காஃப்காவை அங்கீகரியுங்கள், அவன் உங்கள் அண்டை வீட்டுக்காரனாக இருந்தாலும் கூட…

ஒருநாள் ஒரு நண்பனோடு பேசிக் கொண்டிருந்தேன்.  அப்போது ஒரு இலக்கிய வாசகர் வந்தார்.  அவர் எப்போதுமே என் முகத்தைப் பார்க்கக் கூட மாட்டார்.  முகமன் கூறியதும் இல்லை.  இத்தனைக்கும் நான் அவர் பற்றி எழுதியதோ பேசியதோ இல்லை.  சொல்லப் போனால் அவருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.  அதனால் அவருக்கு மரியாதை கொடுக்கும் பொருட்டு நானும் அவர் பக்கம் திரும்புவது இல்லை.  நேரில் எங்காவது தெருவிலோ இலக்கியக் கூட்டத்திலோ பார்த்தாலும் யாரோ மாதிரி போய் விடுவேன்.  என்னோடு பகைமை பாராட்ட, அல்லது என்னை ஒரு தீண்டத்தகாதவனாகப் பார்க்க ஒவ்வொருவருக்கும் ஆயிரத்தெட்டு காரணங்கள் உண்டு.  அவர் பெயர் கூட சட்டென்று ஞாபகம் வர மாட்டேன் என்கிறது.  ஒரு ஞானி அளவுக்கு நல்லவர் என்று நண்பர்கள் சொல்வர்.  நான்தான் பலமுறை எழுதியிருக்கிறேனே, வள்ளலாரே என் நண்பனாக இருந்தாலும் நான் வள்ளலார் கையால் குத்துப் பட்டு சாவேன் என்று.  அதனால் அந்த ஞானி மாதிரி நல்லவர் என் விஷயத்தில் அப்படி விரோத பாவமாக இருந்ததில் எனக்கு ஆச்சரியமும் இல்லை.  சொல்லப் போனால் கொஞ்சம் பெருமைதான், ஞானி போன்ற நல்லவர்களும் வெறுக்கும்படி எதையோ எழுதுகிறோம் என்று.  இருங்கள், அவர் பெயரை என் புத்தக அலமாரிகளில் தேடி இங்கே எழுதுகிறேன்.  அவர் ரெண்டு புத்தகமும் எழுதியிருக்கிறார். 

யெஸ், அவர் பெயர் சச்சிதானந்தம்.  மலையாள சச்சிதானந்தன் அல்ல.  இவர் வேறு.  நண்பர்கள் சச்சி சச்சி என்று ஆசையாக அவரை அழைத்துப் பார்த்திருக்கிறேன். 

என் நண்பனும் சச்சியும் ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் Michel Houellebecq பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.  ஒரு மணி நேரம் கழித்து சச்சி கிளம்பிய பிறகு நான் நண்பனிடம், ”அந்த வெல்பெக்கை விட எத்தனையோ மடங்கு நான் சிறப்பாக எழுதுகிறேன்; என் பெயரைக் கூட நீங்கள் சொல்வதில்லையே?” என்றேன்.  “அப்படியா, உங்கள் எழுத்தை போர்னோ என்று அல்லவா உங்கள் நண்பர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?” என்று சொல்லிக் கிண்டலாகச் சிரித்தான் நண்பன்.  என்னை மட்டம் தட்ட வேண்டும் என்பதைத் தவிர அவனிடம் அப்போது வேறு எந்த எண்ணமும் இல்லை என்று தெரிந்து கொண்டு அதற்கு மேல் அவனைப் பார்க்க அதிகம் செல்லாமல் இருந்தேன்.  பிறகு காலப்போக்கில் நிரந்தரமாகவே நின்று போனது.  அதேபோல் சார்லஸ் ப்யூகோவ்ஸ்கியின் போஸ்டாஃபீஸ், விமன் ஆகிய நாவல்களைப் படிக்கும்போது கூட இந்த ரெண்டையும் விட என்னுடைய ராஸ லீலா பல மடங்கு சிறப்பான படைப்பு என்று தெரிகிறது.  ஆனாலும் தமிழில் வெள்ளைத் தோல் என்றால் மவுசு கூடுதலாகத்தான் இருக்கிறது. 

