பித்தனின் பாடல்கள்: மனுஷ்ய புத்திரன்

சமீபத்தில் பிராகிருத மொழியின்  அகப்பாடல் திரட்டு ஒன்றை படித்துக்கொண்டிருந்தேன். ’காஹா சத்தசஈ’ எனப்படும் அக்கவிதைத் திரட்டிலிருந்து தேர்ந்தெடுத்த கவிதைகளை தமிழில் சுந்தர் காளியும் பரிமளம் சுந்தரும் மொழிபெயர்த்திருக்கின்றனர். பொதுவாக நவீன கவிதை வாசிப்புப் பழக்கம் உள்ள எவருக்கும் கவிதை என்று தோன்றாத மிக எளிய சொற்களில் அக்கவிதைகள் எழுதப்பட்டிருந்தன.  காமத்தின் பெருமூச்சுகள், பிரிவின் பரிதவிப்புகள், காதலின் முன் இயலாமையின் ஏக்கங்கள் என விரியும் அப்பபாடல்ககளுக்கும் சங்கப்பாடல்களுக்கும் இடையே  வியக்கத்தக்க ஒற்றுமைகளைக் காணமுடிந்தது. இதை மொழிபெயர்ப்பாளர்களும் தங்கள் அறிமுக உரையில் சுட்டுகின்றனர். ஆண் பெண் உறவுகளின் சிக்கலான நவீன கால மனங்கள் உருவாவதற்கு முந்தைய காலகட்டத்தில் நேரடியாக உடலின் தேவைகள், ஏக்கங்களின் வழியாக காதல் சொல்லப்படுகிறது. காதல் என்பதுகூட ஒரு பூடகமான மைய்யமான எதையுமே தெளிவாகக் கூறாத ஒரு உள்ளீடற்ற சொல். உடல்கள் உடல்களைத்தேடி கொள்ளும் விழைவே இக்கவிதைகளின் ஆதார ஊற்று. அது ஒரு குயிலின் இணையை வேண்டும் ஏக்க அழைப்பைப் போன்றது.இக்கவிதையைப் பாருங்க

புத்தகம் வழிப்பட்ட கலவி

சலித்துப் போகிறது விரைவில்

அக்கணத்துப் புதுமைகளே

நான் விரும்புபவை

வேறொரு கவிதை

என் பாவாடையின் முடிச்சுக்காய்த் துழாவியபோது

ஏற்கனவே அவிழ்க்கப்பட்டிருப்பது கண்டு வெட்கினான்

நானோ,

ஒரு நகை நகைத்து அவனை ஆரத்தழுவினேன்

இந்தக் கவிதையைப் பாருங்கள்

அவள் பாவாடை காற்றில் விரிந்து

தொடையில் பற்குறிகள் தென்பட்டதும்

பொற்புதையலின் மூடி திறந்தாற்போல்

பெருங்கிளர்ச்சியுற்றாள் அவளைப் பெற்றவள்

இதுபோன்ற பாடல்கள் உடல்களின்மீதும் பாலின்பத்தின்மீதும் பிற்காலத்தைய ஒடுக்குமுறைகளும் கண்காணிப்புகளும் நாசூக்குகளும் இடம் பெறாத காலத்தின் வாழ்வியலிருந்து உருவானவை.  தன் மகளின் தொடையிலிருக்கும் பற்தடங்களைப் பார்த்து தன் மகள் நிறைவான பாலின்ப வாழ்க்கை வாழ்வதாக ஒரு அன்னை பூரிப்படைவதாக எழுதும் ஒரு கவிஞனின் சுதந்திரம் இன்றைக்கு சாத்தியமற்றதாக இருக்கிறது.  நான் ஒரு முறை  ’ஈர்க்கிடை புகா இள முலை’ பற்றி ஒரு கவிதை எழுதினேன். அது என் எதிரிகளால் ட்ரோல் செய்யப்பட்டது. என் மீது அக்கறைகொண்ட நண்பர்கள் இதுபோன்ற கவிதைகளை ஃபேஸ் புக்கில் எழுதாதே என அக்கறையுடன் வலியிறுத்தினார்கள். மிக எளிய, நம்முடையை பழந்தமிழ் இலக்கியத்தில் புழங்கக்கூடிய சொற்கள்கூட இன்று அதிர்ச்சி மதிப்பிற்குரியதாகிவிட்டன. வரலாற்றில் ஒரு சொல் எப்போது ஆபாச சொல்லாக மாறுகிறது என்பதை வைத்து அந்தக் கலாச்சார வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத் தோற்றதில் எழுதி விடலாம். அந்த வகையில் நமது மனங்கள் மொழி ரீதியாகவும் வாழ்வியல் ரீதியாகவும் கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றிற்கு இலக்கிய பிரதிகளும் விலக்கல்ல. அன்றாட வாழ்வில் மிக எளிய பாலியல் நடத்தைககளும் சொற்களும்கூட ஒரு இலக்கிய பிரதிக்குள் வரும்போது ஆபாசமானதாக மாறிவிடுகின்றன. அதனால் எதையும் குறிப்பால் உணர்த்தும் மாபெரும் இலக்கியத் தலைமுறைகள் கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழில் உருவாகி வந்திருக்கின்றன. புனைகதைகளின் புனிதக் காதலின் மானசீகப் போராட்டங்களும் கவிதைகளும் மறைபொருள்ககளும் இப்படித்தான் நவீன தமிழ் இலக்கியப் பரப்பை ஆக்ரமித்துக்கொண்டன.

