இன்னும் 200 பக்கங்கள் இருக்கின்றன. நான்கு நாட்களாக தினம் 12 மணி நேரம் ஸால்ஸா, த்தாங்கோ (Tango) இசையையும் நடனத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அஞ்சலி ஸால்ஸா டான்ஸர் என்று எக்ஸைலில் வரும். ஆனால் அதோடு அந்த விபரம் நின்று விடும். இந்த இடங்களையெல்லாம் தான் நிரப்ப வேண்டும் என்று நினைத்தேன். ஏன் அவள் த்தாங்கோ நடனம் கற்காமல் ஸால்ஸா வகுப்பில் சேர்ந்தாள். ஸால்ஸா நாய் என்றால் த்தாங்கோ பூனை. நாய்க்கு நீங்கள் உணவிட்டால் அது உங்களை எஜமானாக எண்ணும். பூனைக்கு உணவிட்டால் அது உங்களை அடிமையாக எண்ணும். த்தாங்கோவில் பெண் பூனையாகிறாள். அங்கே ஆண் அடிமை. ஆனால் ஸால்ஸாவில் பெண் அடிமை. அஞ்சலி கோழை. த்தாங்கோ ஏன் உக்கிரமாக இருக்கிறது? காரணம், அதில் இத்தாலியிலிருந்து வந்த Bandoneon கருவியும் சேர்ந்து கொண்டது. பந்தோனியோன் உக்கிரமானதும், வதைக்கக் கூடியதுமான இசையைத் தரக் கூடியது. இந்தக் கருவியை இசைத்த மகா கலைஞன் Astor Piazzolla. பின் வரும் இணைப்புகளைக் கேட்டுப் பாருங்கள்.
அஞ்சலிக்கு அடிக்கடி கொடுங்கனா வரும். ஒரே மாதிரியான கனவு. அந்தக் கனவில் அவள் மிக மூர்க்கமான நீர்ச் சுழலில் மாட்டிக் கொண்டிருப்பாள். மூச்சு முட்டும். எல்லாப் பக்கங்களிலிருந்து தண்ணீர் பாறைகளென அவள் மீது வந்து மோதும். எங்கே பார்த்தாலும் தண்ணீர். அருவியா கடலா என்று அனுமானிக்க முடியாது. முடிந்தவரை தத்தளித்து கடைசியில் நிலை குலைந்து மூச்செல்லாம் நீராகிப் போன நிலையில் முடியைப் பிடித்து யாரோ இழுத்துப் போடுகிறார்கள். தரையில் அரைப் பிரக்ஞையில் கிடக்கிறாள். எங்கோ தூரத்தில் பந்தோனியோனின் உக்கிரமான இசை கேட்கிறது. நரம்புகளில் துக்க ரேகைகள் மின் அதிர்வுகளெனப் பரவி விட்டு விட்டுக் கேவுகிறாள். பந்தோனியோன் அவள் மனதை அலைக்கழிக்கிறது. பந்தோனியோனின் இசை அலைகளில் மூழ்கித் திணறுகிறது மனம். இதை விட செத்திருக்கலாமே என எங்கோ ஒரு யோசனை இழையைத் தொடுகிறாள். ஓ என அலற வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் குரலே எழவில்லை. அந்த பந்தோனியோனை யாரேனும் நிறுத்துங்களேன்…
https://www.youtube.com/watch?v=UhHYQTK5RWo&list=RD4gjecwPc_lU
Comments are closed.