என்னுடைய இருபத்தைந்தாவது வயதில் – அதாவது 1970களின் பிற்பகுதியில் – இப்போது எப்படி எல்லோரும் ஜெயமோகன் ஜெயமோகன் என்று ஆர்ப்பரிக்கிறார்களோ அதேபோல் எல்லா இளைஞர்களும் சுந்தர ராமசாமி சுந்தர ராமசாமி என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தோம்.  நான் தில்லியிலிருந்து கொல்லிப்பாவை இதழிலோ காலச்சுவடு இதழிலோ சு.ரா.வின் வீட்டு மொட்டைமாடியில் – நாகர்கோவிலில் – மாதந்தோறும் நடக்கும் காகங்கள் இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று மிகவும் ஏக்கத்துடன் கடிதம் எழுதியிருக்கிறேன்.  இன்றும் கொல்லிப்பாவையில் – அல்லது காலச்சுவடுவில் – அந்தக் கடிதம் இருக்கும்.  சுந்தர ராமசாமி என்ற பெயர் அப்போது எங்களுக்கு ஒரு ஆதர்சம்.  தமிழ்நாட்டில் வேறு எவன் அகிலனை மலக்கிடங்கு என்று தைரியமாகச் சொல்ல முடியும்?  ஜெயகாந்தனின் காலகட்டம் அப்போது முடிவுக்கு வந்திருந்தது. 

அப்போது என்னை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றியது தமிழவன் என்ற ஒற்றை ஆசாமிதான்.  பெங்களூர் க்றைஸ்ட் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த கார்லோஸ் (என்ற தமிழவன்) எனக்கு எழுதிய ஏகப்பட்ட கடிதங்களே என்னை சு.ரா. என்ற ஆபத்திலிருந்து காப்பாற்றியவை.  அவரும் நண்பர்களும் நடத்திய படிகள் பத்திரிகை என் எழுத்துக்குத் தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.  நான் படிகள் பத்திரிகையில் காத்திரமாக எழுத ஆரம்பித்தேன்.  ஆக, நான் கிளம்பிய புள்ளி தமிழவனும் படிகளும்தான். ரொலான் பார்த் (Roland Barthes) பற்றியும், மிஷல் ஃபூக்கோ (Michel Foucault) பற்றியும், க்ளோத் லெவி ஸ்த்ராஸ் (Claude Levi-Strauss) பற்றியும், ஜாக் தெரிதா (Jacques Derrida) பற்றியும் மற்றும் ஏராளமான ஃப்ரெஞ்ச் தத்துவவாதிகள், சிந்தனையாளர்கள் பற்றியும் நான் அறிந்து கொண்டது கார்லோஸ் மூலமாகத்தான்.  ஒருவர் இவர்களையெல்லாம் பயில்வது என்பது கல்கி, ராஜேஷ் குமார் போன்றவர்களைப் படித்துக் கொண்டிருந்த ஒருவர் தி.ஜானகிராமன், கு.ப.ரா., செல்லப்பா, க.நா.சு., புதுமைப்பித்தன் போன்றவர்களின் உலகத்தில் வந்து விழுந்ததைப் போல என்றுதான் இருந்தது எனக்கு.  எனக்கும் மற்ற எழுத்தாளர்களுக்குமான வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடிந்தால் நான் இங்கே சொல்ல முயல்வதையும் புரிந்து கொள்ளலாம்.  ஒருவர் சாக்ரடீஸைப் படிப்பது போலவோ, சோஃபாக்ளிஸைப் படிப்பது போலவோ அல்ல ஃபூக்கோவைப் பயில்வது.  இங்கே ஃபூக்கோ என்பதை ஒரு குறியீடாகப் பயன்படுத்துகிறேன்.  உங்களின் அடிப்படையான சிந்தனை முறையையே மாற்றி அமைப்பதுதான் அமைப்பியல்வாதத் தத்துவம்.  குறிப்பாக, அதிகாரம் குறித்த புரிதல்.  இதையெல்லாம் விளக்கி நான் பலமுறை எழுதியிருக்கிறேன்.

என் தொடக்க காலத்தில் கார்லோஸுக்கும் எனக்குமாக இருந்த கடிதத் தொடர்புகள், அவருடனான தொடர்ச்சியான உரையாடல்கள், படிகள் பத்திரிகை ஆகியவைதான் நான் சுந்தர ராமசாமி பள்ளியில் சிக்காமல் இருந்ததற்குக் காரணங்கள்.  இல்லாவிட்டால் நானும் இப்போது ஒரு ஜாங்கிரி எழுத்தாளனாகத்தான் இருந்திருப்பேன்.  ஏனென்றால், தமிழில் ஜாங்கிரி எழுத்தைத் தொடங்கி வைத்தவர் சுந்தர ராமசாமிதான்.  அதற்கு முன்பு அப்படி யாரும் ஜாங்கிரி பிழிந்ததில்லை.  ஜே.ஜே. சில குறிப்புகளில்தான் அது தொடங்கியது.  தொடங்கி இன்றளவும் சீரும் சிறப்புமாகத் தழைத்து வளர்ந்து வருகிறது.  நேற்று ஒரு சினிமா இயக்குனர் பற்றிய கட்டுரை படித்தேன்.  அடடா, அந்தக் கட்டுரையை எழுதிய புண்ணியவான் என்னமாய்ப் பிழிந்திருக்கிறார் ஜாங்கிரி!  அதைக் கிண்டல் பண்ணி காயத்ரி ஒரு பதிவு எழுதியிருந்ததைப் படித்தேன். 

