ஒரு லட்சம் பிரதிகள்

அன்புள்ள சாரு,

புதிய எக்ஸைலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அதற்கான முன்பதிவுத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பிருப்பதாக, உங்கள் பதிவுமூலமாக ஹரன் பிரசன்னாவின் வார்த்தைகளில் அறிந்தது சந்தோஷம் தருகிறது. சென்னை தமிழ்ப் புத்தகக் கண்காட்சியிலும் நாவல் நன்றாக விற்கவேண்டும். நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் ஊடகங்களில் நல்ல பப்ளிசிட்டி இந்தமுறை தரப்பட்டிருக்கிறது. விற்பனை என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விஷயம்.

பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள்கூட 1000 காப்பி விற்பதே அபூர்வமாக இருக்கும் தமிழ் வாசகசூழல் பற்றி அடிக்கடி கூறிவந்திருக்கிறீர்கள். விகடனில் வெளிவந்த உங்கள் ’மனம் கொத்திப்பறவை’, விகடன் பிரசுரமாக சுமார் 4000 காப்பிகளே விற்றது என்றும் சமீபத்திய பதிவில்  எழுதி இருக்கிறீர்கள். இந்தமாதிரியான சிந்தனையின் பின்புலத்தில், எஸ்.ராமகிருஷ்ணனின் வலைப்பக்கங்களை மேய்ந்துகொண்டிருந்தேன். அப்போது அவரது ’Profile’-படிக்கநேர்ந்தது. அதன் ஆங்கில வர்ஷனில், அவருடைய ‘துணை எழுத்து’ (விகடன்) கட்டுரைத்தொகுதியின் விற்பனைச் சாதனை பற்றி இப்படி ஒரு வரி: ”The compilation book of the articles, Thunai Ezhuthu, has created a new history by selling almost a lakh of copies”(!)

This claim runs in sharp contrast to your oft-repeated remarks that the sale of even the popular works by established Tamil writers hardly crosses a few thousands. The above figure by Esraa appears exaggerated. However, If it is true, then perhaps he is the only Tamil writer who has attained such a feat! What do you think, Charu?

Have a great day,

Vijayasarathy

அன்புள்ள விஜயசாரதி,

தங்கள் வாழ்த்துக்கு நன்றி.  எஸ்.ரா.வின் துணை எழுத்து ஒரு லட்சம் பிரதிகள் விற்றது மிகைப்படுத்தப்பட்ட செய்தி அல்ல. அந்தஅவசியம் எஸ்.ரா.வுக்கு இல்லை.  அது ஒரு லட்சம் பிரதி விற்றிருக்கும்.  மனம் கொத்திப் பறவை 3000 தான்.  இதற்குக் காரணங்கள் பல.  ஒன்று, எஸ்.ரா. ரஜினிகாந்த் என்றால் நான் கிஷோர் மாதிரி.  பார்த்தீர்களா, உங்களுக்குக் கிஷோர் என்றால் இந்தக் கணத்தில் யார் என்றே தெரியவில்லை.  ஹரிதாஸ் என்ற படத்தில் நடித்தாரே அவர் தான் கிஷோர்.  அல்லது, சம்பத் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  ரஜினி எங்கே, கிஷோரும் சம்பத்தும் எங்கே?

எஸ்.ரா. விகடனில் ஒரு சூப்பர் ஸ்டார்.  விகடனில் நான் எழுதியது 24 கட்டுரைகள்.  எஸ்.ரா. எழுதியது 2400 கட்டுரைகள் இருக்கும். வித்தியாசம் தெரிகிறதா?  இது தவிர இன்னொரு காரணமும் உள்ளது.  மனம் கொத்திப் பறவை ஒரு கட்டத்துக்குப் பிறகு எங்கேயும் கிடைக்கவில்லை.  விகடன் வாசகர்களுக்கும் சாரு நிவேதிதா என்ற பெயர் மறந்து விட்டது.   தமிழ் இலக்கிய உலகில் கொடி கட்டிப் பறந்த தி. ஜானகிராமனையே இன்று யாருக்கும் தெரியாது.  நம் மக்களுக்கு ஒரு பெயர் ஞாபகத்தில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதுவாக இருக்காது.  ஊடகங்கள் சொல்லிக் கொண்டே இருந்தால் ஞாபகத்தில் நிற்கும்.  அவ்வளவுதான்.  இல்லாவிட்டால் ஜெயமோகனைப் போல் ஒரு நாளைக்கு நூறு பக்கம் எழுதிக் குவித்து எல்லோரையும் திகைப்பிலேயே மூச்சு முட்டச் செய்ய வேண்டும். இது போன்ற இமாலய  சாதனைகள் செய்தால்தான் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.  என்னைப் பொறுத்தவரை தமிழ் வாசக சூழலை நிர்ணயம் செய்ய சுஜாதா தான் ஒரே அளவுகோல்.  அவர் எஸ்.ரா.வை விட சூப்பர் ஸ்டார்.  எஸ்.ரா. ரஜினி என்றால் சுஜாதா எம்ஜியார். ஆனால் அவர் நூல்கள்  சில ஆயிரங்களே விற்றன.  பத்து ரூபாய் கொடுத்து குமுதமும் தினமணி கதிரும் வாங்கி சுஜாதா தொடர்கதையைப் படிப்பார்களே ஒழிய உயிர்மை, கிழக்குவிலிலிருந்து வெளிவரும் சுஜாதாவின் நாவல்களை நூறு ரூபாய் கொடுத்து வாங்க மாட்டார்கள்.  இல்லாவிட்டால் சுஜாதா தன்னுடைய கடைசி நாள் வரை ஒரு அலுவலகத்தில் போய் வேலை செய்ய வேண்டிய அவசியமே இருந்திருக்காதே?  அவர் அப்பல்லோவில் சேர்க்கப்பட்ட போது மணி ரத்னம் தான் போய் 50,000 ரூ கொடுத்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்திருந்தது.

எனவே… இதற்கு மேல் என்ன எழுதுவது என்று தெரியவில்லை.  நன்றி, வணக்கம்.

சாரு