அங்கே ஏர் கண்டிஷனர் இருக்காதாம்.
நீங்கள் உங்களுடன் அடையாளம் காணும் வரலாற்று ஆளுமை?பிரெஞ்சு எழுத்தாளர் மார்க்கி தெ சாத். ஒரு பிரபுவாக சுகபோகத்தில் வாழ்ந்திருக்க வேண்டியவர் தன்னையும், தன் வாழ்க்கையையும் பரிசோதனைக் களமாக்கி ஏராளமான பக்கங்களை எழுதினார்.
உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத குணம்?
தற்பெருமை அடித்துக் கொள்வதோடு மட்டும் அல்லாமல், அதை மிகவும் விரும்பி ஆர்ப்பாட்டமாகவும் ஆரவாரமாகவும் செய்வது என்னிடம் பிடிக்காத குணம்.
உங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்?
தற்போதைக்கு அராத்து.
உங்களுக்கு மிக விருப்பமான பயணம்?
கால எந்திரத்தில் பயணித்து என் கடந்த பிறவியின் வாழ்க்கையைப் பார்ப்பது. அது சாத்தியம்தான் என்கிறார்கள். கையில் ஒரு பைசா இல்லாமல் ஃபிரான்ஸில் நண்பர்களின் உதவியிலேயே சில மாதங்கள் பயணம் செய்தது. பெரூவைச் சேர்ந்த எழுத்தாளர் மரியோ பர்கஸ் யோசாவின் (Mario Vargas Llosa) நாவல்களில் வரும் அத்தனை தென்னமெரிக்க ஊர்களையும் பார்க்க விரும்பும் திட்டம் இருக்கிறது.
ஆற்றவே முடியாத வருத்தம் எது?
அரசாங்க இலாகாக்களில் 20 ஆண்டுகள் வேலை செய்தது. இன்னமும் அந்த மோசமான அனுபவங்கள் என் கனவுகளிலும் துரத்திக் கொண்டிருக்கின்றன.
உலகிலேயே நீங்கள் மிகவும் விரும்பும் நபர்?
என் இனிய நண்பன் தருண் தேஜ்பால்.
உங்களது தற்போதைய மனநிலை என்ன?
சமீபத்தில் ஒரு நாள் என் செல்ல நாய்க்குட்டி பப்புவோடு வாக்கிங் போனேன். நடு ரோட்டில் அது மலம் போய்விட்டது. அந்த வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞர் என்னைப் பார்த்து “வயசாயிடுச்சே, மூளை இருக்கா?” என்று கேட்டார். நான் பதில் ஏதும் சொல்லாமல் கையோடு எடுத்துச் சென்றிருந்த காகிதத்தில் அந்த மலத்தை எடுத்து கவரில் போட்டு அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு அந்த இளைஞரிடம் சென்று, “எனக்கு மனிதர்கள் தெய்வத்தைப் போல. அதேபோல் நீங்களும் என் தெய்வம். இந்தக் காலை நேரத்தில் உங்களைக் கோபப்படுத்தியதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தேன். அதுதான் இப்போதைய என் மனநிலை.
எப்படி இறக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
த்ரயம்பகம் யஜாமஹேசுகந்திம்
புஸ்டிவர்த்தனம் உர்வாருகமிவ
பந்தனான்ம் ருத்யோர்
முக்ஷீய மாம்ருதாத்.
ஒரு வெள்ளரி பழுத்த பிறகு தானாகவே அதன் கொடியிலிருந்து இற்று விழுவதுபோல் என் மரணம் நிகழ வேண்டும் என்று விரும்புகிறேன். சமீபத்திய உதாரணம், குஷ்வந்த் சிங்.
மேற்கண்ட பேட்டியை எடுத்து செல்வகுமார் முகநூலில் போட்டிருந்தார். கூடவே ஒரு காமெண்டும். ஏழு ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இந்தக் கேள்விகளுக்கு இப்போதும் இதே பதில்களைத்தான் தருவார் சாரு என்று. உண்மைதான். கடைசி கேள்விக்கு மட்டும் கொஞ்சம் மாறுதலான பதில் வரும்.
கொரோனா காலத்தில் இறக்கக் கூடாது என்று விரும்புகிறேன். என் வாழ்வே கொண்டாட்டத்தின் குறியீடு. மரணமும் அப்படித்தான் இருக்க வேண்டும். இப்போது கொஞ்ச காலமாகக் கொண்டாட்டங்களுக்கு உலகம் பூராவும் தடை உத்தரவு போட்டிருக்கிறார் கடவுள். தடை உத்தரவு நீங்கிய பிறகு நான் தயார்.