தேவதை கடவுள் மற்றுமொரு சாத்தான்


“நீ பழகிக் கொண்டிருப்பவன் சைத்தான் என்பதும்
நான் தேவதை என்பதும்
உனக்குத் தெரியாதா?” என்றாள் தேவதை
தெரியுமே என்றேன்
நல்லது,
அப்படியானால்  நீ
சைத்தானை உதறிவிட்டு என்னோடு வா
சொர்க்கத்தைக் காட்டுகிறேன்
என்றாள் தேவதை

மதகுருமாரும் தீர்க்கதரிசிகளும்
சொல்லும்
சொர்க்கங்கள் அலுப்பூட்டுபவை
எனக்கு சொர்க்கம் வேண்டாம்
சைத்தானோடே இருந்து கொள்கிறேன்
என்றேன்

கடைசியாக ஒருமுறை முத்தமிட்டுப்
பிரிந்தாள் தேவதை

பிறகு சைத்தானும் நானுமாய்
தேவதைகளின் குறுக்கீடின்றி
கொண்டாடினோம்
கொண்டாடினோம்
கொண்டாடினோம்
வாழ்க்கையை

ஒருநாள்
டென் டௌனிங் என்ற மதுக்கூடத்தில் வைத்து
கடவுளை எப்படி ஒழித்துக் கட்டலாமென
திட்டங்கள் தீட்டினோம்
நான் பலவிதமான ஆயுதங்களை
பரிந்துரை செய்தேன்

ஆயுதங்களால் அது முடியாது
கடவுளைக் கொல்லும் வலுவான ஆயுதம் ஒன்று உண்டென்று
சொல்லி
அதைச் செய்தும் காட்டினான் சைத்தான்

அது ஒரு கவிதை

பயந்து போன கடவுளும்
கவிதைக்கு எதிராகக் கதற ஆரம்பித்துக்
கதறிக் கதறியே செத்துப் போனார்

கவிதையைப் படித்த சில மானுடரோ
இது மனப்பிறழ்வின் வெளிப்பாடென்றார்
மனப்பிறழ்வின் வெளிப்பாடுகளைக்
கொட்டும் இடம் தேடிக்
கொஞ்ச நாள் அலைந்த சைத்தான்
கடைசியில்
தொலைக்காட்சி விவாதங்களைக் கண்டடைந்தான்

பிறகு அவன்
மனப்பிறழ்வில்லாத
தன்
முதல் கவிதையை எழுதினான்
அது
மிஸ் யூ என்ற
சொல்லாலானது
மிஸ்யூ என்பது
யாரை எனக் கேட்டேன்
தலையைச் சிலுப்பியபடி
கடவுளை என்றான்