வாழ்த்துக்கள் ஞாநி!

ஞாநியின் நீண்ட கால நண்பர்களில் அடியேனும் ஒருவன்.  அவர் இந்தியன் எக்ஸ்பிரஸில் பணி புரிந்த போதும் அந்த நிர்வாகத்தை எதிர்த்து பல ஆண்டுகள் வழக்குத் தொடுத்துப் போராடிய போதும் பீட்டர்ஸ் காலனியில் இருந்த அவர் வீட்டுக்குப் போய் பேசிக் கொண்டிருந்திருக்கிறேன்.  இன்னமும் அவர் வீட்டு பச்சரிசி சோறும் சாம்பாரும் ரசமும் உருளைக் கிழங்கும் எனக்கு ஞாபகம் உள்ளன.  வீட்டுக்கு எதிரே இருக்கும் சுவரில் சாய்ந்து பேசிக் கொண்டிருப்போம், ஆறேழு நண்பர்கள்.  யார் யார் சாப்பிடுகிறீர்கள் என்று வந்து கேட்பார்.  முதல் ஆளாக நான் கை தூக்குவேன்.

அருந்ததி ராய் அளவுக்கு அகில இந்திய அளவில் அறியப்பட்டிருக்க வேண்டியவர்.  தமிழ் அளவுக்கு ஆங்கிலம் எழுதும் நீங்கள் ஏன் தமிழில் மட்டுமே எழுதுகிறீர்கள் என்று ஒருமுறை கேட்டேன்.  யாரோடு உரையாடுகிறீர்கள் என்பது முக்கியம் என்றார்.  இப்போது ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்திருப்பதாக நேற்று அவரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.  வாழ்த்துக்கள் ஞாநி.  ஞாநி, சந்த்ரு போன்றவர்கள்தான் மத்தியில் ஆட்சியாளர்களாக இருக்க வேண்டும்.   ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகள் எதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.  அவர்கள் செய்வதெல்லாம் ஏதோ சிறார்கள் செய்யும் குறும்பு வேலை போல் தெரிகிறது.  அதனால் ஆம் ஆத்மி கட்சியை நான் காமெடி கட்சி என்று எழுதி வருகிறேன்.  அதோடு ஆணாதிக்கம், இந்தி வெறி நிரம்பியவர்களாகத் தெரிகின்றனர் ஆம் ஆத்மியின் வட இந்திய நிர்வாகிகள்.  எதிர்காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.  ஆனால் காங்கிரஸைத் தவிர வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும் அது இந்தியாவின் எதிர்காலத்துக்கு நல்லதுதான்.  ஆம் ஆத்மி காங்கிரஸுக்கு மாற்றாக இருந்தால், அப்படி வளர்ச்சி அடைந்தால் அதை விட நல்ல விஷயம் எதுவும் இல்லை.  பிஜேபி Vs ஆம் ஆத்மி என்று தேர்தல் வர வேண்டும்.  அப்படி வந்தால் நான் ஞாநிக்காக தேர்தல் வேலை செய்வேன்.

இப்படி நல்ல மாதிரி யோசித்துக் கொண்டிருந்த போது ஞாநி ஆம் ஆத்மியின் குல்லாயைப் போட்டிருப்பது போல் ஒரு மனத் தோற்றம் ஏற்பட்டது.  மன்னியுங்கள் ஞாநி.  இப்படித்தான் நல்ல நேரத்தில் கூட  என் மனதில் ஏதாவது எக்குத்தப்பாக தோன்றித் தொலைத்து விடுகிறது.

 

Comments are closed.