நாளைக்குள் ஔரங்கசீப் நாவலின் ஐந்து அத்தியாயங்களை அனுப்ப வேண்டும். இன்னும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். எழுத ஆரம்பிக்கவில்லை. நேற்றுதான் ஜஹானாரா பேகத்தின் சுயசரிதை கிடைத்தது. இரவுக்குள் முடித்து விடலாம் என்று பார்த்தால் ஒன்பதரைக்கே உறக்கம் கண்களைச் சுழற்ற ஆரம்பித்து விட்டது. படுத்து விட்டேன். படுத்த உடனேயே எனக்குப் பிரக்ஞை போய் விடும். மரணம் மாதிரிதான். காலை நான்கு மணிக்குத்தான் உயிர்த்தெழுதல்.
இத்தனை கெடுபிடியான நிலையில் இதை ஏன் எழுத ஆரம்பித்தேன் என்றால், மனம் பூராவையும் வேறொரு எண்ணம் ஆக்ரமித்து விட்டது. அதை நான் எதிர்கொண்டு, பதில் சொல்லி, மனதிலிருந்து எடுத்துப் போட்டால்தான் மேற்கொண்டு ஔரங்கசீப்பில் உட்கார முடியும்.
அவர் பெயர் கோவிந்தன். என்னை விட இருபது வயது சிறியவர். ஆணாகப் பிறந்து விட்டாலும் அவர் ஒரு தாய்தான். அதிலும் என் மீது அளப்பரிய அன்பு கொண்டவர். என்னை ஆசான் என மதிப்பவர். இது ஒரு oxymoron நிலை. தாயுள்ளமும் இருக்கிறது, என்னையும் ஆசானாக நினைக்கிறார் என்றால் அது கண்ணி வெடி சூழ்ந்த நிலம் என்று பொருள். ஒன்று, ஆசானாக நினைக்கலாம். அல்லது, தாயாக இருக்கலாம். ரெண்டுமே சேர்ந்தால் அபாயம். அடிக்கடி முட்டிக் கொள்ள வேண்டியதுதான். எனக்கும் அவந்திகாவுக்ம் ஏன் முட்டிக் கொள்வதே இல்லை என்றால், அவள் என்னை எல்கேஜி பொடியன் மாதிரியும் தன்னைத் தாய் மாதிரியும் மட்டுமே நினைப்பதால்தான். ஆசானாவது பூசானாவது போய்யா வேலையைப் பாத்துக்கிட்டு என்பாள்.
கோவிந்தன் என்னை ஆசானாகவும் மதித்து, தாயாகவும் நினைப்பவர். எனக்கு அறிவுரை சொல்லும் அளவுக்குத் தனக்கு அனுபவம் இருக்கிறது என்று அவர் நினைக்கிறார். லஹௌரில் இரண்டு சூஃபி ஞானிகள் அடங்கியிருக்கிறார்கள். ஒருவர், மியான் மீர். அவரது முரீத் (சீடர்), முல்லா ஷா. முல்லா ஷா மியான் மீரிடம் வந்த புதிதில் மியான் மீர் முல்லா ஷாவைக் கண்டு கொள்ளவே இல்லை. பேசவே இல்லை. ஒரு ஆண்டு சென்ற பிறகுதான் பேசவே ஆரம்பித்திருக்கிறார். 300 ஆண்டுகளுக்கு முந்தைய கதை இது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது சினிமாத் துறையில். ஆனால் இலக்கியத்தில் மட்டும் ஏன் ஆசானுக்கு அறிவுரை வழங்குகிறீர்கள் மக்களே?
நான் ஒன்றும் சினிமாவில் உதவி இயக்குனர்கள் இருப்பது போல் இருங்கள் என்று சொல்லவில்லை. இன்னமும் இயக்குனர் தன் அலுவலகத்துக்குள் நுழைந்தால் – பொதுவில் – மற்றவர்கள் எதிரில் அவரது உதவிகள்தான் அவருக்குக் காலுறைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவுக்கு வெளியே இருப்பவர்களால் இதை நம்ப முடியாது. நான் நேரில் பார்த்தவன். எல்லா இயக்குனர்களும் அப்படி என்று சொல்ல மாட்டேன். ஆனால் ரொம்பப் பேர் அப்படித்தான். சில கனவான் இயக்குனர்கள் உண்டு. அவர்கள் உங்கள் கண்களைப் பார்க்க வேண்டும் என்றால், அவரது அலுவலகத்துக்கு வெளியே இரண்டு ஆண்டுகள் தினமும் நிற்க வேண்டும். தினமும் நாள் முழுக்க, கால் கடுக்க நின்றால், இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் உங்களை ஏறிட்டுப் பார்த்து மூணு மாசம் கழிச்சு வா என்பார். மூணு மாதம் கழித்துப் போனால் கடைக்கு அனுப்பி சிகரெட் வாங்கி வரச் சொல்லுவார். இத்தனைக்கும் இந்த உதவி அமெரிக்காவில் நல்ல வேலையை விட்டு விட்டு வந்திருப்பார். சினிமா ஆசை. இதையெல்லாம் நான் நேரில் கண்டிருக்கிறேன்.
