வெளியுறவுத் துறையில் ஐஏஎஸ்ஸாக இருந்தாலும் கோபால் மிகவும் அடக்கமானவர். தன் பதவி பற்றி யாரிடமும் ஒரு வார்த்தை சொல்ல மாட்டார். எந்த பந்தாவும் கிடையாது. கோவாவிலிருந்து திரும்பியதும் எனக்கு ஃபோன் செய்து “நான் ஏதாவது தவறு செய்திருந்தால் சொல்லுங்கள் சாரு, திருத்திக் கொள்ளலாம்” என்றார். யார் கேட்பார் இப்படி? இப்படிக் கேட்டதால் சொல்கிறேன்.
செந்தில் நன்கு சமைக்கக் கூடியவர். பிரமாதமாகச் செய்வார். அவரும் கோபாலும் மீன் வாங்கக் கிளம்பினார்கள். நாங்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் ஒரு இடம் சொன்னார். ஆனால் அங்கே செல்வதற்கு முன்னாலேயே ஒரு பெரிய கடை இருந்திருக்கிறது. சகல மீன்களும் இருந்தன. வீட்டுக்காரர் சொன்ன கடைக்குப் போகலாம் என்கிறார் கோபால். எல்லா மீனும்தான் இங்கேயே இருக்கிறதே, இங்கேயே வாங்கலாம். இது செந்தில். மீன் வாங்கியாயிற்று. வீட்டுக்காரர் சொல்லியிருந்த கடைக்குப் போயிருந்தால் மதியம் சாப்பிட மூன்று மணி ஆகியிருக்கும். நான் வெளியே போய் சாப்பிட்டிருப்பேன். நல்ல காலம். அந்த ஆபத்து நிகழவில்லை.
அருமையான மீன் குழம்பு. ஆனால் கானாங்கெளுத்தி மீன். கானாங்கெளுத்தி எனக்குப் பிடிக்காது. பலருக்கும் பிடிக்காத மீன்தான். ஏதோ இல்லாத பாட்டுக்குத் தின்னலாமே தவிர இப்படி ஒரு விருந்தில் கானாங்கெளுத்தியா? வஞ்சிரம், காலா, வவ்வால் என்று வாங்குவது அல்லவா சிறப்பு? யாராவது குற்றாலத்தில் போய் குளியல் அறையில் குளிப்பார்களா? நான் கோவா போனால் மூன்று வேளையும் மீன் உணவுதான் சாப்பிடுவேன். மிகவும் ஏமாற்றத்துடன் “யாருங்க இந்த மீனை வாங்கியது?” என்று கேட்டேன். கோபால்தான் வாங்கச் சொன்னார் என்றார் செந்தில்.
இதுதான் பிரச்சினை. நமக்குத் தெரியாத விஷயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது. தெரியாவிட்டால் எனக்கு ஒரு போன் போட்டுக் கேட்கலாமே? அதுவும் இல்லை.
அடுத்து ஒரு தம்பி. பெயர் விவேக். நிறையப் படித்தவர். படித்துக் கொண்டிருப்பவர். தங்கமான தம்பி. இன்றைய இளைஞர்களைப் போன்றவர் அல்ல. குடிப் பழக்கம் இல்லை. சிகரெட் இல்லை. பெண் சகவாசமும் இல்லை. பிறந்து வளர்ந்ததெல்லாம் திருவாரூர். இங்கே ஊர்ப் பெயரைச் சொல்லியே ஆக வேண்டும்.
நானும் சீனியும் வகதூர் பீச்சுக்குச் சென்று கொண்டிருந்தோம். விவேக், செந்தில், ப்ரியா மூவரும் இரண்டு ஸ்கூட்டர்களில் பின்னால் வருகிறார்கள். ஒரு திருப்பத்தில் போலீஸ் நின்று கொண்டு வாகனங்களை மடக்கி யார் யார் முகக் கவசம் அணியவில்லையோ அவர்களுக்கெல்லாம் அபராதம் வசூலித்துக் கொண்டிருந்தார்கள். ரசீது கொடுத்தால் ஆயிரம். இல்லாவிட்டால் ஐநூறு. இரவில் போலீஸ் கெடுபிடி கிடையாது. இரவிலும் கெடுபிடி செய்தால் கோவாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வர மாட்டார்கள் என்று அரசுக்குத் தெரிந்திருக்கிறது.
திருப்பத்தில் வண்டிகளைப் பார்த்ததுமே வண்டியை மடக்கித் திருப்பாமல் நேராக விட்டார் சீனி. அவரும் முகக் கவசம் அணிந்திருக்கவில்லை. ஆனால் ஹெல்மெட் போட்டிருந்தார். போலீஸும் கண்டு கொள்ளவில்லை. ப்ரியாவுக்கு போன் செய்து திருப்பத்தில் திரும்ப முயற்சிக்காமல் நேராக வந்து விடச் சொல்லி சொன்னார் சீனி. போன் போட்டேன். போலீஸிடம்தான் நின்று கொண்டிருக்கிறோம் என்றார் ப்ரியா.
