குக்கூ

 

கடந்த நாலைந்து தினங்களாக பூஜா என் வீட்டில் இருந்தாள். எட்டாம் வகுப்பு படிக்கிறாள்.  ஒருநாள் கடற்கரை, ஒருநாள் கோவில் என்று அவந்திகாவும் பூஜாவும் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.  ஸோரோ பூஜாவுக்கு ரொம்ப தோஸ்த் ஆகியிருந்தது.  இப்போது பூஜா போனதும் ஏதோ உயிரே பிரிந்து விட்டது போல் சோகமாகப் படுத்திருக்கிறது.

வியாழக் கிழமை அன்று ஏதாவது சினிமாவுக்குப் போகலாம் என்று திட்டமிடப்பட்டது.  அவந்திகா சினிமாவுக்குப் போய் இரண்டு ஆண்டுகள் இருக்கும்.  அவளுக்கு சினிமா பிடிக்காது.  ஆனாலும் பூஜாவுக்காகப் போகலாம் என்று முடிவு செய்தாள்.  எந்தப் படம் போகலாம் என்று நீண்ட நேரம் கலந்து ஆலோசித்தோம்.  வியாழக் கிழமை என்பதால் புதிய படங்களும் இல்லை. கடைசியில் தெகிடியா, குக்கூவா என்று பேச்சு வந்தது. 

ராஜு முருகன் ரொம்ப நல்லவர்.  அவரைப் போன்ற நல்லவர்களைப் பார்ப்பது அரிது.  ஆனால் அவர் விகடனில் எழுதிய வட்டியும் முதலும் என்ற தொடர் எனக்கு மிகவும் அருவருப்பாக இருந்தது.  சகிக்கவே முடியவில்லை.  அதனால் சில வாரங்களுக்கு மேல் அதைப் படிக்கவில்லை.  ஆனால் தமிழ்நாட்டில் மிகவும் விரும்பி வாசிக்கப்பட்ட பத்தி அது.  எல்லோரும் அப்போது அது பற்றியே பேசினார்கள். 100 வாரங்கள் தொடர்ந்து வந்தது.  அவ்வளவு காலம் ஒரு பத்தி வெளிவந்தது இல்லை.  இடையே இடையே படித்துப் பார்த்து, அருவருப்பு தாங்காமல் ஓடி வந்திருக்கிறேன். 

ஒருமுறை எழுத்தாளர்களும் சினிமா கலைஞர்களும் கலந்து கொண்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நானும் அழைக்கப்பட்டிருந்தேன்.  மொத்தம் முப்பது பேர் இருக்கலாம்.  2013-இல் வெளிவந்த பத்திகளில் சிறந்தது என்ன என்ற கேள்வி கேட்கப்பட்ட போது என்னைத் தவிர அத்தனை பேரும் வட்டியும் முதலும் என்று சொன்னார்கள்.  ஒரு தமிழ் எழுத்தாளன் என்ற முறையில் நான் மிகவும் அவமானப்பட்ட தருணங்களில் ஒன்று அது.

இந்தக் காரணத்தினால் குக்கூ வேண்டாமே என்று நினைத்தேன்.  ஆனால் தெகிடி பற்றித் தெரியாதே?  தெரியாத ஒன்றை விட தெரிந்த சைத்தான் பரவாயில்லை என்று எண்ணி குக்கூவுக்கே போக முடிவெடுத்தேன்.  இன்னொரு காரணம், ராஜு முருகன் படத்தில் வன்முறை இருக்காது என்று நினைத்தேன்.  ஏனென்றால், வன்முறை, அடிதடி, சண்டை, வெட்டுக் குத்து என்றால் அவந்திகா ஐந்தே நிமிடத்தில் கிளம்பி விடுவாள். 

குக்கூவில் வன்முறை இல்லைதான்.  ஆனால் அது ஒரு fetish படம்.  சிலர் கைகளில் விலங்கு மாட்டிப் புணர்வார்கள்.  சவுக்கால் அடிப்பார்கள்.  சங்கிலி அல்லது கயிறால் கட்டிப் போட்டு கலவி கொள்வார்கள்.  மூத்திரத்தைக் குடிப்பார்கள்.  ஆசனவாயை நக்குவார்கள்.  இதெல்லாம்தான் ஃபெடிஷ் ரசனை.  அசிங்கமாகவும், அருவருப்பாகவும், ஆபாசமாகவும் இருக்கும்.  அங்காடித் தெருவை ஃபெடிஷ் படம் என்று எழுதியிருந்தேன்.  ஆனால் அங்காடித் தெருவெல்லாம் எவ்வளவோ தேவலாம் என்பது மாதிரியான படு மோசமான fetish படம் குக்கூ.  குற்றவாளிகளிடமிருந்து உண்மையை வரவழைப்பதற்காக மலத்தை மூத்திரத்தில் கரைத்துக் கொடுத்து சித்ரவதை செய்வார்கள் என்று சில நாவல்களில் படித்திருக்கிறேன்.  கேள்விப்பட்டும் இருக்கிறேன்.  குக்கூவில் ராஜு முருகன் அதைத்தான் செய்திருக்கிறார். 