”பேருண்மையைப் பகர்வதென்றால் உறக்கச் சடைவின் நீட்சியாகவோ அல்லது ஏரார்ந்த கண்ணி ஆண்டாளையொத்த அளகபாரத்தோடு சற்றயர்ந்ததாலோ இரு பாரிசங்களிலும் தாங்கொணா வலிக்குமிழ்கள். ஆயிரமாயிரம் காலமாக நெஞ்சை நிமிர்த்தி பெருமை கொளும், முன் தோன்றிய மூத்தகுடி எனும் வரன்முறை இங்ஙனம் அவ்வப்போது நறுங்கி, உருகி, தகித்துப் போவது ஏனோ என்ற ஐயவினா உந்தம் கொள்கிறது. இவ்வலிக்குமிழ்களை தாங்க ஏலாமல் முதலை வாயிடைப் போல் பொறை தளர்ந்து கவந்தனாக சுற்றி வர மனம் ஏங்குகிறது…”

“ஏய், படுத்தாம தலைவலின்னு சொல்லிட்டுப் போ…”

—சினிமா விமர்சனத்துக்குக் கூட தமிழை முறுக்கிப் பிழிந்து சுழற்றி அடிப்போர் சங்கம் மற்றும்

—அப்படிச் சுற்றினால்தான் இலக்கியம் என்று ஒத்துக் கொள்வோர் சங்கம்.”

மேலே உள்ள பதிவைப் பார்த்து விட்டு அந்தக் குறிப்பிட்ட விமர்சனக் கட்டுரையிலிருந்து எடுத்ததுதான் இந்த மேற்கோள் என்று நினைத்து விட்டேன்.  பிறகுதான் தெரிந்தது, காயத்ரியின் கைங்கரியம் இது என்று.  பரவாயில்லை, காயத்ரிக்குக் கிண்டல் பிரமாதமாக வருகிறது. 

எதற்கு இதைச் சொன்னேன் என்றால், தமிழவன் என் வாழ்வில் குறுக்கிடாமல் இருந்திருந்தால் நானும் இப்படித்தான் ஜாங்கிரி எழுத்தாளனாகி இருப்பேன்.  இந்த ஜாங்கிரி எழுத்தாளர்கள் ஜெயமோகனைப் பின்பற்றுவதாகச் சொல்கிறார்கள்.  அது அவர்களே தங்கள் காதில் சுற்றிக் கொள்ளும் பூ.  ஜெயமோகன் கொற்றவை, வெண்முரசு ஆகிய இரண்டில்தான் மிக அடர்த்தியான மொழியைக் கையாண்டிருக்கிறாரே தவிர மற்ற படைப்புகளில் அந்த மொழியைப் பயன்படுத்தவில்லை.  விஷ்ணுபுரத்தில் கூட இல்லை.  விஷ்ணுபுரத்தில் உள்ள கவித்துவமான மொழி வேறு, ஜாங்கிரி சுற்றுவது வேறு.  முழுக்க முழுக்க ஜாங்கிரி என்றால் அது ஜே.ஜே. சில குறிப்புகள்தான்.  இப்போதும் கொஞ்சமும் ஜாங்கிரி இல்லாமல் எழுதுபவர்கள் ஷோபா சக்தி, பா. ராகவன், பெருந்தேவி, லக்ஷ்மி சரவணகுமார், அராத்து, சரவணன் சந்திரன் (அவர் எழுதிய ஜாங்கிரி நாவல் சுபிட்ச முருகன் மட்டும் விதிவிலக்கு), சுனில் கிருஷ்ணன், சுஷில் குமார், மயிலன் சின்னப்பன், அருண்மொழி நங்கை என்று பலரையும் குறிப்பிடலாம்.  அருண்மொழி எழுதுவது கதைக்கும் கட்டுரைக்கும் நடுவில் இருக்கிறது.  அருண்மொழியிடம் கதையும் மொழியும் பிரமாதமாக இணைந்து வருகிறது. அவர் நிறைய எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். 

