பத்து ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தின் மாத்ருபூமி இதழில் உலக இசை பற்றி தொடர் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த போது என்னிடம் கணினி வசதி இல்லை. எல்லா இசையையும் அந்தந்த நாடுகளில் வசிக்கும் வாசக நண்பர்களின் மூலம் குறுந்தகடுகளாக தருவித்துக் கேட்டே எழுதிக் கொண்டிருந்தேன். அந்தத் தொடர் கட்டுரை கலகம் காதல் இசை என்ற தொகுப்பாக தமிழில் வெளிவந்து வெற்றிகரமாக 100 பிரதிகள் விற்றது. (தமிழில் எழுதுவது வீண் என்று நினைப்பது இது போன்ற கட்டுரைத் தொகுப்புகளால்தான்.) நாவல் எழுதினால் இன்று இல்லாவிட்டாலும் முப்பது ஆண்டுகள் சென்று யாராவது பேசலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. கலகம் காதல் இசை எல்லாம் ஸிஸிஃபஸ் உருட்டிய பாறாங்கல்லைப் போன்றதுதான். போகட்டும். கோணல் பக்கங்கள் தொகுதியில் ஒருமுறை ஸால்ஸா பற்றி எழுதிய போது Guaguanco என்ற இசை வடிவத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். இப்போது எக்ஸைல் – 2க்காக guaguanco குறித்து ஆய்வு செய்த போது கணினி வசதி இல்லாத போது இது பற்றி எழுதியது ஞாபகம் வந்தது. எக்ஸைலில் வரும் பெண் ஸால்ஸா நடனக்காரி என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். கூபாவின் தெருக்களில் Guaguanco ஆடுவதை இந்த இணைப்பில் பாருங்கள். எக்ஸைல் – 2இல் 1200 பக்கங்களை சரி பார்த்து விட்டேன். இன்னும் 200 பக்கங்கள் மீதி. ராப்பகலாக இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன். இப்போது ஸால்ஸா பக்கங்கள் ஓடிக் கொண்டிருப்பதால் நிறைய வேலை வாங்குகிறது.
Comments are closed.