காவியத் தலைவனைப் போன்ற மொக்கையான, அருவருப்பான படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. அதனால்தான் பத்தே நிமிடத்தில் திரையரங்கத்திலிருந்து ஓடி வந்தேன். சில ஸ்கூல் பையன்கள், “அங்கிள், நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன், படிச்சுப் பாருங்களேன்” என்று சொல்லி ஏதோ ஒரு கருமாந்திரத்தை உங்களிடம் காண்பித்த அனுபவம் உங்களுக்கு இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த அனுபவத்தைப் பெறாத ஒரு ஆள் கூட இருக்க மாட்டார். அந்தப் பொடியன் எழுதி உங்களிடம் கொடுக்கும் அந்தக் கருமாந்திரக் கவிதை மாதிரிதான் இருந்தது காவியத் தலைவன். இதில் ஏ.ஆர். ரஹ்மான் இசை வேறு. ரஹ்மான் ஆளுக்கு ஆள் இசை அமைத்துக் கொடுப்பவர். மணி ரத்னத்துக்கு ஒரு மாதிரி. வசந்த பாலனுக்கு ஒரு மாதிரி. வசந்த பாலனை அவர் எந்த அளவுக்கு ம(மி)தித்திருக்கிறார் என்பதற்கு இந்தப் படத்தின் இசையே சாட்சி. ஹார்மோனியம் கூட இல்லாமல் என்னய்யா அந்தக் கால இசை? யார் தலையில் மிளகாய் அரைக்கப்பார்க்கிறார் ரஹ்மான்? கிட்டப்பா காலத்துப் பாடல்களைக் கூட கேட்காமல் கிட்டப்பா கால கதைக்கு இசையா? எம்.கே.டி. பாடிய ஒரு பாடலைக் கேட்டிருந்தால் கூட அந்தக் காலத்தில் என்ன மாதிரியான இசைக் கருவிகள் பயன்பாட்டில் இருந்தன என்று தெரிந்திருக்குமே? இது போன்ற கொடுமைகளை கடவுள் கூட மன்னிக்க மாட்டார் என்பது கடவுள் நம்பிக்கை உள்ள ரஹ்மானுக்கு எப்படித் தெரியாமல் போனது? திறமையின்மை என்பது வேறு; ஆனால் அசட்டை என்பது மன்னிக்கக் கூடியது அல்லவே? ஹார்மோனியத்தைக் கூட பயன்படுத்தாமல் எப்படி ஐயா பீரியட் படத்துக்கு இசை அமைத்தீர்கள்? இது போன்ற அவமானகரமான படங்களுக்கு கருந்தேள் ராஜேஷ் போன்றவர்கள் விமர்சனம் எழுத வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். அவர் விமர்சனத்தைப் படித்ததால் தான் இந்த மொக்கையைப் பார்க்கப் போனேன்… இனி வருவது அருணின் விமர்சனம்:
காவியத் தலைவன்…
சில குறிப்பிட்ட கதைகளை திரைப்படமாக்க மிகுந்த நிபுணத்துவம் தேவை. நிறையக் களப்பணியும் மேற்கொள்ள வேண்டும். ஆனால் வசந்தபாலனிடம் இத்தகைய குணாதிசயம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அவரது அரவான் திரைப்படம் வெளிவந்தபோதே இதனை நான் எழுதியிருந்தேன். ஆனாலும் அவர் அதுகுறித்தெல்லாம் கவலைப்பட்டது போல் தெரியவில்லை. எழுத்தாளர்கள் துணையிருந்தால் போதும், சினிமா கைக்கூடிவிடும் என்று நினைத்திருக்கிறார். தமிழில் நல்ல படங்கள் உருவாக வேண்டும் என்று நினைக்கும் இயக்குனர்கள் முதலில் எழுத்தாளர்களுடனான சகவாசத்தை கைவிட வேண்டும். ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் இருவரது பங்களிப்பும் ஒருபோதும் ஒரு நல்லப்படத்தை தமிழ் சமூகத்திற்கு கொடுக்கப்போவதில்லை. நல்ல படத்தை உருவாக்க இயலாமல் போனதற்கு அவர்கள் மட்டுமே காரணம் அல்ல. தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த வியாபார கேந்திரத்தை மாற்றினால் மட்டுமே அது சாத்தியம்.