ஐநூறைக் கொடுத்து விட்டு வர வேண்டியதுதானே? விவேக் தம்பி போலீஸிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறார். போலீஸுக்குப் பிடிக்காத விஷயம் பேச்சு வார்த்தை. லைசென்ஸை எடு என்கிறார்கள். தம்பியிடம் லைசென்ஸ் கிடையாது. ஹெல்மெட்டும் போடவில்லை. விஷயம் தீவிரமாகிறது. செந்தில் அரசு அதிகாரி. தொலைதூரத்தில் தன் வண்டியில் நின்று கொண்டிருந்தவர் போலீஸிடம் நெருங்கிப் போய் தன் அடையாள அட்டையைக் காண்பிக்கிறார். ”நீங்கள் கமிஷனர் ஆஃப் போலீஸாக இருந்தாலும் அபராதம் கட்டித்தான் ஆக வேண்டும்” என்கிறார்கள் போலீஸ்காரர்கள். அவர்கள் ஒன்றும் நேர்மையாளர்கள் இல்லை. அவர்கள் பேசும் முறையே அப்படித்தான். இதற்கிடையில் ஒரு போலீஸ்காரர் உஷாராகி விட்டார். மதுவைப் பரிசோதிக்கும் எந்திரத்தை உருவி செந்தில் முன்னே நீட்டி ஊதுங்கள் என்கிறார். செந்தில் ஒரு பாட்டில் பியர் அருந்தியிருந்தார். ஐந்து நிமிடம் முன்பு.
நேற்று இரவு சாப்பிட்டது சார் என்கிறார் செந்தில். அப்படியானால் தைரியமாக ஊதுங்கள். முப்பதுக்குள் இருந்தால் நீங்கள் யாரும் அபராதம் கட்ட வேண்டாம். கிளம்பிப் போய் விடலாம். இல்லையென்றால் மூவாயிரம் அபராதம்.
முப்பத்தைந்து இருந்ததாம். மூவாயிரம் கட்டிவிட்டு வந்து சொன்னார்கள்.
குழி தோண்டியது விவேக். மூடியது செந்தில். இருநூறு ரூபாயில் முடிந்திருக்க வேண்டியது மூவாயிரம் தண்டமாயிற்று.
இனிமேல் நான் விவேக் வண்டியில் செல்லக் கூடாது என்று முடிவு செய்தேன். அது மட்டுமல்லாமல் எனக்கு திருவாரூர் என்றதும் அல்வா சாப்பிட்டது போல் ஆகி விட்டது. ஏனென்றால், கீழத் தஞ்சை மாவட்டம் பூராவும் இப்படித்தான் இருப்போம். எங்கள் மாவட்டத்தில் கடந்த நூறு ஆண்டில் ஒரே ஒரு புத்திசாலிதான் தோன்றினார். அவர் ஒரு கட்சியில் இருந்து ஐந்து முறை முதல்வராக இருந்தவர். அவரைத் தவிர எங்கள் மாவட்டத்தில் நான் ஒரு புத்திசாலியைக் கூடக் கண்டதில்லை. என்னையும் சேர்த்தே சொல்கிறேன்.
மறுநாளும் விவேக் முகக் கவசம் அணியாமல் ஐநூறு ரூபாய் அபராதம் கட்டினார். ப்ரியா சொன்னார். இன்னொரு முறை விவேக் ஸ்கூட்டரில் செல்லும் போது ஹெல்மட் போடவில்லை. போலீஸைப் பார்த்ததும் ஹெல்மட்டை எடுத்து மாட்டும் போது வண்டி வண்டி பக்கவாட்டில் சரிந்து நெளிந்து விட்டது. எப்படியும் வண்டியின் சொந்தக்காரர் ரெண்டாயிரம் மூவாயிரம் கேட்பார்.
நான் தங்கியிருந்தது ஒரு இடம். சீனி தங்கியிருந்தது இரண்டு கி.மீ. தூரத்தில் இன்னொரு இடம். ஆனால் அவரது அறைக்கு வெளியே காம்பவுண்டு சுவர்க் கதவைத் திறந்தால் கடல் அலை. அந்தக் கடல் மணலில் அமர்ந்து இரவு முழுவதும் பேசிக் கொண்டிருக்கலாம். வலப்பக்கமும் இடப்பக்கமும் மேஜையின் மேல் மூடு விளக்குகள் இருக்கும். இரவில் ரம்மியமாக இருக்கும். காம்பவுண்டு கதவின் சாவியைப் பணிப்பெண்ணிடம் இருந்து வாங்கித் திறந்து கொண்டு போய் கடல் மணலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு, திரும்பும் போது பூட்டி விடலாம். காலையில் பணிப்பெண்ணிடம் சாவியைக் கொடுக்க வேண்டியது. இதுதான் முறை.
