சினிமாவும் இலக்கியமும்…

இடைவிடாமல் படிக்கவும், உலக சினிமாவைத் தேடிப் பார்க்கவும் என் நண்பர்களையெல்லாம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறேன்.  இரண்டு தினங்கள் முன்பு ராஜேஷை (கருந்தேள்) சந்தித்தேன்.  அராத்து, கணேஷ் அன்பு, மற்றொரு ராஜேஷ், முரளி ஆகிய நண்பர்களும்  வந்திருந்தனர்.  அதிகாலை மூன்று வரை ஓடியது பேச்சு.  ஷேக்ஸ்பியரைப் பற்றிப் பேசியது மட்டுமே ஞாபகம் இருக்கிறது.  மற்றது அனைத்தும் மறந்து விட்டது.  நாவலில் 1000 பக்கங்களைப் படித்து விட்டதாக அராத்து சொன்னார்.  பிறகு, படித்தது வரை தன் கருத்துக்களை அரை மணி நேரம் பேசினார்.  ஒன்று கூட ஞாபகம் இல்லை.  நீங்கள் கனவு காணும் போது பக்காவாக ஞாபகம் இருக்கும்.  ஆனால் மறுநாள் சுத்தமாக மறந்து விடும்.  இல்லையா?  எனக்கு நனவும் கனவு போலவே ஆகி விடுகிறது.

நாவலை முடித்து விட்டதால் ஓய்வான மனநிலையில் இன்று இரண்டு படங்களைப் பார்த்தேன்.  மார்ட்டின் ஸ்கார்ஸஸே 1972-இல் எடுத்த Boxcar Bertha என்ற படம்.  அடுத்து, கிம் கி டுக்கின் Time என்ற படம்.  பெர்த்தா நல்ல படம்.  ஆனால் கிம் கி டுக் வேறு ரகம.  க்ளாஸிக் என்று சொல்லத்தக்க படைப்புகளை உருவாக்குபவர் கிம்.  இதுவும் அப்படியே.

அடுத்த நாவலை எழுத ஆரம்பிக்க ஜூன் அல்லது ஜூலை ஆகி விடும்.  இந்த இடைப்பட்ட நாட்களில் சினிமாவையும் புத்தகங்களையும் முடித்து விடுவோம் என்று திட்டமிட்டிருக்கிறேன்.  200 படங்கள், 50 புத்தகங்கள்.  இரண்டு படங்களை முடித்து விட்டு, Manuel Puig எழுதிய Kiss of the Spider Woman நாவலை எடுத்திருக்கிறேன்.

சில தினங்கள் முன்பு நாகேஷ் குகுனூர் இயக்கிய லக்ஷ்மி பார்த்தேன்.  அருமை.  சந்தோஷ் சிவனின் இனம் பார்த்தேன்.  வழக்கமான காக்கா வலிப்பு மாற்று சினிமா.  கொடுமையான racist படம்.  எனக்கு என்னவோ விடுதலைப் புலிகளுக்கான பிரச்சாரப் படம் மாதிரி தோன்றியது.  ஆனால் புலி ஆதரவாளர்களுக்குப் படம் கொஞ்சமும் பிடிக்கவில்லை என்று கேள்விப்பட்டேன்.  ஒரு இனம் அழிக்கப்பட்டதை இவ்வளவு மோசமாக, மொண்ணையாக எடுத்த படம் வேறு எதுவும் இருக்க முடியாது.  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி என்று டைட்டில் போட்டு இருக்கிறார் சந்தோஷ் சிவன்.  இப்படிப்பட்ட உளறல்களையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு படம் எடுத்தால் உருப்படுமா?  இந்த மொக்கை படம் பற்றி ஏதாவது பத்திரிகையில் விரிவாக எழுதலாம் என்று இருக்கிறேன்…

Comments are closed.