வீட்டுக்குப் பக்கத்தில் மெட்ராஸ் காஃபி ஹவுஸ் உள்ளது. அங்கே காஃபி சிறப்பாக இருக்கும். எனக்கு சர்க்கரை கம்மியாக, டிகாக்ஷன் நடுத்தரமாக இருக்க வேண்டும். பொதுவாக சர்க்கரை கம்மி என்றால் டிகாக்ஷனைக் கூட்டி விடுவார்கள். அதுதான் உலக மரபு. ஆனால் எனக்கு க.நா.சு.வைப் போல டிகாக்ஷன் நடுத்தரமாக இருக்க வேண்டும். அதிக ஸ்ட்ராங் என்றால் குடிக்க மாட்டேன். என்னைப் பார்த்ததுமே தரணி அவ்வாறான காஃபியைக் கொடுத்து விடுவார். தரணிதான் அங்கே பொறுப்பாளர். சிரித்த முகம். தமிழ்ப் பெண். பொதுவாக வட கிழக்குப் பெண்கள்தான் இருப்பார்கள். வழக்கம் போல் இன்று காலை சென்றேன். ஐந்து நடுத்தர வயது ஆண்கள் ஒரு சினிமா பற்றி காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். நான் உள்ளே நுழைந்ததும் எல்லோரும் மரியாதையுடனும் பணிவுடனும் எனக்கு வணக்கம் சொல்லி நலம் விசாரித்தார்கள். சமூகம் மாறிக் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.
சமீபத்தில் மிகவும் சர்ச்சையை உண்டாக்கிய படம் அது. நான் பார்க்கவில்லை. பார்க்கவும் விருப்பம் இல்லை. தமிழ்ச் சமூகமே சினிமாவை மையமாக வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இதைப் படிக்கும் உங்களில் சிலர் நம்ப மாட்டார்கள். பில் கேட்ஸ் அளவுக்குப் பிரபலமான ஒரு ஐரோப்பிய மாது சென்ற மாதம் எனக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தார். ஒரு பத்து பேரை விசாரித்தேன். அந்த அம்மையாரைத் தெரியுமா என்று. என்னை மேலும் கீழும் பார்த்தார்கள். ரத்தன் லால் டாட்டாவைத் தெரியுமா என்று கேட்டால் மேலும் கீழும் பார்ப்பார்கள்தானே, அப்படிப் பார்த்தார்கள். முன்பெல்லாம் என்னை எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். இப்போது கேட்பதில்லை. ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவில் மூலம் தெரிந்திருக்கும். இதை எதற்குச் சொன்னேன் என்றால், ஒரு தமிழரான சுந்தர் பிச்சைக்கு என்னைத் தெரியாது. ஆனால் அவரை விடப் பிரபலமான ஒரு ஐரோப்பியர் என்னை வாசிக்கிறார். ஆனால் சுந்தருக்குக் கமலைத் தெரிந்திருக்கும்.
எழுத்தாளர்களைத் தமிழ்ச் சமூகம் கொண்டாடவில்லை என்று இனிமேல் நான் சொல்ல மாட்டேன். என்னை நீங்கள் கொண்டாடும் அளவுக்கு வேறு எந்தத் தமிழ் எழுத்தாளரும் தற்காலத்தில் கொண்டாடப்படவில்லை. அவர் இருக்கிறாரே என்று நீங்கள் நினைக்கலாம். அவரைக் கொண்டாடுபவர்கள் அவரால் பயன் பெறுபவர்கள். அவரைத் தெரியும் என்றால் சமூகத்தில் அந்தஸ்து கூடும். என்னைத் தெரியும் என்று சொன்னால், உங்களை அல்லக்கை என்று தூற்றுவார்கள். குடிகாரன் என்று தூற்றுவார்கள். கௌதம் மேனன் என்னோடு நட்பில் இருந்தபோது தினந்தோறும் என்னைப் பற்றி புகார் போகும் என்று சொல்லுவார். ”அவரோடு பழகாதீர்கள், பிற்பாடு திட்டுவார்.” இந்தத் தடைகளையெல்லாம் மீறிப் பழகுகிறார்கள்; மீறிக் கொண்டாடுகிறார்கள். அதிலும் பெண்களாக இருந்தால் கேட்கவே வேண்டாம். அவனா, அவன் உன்னைக் கெடுத்து விடுவான் என்ற அளவுக்கு பயமுறுத்துவார்கள். இதையும் மீறித்தான் பல பெண்கள் என் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களிடம் நான் ஒரு வார்த்தை தப்பாகப் பேசியதில்லை. காரணம், அவர்களோடு எல்லாம் நான் பால் பேதம் அற்றுத்தான் பழகுகிறேன்.
ஆனாலும் தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்களுக்கான இடம் இல்லை என்றே கருதுகிறேன். உங்களுக்கு ஒரு சோதனை. ஸ்லொவேனியா என்று ஒரு நாடு உண்டு. Slovenian Poets என்று கூகிளில் தட்டிப் பாருங்கள். ஸ்லொவேனியாவில் உள்ள எல்லா முக்கியமான கவிஞர்களின் பெயர்களும் புகைப்படங்களும் மற்ற விவரங்களும் வரும். அந்தப் பட்டியலில் தாமஸ் சாலமன் என்று ஒருத்தர் இருப்பார். அவர் என் நண்பர். அதேபோல் உலகில் உள்ள எல்லா நாடுகளின் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பற்றித் தேடுங்கள். மிகச் சரியான விவரம் கிடைக்கும். இந்தியாவிலும் மலையாளம், கன்னடம், மராத்தி, ஹிந்தி என்று தேடுங்கள். கிடைக்கும். தமிழ் என்று போடுங்கள். திருவள்ளுவர், கபிலர், இளங்கோ, பாரதி என்ற ரீதியில் இருக்கும். பாரதியோடு தமிழ் இலக்கியம் முடிந்து விட்டது. எட்டரைக் கோடி தமிழர்களுக்கும் அதுதான். சமகாலக் கவிஞர்களில் ஒரே ஒருத்தர் பெயர் மட்டும் புகைப்படத்தோடு உள்ளது. வைரமுத்து. இதைத்தான் philistine சமூகம் என்று சொல்கிறேன். இதனால்தான் எந்தத் தமிழ் சினிமா பற்றியும் பேசாமல் இருப்பது என் சமூகக் கடமை என்று கருதுகிறேன்.