காவியத் தலைவன்…
சில குறிப்பிட்ட கதைகளை திரைப்படமாக்க மிகுந்த நிபுணத்துவம் தேவை. நிறையக் களப்பணியும் மேற்கொள்ள வேண்டும். ஆனால் வசந்தபாலனிடம் இத்தகைய குணாதிசயம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அவரது அரவான் திரைப்படம் வெளிவந்தபோதே இதனை நான் எழுதியிருந்தேன். ஆனாலும் அவர் அதுகுறித்தெல்லாம் கவலைப்பட்டது போல் தெரியவில்லை. எழுத்தாளர்கள் துணையிருந்தால் போதும், சினிமா கைக்கூடிவிடும் என்று நினைத்திருக்கிறார். தமிழில் நல்ல படங்கள் உருவாக வேண்டும் என்று நினைக்கும் இயக்குனர்கள் முதலில் எழுத்தாளர்களுடனான சகவாசத்தை கைவிட வேண்டும். ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் இருவரது பங்களிப்பும் ஒருபோதும் ஒரு நல்லப்படத்தை தமிழ் சமூகத்திற்கு கொடுக்கப்போவதில்லை. நல்ல படத்தை உருவாக்க இயலாமல் போனதற்கு அவர்கள் மட்டுமே காரணம் அல்ல. தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த வியாபார கேந்திரத்தை மாற்றினால் மட்டுமே அது சாத்தியம்.
ஆனால் நாடகக் கலைஞர்களை பின்னணியாக வைத்து, மிக சிறந்த படங்களை உருவாக முடியும். அதற்கு நிறைய உழைப்பும், களப்பணியும் செய்தாக வேண்டும். அரவான், காவியத் தலைவன் போன்ற முயற்சிகளை முன்னெடுக்கும் வசந்தபாலன் போன்றவர்களால், அவர்களுக்கு மட்டுமே பிரச்சனையல்ல. அவர்கள் அடுத்த சில பல ஆண்டுகள் இதே கதைக்களத்தில் திரைப்படங்கள் வெளியாவதை தடுக்கவும் செய்கிறார்கள். ஒரு பீரியட் படம் என்றால், என்ன என்ன முக்கியமான விசயங்களை கவனிக்க வேண்டும் என்கிற அறிவுக்கூட இவர்களுக்கு இல்லமால் இருக்கிறது.
போதாக்குறைக்கு தன்னுடைய பங்காக, படம் முழுக்க ஜெயமோகன் ஆங்காங்கே வரலாற்றை திரித்து பேசி செல்கிறார். பகுத்தறிவு பேசுபவன், நெற்றியில் குங்குமம் வைத்திருப்பதும், பெண்ணடிமைக்கு, மண்ணடிமை பற்றி புல்லரிக்க ஹீரோவை பேச வைத்திருப்பதும், பகத் சிங்கை வந்தே மாதரம் சொல்ல வைத்ததும் மட்டும்தான் ஜெயமோகனின் சாதனை. இதற்காக ஜெயமோகனுக்கு நிச்சயம் மோடி தலைமையிலான அரசு ஏதாவது விருது கொடுத்து கவுரவித்தாலும் ஆச்சர்யப்படுவதர்கில்லை.
இரான் இயக்குனரிடம் காவியத் தலைவன் படத்தை பாருங்கள், எங்களது பாரம்பரிய இசை வரும் என்று ரகுமான் சொன்னதாக அவரே சொல்லியிருக்கிறார். நல்ல வேலையாக இந்த படத்தை இரான் இயக்குனர் பார்க்க மாட்டார் என்றே நினைக்கிறேன். பார்த்தால் ரகுமான் மீது இருக்கும் மரியாதையே அவருக்கு போய்விடும். ஒரு பீரியட் படத்திற்காக எந்த மாதிரி இசைக்கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று கூட தெரியாத ரகுமான் போன்றவர்கள்தான் இங்கே சிறந்த இசையமைப்பாளர்கள் என்பதெல்லாம் கொடுமையிலும் கொடுமை. என்றைக்கும் ரகுமானால் ஒரு படத்திற்கு தேவையான சிறந்த இசையைக் கொடுத்துவிட முடியாது என்பதையே அவர் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். பாடல்கள் கேட்க நன்றாக இருக்கலாம். இசையை தனியாக கேட்க நன்றாக இருக்கலாம். ஆனால் அந்த பாடல்களும், இசையும் படத்திற்கு எந்த வகையில் பயன்படுகிறது என்பதுதான் முக்கியம். படத்தோடு ஒன்றாத எந்த இசையும் மோசமானதுதான். ரகுமான் இசையை ரசிக்க நினைப்பவர்கள், ஆடியோ வடிவில் கேட்டுக்கொள்ளலாம். அல்லது ரகுமானே ஆல்பமாக வெளியிடலாம்.
இதையெல்லாம் தாண்டி, நல்ல முயற்சி, நிறைய சிரமப்பட்டிருக்கிறார்கள் என்கிற மோசமான வாசகங்களை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருப்பதே தமிழ் சமூகத்தின் சாபக் கேடுதான். யாருக்கு வேண்டும் இந்த அரை வேக்காட்டுத் தனமான முயற்சி. அடுத்த சில பல ஆண்டுகளுக்கு வேறு யாரையும் இப்படி ஒரு முயற்சி செய்ய விடாமல் தடுத்தது மட்டும்தான் இந்த படத்தின் சாதனை.
– அருண்