ஆண் – பெண்

பரீட்சைக்குப் படிப்பது போல் நான் விழுந்து விழுந்து படித்த நாவல் தருணின் ஆல்கெமி ஆஃப் டிஸையர்.  அதில் ஒரு இடம் வரும்.  காதலி, ஆண்களின் பாலியல் நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்யும் மாணவி.  தன் காதலனிடமிருந்தே தொடங்கலாம் என்று முடிவு செய்வாள் அவள்.  இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருப்பார்கள்.  முழு நேரமும் கலவிதான்.  முழு நேரமும்.  அவள் முதல் கேள்வியைக் கேட்கிறாள். 

நீ சுயமைதுனம் செய்வதுண்டா?

இல்லை என்றுதான் சொல்வான் என்பது அவளுடைய திண்ணமான முடிவு.  எந்நேரமும் செக்ஸ்தானே?  இதில் சுயமைதுனம் எங்கிருந்து வந்தது?

உண்டு.

அவளுக்கு மாரடைப்பே வந்து விடும் போல் இருக்கும் அவன் பதில்.

என்ன, உண்டா?

இதோ பார் பெண்ணே.  இந்தக் கேள்வி பதில் செஷனுக்கு நான் ஒத்துக் கொள்ளும் முன்பே நான் உன்னிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டிருக்கிறேன்.  இதில் நான் சொல்லப் போகும் பதில்களை வைத்துக் கொண்டு நீ எதிர்காலத்திலோ நிகழ்காலத்திலோ எந்த விதமான டார்ச்சரும் செய்யக் கூடாது என்று.  அப்புறம் ஏன் திகைத்துப் போய் கேட்கிறாய்?

அவள் அதிர்ச்சியை அடக்கிக் கொண்டு, சரி, சரி, கேள்வி பதிலுக்குப் போகலாம். 

கடைசியாக எப்போது செய்தாய்?

காலை உணவு சமயத்தில்தான் இந்தப் பேட்டி நடைபெறுகிறது.  அவன் பதில் சொல்கிறான்:

இன்று காலையில்.

அடப்பாவி.  ராத்திரி பூராவும் என்னைப் படாத பாடு படுத்தி விட்டு, காலையில் சுயமைதுனம் வேறு செய்தாயா? ராஸ்கல். 

அப்புறம் அந்தக் கேள்வி பதில் செஷன் என்ன ஆனது என்று எனக்கு ஞாபகம் இல்லை.  பத்து ஆண்டுகளுக்கு முன் படித்தது.  அவனுடைய பதில் அவளை ரொம்பவே பாதித்து விடும். 

இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரையும் எனக்கு நேரடியாகவும் தெரியும் என்பதால் என்னையும் பாதித்த கதைதான் இது. 

நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது ஆண்கள் தங்களின் புது மனைவியிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு (எந்த மடப்பயல் சொல்லிக் கொடுத்தான் என்று தெரியவில்லை) ஏற்கனவே தான் ஈடுபட்ட காதல் கதைகளையெல்லாம் சொல்லி விடுவான்கள்.  அவ்வளவுதான்.  அதற்கு மேல் பயல் எந்தப் பெண்ணிடமும் சாதாரணமாகக் கூடப் பேச முடியாமல் போய் விடும்.  அவன்களுடைய உண்மையே அவன்களுக்கு எமன் என்று கண் கெட்ட பிறகுதான் தெரிய வரும்.  அதற்கு மேல் ஒன்றுமே செய்ய முடியாது. 

உங்களுக்கு ஒன்று தெரியுமா? எனக்குப் பெண்களைப் பிடிக்காது.  ஏன்? எக்ஸைலில் எழுதியிருப்பேன்.  காதலன் வித்தியாசமாக வேட்டி சட்டை போட்டுக் கொண்டு காதலியைச் சந்திப்பான்.  காதலி ஒன்றுமே சொல்ல மாட்டாள்.  என்னடி ஒண்ணுமே சொல்லவில்லை என்று கேட்டால், அதற்கு ஒரு துலாபாரக் கதை சொல்லுவாள் பாருங்கள், உடனே அந்தக் கதையை எழுதிக் கொண்டிருந்த எனக்குத் தோன்றியது, பகவானே, நாம் பெண்கள் இல்லாத உலகில் வாழ வேண்டுமடா என்று.  ஆனால் பெண்கள் மட்டும் தலைமுடிக்குள் வைப்பார்கள் இல்லையா, அந்தக் குண்டூசியை மாற்றினால்கூட அதைப் பற்றி ஆண் கண்டறிந்து ஆஹா, ஓஹோ, இது எவ்ளோ பிரமாதமா இருக்கு தெரியுமா என்று புகழ வேண்டும்.  இந்த ஜென்மங்களையெல்லாம் எந்த நேரத்தில் படைத்திருப்பான் என்று தெரியவில்லையே?  அப்படியாகப்பட்ட இந்த ஜென்மங்களைப் பற்றி அராத்து எழுதியிருக்கிறார். 

பெண்களைப் பிடிக்காது என்பதால் எனக்கு ஆண்களைப் பிடிக்கும் என்று நினைத்து விடாதீர்கள்.  ஆண்களையும் பிடிக்காது. 

ஏன் என்று அடுத்த அத்தியாயத்தில் எழுதுகிறேன்.

https://www.arunchol.com/araathu-article-on-men-women-relationships-arunchol-26112021?fbclid=IwAR0Kf_qV008U88Ei4leiglsVMJmhh0SbojC4lMsx3q6a_SeO11C43j1U318