Pleasure of the Text

இடம் சார்ந்து எனக்கு எவ்வித நாஸ்டால்ஜிக் உணர்வுகளும் இல்லை. அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்று காலை அருண்மொழி நங்கையின் சின்னச் சின்னப் புரட்சிகள் என்ற படைப்பைப் படித்து விட்டு என்னைப் பற்றி நான் அப்படி நினைத்துக் கொண்டிருந்தது தவறு எனத் தோன்றியது. அல்லது, இதுவரை எந்த எழுத்தும் இப்படி எனக்குள் கீழத்தஞ்சை மண் பற்றிய உணர்வுகளைக் கிளர்த்தியது இல்லை. இப்படியெல்லாம் சொன்னால், இது ஏதோ ஊர் பற்றிய நினைவுக் குறிப்பாகக் குறுகி விடும் அபாயம் இருக்கிறது. அப்படியும் இல்லை. ஒரு நிலம் கலையாக சிருஷ்டிக்கப்படும்போது அது ஒரு குறிப்பிட்ட இடம் என்பதைத் தாண்டி பொதுவானதாக மாறி விடுகிறது.

ஏதேதோ ஞாபகங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் ஓடி வருகின்றன. கீழத்தஞ்சை மண் கம்யூனிஸத்துக்குப் பேர் போனது. கீழ வெண்மணியும் அங்கேதான். என் தாய் மாமாக்களில் ஒருவர் கம்யூனிஸ்ட். மார்க்ஸும் பெரியாரும் மு.வ.வும் படிப்பார்.

நான் யாருக்கும் காலை எட்டு மணிக்கு போன் பண்ணினதில்லை. அதுவும் பெண்களுக்கு அந்த நேரத்தில் போன் பண்ணுவதை நினைத்துக் கூடப் பார்க்க மாட்டேன். ஆனாலும் அருண்மொழி நங்கை எழுதிய சின்னச் சின்னப் புரட்சிகள் என்ற படைப்பைப் படித்து விட்டு எட்டு மணிக்கு அழைத்து விட்டேன். உடனடியாக என் குதூகலத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் தோன்றி விட்டது.

”நான்  பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது என் தம்பியுடன் புரட்சி பற்றி உரையாடி, அவன் மனதிலும் புரட்சிக் கனலை மூட்டினேன். நாங்கள் ரகசிய திட்டங்கள் தீட்டினோம். பாடப் புத்தகம் விரித்தபடியே இருக்கும். முணுமுணுவென்று உரையாடுவோம்” என்ற வரிகளைப் படித்தபோது ”நல்லவேளை, தமிழகத்தில் ஒரு புரட்சிக்காரி தோன்றாமல் போனாள்!” என்று புன்னகைத்துக் கொண்டேன்.

ஆனால் புரட்சிக்கான முஸ்தீபுகள் என்னவோ நடந்துதான் இருக்கின்றன. அருண்மொழியும் அவர் தம்பியும் ஒரு புரட்சிக்காரரைப் பார்க்க டிவிஎஸ் ஃபிஃப்டியில் போகிறார்கள். உனக்கு வண்டி சரியாக ஓட்ட வராது, என்னைச் சரித்து விடுவாய் என்று தம்பி தயங்குகிறான்.

”அக்கா மெதுவா ஓட்டுவேனாம். நல்லபுள்ளல்ல, வா”, சொல்லிவிட்டேனே ஒழிய உள்ளுக்குள் எனக்கும் கொஞ்சம் உதைப்புதான். மெயின் ரோடில் சமாளித்துவிட்டேன். கரிக்காடு பக்கம் இருந்த ரயில்வே காலனி ரோடு அநியாயத்துக்கு மேடு பள்ளம். ஒரு இடத்தில் வண்டியுடன் சரிந்து விட்டேன். தம்பி கெட்டிக்காரன், அடிபடாமல் வண்டியை தூக்கி நிறுத்தினான்.

நான் வழக்கம்போல் முட்டியை பேர்த்துக் கொண்டேன். இலேசாக இரத்தம் கசிந்து எரிந்தது. ”அம்மாட்ட சொல்லாதடா” என்றேன்.

”வா, திரும்பி போலாம்கா”

”இல்ல, இவ்வளவு தூரம் வந்தாச்சு, பாத்துட்டு போலாம்.”

புரட்சிப் பணிகளுக்கு முன்  ரத்தகாயங்கள் ஒரு பொருட்டா, என்ன?

இதில் அருண்மொழி, ஜெயன் என்ற பெயர்களெல்லாம் இல்லாமல் வேறு பெயர்கள் வந்திருந்தால் இது ஒரு அற்புதமான கதை. இப்போதும் ஒன்றும் குறைந்து போய் விடவில்லை. புரட்சி எப்படித் தொடர்ந்து நடந்து நாகர்கோவிலுக்கும் பரவியது என்பதைப் பின்வரும் சுட்டியில் படிக்கலாம்.

இந்த memoirs ஒரு அற்புதமான நாவலாக விரிகிறது. இதைப் படிக்கும்போது ஒரு பரவசம் உள்ளுக்குள் பரவுகிறது. ரொலான் பார்த் கூறும் pleasure of the text. தமிழில் அபூர்வமாக இது இத்தனை முழுமையாக நிகழ்கிறது.

அருண்மொழி நங்கைக்கு என் வாழ்த்துகள்.