மதிப்பிற்குரிய திரு. சாருநிவேதிதா,
/அவர் பாடலாசிரியர். மிக நல்ல பாடலாசிரியர் (Lyricist). இப்போதைய பாடலாசிரியர்களிலேயே மிகச் சிறப்பானவர் அவர்தான்./
சினிமாக்காரர்களுக்கு மிகையான இலக்கிய அங்கீகாரம் கிடைக்கும்போது அதை கண்டிக்கும் இலக்கியவாதிகள், இப்படி ஒரு வரியை சொல்லிவிடுவது வழக்காமாக இருக்கிறது.
ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை? அவர் நல்ல பாடலாசிரியரா? இலக்கியக் களத்தில் செயல்படும் எழுத்தாளர்களை எத்தனைக் கறாராக தரமதிப்பீடு செய்வீர்களோ அப்படி நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டதா மேற்படி கருத்து?
இரண்டாம் தர கலையான சினிமாப்பாடல் வரிகளை, உங்களுக்கு அத்தனை ஈடுபாடு இல்லாத துறையை, ஆழ்ந்து அலசி கருத்து சொல்லவேண்டிய நிர்பந்தம் உங்களுக்கு இல்லை தான். ஆனால் பொதுவில் நிலவிவரும் கருத்தை ஒரு இலக்கியகர்த்தா குரல்பெருக்கி ஒலிக்கச்செய்யும் போது, அவற்றிற்கு மிகையான அங்கீகாரம் கிடைத்துவிடுகின்றன.
வைரமுத்துவின் ‘சிறந்த பாடலாசிரியர்’ பிம்பம் மிகையாக ஊதிப் பெரிதாகப்பட்ட ஒன்று.
திரைப்பாடலாசிரியன் சூழலுக்கும், பாடும் பாத்திரத்துக்கும், எல்லாவற்றை விட முக்கியமாக இசைக்கும், இணங்க தன் மொழியை வார்க்கவேண்டியவன்.
இவற்றை வைரமுத்து எந்த அளவு செய்திருக்கிறார் என்பது கேள்வி. இசைக்குப் பொருத்தப்பாடு இல்லாமல் நீட்டி இழுக்கும் உரைநடைத் தொனி குவியலும், பாத்திரப்படைப்பை சட்டைசெய்யாமல் தனது அறிவு முத்திரையை பதிக்கும் முனைப்பும், சூழலுக்கு சம்மந்தமற்ற மேம்போக்கான உவமை/சொல்லாட்சி மேலிட்டு வருவதுமே அவரது வழமை.
அவர் நல்ல பற்பல பாடல்களை எழுதியவர் என்பதெல்லாம் மறுப்பதறில்லை. ஆனால் அவரது சமகால பாடலாசிரியர்கள் வரிசையில் கூட முதன்மையானவர் அல்லர் அவர்.
ஆனால், ‘அவர் திரைப்பாடலாசிரியர், இலக்கியதி அல்லர்’ எனச் சொல்லமுனையும் இலக்கியகர்த்தாக்கள் ஏனோ எந்த வித முகாந்திரமும் இல்லாமல், மிகை தாட்சண்யமாக அவரை ‘திரைப்பாடலாசிரியர்கள் ஒப்பிலாதவர்’ என்கிற ரீதியில் சொல்லிவிடுகிறீர்கள்.
அவர் திரைவரிகளை ஆய்ந்து(!) சொல்லாமல் ஒரு வித பொதுமனப்பதிவை சொல்வதும், விருதுகளை வைத்துச் சொல்வதும் மிகச் சாமானிய நோக்கு.
மிகக் கவனமாக தொடர்புகளைப் பேணி, அறுவடை செய்து விருதகள் பெற்றவர் அவர் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.
அவர் இலக்கிய(!) ஆக்கங்களுக்காக கிடைத்த அங்கீகாரங்கள் எவ்வளவு அடிப்படையற்றவையோ, கிட்டத்தட்ட அதேபோலதான் அவரது பாடலாசிரியர் விருதுகளும்.
திரைப்பாடல்களை ஆராய்ந்து கருத்து தெரிவப்பது இலக்கியவாதிகளுக்கு ஆயாசம் தரும் தான். ஆனால் குறைந்தபட்சம் அவர் தேசிய விருதுவாங்கிய பாடல்களைப் பாருங்கள். ஒன்றிரண்டைத் தவிர அவை எந்த வகையிலும் தேராதவை (இசையுடன் ஒட்டுதல், சூழல்/பாத்திரத்துடனான பொருத்தப்பாடு போன்ற வரையறைகள் வைத்துப் பார்த்தால்). அவ்வருடத்தில் தமிழிலேயே அதைவிட நல்ல பாடல்கள் வந்திருக்கும். பிற மொழிகளில் வந்திருக்காது என்று நம்புவதற்கு ஒரு உக்கிரமான அப்பாவித்தனம் வேண்டும்.
