வெட்கக்கேடு.
மலையாளத்தின் ஓ.என்.வி. விருது வைரமுத்துவுக்குக் கொடுக்கப்பட்டிருப்பது. தமிழில் வேறு கவிஞர்கள் யாரும் இல்லையா? வைரமுத்துவை யார் கவிஞர் என்று சொன்னது? அவர் பாடலாசிரியர். மிக நல்ல பாடலாசிரியர் (Lyricist). இப்போதைய பாடலாசிரியர்களிலேயே மிகச் சிறப்பானவர் அவர்தான். அதற்குத்தான் அவர் இந்திய அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை வருடாவருடம் வாங்கிக் கொண்டிருக்கிறாரே? அது போதாதா?
தமிழில் இப்போது தேவதேவன், தேவதச்சன் போன்று உலகத் தரத்தில் எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்களே? அவர்களையெல்லாம் மலையாளிகள் அறியவில்லையா? திரும்பத் திரும்ப சினிமாதானா?
எந்த விருதை எடுத்தாலும் தமிழ் என்று வந்தால் சராசரிகளுக்கும், விருதுக்குத் தகுதியில்லாதவர்களுக்கும்தான் போவது என்று வழக்கமாக உள்ளது. அப்படித்தான் ஞானபீடப் பரிசு அகிலனுக்கும் ஜெயகாந்தனுக்கும் போயிற்று. இப்போது வைரமுத்து. அப்படியே ஞானபீடத்தையும் வைரமுத்துவுக்கே கொடுங்கள். தமிழ் இலக்கியம் உருப்பட்டு விடும்…