நான் சொல்வது வெறும் மொழி மற்றும் மொழி நடை பற்றியது மட்டும் அல்ல.  சிந்தனாரீதியாகவே நான் மரபார்ந்த பாதையிலிருந்து விலகி, சனாதனத்தை ஒதுக்கி வந்ததற்கு முழுமுதற் காரணம் தமிழவன்தான்.  ஃபூக்கோ, தெரிதா, ரொலான் பார்த், லெவி ஸ்த்ராஸ் போன்றவர்கள் வெறும் மேற்கத்தியச் சிந்தனையாளர்கள் அல்ல.  அவர்களின் அடையாளம் அது அல்ல.  அதிகாரம் பற்றிய புரிதலையும், விளிம்புநிலை மனிதர்களை நோக்கிய பார்வையையும் எனக்குள் உருவாக்கியது இந்த மேலை சிந்தனாவாதிகள்தான்.  இதைத்தான் தமிழவன் அறிமுகப்படுத்தினார்.  அதேபோல் எழுபதுகளின் பிற்பகுதியில் இன்னொரு ஆபத்து இருந்தது.  அது வெங்கட் சாமிநாதன்.  தமிழில் இருப்பது எல்லாமே குப்பை என்றார் வெ.சா. அங்கேதான் ரொலான் பார்த்தை முன்வைத்து, மைய நீரோட்டக் கலாச்சாரம் என்பது குப்பைக் கூளம் அல்ல, நம் சமூகவியல் ஆய்வுகளுக்கான களன் என்று விளக்கி ஏகப்பட்ட கட்டுரைகளை எழுதினார் தமிழவன். 

இப்படி படிகள் பத்திரிகையும் தமிழவனும் எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்கள் மிக அதிகம்.  ஒரே வாக்கியத்தில் சொன்னால், நான் இந்திய சனாதனத்திலிருந்து விடுபட்டு ஐரோப்பிய விளிம்புநிலைச் சிந்தனையாளர்களின் மனோபாவத்தைக் கொண்டவனாக மாறியதற்குத் தமிழவனின் பங்களிப்பு மிக அதிகம்.

ஆனால் தமிழவன் எழுதிய ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் என்ற நாவல் வெளிவந்ததும் எல்லாம் மாறியது.  அந்த நாவலை நான் கடுமையாகத் தாக்கி எழுதினேன்.  அது ஒரு fake நாவல்.  ஜே.ஜே. சில குறிப்புகளில் இருந்த வாசிப்புத் தன்மை கூட இல்லாத வெற்றுக் காகிதக் கூழ். அந்த நாவலை நான் சக்கையாக அடித்துத் துவைத்து எழுதிய பூம்பூம் ஷக்கலக்க என்ற என் கட்டுரை வந்ததும் தமிழவனுக்கும் எனக்குமான உறவு முடிவுக்கு வந்தது.  அதற்குப் பிறகான 40 ஆண்டுகள் தமிழவனுக்கு அதிகாரத் திசையில் மேல் நோக்கிய பயணம் நிகழ்ந்தது.  சாகித்ய அகாதமி உறுப்பினர், தலைவர், பல்கலைக்கழகம், போலந்து பணி, அகில இந்திய இலக்கிய அமைப்புகளில் உறுப்பினர், இன்ன பிற.  முழுசாக நாற்பது ஆண்டுகள் அவர் என் எழுத்து பற்றி மௌனம் காத்தார். 

இந்த இடத்தில் கிருஷ்ணசாமிக்கு நான் எழுதிய கடிதத்தைப் படித்துப் பாருங்கள்:

என்னுடைய இருபத்தைந்தாவது வயதில் எனக்கு ஜார்ஜ் பத்தாயை (Georges Bataille) அறிமுகப்படுத்தியவர் தமிழவன்.  அப்போது தமிழ்நாட்டிலேயே யாருக்கும் ஜார்ஜ் பத்தாயின் பெயர் தெரியாது.  ஆனால் ஜார்ஜ் பத்தாயை உள்வாங்கிக் கொண்டு நான் எழுதிய புதினங்களை, சிறுகதைகளைப் பற்றித் தமிழவன் இதுவரை ஒரு வார்த்தை சொன்னதில்லை.  ஒரு வார்த்தை இல்லை.  இனிமேல் அவர் வார்த்தையும் எனக்குத் தேவையில்லை.  

எனவே, சிறு வயதில் வீட்டை விட்டு விரட்டப்பட்டு அனாதையாக வாழ்ந்த ஒருவன் 68 வயதில் தன்னைத் திரும்பிக் கூடப் பார்க்காத பேரரசனான தந்தை பற்றி எதுவும் எழுதுவதற்கு இல்லை.  விருப்பம் இல்லை.  அது தர்மம் ஆகாது.   

முடிந்தவர்கள் சந்தா/நன்கொடை அனுப்புங்கள்.

அதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai