ஒரு கடிதமும் பதிலும்

ஐயா,
வணக்கம். உங்களின் கடிதத்தை படித்தேன். உங்கள் கடிதத்தின் படி நீங்கள் தள்ளபடி விலையில் கூட எதுவும் வாங்காமல் பதிப்பாளரையும், இந்திய நாட்டு பொருளாதாரத்தையும் வாழ வைக்கும் அக்சய பாத்திர குணமுடையோர் என்பதை அறிந்து மகிழ்கிறேன். ஆனால் நாங்கள் பிச்சை பாத்திரம் ஏந்தி தான் புத்தக காட்சிக்கு வர டிக்கட் போட்ட ஆசாமிகள் ஆகையால் தள்ளுபடி எங்களுக்கெல்லாம் வரபிரசாதமாக அமைக்கிறத

மேன்மை தங்கிய தாங்கள் அடியேன் எழுதிய கடிதத்தால், பதிப்பாளர்களிடம் பேசி நாலனாவிற்கு இல்லத்திற்கு சென்று விநியோகம் செய்ய இருப்பதால் ஆனந்தம் அடைக்கிறேன். பதிப்பாளர் உங்களின் மேன்மையை கருத்தில் கொண்டு அப்படி கூறியிருக்கலாம் என எண்ணுகிறேன். ஆகையால் அவரை சிரமத்தில் ஆற்ற வேண்டாம். அவரின் சாபம் எனக்கு வேண்டாம். என்ன விலை சொல்லுகிறார்களோ அந்த விலைக்கே நானும் என் பந்து மித்ர சகோதரரும் மற்றும் ஸ்நேகிதரர்களும் வாங்கி கொள்கிறேன்.

அப்படியும் நாலனாவிற்கு தான் விநியோகம் செய்வீர்கள் என்றால் எனக்கு ஒன்றும் அட்சேபனை இல்லை. தங்களின் வங்கி கணக்கை அனுப்பினால் பணம் அனுப்பி விடுகிறேன்.

இதோ என் விலாசம்,
ரஞ்சித் சின்னுசாமி,
(விலாசம் கொடுக்கப்பட்டுள்ளது)

தங்களின் சமஸ்கிருத வார்த்தைகள் கலந்த தமிழ் எனக்கு கொஞ்சம் படிக்க சிரமமாக இருப்பதால், பாமரனுக்கு புரியும் தமிழில் பதில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேன்மை பொருந்திய குருக்களுக்கு என் நன்றிகள்.

அன்புடன்,
ரஞ்சித் சின்னுசாமி

(பி.கு: சாருவிற்கு என் வணக்கங்கள். இந்த கடிதத்தை வாய்ப்பிருந்தால் மேதகு குருக்களுக்கு அனுப்பிவைக்கவும். பாவம் அவர்…விலாசம் தேடிக்கொண்டிருக்கப் போகிறார்.)

3-3-22, ட்றிச்சினோப்போலி 

மஹாகணம் பொருந்திய ஸ்ரீமான் ரஞ்சித்,
இப்பவும் தாங்கள் எழுதிய ஜவாபைப் படித்தோம். உங்களைப்போய் பத்தாம் பசலி என்று எண்ணினேன் பாருங்கள், என்னைத்தான் ஜோட்டால் அடிக்கவேண்டும். யாசகம் செய்து புஸ்தகோற்ஸவத்திற்கு வருமளவுக்கு  ஸாஹித்ய அபிருச்சியை வளர்த்து வைத்துக்கொண்டிருக்கும் தங்களைப் போன்ற புண்யாத்மாக்களை  மெச்சத்தான் வேண்டும். ஸரஸ்வதி தேவியின் அனுக்கிரஹம் எப்போதும் உண்டு தங்களுக்கு.  தர்க்க ஸாஸ்திரம் மட்டுமல்ல, பேஷாகப்  பரிகாஸம் பண்ணவும் தெரிந்திருக்கிறதே! பலே கில்லாடிதான் போம் நீர். ஜேஷ்ட்டமாக எழுதவும் வருகிறது. ஆனால் அதில் பாருங்கள், அக்ஷரப்பிழைகள் எதேஷ்ட்டமாக உள்ளது கடிதங்களில். அக்ஷராப்யாஸம் போறாது போல் தோன்றுகிறது ஓய். 

எங்க பக்கத்தாத்துல அய்யங்கார் கொழந்தேள் கிட்ட  நன்னா வாசிக்கணும், நன்னா வாசிக்கணும்னு சொல்வார். வாசிக்கனும்னா கதைபுஸ்தகம் வாசிக்கறது கிடையாது. நன்னா வாசிக்கனும்னா, பாடங்களை நன்னா படிக்கணும்னு அர்த்தம். 

பப்ளிஷரும் எழுத்தாளரும் கூட யாசகம் பண்ணித்தான் புஸ்தகங்களைப் பதிப்பிக்கிறார்களாதலால், உங்களைப்போன்றவர்கள் கொஞ்சம் பெரிய மனது பண்ணி, காலணாவுக்கும்  அரையணாவுக்கும் முகம் கோணாமல் புஸ்தகங்களை வாங்கி நவீனங்கள் படைப்போரை ஆதரித்தருள வேண்டுமாய்  ஸாஹித்திய ஸன்மார்க்க ஆஷாடபூதிகள் சார்பில் வேண்டிக்கொள்கிறோம். எதையாவது வாசிக்கிறீரே அதுவே பெரிய விஷயம். இன்னும் நன்னா வாசியுங்கோ.   

சாரு போஸ்ட்டாபீஸில் ஆபீஸராக இருந்தவர் அதனால் விலாசத்தை மாற்றி லட்டர்களை அனுப்புவது சஹஜமே, அவ்வகையில் என் பெயரையும் மாற்றிப் போட்டுவிட்டார் போலும். அல்லது சென்ற கடிதத்தை நிஜமாகவே வெங்கடேஸ குருக்கள் எழுதியிருக்கலாம். எனக்கு வயசாயிடுத்து, ஞாபக ஷக்தி குறைச்சல்.  

எஸ். ப்ரஸன்னவெங்கடேஸன்  என்பது எம் பெயர்.  சமஸ்க்ரிதத்தில் எழுதுவதாகச் சொல்லி ரிப்போர்ட் பண்ணியிருக்கிறீர்களாமே? நன்றாக இருக்கிறது போங்கள். நான் கடிதத்தில் ஆரம்பத்தில் எழுதியிருக்கும் தேதியைப் பாருங்கள் புரியும். 

இப்படிக்கு, ப்ரியத்துடன்  
எஸ். ப்ரஸன்னவெங்கடேஸன்