கண்பார்வையற்ற தமிழ் என்ற பாத்திரமாக நடித்திருப்பவர் இரண்டரை மணி நேரம் செய்யும் fetish காரியங்கள் தான் குக்கூ.  குக்கூவில் வன்முறை இல்லை என்றா சொன்னேன்?  தவறு.  தமிழுக்குக் கண் மட்டும்தான் தெரியாதா?  இல்லையென்றால் அவருக்குக் காக்காய் வலிப்பும் உண்டா?  ஒருவர் காக்காய் வலிப்பு வந்து துடிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.  குக்கூவில் தமிழ் இரண்டரை மணி நேரத்துக்கு காக்காய் வலிப்பில் துடிக்கிறார்.  அதன் பெயர் நடிப்பாம்!  அடப் பாவிகளா! இப்படி இரண்டரை மணி நேரத்துக்கு நன்றாக இருக்கும் உடம்பை காக்காய் வலிப்பு வந்த மாதிரி இழுத்துக் கொண்டிருந்தால் அந்த உடம்பு என்னத்துக்கு ஆகும்?  கண் தானே தெரியவில்லை; அதற்காக ஏன் அந்த மனிதர் உடம்பின் அத்தனை உறுப்புகளையும் அப்படிப் போட்டு இழுக்கிறார்?  உங்களுக்கெல்லாம் இரக்கமே இல்லையா?  இப்படியெல்லாம் செய்தால்தான் தமிழ் சினிமா ரசிகர்களை அழ வைக்க முடியுமா?  தமிழ்ச் சமூகத்துக்கு வந்த சோதனையைப் பாருங்கள்.

ஒரு காட்சியில் மும்பை ரயில் நிலையத்தில் இருக்கும் தன் காதலியைத் தேடி மும்பை கிளம்புகிறார் தமிழ்.  அதுதான் க்ளைமாக்ஸ் காட்சி.  பொதுவாகத் தமிழ்ப் படங்களில் சாதாரணமாக இருக்கும் ஹீரோவே காதலியைத் தேடி ஓடினால் இந்த உலகத்தில் உள்ள அத்தனை கஷ்டங்களையும் அடைவான்.  லாரி அவன் மீது மோதும்.  அவன் தலையில் இடி விழும்.  புலி அவனைத் துரத்தும்.  கீழே விழுந்து கால் உடையும்.  அதோடேயே நொண்டி நொண்டிப் போய் கடைசியில் தன் காதலியை அடைவான் ஹீரோ.  உடல் உறுப்பு அனைத்தும் நன்றாக இருக்கும் ஹீரோவுக்கே இந்த கதி என்றால், தமிழுக்கு ஏற்கனவே கண் தெரியாது.  24 மணி நேரமும் காக்காய் வலிப்பு வேறு.  என்ன ஆகும்?  கார் அவன் மீது மோதுகிறது.  ஊர்வலக் கூட்டத்தில் மாட்டிக் கொள்கிறான்.  ரயில்வே பிளாட்ஃபாரத்தில் உள்ள இரும்புத் தூண் மீது டங் என்று மோதி மண்டை உடைகிறது.  இன்னும் என்னென்னவோ நடக்கிறது. 

ஒரு வணிக சினிமாவில் கூட சில காட்சிகளைப் பார்த்தால் கண் கலங்கி விடும்.  ஆனால் குக்கூவில் அருவருப்பும் ஆபாச உணர்வும் தான் மிஞ்சுகிறதே தவிர நெகிழ்ச்சி வருவதில்லை. 

குக்கூ போன்ற படங்கள் ஒரு சமூகத்தின் கலாச்சார சீரழிவின் அடையாளம்.  எத்தனை பாலு மகேந்திரா வந்தாலும் தமிழ் சினிமாவைத் திருத்த முடியாது.  பூஜா படம் ஆரம்பித்த பத்தே நிமிடத்தில் படு போர் என்று சொல்லித் தூங்கி விட்டாள்.  அவந்திகா இதுதான் என் ஆயுளில் கடைசி படம் என்று சொல்லி விட்டாள்.  இன்னும் என்னென்னவோ சொன்னாள்.  இங்கே எழுத முடியாது.    

ஆனால் ராஜு முருகன் தன் முயற்சியில் வெற்றி அடைந்து விட்டார்.  தமிழ்நாடே இந்தப் படத்தைக் கொண்டாடுகிறது.  கூடிய விரைவில் அவருக்கு தாதா சாகேப் ஃபால்கே விருது கூட கிடைக்கும். ஜமாயுங்கள் முருகன்.  இனிமேல் உங்கள் எழுத்து, சினிமா இரண்டின் பக்கமே வர மாட்டேன்.       

Comments are closed.