இலக்கியம் அப்படி அல்ல. நட்பாகவே பழகலாம். ஆனால் என்னோடு பழகும் சிலர் எனக்கே அறிவுரை சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர். இது பற்றி நான் நூறு முறை எழுதி விட்டேன். நீங்கள் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கும் வரை நானும் இது பற்றி எழுதிக் கொண்டேதான் இருப்பேன்.
இன்றைய இந்தப் பதிவுக்குக் காரணம், கோவா நாட்குறிப்புகளில் நான் விவேக் பற்றியும் கோபால் பற்றியும் ’எதிர்மறையாக’ எழுதியிருந்ததுதான். என் மீது அன்பு கூர்ந்து என்னை நெருங்கி வருபவர்களையெல்லாம் நான் இப்படி விமர்சனம் செய்து விரட்டி விட்டு விட்டால் அது எனக்குக் கெடுதி இல்லையா என்பது கோவிந்தன் வாதம். ”உங்களைப் பலரும் தந்தை ஸ்தானத்தில் பார்க்கிறார்கள்; நீங்கள் இனிமேலும் இருபத்தைந்து வயது பையன் இல்லை. அதனால் பார்த்து சூதனமாக நடந்து கொள்ளுங்கள்.”
சுஜாதா போன்ற ஒரு பொழுதுபோக்கு எழுத்தாளரே ஒருபோதும் – அவர் எழுத்திலும் சரி, வாழ்விலும் சரி – முதுமை அடைந்ததில்லை. அப்படியிருக்க ஒரு கலைஞனாக வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கா முதுமை வந்து விடும்? நடையில் வேகம் குறைந்து விட்டது, உணவின் அளவு குறைந்து விட்டது என்ற இரண்டு விஷயங்களைத் தவிர எனக்கும் இருபத்தைந்து வயது பையனுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உடம்பின் உள்ளே உள்ள எந்திரங்கள் முதுமை அடைந்திருக்கும். அதில் சந்தேகமில்லை. ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல சிந்தனை கூர்மைதான் அடைந்து கொண்டிருக்கிறது. (’அடைந்துக் கொண்டிருக்கிறது’ இல்லை வளன்! வாசிப்பு என்கிற போது கருத்தில் மட்டும் கவனம் செலுத்தாதே; அதன் பௌதிகத் தோற்றத்திலும் கவனம் கொள். எனக்கு இலக்கணமே தெரியாது. ஆனால் தப்பு விடுவதில்லை.)
என்னை இப்போது பலரும் அப்பா என்றே அழைக்கிறார்கள். அது எனக்குத் தெரியும். அதனால் அவர்களை நான் விமர்சிக்கக் கூடாது; விமர்சித்தால் அவர்களின் அன்பை இழக்க நேரிடும் என்றால் அது எனக்குப் பெரிதும் மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய விஷயம்தானே தவிர அதனால் இழப்பு ஏதுமில்லை எனக்கு.
நான் விமர்சனம் செய்தால் – நான் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ய மாட்டேன், பொதுவில்தான் எழுதுவேன் – அதற்காக மன உளைச்சல் அடைபவர்கள் என்னோடு பழக முயற்சி செய்யக் கூடாது. நான் ஒன்றும் பொதுவில் போட்டு மானபங்கம் செய்வதில்லை. பொதுவான விமர்சனங்களையே முன்வைக்கிறேன்.