ஆனால் நாடகக் கலைஞர்களை பின்னணியாக வைத்து, மிக சிறந்த படங்களை உருவாக முடியும். அதற்கு நிறைய உழைப்பும், களப்பணியும் செய்தாக வேண்டும். அரவான், காவியத் தலைவன் போன்ற முயற்சிகளை முன்னெடுக்கும் வசந்தபாலன் போன்றவர்களால், அவர்களுக்கு மட்டுமே பிரச்சனையல்ல. அவர்கள் அடுத்த சில பல ஆண்டுகள் இதே கதைக்களத்தில் திரைப்படங்கள் வெளியாவதை தடுக்கவும் செய்கிறார்கள். ஒரு பீரியட் படம் என்றால், என்ன என்ன முக்கியமான விசயங்களை கவனிக்க வேண்டும் என்கிற அறிவுக்கூட இவர்களுக்கு இல்லமால் இருக்கிறது.
போதாக்குறைக்கு தன்னுடைய பங்காக, படம் முழுக்க ஜெயமோகன் ஆங்காங்கே வரலாற்றை திரித்து பேசி செல்கிறார். பகுத்தறிவு பேசுபவன், நெற்றியில் குங்குமம் வைத்திருப்பதும், பெண்ணடிமைக்கு, மண்ணடிமை பற்றி புல்லரிக்க ஹீரோவை பேச வைத்திருப்பதும், பகத் சிங்கை வந்தே மாதரம் சொல்ல வைத்ததும் மட்டும்தான் ஜெயமோகனின் சாதனை. இதற்காக ஜெயமோகனுக்கு நிச்சயம் மோடி தலைமையிலான அரசு ஏதாவது விருது கொடுத்து கவுரவித்தாலும் ஆச்சர்யப்படுவதர்கில்லை.
இரான் இயக்குனரிடம் காவியத் தலைவன் படத்தை பாருங்கள், எங்களது பாரம்பரிய இசை வரும் என்று ரகுமான் சொன்னதாக அவரே சொல்லியிருக்கிறார். நல்ல வேலையாக இந்த படத்தை இரான் இயக்குனர் பார்க்க மாட்டார் என்றே நினைக்கிறேன். பார்த்தால் ரகுமான் மீது இருக்கும் மரியாதையே அவருக்கு போய்விடும். ஒரு பீரியட் படத்திற்காக எந்த மாதிரி இசைக்கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று கூட தெரியாத ரகுமான் போன்றவர்கள்தான் இங்கே சிறந்த இசையமைப்பாளர்கள் என்பதெல்லாம் கொடுமையிலும் கொடுமை. என்றைக்கும் ரகுமானால் ஒரு படத்திற்கு தேவையான சிறந்த இசையைக் கொடுத்துவிட முடியாது என்பதையே அவர் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். பாடல்கள் கேட்க நன்றாக இருக்கலாம். இசையை தனியாக கேட்க நன்றாக இருக்கலாம். ஆனால் அந்த பாடல்களும், இசையும் படத்திற்கு எந்த வகையில் பயன்படுகிறது என்பதுதான் முக்கியம். படத்தோடு ஒன்றாத எந்த இசையும் மோசமானதுதான். ரகுமான் இசையை ரசிக்க நினைப்பவர்கள், ஆடியோ வடிவில் கேட்டுக்கொள்ளலாம். அல்லது ரகுமானே ஆல்பமாக வெளியிடலாம்.
இதையெல்லாம் தாண்டி, நல்ல முயற்சி, நிறைய சிரமப்பட்டிருக்கிறார்கள் என்கிற மோசமான வாசகங்களை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருப்பதே தமிழ் சமூகத்தின் சாபக் கேடுதான். யாருக்கு வேண்டும் இந்த அரை வேக்காட்டுத் தனமான முயற்சி. அடுத்த சில பல ஆண்டுகளுக்கு வேறு யாரையும் இப்படி ஒரு முயற்சி செய்ய விடாமல் தடுத்தது மட்டும்தான் இந்த படத்தின் சாதனை.