11. புத்தகங்கள் வாங்கிப் படிப்பவர்கள் குறைந்து வருவது குறித்து நீங்கள் அடிக்கடி எழுதுவதுண்டு.
ஒருவேளை இன்றைய குழந்தைகளுக்கு நிறைய சிறார் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து பழக்கப்படுத்த முடியுமானால் அவர்கள் பெரியவர்கள் ஆகும்போது இலக்கிய வாசிப்பில் ஈடுபட வாய்ப்புகள் அதிகமாக இருக்குமோ?
பிரியா
பதில்: பொதுவாக உலக அளவிலேயே புத்தக வாசிப்பு குறைந்து விட்டது. இருந்தாலும் அதையெல்லாம் தமிழ்நாட்டோடு ஒப்பிட முடியாது. வுல்ஃப் டோட்டம் நாவலை சீனாவில் கோடிக்கணக்கில் வாங்கிப் படித்தார்கள். இன்றும் முராகாமி ஜப்பானில் சூப்பர் ஸ்டாராகத்தான் திகழ்கிறார். கன்னடம் மலையாளம் வங்காளம் எல்லாம் அப்படித்தான். எனவே மற்ற சூழலையும் தமிழையும் ஒப்பிட முடியாது. பொதுவாக பஞ்சாபிகளை ஃபிலிஸ்டைன் கலாச்சாரத்துக்கு உதாரணம் காட்டுவார்கள். உணவும் மதுவும் போதும் அவர்களுக்கு என்று பலர் சொல்கிறார்கள். பஞ்சாபிகள் மேலோட்டமானவர்கள் என்றும் நம்பப்படுகிறது. அந்தப் பஞ்சாபி மொழியில் எனக்கு ஒரு நாடகாசிரியரைத் தெரியும். அவர் வருடத்தில் ஓரிரண்டு மாதங்களே இந்தியாவில் இருக்கிறார். மற்ற நாட்களில் எல்லாம் உலகம் பூராவும் வசிக்கும் பஞ்சாபிகளுக்குத் தன் நாடகங்களை வாசித்துக் காண்பிக்கிறார். நடிக்கவில்லை, நாடகம் போடவில்லை. வெறுமனே வாசித்துக் காண்பிக்கிறார். எல்லா நாடுகளிலிருந்தும் பஞ்சாபிகள் அவரை அழைக்கிறார்கள். அவருடையது நகைச்சுவை நாடகங்கள் அல்ல. ந. முத்துசாமி மாதிரி ஆழமான நாடகங்கள். அவர் பெயர் அத்தம்ஜித் சிங்.
தமிழில் வாசிக்கும் பழக்கம் ஏற்பட ஒரு சிறந்த வழி பள்ளிகளிலும் முக்கியமாக கல்லூரிகளிலும் இலக்கியத்தை அறிமுகப்படுத்துவது. இங்கே அறிமுகமே நடக்கவில்லை. அப்படி அறிமுகப்படுத்துவதற்கு பேராசிரியர்களுக்கு நவீன எழுத்து தெரிந்திருக்க வேண்டும். எனக்கு 69 வயது ஆகிறது. இரண்டு முறை மட்டுமே கல்லூரியில் உரையாற்ற வாய்ப்பு கிடைத்தது. அதிலும் ஒரு முறை ஃப்ரெஞ்ச் துறையில் பேசினேன்.
ஒரு நண்பர். அவருக்கு நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார். அவர் வாரம் இரண்டு முறை டயாலிஸிஸ் செய்து கொள்கிறார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு – சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் டயாலிஸிஸ் செய்து கொள்ளப் போகும் முன் கீழே வரவேற்பறையில் உள்ள புத்தக ஸ்டாண்டைப் பார்க்கிறார். டயாலிஸிஸுக்கு ஆகும் மூன்று மணி நேரத்தைப் படித்துக் கழிக்கலாம். பொதுவாக அங்கே சுஜாதா, ராஜேஷ் குமார், பாலகுமாரன் இருப்பார்கள். ஒருநாள் ராஸ லீலா என்ற குண்டு புத்தகத்தைப் பார்க்கிறார். குண்டு புஸ்தகமாக இருப்பதால் நன்றாகப் பொழுது போகும் என்று எடுத்துச் சென்றிருக்கிறார். டயாலிஸிஸ் முடிந்து வீட்டுக்குப் போய் அன்றைய இரவும் மறுநாள் பகலுமாகப் படித்து முடித்து விட்டார். அவர் படித்த முதல் இலக்கிய நூல் அதுதான். இப்போது அவர் என்னுடைய எல்லா நூல்களையும் படித்து விட்டார். நான் அறிமுகப்படுத்தும் மற்ற எழுத்தாளர்களையும் படித்து வருகிறார்.
இப்படித்தான் இலக்கிய அறிமுகம் நடக்க வேண்டும். இது கல்லூரிகளிலேயே தொடங்கினால் நல்லது.
மற்றபடி குழந்தைகள் என்னதான் படித்தாலும் பதின்பருவம் வந்ததும் விடியோ விளையாட்டுகளுக்கு அடிமை ஆகி விடுகின்றனர். அதிலிருந்து மீட்க புத்தகங்கள் பயன்படலாம். நிச்சயமாக சொல்ல முடியவில்லை. குழந்தைகளின் வாசிப்பு பற்றி நினைத்தால் எனக்குள் மிகுந்த அவநம்பிக்கையே எழுகிறது. விடியோ விளையாட்டுகளிலிருந்து அவர்களை மீட்பது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. கதை சொல்லிப் பழக்கலாம். அதை விட முக்கியம், இன்றைய கல்வி முறையில் சில அடிப்படையான மாற்றங்கள் செய்யப்பட்டால் குழந்தைகளுக்கு நல்லது.