வலிந்து வார்த்துக்கொண்ட ஒரு கிராமியத்தன்மை, அதை பண்டமாக்க முடிந்தமை, ஒப்பிலா உறவுப்பேணுதல் – இவை தான் அவர்.
உங்கள் அங்கலாய்ப்பின் குவியநோக்கம் இது இல்லை என்பது எனக்குப் புரியாமல் இல்லை. ஆனால் போகிற போக்கில் இப்படிப் பலர் சொல்லிச் சொல்லியே அவரது ‘முதன்மைப் பாடலாசிரியர்’ என்ற பிம்பம் கேள்விக்கு அப்பார்ப்பட்டதாய் நிற்கிறது.
உதாரணமாக, சீதக்காதி திரைப்படத்திற்காக இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா எழுதிய இப்பாடலைக் கேளுங்கள்:https://www.youtube.com/watch?v=Aaaf0FGvnoY
இசைக்கு இசைவாக, படத்தின் மையக்கருவின் சாரத்தை வெளிக்கொணர்ந்து, அதே நேரம் தமிழ்ச்சினிமாவின் நாயக-ஆராதனைப் பாணியின் அமைந்து, நல்ல தமிழில் அமைந்த பாடல்.
இது எந்த அளவு கவனம் பெற்றது? இது போல் – குறைந்தபட்சம் சமீபத்தில் – ஏதாவது எழுதியிருக்கிறாரா நம் விருதுமன்னர்?
ஆனால் /இப்போதைய பாடலாசிரியர்களிலேயே மிகச் சிறப்பானவர் அவர்தான்./ என்று கறாரானவர்களிடமே எளிதாக சான்றிதழ் வாங்கிவிடுகிறார்.
அன்புடன்,
P
எனக்கு ஆய்த எழுத்துவில் அவர் பாட்டைக் கேட்டதிலிருந்து அப்படி ஒரு எண்ணம் பதிந்து விட்டது. இன்னும் பலரும் இதேபோல் எழுதியிருந்தார்கள். இனி மறு பரிசீலனை செய்கிறேன். இன்னொரு முக்கியமான விஷயம். திரைப்படப் பாடல் என்பது ஒரு எளிமையான வடிவம். நான் கூட ஒரு படத்துக்குப் பாடல் எழுதிக் கொடுத்திருக்கிறேன். படம் வரவில்லை. பணம் வந்தது. அதில் ஒருவர் இத்தனைக் காலமாக நல்ல பாடல்களை எழுதுவதால் ஏற்பட்டு விட்ட மன பிம்பமாகவும் இருக்கலாம். இந்த விருதுக்கு வைரமுத்துவைத் தேர்ந்தெடுத்ததால் பலரும் மலையாள விருதுக் கமிட்டியை விமர்சிக்கிறார்கள். ஞானபீடம் அகிலனுக்குக் கொடுக்கப்பட்டது அல்லவா? ஆனால் மற்ற மொழிகளில் கொடுக்கப்பட்ட போதெல்லாம் ஞானபீடம் மிகத் தரமான ஆட்களுக்குத்தானே கொடுக்கப்பட்டது? தமிழ் என்று வருகிறபோது மட்டும் இப்படி ஒரு சறுக்கல் ஏற்படுகிறது என்றால் தவறு யார் மீது? இப்போது வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இல்லாமல் இருந்திருந்தாலும் இப்படிப்பட்ட எதிர்ப்பு வந்திருந்தால் அதை நான் பாராட்டுவேன். தரமற்ற ஆட்களுக்கும், சினிமா ஆட்களுக்கும் இலக்கிய விருதுகள் போவதை நம் சமூகம் இன்னும் மூர்க்கமாக எதிர்க்க வேண்டும் என்பதே என் அக்கறை.
பாலியல் புகார்கள் காரணமாக விருது கமிட்டி அதை மறு பரிசீலனை செய்யப் போகிறதாம். வைரமுத்து இலக்கியத்துக்கு சம்பந்தம் இல்லாத ஆள் என்பதை அவர்கள் எப்போதும் உணர மாட்டார்கள் போல் இருக்கிறது.