சோற்று ஜாதி: இன்னும் ஒரு குறிப்பு

ஷாலின் கதையைப் படித்து ஸ்ரீமீனாக்ஷி முகநூலில் ஒரு குறிப்பு எழுதியிருந்தார். சக மனிதரின் பசி பற்றி நான் கவலையுற்றது பற்றி. பசி என்று இல்லை. பொதுவாகவே சக மனிதர்கள் மீது ஏன் எல்லோருக்கும் அக்கறை இருப்பதில்லை என்றே எனக்கு ஆச்சரியமாக இருக்கும். 20 ஆண்டுகளுக்கு முன்பு ரோஸ் என் வீட்டுக்கு வந்தார். அவர் யு.எஸ்.ஸிலிருந்து சென்னை வந்த புதிது. அப்போது அவர் பிரபலம் இல்லை. இரண்டு மணி நேரம் கழித்து அவர் கிளம்பும்போது “என் வீட்டு ரெஸ்ட் ரூமைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று சொன்னேன். அவரும் பயன்படுத்திக் கொண்டார். பிறகு சொன்னார். ”நானும் எத்தனையோ பேர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். யாருமே என்னை இப்படிக் கேட்டதில்லை.” அவர் ஒரு ட்ரான்ஸ்ஜெண்டர். அதனால் கேட்டேன். அவர் பெண்ணாக இருந்தாலும் கேட்டிருப்பேன். ஏனென்றால், ஆண்களாகிய நாங்கள் எருமை மாடுகளைப் போல் தெருமுனையில் நின்று ஒன்றுக்கு அடித்து விடுவோம். மற்ற இரு பாலருக்கும் இந்தியாவில் கஷ்டம்.

ரோஸிடம், ஏன் வசதியான அமெரிக்காவை விட்டு இந்தியா வந்தீர்கள் என்று கேட்டேன். வசதி என்றால் என்ன? சிறுநீர் கழிப்பதற்கான வசதிதான். வேறு என்ன?

இங்கே சென்னை புத்தக விழாவில் கூட எனக்கு நெருக்கமான பெண்களாக இருந்தால் “கழிப்பறை செல்வதென்றால் என்ன செய்வீர்கள்?” என்றுதான் கேட்பேன். காரணம், புத்தக விழா கழிப்பறையைப் பயன்படுத்தினால் நோய் வந்து விடும். நான் கேட்ட பெண்களெல்லாம் “தண்ணீரே குடிப்பதில்லை” என்றார்கள். ரொம்ப நல்லது. என்னைப் பொறுத்தவரை உணவும் உணவை வெளியேற்றுவதும் மதம் போன்றவை. அதில் ஒன்றை ஷாலின் மிகப் பிரமாதமாகத் தொட்டிருக்கிறார். ஒரு அருமையான கதை கட்டுரையாக ஆகியிருக்கிறது.