ஊருக்குத் திரும்ப இன்னும் இரண்டு தினங்கள் இருந்தன. ஒரே ஒரு நாள்தான் அந்தக் கடல் மணலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். இரண்டு தினங்களிலும் அந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. முன்பே இது தெரியாமல் நான் தங்கியிருந்த வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து பேசி வீணடித்து விட்டோம். இன்னும் இரண்டு தினங்கள் இருந்த நிலையில் மாலையில் அந்தப் பக்கம் வந்த அந்த இடத்தின் முதலாளியிடம் விவேக் சாவி கேட்டிருக்கிறார். அவர் கடுப்பாக “அதெல்லாம் சாவி தர முடியாது. ஆறு மணிக்குப் பூட்டினால் மறுநாள் காலையில்தான் திறப்போம்” என்கிறார். முதலாளி எப்போதும் அங்கே இருப்பதில்லை. மாலை நேரத்தில் மட்டுமே மேற்பார்வைக்கு வருவார். உடனே திரும்பி விடுவார். நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்? சரி என்று போய் விடுவீர்கள்தானே? நாங்கள் திருவாரூர்க்காரர்கள் அப்படிப் போக மாட்டோம்.
விவேக் அந்த முதலாளியிடம் கேட்டார். “ஏன் சாவி கொடுக்க மாட்டீர்கள்? நேற்று உங்கள் பணிப்பெண் கொடுத்தாரே?”
“அப்படியா செய்தாள்? இதோ அவளை வேலையை விட்டுத் தூக்கி விடுகிறேன்.” முதலாளி.
ங்கொய்யால. சாவுங்கடா. இதுதான் எங்கள் ஊரின் வாழ்வியல் கோட்பாடு.
வேலையை விட்டுத் தூக்கவில்லை. ஆனால் செம டோஸ் விழுந்தது போல. மறுநாள் பணிப்பெண் எங்களைக் கொலை வெறி கண்களில் மின்ன முறைத்தாள். அப்போதும் விவேக் விடவில்லை. அவளிடம் போய் சாவி கேட்டார். ஏதோ கொங்கணியில் திட்டினாள். கன்னடம், தமிழ், இந்தி எல்லாம் கலந்த மொழி. திட்டினாள் என்று புரிந்தது. என்ன என்று புரியவில்லை.
ஆக, அந்த இரண்டு நாட்களும் கடலை வெறுமனே தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டு சிமெண்ட் தரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். நான் இதேபோல் இன்னும் பல திருவாரூர் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தேன். அதில் முக்கியமான கதை: டிஜிபி நண்பருடன் நாகப்பட்டினம் போயிருந்தபோது சாப்பாட்டுக் கேரியரிலிருந்து சாப்பாட்டையும் குழம்பு போன்ற ஐட்டங்களையும் எடுத்துப் போட ஒரு கான்ஸ்டபிளிடம் கரண்டி கேட்டார் டிஜிபி. பக்கத்து ஓட்டலில் கேட்டால் கொடுப்பார்கள். கேட்டபோது மதியம் மணி ஒன்று. அஞ்சு நிமிட வேலை. அரை மணி நேரம் காத்திருந்து விட்டு, கேரியரில் இருக்கும் ஸ்பூனைக் கொண்டே எடுத்துப் போட்டு சாப்பிட்டோம். எங்காவது விபத்தில் சிக்கியிருப்பார் என்றார் டிஜிபி. நல்ல காலம். அப்படி நடக்கவில்லை. கான்ஸ்டபிள் திரும்பி வந்த போது நேரம் இரண்டரை. வேர்த்து விறுவிறுத்து சீருடை தொப்பலாகி இருந்தது. பாப்பனச்சேரியில் (பால் பண்ணைச் சேரி) இருக்கும் அவர் வீட்டுக்குப் போயிருந்தாராம். கரண்டி எடுத்து வர. நாகப்பட்டினத்திலிருந்து பாப்பனச்சேரி நாலு கி.மீ. கீழத் தஞ்சை மாவட்டத்தின் தனித்த சிறப்பு இது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் இப்போது துபாய் போன்ற நாடுகளில் சீரும் சிறப்புமாக வாழ்கிறார்கள்.
இப்படிப்பட்ட மகான்களை அழைத்துக் கொண்டு நான் அடுத்த பயணத்துக்குச் செல்ல முடியுமா? சீலே மாதிரி நாட்டுக்கு இவர்களோடு போனால் நிச்சயம் ஆயுள் தண்டனைதான் என்று நினைக்கிறேன். அதனால் அடுத்த முறை சீனியோடு மட்டுமே கிளம்பலாம் என்று இருக்கிறேன். வேண்டுமானால் கோபால் வரலாம். ஆனால் எதைக் குறித்தும் ஐடியா, ஆலோசனை எதுவும் கொடுக்கக் கூடாது.
இன்னும் வரும்…