புதிய எக்ஸைல்: முன்பதிவுத் திட்டம்: நன்றி

புதிய எக்ஸைல் முன்பதிவுத் திட்டம் நாளை காலையுடன் முடிவுக்கு வரும் என்று கிழக்கு பிரஸன்னா சொன்னார்.  தமிழ் இலக்கிய உலகில் எப்போதும் இல்லாத அளவுக்கு முன்பதிவு செய்திருக்கிறார்கள்.  இதற்காக உதவி செய்த தினமலர், தி இந்து, அந்திமழை, புதிய தலைமுறை பத்திரிகை நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  குறிப்பாக தினமலர்.  அதன் மின்னிதழில் முன்பதிவு செய்தி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.  லட்சக் கணக்கான பேர் வாசிக்கும் தினசரிகளிலும் சஞ்சிகைகளிலும்  இலக்கிய நூல்களுக்கு இப்படிப்பட்ட செய்திகளும் விளம்பரங்களும் வருவது தமிழ்க் கலாச்சார சூழலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.  சத்யம் தொலைக்காட்சி செய்தியிலும் இது பற்றிய செய்தி தொடர்ந்து வந்தது.  அந்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

நாளை காலைக்குள் முன்பதிவு செய்ய விரும்பினால், அதற்கான இணைப்பு இது.  ஏற்கனவே கொடுக்கப்பட்டதுதான்.  மாற்றம் இல்லை.

http://nhm.in/shop/puthiya_exile

 

ஜனவரி 5-ஆம் தேதி அன்று காமராஜ் அரங்கில் (தேனாம்பேட்டை, சென்னை)  புதிய எக்ஸைல் வெளியீட்டு விழா நடக்க உள்ளது.  மாலை ஆறரை மணி.  சிறப்புரை: தருண் தேஜ்பால்.  கருத்துரை: நெல்சன் சேவியர்.  நன்றி உரை மற்றும் வாசகர்களுடன் உரையாடல்: சாரு நிவேதிதா.  2000 -க்கும் மேல் கொள்ளளவு உள்ள அந்த அரங்கில் அடியேனின் நூல் வெளியீட்டு விழா நடப்பது இது மூன்றாவது முறை. வழக்கம் போலவே அரங்கம் நிறைய வந்திருந்து அந்த விழாவை ஒரு இலக்கியக் கொண்டாட்டமாக மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன். ஜனவரி 5-ஆம் தேதி நடக்க இருக்கும் புத்தக வெளியீட்டு விழா பற்றிய தகவலையும் வாசகர்களிடம் கொண்டு செல்ல ஊடக நண்பர்கள் உதவ வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

என் பிறந்த நாள் அன்று (டிஸம்பர் 18) மாலை ஆறு மணிக்கு தி.நகர் Barbeque Nation-இல் நண்பர்களைச்  சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  யார் யார் வருவீர்கள் என்று எனக்குத் தெரிவித்தால் இருக்கை முன்பதிவு செய்ய உதவியாக இருக்கும்.   தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com

ஜனவரி 5 விழாவில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பேன்.  ஆனால் கேள்விகள் இப்போதே வந்து சேர்ந்து விட்டால் நலம். அவ்வளவு பெரிய அரங்கில் கேள்வி எழுப்பி பதில் சொல்வது கடினம்.  தருண் தேஜ்பாலிடம் ஊடக நண்பர்கள் எந்தக் கேள்வியும் கேட்க இயலாது.  மன்னிக்கவும்.  ஏனென்றால், அது தருணின் பத்திரிகையாளர் சந்திப்பு அல்ல.  அதற்காக இவ்வளவு பிரயாசை எடுத்து காமராஜ் அரங்கில் விழா நடத்தவில்லை.  நடக்க இருப்பது என்னுடைய புத்தக வெளியீட்டு விழா.  தருணிடம் கேள்விகள் இருந்தால் கோவாவில் அவர் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினால் கேட்டுக் கொள்ளலாம்.   மற்றபடி, தருண் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள என் எழுத்து எல்லாவற்றையும் வாசித்திருக்கிறார்.  புதிய எக்ஸைலின் ஆங்கில மொழிபெயர்ப்பில் சில பகுதிகளையும் வாசித்திருக்கிறார்.  அது பற்றியும் பொதுவாக இந்திய இலக்கியச் சூழலைப் பற்றியும் பேசுவார் (என்று நினைக்கிறேன்.)