கோக்கோ ஜம்போ

ஏற்காடு. நள்ளிரவு முடிந்து காலை மணி நான்கு இருக்கும். முந்தின மாலை ஏழரையிலிருந்து கேம்ப் ஃபயர் போட்டு பேசிக் கொண்டிருந்தோம். ஒரு பன்னிரண்டு பேர் இருக்கலாம். நள்ளிரவுக்கு மேல் யாரோ ஒரு பாட்டைப் போட்டார்களா, நான் ஆட ஆரம்பித்து விட்டேன். எங்கள் குழுவில் இளையராஜாவையெல்லாம் காரில் போகும்போதோ தனியாக இருக்கும்போதோதான் கேட்பார்களாயிருக்கும். இப்படி ஒன்று கூடும் போது கோக்கோ ஜம்போ மாதிரி பாடல்கள்தான். இல்லாவிட்டால் கவ்வாலி. யாரோ மார்க்ஸிடம் ஒரு கேள்வி கேட்க, விவாதம் தொடங்கியது. ஆம். அ. மார்க்ஸும் இருந்தார். மூன்று மணி அளவில் மீண்டும் பாட்டு. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். மெய்ம்மறந்து ஆடிக் கொண்டிருந்தேன். அப்போது சுரேஷ் சொன்னதாக பிற்பாடு சீனி சொன்னார். ”இந்த அறுபத்தெட்டு வயதில் இரவு பூராவும் இந்தப் பாடல்களுக்கு டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் சாருவைப் போல் வாழும் கொடுப்பினை எனக்கு இருந்தால் போதும், வேறேதும் வேண்டாம்.”

இப்படியெல்லாம் எழுதுவதால் என் வாசகர் வட்ட நண்பர்களை குடிகாரக் கும்பல் என யாரும் எண்ணி விட வேண்டாம். அந்தப் பன்னிரண்டு பேரில் ஏழு பேர் குடிக்க மாட்டார்கள். வினித் அதில் பிரதானமானவன். ஏன் அவன் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், அவன் தான் குடிக்காமலேயே ஏழு லார்ஜ் போட்ட மாதிரி எப்போதுமே எக்ஸ்டஸியில் இருப்பான். அப்படி எக்ஸ்டஸியில் பேசியதைத்தான் ஸீரோ டிகிரி விழாவில் தமிழ்கூறு நல்லுலகமும் கண்டு வியந்தது.

எனவே குடியை இங்கே இழுக்காதீர்கள். அப்படிச் செய்வது வாழ்வையே மிக எளிமையாகக் குறுக்கிப் பார்க்கும் பாமர மனம். என் வாசகர்களாகிய நீங்கள் அப்படிச் செய்யலாகாது என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். வாசகர் வட்ட நண்பர்களில் சிலர் எழுத்தாளர்களாகத் தெரிய வராமல் இருக்கலாம். வாழ்க்கை பூராவுமே எழுதாமலும் இருக்கலாம். ஆனால் அஞ்சு தொகுதி சிறுகதைத் தொகுதியும் மூணு நாவலும் எழுதியவர்களை விட தெளிவான இண்டெலக்டும் ஞானமும் நல்லொழுக்கமும் உடையவர்கள். நல்லொழுக்கம் என எதைச் சொல்கிறேன் என்றால், துரோகம் செய்ய மாட்டார்கள். பணத்துக்காக அறத்தை இழக்க மாட்டார்கள். ஒரே வாக்கியத்தில் சொன்னால், பணம் இவர்களின் வாழ்வில் ஒரு சின்ன அம்சம். பணம் எதையும் தீர்மானிப்பதில்லை. இப்படி ஒருவர் வாழ்வதே இன்று பெரிய சாதனை அல்லவா? சில தினங்கள் முன்பு வெளியிட்டேனே ஒரு கடிதம், அதைப் படித்துக் கண்கள் கலங்கியதாக பலரும் எனக்கு போன் செய்தார்கள். அந்தக் கடிதத்தில் இருந்த அறம்தான் அதற்குக் காரணம். அந்தப் பெண் நம்பிக்கை இழக்கவில்லை என்பதே காரணம். அப்படிப்பட்டவர்கள்தான் என் வாசகர் வட்டத்தினர்.

இன்று காலை வழக்கம்போல் நாலு மணிக்கு எழுந்தேன். ஆனால் வழக்கம் போல் தியானம் செய்யாமல் இந்தப் பாடலைக் கேட்டேன். பிறகு திரும்பவும் போட்டு டான்ஸ் ஆடினேன். அவந்திகா எழுந்து விடாமல் இருப்பதற்காக ஏர்பாட் மாட்டிக் கொண்டேன். நீங்களும் கேட்டு ஆடலாம்.

Mr. President – Coco Jambo (1920 x 1080p HD) videoclip – YouTube