அற்புதத் தருணம்…

இத்தனை நாள் பட்ட கஷ்டம் முடிவுக்கு வந்து விட்டது.  எக்ஸைல் எடிட்டிங் முடிந்து விட்டது.  மொத்தம் 1300 பக்கங்கள்.  இப்படிப்பட்ட தருணத்தை குடித்துக் கொண்டாடுவதே என் வழக்கம்.  கைவசம் ரெமி மார்ட்டினும் ஒயினும் உள்ளது.  ஆனாலும் என் (வளர்ப்பு) மகள் பூஜா வீட்டுக்கு வருவதால் கொண்டாட்டத்தை ஒத்தி வைத்து விட்டேன்.  பூஜா பற்றி பத்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கிறேன்.  யாருக்கு ஞாபகம் இருக்கிறதோ!  இந்தக் கொண்டாட்டத்தை சனிக்கிழமைக்கு ஒத்தி வைத்து விட்டேன்.  ராஜேஷ் சென்னை வருகிறார்.  அராத்துவும் சேர்ந்து கொள்கிறேன் என்கிறார்.  மற்ற நண்பர்களும் சேர்ந்து கொள்ளலாம்.  என் வாழ்வின் மறக்க முடியாத தருணம் இது.  1300 பக்கங்களை முடித்து விட்டேன்.  இனிமேல் 5000 பக்கங்கள் கூட சாதாரண விஷயம் என்று தோன்றுகிறது; ஏனென்றால், 1300-ஆவது பக்கத்தை முடிக்கும் போதுதான் இனிமேல்தான் நீ இந்தக் கதையை சொல்லவே ஆரம்பிக்க வேண்டும்; முற்றும் போடுகிறாயே மூடனே என்று கேட்டது என் மனம்.  5000 பக்கமெல்லாம் இனிமேல் ஜுஜுபி.  இது வெறும் ஆரம்பம்.

எழுதி முடித்ததும் அராத்துவுக்கு அனுப்பி விட்டேன்.  ஏற்கனவே 1000 பக்கங்கள் அவரிடம் உள்ளன.  சனிக்கிழமை சந்திப்பில் இந்த 300-ஐயும் முடித்து விட்டு வரும்படி கேட்டுக் கொண்டேன்.  கணேஷ் அன்பு அன்புடன் கேட்டார்.  அவருக்கும் அனுப்ப வேண்டும்.  உங்களுக்குப் பிடிக்கலாம்.  பிடிக்காமலும் போகலாம்.  ஆனால் எனக்கு இந்த நாவல் ஒரு சாதனை.  நான் கொண்டாடும் என் நாவல் இதுதான்.  இனிமேல்தான் எக்ஸைல் -2 என்ற தலைப்பே போதுமா, வேறு தலைப்பு வேண்டுமா என்று யோசிக்க வேண்டும்… venceremos…

Comments are closed.