நேற்று எக்ஸ்பிரஸ் அவென்யூ போகவில்லை. காதர் நவாஸ் கான் ரோடு போய் விட்டேன். என் நண்பர் மகேஷ் முகநூல் பார்க்க மாட்டார். ஆனால் நேற்று ஏதோ எதேச்சையாகப் பார்த்திருக்கிறார். ஊரில் பெரும்பாலும் இல்லாதவர் நேற்று ஊரில் இருந்திருக்கிறார். எப்போதும் வேலை மும்முரத்தில் இருப்பவர் நேற்று கொஞ்சம் ஆசுவாசமாக இருந்திருக்கிறார். நான் வரட்டுமா என்றார். கரும்பு தின்னக் கூலியா என்றேன். காதர் நவாஸ் கானில் தொஸ்கானோ என்ற இத்தாலிய உணவகம் உள்ளது. அங்கே போனோம். மகேஷ் கேரளத்தைச் சேர்ந்தவர் என்றாலும், உலகமெல்லாம் சுற்றுபவர் என்றாலும் சைவம். அவர் சைவ உணவும் நான் சால்மன் மீனும் சாப்பிட்டோம். அப்படி ஒரு அட்டகாசமான இடத்தில் பியர் இல்லை, வைன் இல்லை. ஆதி மனிதர்களைப் போல் தண்ணீரே குடிக்க வேண்டி வந்தது. சங்க காலத்தில் எல்லாம் மது அருந்தியிருக்கிறார்கள். இடையில் இந்தக் குடிக்குத் தடை எப்போது வந்தது என்று தெரியவில்லை.
அப்போதுதான் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஜப்பானிய உணவகம் பற்றிக் குறிப்பிட்டார் மகேஷ். அதுதான் என் வீடு என்ற அளவுக்கு ஒரு காலத்தில் அந்த உணவகம் என் வாழ்வோடு இணைந்திருந்தது. வெளியில் சாப்பாடு என்றாலே அந்த ஜப்பானிய உணவகம்தான். அங்கே விஷேஷம் என்னவென்றால், சாக்கேயும் கிடைக்கும். நான் ஜப்பான் போனதில்லை. ஆனால் உலகத்தில் வேறு எங்கேயும் – தாய்லாந்தில் கூட – நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்த ஜப்பானிய உணவகத்தில் கிடைப்பது போன்ற அத்தனை ஒரிஜினலான சாக்கே குடித்ததில்லை. என்னைப் பார்த்ததும் குசலம் விசாரிக்கும் அளவுக்கு அங்கே உள்ள ஒரு தமிழ்ப் பெண் பரிச்சயமாகி இருந்தார். அந்த சாக்கே ஜப்பானிலிருந்து இறக்குமதியாவதாக அவர் சொல்லியிருக்கிறார். இது ரொம்ப முக்கியம். தாய்லாந்தில், மலேஷியாவில், அமெரிக்காவில் வாங்கிய சாக்கே எல்லாம் சர்பத் மாதிரிதான் இருந்தன.
மகேஷ் அது பற்றிக் குறிப்பிட்டதும் ஆஹா, அங்கே போயிருக்கலாமே என்றேன். அந்த உணவகத்தின் பெயர் மறந்து விட்டது. ஆனால் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் இடைவெளி. மட்டுமல்லாமல் கொரோனாவுக்கு முன்பே ஒரு வருடமாக அங்கே நான் செல்ல முடியவில்லை. ஒருமுறை போன் செய்து கேட்ட போது மராமத்து வேலை நடந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அதோடு தொடர்பு விட்டுப் போயிற்று. போன் செய்து இருக்கையை முன்பதிவு செய்து கொண்டுதான் செல்ல முடியும். அங்கே இருபது பேருக்கு மேல் அமர முடியாது. அவ்வளவு சின்ன இடம்.
அதன் உரிமையாளர் – ஜப்பானியர் – 25 ஆண்டுகளாக சென்னையில் வசித்தும் ஒரு வார்த்தை கூடத் தமிழ் தெரியாது. கூகிளில் போட்டு அதன் பெயரைக் கண்டு பிடித்து விட்டோம். தாலியா. இப்போது திறந்து விட்டார்கள் என்றார் மகேஷ்.
நாளை ராஜேஷ் வந்தால் போக வேண்டும். அங்கே சுஷி கிடைக்கும். இந்த உலகிலேயே எனக்கு ரொம்பப் பிடித்த உணவு சுஷிதான். சமைக்காத பச்சை மீன். உடனே கோவிந்தன் ஜி போன்றவர்கள் நம்முடைய மீன் மார்க்கெட்டைக் கற்பனை செய்து கொண்டு, அந்த மீனைப் பச்சையாகச் சாப்பிடும் ஆதி மனிதனைப் போல் என்னைக் கற்பனை செய்து கொள்ளக் கூடாது. சுஷியை எப்படி வெட்டுவது என்று பெரிய பெரிய பயிற்சி நிலையங்களே ஜப்பானில் உள்ளன. அதில் பெரிய நிபுணர்களெல்லாம் இருக்கிறார்கள். பின்வரும் இணைப்பில் ஒரு செஃப் மிக நல்ல முறையில் சுஷி பற்றி அறிமுகப்படுத்துகிறார்:
சுஷி மீனுக்குத் தொட்டுக் கொள்ள ஒரு சட்னி கொடுப்பார்கள். அதன் பெயர் இதுவரை தெரிந்ததில்லை. அது போன்ற ஒரு காரம் உலகத்திலேயே இருக்க முடியாது. கொஞ்சம் அதிகமாகப் போட்டு விட்டால் மூச்சு விட முடியாது. அது ஒரு ஆவி போல் மூச்சை அடைத்து விடும். கப்பென்று மூச்சுக் குழாயை முட்டும். அது எதனால் செய்வது என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். பச்சைக் கடுகும் பச்சை முள்ளங்கியும் சேர்த்து அரைத்துச் செய்யும் சட்னி. நாம் கடுகைத் தாளித்து விடுவதால் காரம் இழந்து விடுகிறது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழி எனக்குப் புரிந்ததே இல்லை. இந்த ஜப்பானிய சட்னியை சாப்பிட்ட போதுதான் அது புரிந்தது. அதன் பெயர் வஸாபி என்கிறார்கள். வஸாபி தடவிய பட்டானியெல்லாம் இப்போது விற்பனைக்கு வருகிறது.
இந்த வஸாபி எனக்கு உயிர். கடுகு எண்ணெயே எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால் அவந்திகாவுக்கு அது வாந்தி வரக் கூடிய அளவுக்குப் பிடிக்காது என்றபடியால் அதற்கு வீட்டில் தடை இருக்கிறது.
ஆக, இனிமேற்கொண்டு பழையபடி தாலியா உணவகத்துக்கே செல்ல ஆரம்பிக்க வேண்டியதுதான்.
முகம் அறியா வாசக நண்பர் எஸ். சரவணனுக்கு…