கோபாலைப் பற்றி எழுதியிருந்தேன் இல்லையா? கோபால் கோவித்துக் கொண்டு என்னை விட்டு விலகி விடுவாராம். கோவிந்தனின் வாதம். விவேக்கிடம் நேற்று பேசினேன். கோபித்துக் கொண்டாயா என்று கேட்டேன். பெரிதாகச் சிரித்தார். இதிலிருந்தெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டியதுதானே, இதில் கோபப்பட என்ன இருக்கிறது என்றார். இப்படிப்பட்டவர்கள்தான் என்னோடு பழக முடியும்.
”கோபால் வெளியுறவுத் துறையில் பெரிய அதிகாரி. அவர் நட்பு ஒரு அரிதான விஷயம். அவரைப் போய் இப்படித் திட்டி எழுதியிருக்கிறீர்களே?” என்று தொடங்கிய கோவிந்தன் இன்னொரு நண்பரை – அவர் பெயர் கிருஷ்ணசாமி என்று வைத்துக் கொள்வோம் – உதாரணம் காட்டி அவரைப் பாருங்கள் என்றார். இதுதான் தஞ்சாவூர் வேலை என்பது. கோவிந்தன் கோவைக்காரர். இருந்தாலும் தஞ்சாவூர்க்காரனான என்னோடு பழகிப் பழகி தஞ்சாவூர் புத்தி வந்து விட்டது போலும். கிருஷ்ணசாமி பாட்டுக்கு சிவனே என்று தெருவில் போய்க் கொண்டிருக்கிறார். அவரை ஏன் இப்படி இழுத்து அடி வாங்கிக் கொடுக்கிறீர்கள், கோவிந்தன்?
கிருஷ்ணசாமி என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய நண்பர். அவர் யாரையுமே விமர்சித்தோ திட்டியோ பேசியது இல்லை. அவரைப் போல் இருங்கள் என்கிறார் கோவிந்தன். கிருஷ்ணசாமியை நான் எனக்கு எதிர் உதாரணமாகக் கருதுகிறேன். ஒரு மனிதன் எப்படி வாழக் கூடாதோ அப்படி வாழ்வதாகக் காண்கிறேன். என் வாழ்வியலும் சரி, இலக்கியத்திலும் சரி, அவருக்கு நேர் எதிராகவே வாழ விரும்புகிறேன். இப்போது இந்தப் பதிவின் முதல் அத்தியாயத்தை வாசியுங்கள். கிருஷ்ணசாமியைப் போல் நான் ஒருநாள் வாழ்ந்தாலும் என்னை நீங்கள் மனநோய் விடுதியில்தான் சந்திக்க முடியும். முதல் பத்தியில் எழுதியிருந்தேனே உறக்கம், அது என்னை விட்டு விலகி விடும்.
என்னோடு பழகும் பலரும் என்னைப் புரிந்து கொள்ளவே இல்லை என்று நினைக்கிறேன். ரமண மகரிஷியிடம் சென்று நீங்கள் ஏன் சாமி நித்யானந்தா போல் வாழ மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டால் எப்படி இருக்கும்? அதேதான் இதுவும்.
நான் ஊரோடு ஒத்துப் போயிருந்தால் மகாநதிக்கு அடுத்த படத்தில் நான் தான் வசனம் எழுதியிருப்பேன். ஊரோடு ஒத்துப் போயிருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்பே நான் எம்.பி. ஆகியிருப்பேன். நான் ஒதுங்கி வாழ்ந்தேன் என்று சொல்வதை விட என் மனசாட்சிக்கு உண்மையாக இருந்தேன். ஒதுங்கி வாழவில்லை. விமர்சித்தேன். சமூகத்தையும், அரசியலையும். ஊரோடு ஒத்துப் போயிருந்தால் நான் ஏன் ஐயா 25 வயதில் ஜேஜே சில குறிப்புகளைப் போட்டு அப்படிக் கிழி கிழி என்று கிழித்திருக்கப் போகிறேன்? அது ஒன்றுதானே இலக்கிய உலகில் எனக்கு வாழ்நாள் தடையை ஏற்படுத்திக் கொடுத்தது?
என் சகா ஒருத்தர் இன்று சாகித்ய அகாதமியின் செயலாளராக இருக்கிறார். நான் வாசகர்களிடம் காசு கேட்டுக் கொண்டு வாழ்கிறேன். காரணம் ஒன்றே ஒன்றுதான். நான் சமரசம் செய்து கொள்ள மறுக்கிறேன்.
