தியாகராஜா

வணக்கம் சாரு சார்,

“நான்தான் ஔரங்கசீப்…” வாசித்துக் கொண்டிருக்கிறோம். புதுமையாகவும் கூடவே விசித்திரமாகவும் உள்ளது. இது சாருதானா? இல்லை, உண்மையிலேயே நாவலில் உள்ளது போல் பேய் ஏதாவது பிடித்துத்தான் எழுதுகிறாரா எனத் தோன்றுகிறது.

உழைத்த உழைப்பை அணுக் கூட நாவலில் தெரியப்படுத்தாமல், ஒவ்வொருவரின் சுய சரிதம் மூலம், அவர்கள் சொல்வது போல் காட்டி இருக்கிறீர்கள்.

ஆனால் இந்தக் கடிதம் ஔரங்கசீப் பற்றி அல்ல, அடுத்ததாக எழுதப்போகும், தியாகய்யர் பற்றியது.

மோகமுள் நாவலை ஒலிச்சித்திரமாக கேட்டுக்கொண்டு இருந்த போது, பாபு, ரங்காண்ணாவிடம் முதல் வகுப்புக்கு வரும் பொழுது சில இடங்களில் தியாகய்யர் பற்றி ரங்கண்ணா சொல்வது.

“எங்கய்யா இத கையால கூடத் தொட்டது கிடையாதுடா.” (காபி)

“எங்கடா திருவாரூரா, என் பிரபு கிடந்து வாழ்ந்த இடம்.”

“தொட்டது என்ன, கண்ணால பாத்தது கூட கிடையாது, (பெண்கள் ) சன்னாசி மாதிரி, எல்லாம் எதுக்கு, இதுக்குத் தான். எலுமிச்சம்பழம், பாக்கு, பொடி ஒண்ணயும் தொட்டது கிடையாது, எல்லாம் என்னத்துக்கு… இதுக்குத்தான்.”

எனக்கு ஒரு ஆவல். தி. ஜா. ஒரு கோடி என்றால், நீங்கள் இன்னொரு கோடி. அவர் கூட தியாகய்யரை நேரடியாக எழுதாமல் ரங்கண்ணா வாயால்தான் சொல்லி இருக்கிறார். உங்களுக்கு ஔரங்கசீப் என்னதான் வித்தியாசம் என கூறியிருந்தாலும், பரபரப்புக்குப் பஞ்சமில்லாத வாழ்க்கை ஔரங்கசீப்பினுடையது.  அது நமக்கான தீனி என்பதால் கடாக்கறி குழம்பு போல், ஒரு பிடி பிடித்தாயிற்று. ஆனால் தியாகய்யர் வாழ்க்கையில் என்ன பரபரப்பு (எனக்கு அவரைப் பற்றி ஒன்றும் தெரியாது) இருக்கப்போகிறது, அதை எவ்வாறு எழுத்தாக்கப் போகிறீர்கள் என ஒரு ஆவல்.

கோபிநாத்…

டியர் கோபிநாத்,

உண்மைதான்.  ஔரங்கசீப் மட்டும் அல்ல, மொகலாய அரசின் ஒவ்வொரு பாத்திரத்தைப் பற்றியும் ஐநூறிலிருந்து ஆயிரம் பக்கம் வரை பரபரப்புடன் எழுதலாம்.  உதாரணமாக, நூர் ஜஹான்.  ஆனாலும் தியாகராஜர் பற்றி எழுதுவதை விட ஔரங்கசீப் பற்றி எழுதுவதே கடினமாக இருக்கிறது.  ஏனென்றால், சரித்திரம் அத்தனையும் எழுதப்பட்டிருக்கிறது.  லட்சம் பக்கங்கள் இருக்கும்.  ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு சம்பவத்தையும் எழுதி வைத்திருக்கிறார்கள்.  ஆனால் தியாகராஜரைப் பற்றி ஒன்றரைப் பக்கம்தான் அவரது சிஷ்யகோடிகள் எழுதியிருக்கிறார்கள். 

ஆனால் தியாகராஜர் தனது கீர்த்தனைகளிலே தன் வாழ்வை எழுதியிருக்கிறார்.  அந்தக் கீர்த்தனைகள் அத்தனையும் அவரது சுயசரிதை.  ஆனால் அதில் என்ன இருக்கும் தெரியுமா?  ராமனைத் தேடும் ஒரு பக்தனின் மனப் போராட்டங்கள்தான்.  மற்றும் ஓரிரு சம்பவங்கள்.  வில்லன் என்று பார்த்தால் அவருடைய அண்ணன். 

ஆக, ஒன்றரைப் பக்கக் கதையை வைத்துக் கொண்டு நான் சிலம்பமே ஆடியிருக்கிறேன்.  என் உச்சபட்ச சாதனையாக தியாகராஜர்தான் இருக்கும்.  ஆனால் அந்த நாவலை எல்லோராலும் வாசிக்க இயலாது.  அப்படிப்பட்ட சரளமான நடையில் எழுத – ஒரு மகத்தான ஆன்மீகத் தேடலை சாமான்யர்களின் மொழியில் எழுத – என் மனம் ஒப்பவில்லை. ஆனால் தியாகராஜரோ தனது கீர்த்தனைகளை மிக மிக சாதாரணத் தெலுங்கில்தான் பாடியிருக்கிறார்.  கடின மொழி இல்லை.  பண்டிதர்களின் மொழி இல்லை.  ஆனால் அது பற்றிய நாவலையும் சாமான்யர்களின் மொழியில் எழுதுவது சரியென்று தோன்றவில்லை.  ஏனென்றால், தியாகராஜர் வாழ்ந்த வாழ்க்கை நமக்கு அந்நியமாகி விட்டது.  அந்தத் தேடல் நமக்கு அந்நியமாகி விட்டது.  அவரது அனுபவங்கள் நமக்குக் கட்டுக்கதையாகி விட்டது.  ஒருநாள் தியாகராஜர் நாரதரைச் சந்திக்கிறார்.  இன்னொரு நாள் ராமனையும் சீதையையும் அனுமனையும் சந்திக்கிறார்.  அனுமன் தான் நால்வருக்கும் சமைத்துப் போடுகிறார்.  இதையெல்லாம் நம்புங்கள் மானிடப் பதர்களே என்கிறார் தியாகராஜர்.  அவர் கீர்த்தனை பொய் இல்லை.  அவர் ஒன்றும் புருடா விடவில்லை.  இப்படி எல்லாமே அந்நியம் என்று ஆகி விட்ட காலகட்டத்தில் மொழியும் அப்படித்தான் இருக்கும்.  சாமான்யர்களுக்குப் புரிய வேண்டுமானால் அவர்கள் டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகளின் கதா காலட்சேபத்தைக் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். 

ஆனால் முதலில் ஒரு பிரதி எழுதியிருந்தேன்.  அது ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமே புரியும்.  அதிலேயே தொடரச் சொல்லி சீனி சொன்னார்.  பிறகு நானே மனதைத் தேற்றிக் கொண்டு அந்த மொழியை சற்றே லகுவாக்கிக் கொண்டேன். 

தியாகராஜர் ஔரங்கசீப் அளவுக்குப் பெரிதாக இராது.  இருநூறு பக்கம்தான் வரும்.  அடுத்த ஆண்டின் மத்தியில் முடித்து விடுவேன்.  ஔரங்கசீப் ஜனவரியில் முடியும். 

அந்தப் பேய் விஷயம் பெரிய விசித்திரம் இல்லை.  நான் எதை எழுதுகிறேனோ அதுவாக மாறி விடுகிறேன்.  அவ்வளவுதான். 

சாரு