இந்த ஒடுக்குமுறையை மீற முயன்ற எழுத்தாளர்களில் சாரு முதன்மையானவர். இதை கலகம் என்றும் வக்கிரம் என்றும் இருமுனைகளில் அபிப்ராயங்கள் அவர்மேல் விழுந்தன. ஆனால் அவர் தன் புனைவெழுத்துக்களிலும் பத்திகளிலும் இந்த இறுக்கமான ஒழுங்கினை தொடர்ந்து கலைத்துக்கொண்டிருந்தார். நவீன மனங்களின் நீங்காத துயரத்தின் பீடையை ஒழித்து நம்முடைய பழங்கால இலக்கியங்கள் போல உடலின் இன்பங்களையும் வாழ்வின் கிளர்ச்சிகளையும்  நோக்கி தனது எழுத்துக்களை செலுத்தினார். இதற்காக அவர் பழிச்சொற்களையும் அவமானங்களையும், ஒதுக்குதலையும் சந்தித்தார். நவீன இலக்கியத்தின் மீது இருந்த ‘பொலிடிகல் கரெக்ட்னெஸ்’ஸை உடைத்து ஒரு புதிய சுதந்திர வெளியை நோக்கிச் செலுத்தியதுதான் சாருவின் முதன்மையான பங்கு. இதைச் செய்வதற்கான ஒரு சாகச மொழி நடையும் அவருக்குக் கூடி வந்தது. அனுபவங்களின் அல்லது மன உணர்வுகளின் துவக்கப்புள்ளியிலேயே எந்தப் பூச்சுகளுமற்று எழுதுவது ஒரு சவால். அதற்கு ஒரு தைரியம் தேவை. அது சாருவிடம் எப்போதும் இருந்திருக்கிறது.

இந்தப் பின்புலத்தில்தான் சாருவின் இக்கவிதைகளைக் காண்கிறேன். சிறந்த உரைநடையாளர்கள் கவிதைமேல் அக்கறை கொள்வதும் சிறந்த கவிஞர்கள் உரைநடையை கைக்கொள்வதும் தமிழில் புதிதல்ல. நகுலன், சுந்தரராமசாமி, பிரமிள், க.நா.சு., சுஜாதா, பாலகுமாரன்,  எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன். பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், பெருமாள் முருகன்,  பா.வெங்கடேசன், பெருந்தேவி, போகன் சங்கர் என கவிதைக்கும் உரைநடைக்கும் இடையே ஊடாடியவர்களின் பெரும் பட்டியல் இருக்கிறது. சாரு உலகளாவிய அளவில் முதன்மையான கவிஞர்கள்பால் பெரும் ஈடுபாடுகொண்டவர். அவர்களில் பலரைப் பற்றி தமிழில் எழுதியிருக்கிறார். ஸீரோ டிகிரியே பாட்டு இடையிட்ட ஒரு நடை தான். அதன் கவிதைப் பகுதிகள் அந்த நாவலின் வண்ணத்திற்கு முக்கியக் காரணம்.

இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் பல சமூக வலைத்தளங்களில் வந்தபோது அவை கவிதையா எனக்கேட்டு கேலி செய்திருக்கிறார்கள். சாருவே இதை இக்கவிதைகளின் ஊடே பதிவு செய்கிறார். இந்தக் கவிதை மொழியின் வெளிப்படைத்தன்மை, நேரடித்தன்மை, எளிமை காரணமாக இவற்றை கவிதை அல்ல என்று நிராகரிப்பது ஒரு வெளிபாட்டு முறைமையை நிராகரிக்கும் செயல். சாரு இதில் கைக்கொண்டிருக்கும் மொழிக்கு ஏராளமான முன்னுதாரணங்கள் நவீன கவிதையிலிலும் பழங்கவிதைகளிலும் இருக்கின்றன.  இக்கவிதைகளில் இன்னொரு உடலுக்கான, உயிருக்கான இச்சையும் பரிதவிப்பும் பிரிவின் துக்கமும் காட்டுத்தீபோல பற்றி எரிகின்றன. தாபம் இங்கே தன் ஆடைகளைக் களைந்து வெட்ட வெளியில் தன்னை நிறுத்திக்கொள்கிறது. அதன் வழியாக தனக்கு ஒரு நீதி வேண்டுகிறது. மனித உடல் காலகாலமாகக் கோரும் நீதி அது. கூட்டை விட்டுத் தவறி விழுந்துவிட்ட ஒரு பறவையைப்போல பெரும் பரிதவிப்பும் இக்கவிதைகள் எங்கும் நிரம்பியிருக்கின்றன. அவை உடலின் மீதான பிரார்த்தனைகள். இச்சையின்  நடனங்கள்.

மாயா பற்றிய அவரது கவிதைகள் தனித்தனி கவிதைகள் அல்ல. அவை ஒரு நீள் கவிதையின் பகுதிகள். அவை ஒரு தனிப்பகுதியாகவும் பிற கவிதைகள் இன்னொரு பகுதியாகவும் தொகுக்கப்பட்டால் இத்தொகுதிக்குள் ஒரு ஒத்திசைவு உண்டாகும் என்று தோன்றுகிறது.

நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பிராகிருத கவிதைகளின் சுதந்திரமான, கூச்சங்களற்ற இந்த வெளிப்பாட்டுமுறைக்கு ஒரு தேவையும் அவசியமும் இருப்பதுபோல சாருவின் கவிதைகளுக்கும் உண்டு. நம்முடைய குறுகலான வாசிப்புப் பழக்கவழக்கங்களின் வழியே இக்கவிதைகளை நிராகரிக்கலாகாது. இவை வேறொரு இலக்கிய மரபு சார்ந்தவை.

சாருவுக்கு என் அன்பும் வாழ்த்தும்.

அன்புடன்,

மனுஷ்ய புத்திரன்

25.12.2021