கார்த்திக் பிச்சுமணி ஒரு சமயம் சீனியிடம் சொன்னதாக சீனி சொன்னார். ”சாருவை விமர்சிக்கலாம். புத்திமதி சொல்லலாம். ஆனால் அதற்கு நீங்கள் ஒரு சிறுதெய்வமாகவாவது இருக்க வேண்டும். ஏனென்றால், சாரு கடவுள்.” இந்த வாசகத்தைத் தயவுசெய்து கட்டுடைத்துப் புரிந்து கொள்ளுங்கள். இங்கே ஒன்றும் ”வழிபாடு” நடத்தவில்லை. ”சாருவுக்கு அறிவுரை சொல்வதாக இருந்தால் அதற்கு உங்களைத் தகுதியாக்கிக் கொள்ளுங்கள்” என்பதுதான் கார்த்திக்கின் வாதம்.
நான் மியான் மீர் மாதிரியெல்லாம் இல்லை. மிகவும் எளிமையானவன். நீங்கள் லெவி ஸ்த்ராஸ், லூயி அல்தூஸ்ஸர், மிஷல் ஃபூக்கோ, ரொலான் பார்த், ஜாக் தெரிதா, ஜாக் லக்கான், ஜில் துலூஸ் (Gilles Deleuz) போன்ற தத்துவவாதிகளையோ இன்னும் நூற்றுக்கணக்கான தமிழ் எழுத்தாளர்களையோ படிக்க வேண்டும் என்று கூட நிபந்தனை விதிக்க மாட்டேன். என்னோடு பேசுவதற்கு ஒரே ஒரு விஷயம் போதும்: என்னைப் படியுங்கள். அது போதும். அதைக் கூட செய்யாமல் என்னிடம் வந்து அறிவுரை சொன்னால் எனக்குக் கோபம் வரும்.
கோவிந்தன் என் மீது அன்பு மிகக் கொண்டு இந்த அறிவுரைகளைச் சொன்னார். நல்லது. நான் சி.சு. செல்லப்பா, க.நா.சு., புதுமைப்பித்தன், நகுலன், கோபி கிருஷ்ணன், ந. சிதம்பர சுப்ரமணியன் ஆகியோர் பற்றி உரையாற்றியிருக்கிறேன். ஒவ்வொன்றும் மூன்றிலிருந்து நான்கு மணி நேரம். ந.சி. இரண்டு மணி நேரம். கோபி எட்டு மணி நேரம். ஆக மொத்தம், முப்பது மணி நேரம் இருக்கும். இதில் நகுலன், கோபி, புதுமைப்பித்தன் ஆகிய மூவர் பற்றிய உரைகளையாவது கேட்காமல் எனக்கு அறிவுரை சொன்னால் என்னை நீங்கள் அவமதிக்கிறீர்கள் என்றே எடுத்துக் கொள்வேன். இந்த உரைகளைக் கேட்டால்தான் நான் யார் என்றே உங்களுக்குப் புரியும். இல்லாவிட்டால் உங்கள் அன்பு மழை என் மீது பொழிவதும், நான் பதிலுக்கு இப்படி எழுதுவதும் நிற்கவே போவதில்லை.
இன்னொரு நகைச்சுவையான விஷயம், ஏதாவது ஏடாகூடம் செய்தால்தான் காவியத்தில் இடம் பெறுகிறோம், விவேக் மாதிரி. எங்களோடு ராஜா வெங்கடேஷும், கார்த்திக்கும் (கிருஷ்ணகிரி) கூடத்தான் வந்தார்கள். இருவருமே அதிகம் பேச மாட்டார்கள். எந்த ஏடாகூடமும் கிடையாது. அவர்களைப் பற்றி நான் எழுதவே இல்லை. இப்படித்தான் நடக்கிறது. என்ன செய்ய?
இனிமேல் அறிவுரை சொல்லாதீர்கள். அதிலும் எனக்கு அறிவுரை சொல்வது, அறிவுரைகளின் மத்தியிலேயே சுவாசித்துக் கொண்டிருக்கும் ஒருத்தனை மேலும் அறிவுரை வெள்ளத்தில் மூழ்கடித்து மூச்சு முட்டச் செய்து சாக அடிப்பதற்குச் சமம்.
நேற்று எனக்கு வீட்டில் கிடைத்த பத்து அறிவுரைகளில் சில:
மழையில் வாக்கிங் போகாதே. எல்லாம் மழைக் காலம் முடிந்து வாக்கிங் போய்க் கொள்ளலாம்.
ஊரில் கொரோனா போய் விட்டதென்று ரொம்ப ஆடாதே.