ஜீரோ டிகிரி பப்ளிஷிங்கில் அமர்ந்திருந்த போது “சும்மா” எடுத்து படிக்க ஆரம்பித்தேன். பற்றிக்கொண்டது. முதல் சிறுகதை , அவசர சிகிச்சை பிரிவு.இதை நீண்ட சிறுகதை எனச் சொல்லலாம். பின்னி எடுத்து விட்டார். உலகத்தரமான நவீன சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இந்தச் சிறுகதை. ஹஸன் அஸிஸூல் ஹக் , வங்காள தேச எழுத்தாளர். தமிழில் மொழிபெயர்ப்பு – தாமரைச் செல்வி.
இங்கே பலரும் சுஜாதாவின் நகரம் சிறுகதையை ஆஹா ஓஹோவென கொண்டாடுவார்கள். முதல் முறை படித்தபோதே (சிறுவனாக இருக்கையில்) அப்படி என்ன இதில் இருக்கிறது என குழம்பியிருக்கிறேன். அவசர சிகிச்சைப் பிரிவைப் படித்த தாக்கத்தில் , நகரம் மீண்டும் ஞாபகம் வந்தது. மீண்டும் நகரம் வாசித்தேன். நகரத்தை எல்லாம் ஒரு சிறுகதை என்றே சொல்ல முடியாது. அந்த அளவுக்கு “குப்பை” . ஆவியின் வாதையில் உள்ள அவசர சிகிச்சை படித்து விட்டு நகரம் படித்துப் பாருங்கள். நகரம் குமட்டும். நகரம் போலியானது மட்டுமல்ல, ஒரு ஆர்வக்கோளாரு அவசரக் குடுக்கையின் ஜிகினா என்பது விளங்கி விடும். சுஜாதா ஒரு நாள் அரசு ஆஸ்பத்திரிக்கு “எதற்கோ” போயிருப்பார் போலிருக்கிறது. தன்னுடைய சில நிமிட அவதானங்களை , தன்னுடைய புத்திசாலித்தனமான மொழி(என்ற நினைப்பால்) யால் வர்ணித்து படிப்பவனை வாட்டு வாட்டு என வாட்டுகிறார். ரா.பார்த்திபன் சினிமா போல இருக்கிறது.
சுஜாதா மீது பெரும் பற்றுடையவன் நான். அவருடைய வேறு பங்களிப்புகள் மற்றும் அவருடைய புத்திசாலித்தனம் மற்றும் தீர்க்க தரிசனங்கள் மேல் மரியாதை கொண்டவன் தான் நான். (இப்போது அதிலும் சந்தேகம் வருவது வேறு விஷயம் ). இந்த நகரம் சிறுகதை குப்பைக் கூளம் என்று மட்டும் சொல்லிக்கொண்டு மீண்டும் அவசர சிகிச்சை பிரிவுக்குச் செல்கிறேன். இந்தக் கதையை படிக்கும்போது மொழிபெயர்ப்புச் சிறுகதை என்ற நினைப்பே வரவில்லை(இப்படி சொல்வது க்ளீஷே வாகி விட்டது) தெளிவான சரளமான மொழிபெயர்ப்பு. ஓரிரு இடங்களில் மட்டும் தடுமாற்றம். நேரேஷன் மற்றும் வசனங்கள் கலந்து வரும் இடங்களில் மட்டுமே இவ்வகைத் தடுமாற்றங்கள். தாமரைச் செல்விக்கு வாழ்த்துகள். கதைக்களன் கொடூரமான , சோகமான, விளிம்பு நிலை மக்கள் வாழ்வின் அதிர்ச்சியூட்டும் பக்கங்களைக் கொண்டதாக இருந்தாலும் கதை சொல்லும் விதத்தில் மூக்குச் சிந்துதலோ , ரொமாண்டிசைசேஷனோ அறவே கிடையாது.
நகரம் சிறுகதையில் “ஆத்தர்” துருத்திக்கொண்டு வர்ணிப்பது போன்ற ஆர்வக்கோளாறு வர்ணனைகள் கிடையாது. இப்போதிருக்கும் தமிழின் சமகால இளம் எழுத்தாளர்கள் பேனாவில் கண்ணீரை நிரப்பிக்கொண்டு எழுதும் எழுத்தும் கிடையாது. வீட்டு நடுவே பிணம் கிடக்கையில் , எழவுக்கு இடையே கொஞ்ச நேரம் கிரிக்கெட் ஆடுவது போல அடித்து ஆடியிருக்கிறார் ஹஸன். சிறுகதை முழுக்க ஃபோர் மற்றும் சிக்ஸர்கள் தான். அம்மா என்று சொன்னாலே பலருக்கு அழுகை வந்து விடும். இந்த சூழலை ஏற்படுத்தி வைத்திருப்பதில் பெரும்பங்கு நவீன தமிழிலக்கியத்துக்குத்தான். அடுத்துதான் சினிமாவே வரும். அதே போல ஏழைகள் , விளிம்பு நிலை மக்கள் எல்லாம் படு ஹாட் செல்லிங்க் கமாடிட்டி இங்கே. இவர்களை வைத்து நாவலோ சினிமாவோ எடுத்தால் சந்தேகம் இன்றி சூப்பர் ஹிட். கலை பீப்புண்ணாக்காக இருந்தாலும் கவலை இல்லை. இந்த மூடத்தனமான முற்போக்கு கலையில் பெரும் தேக்கத்தை உண்டுபண்ணி விடும்.அதுதான் தற்போது தமிழ்நாட்டை பீடித்திருக்கும் சாபக்கேடு.
நாஸ்டால்ஜியா , அம்மா, ஏழை , விளிம்பு நிலை மக்கள் , வெள்ளந்தி , விவசாயி , பழந்தமிழ் சமூகம் இவற்றை மட்டும் வைத்துக்கொண்டேதன் கடந்த 20 வருடங்களாக ஜல்லியடித்துக்கொண்டு வருகிறார்கள். அவ்வளவு கசப்புணர்வாக இருக்கிறது. அதிலும் இளைஞர்கள் என சொல்லிக்கொண்டு கலையுலகில் நுழைபவர்கள் கடும் தொண்டு கிழங்களாக உருமாறி விடுகிறார்கள். இவர்களெல்லாம் பிறக்கும்போதே ரைட்டர்களாக பிறந்தார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இன்னொரு சந்தேகமும் ஏற்படுகிறது. அதையும் சொல்லி விடுகிறேன். எதைத்தான் நான் மறைத்திருக்கிறேன். இவர்களுக்கெல்லாம் பிறக்கும் போதே சிறுகுஞ்சி நரை முடியோடு பிறந்திருப்பார்களோ என்றும் அவ்வப்போது எனக்குத் தோன்றும். அந்தக் காட்சியும் என் கற்பனையில் விரியும். அருவருப்பாகி பியர் அடிக்கப் போய் விடுவேன். இந்த சிறுகுஞ்சி நரை முடிகள் தான் இன்றைய நவீன தமிழிலக்கிய அடையாளம் , அத்தாரிட்டி. இதையெல்லாம் எவனாவது மொழிபெயர்ப்பில் படித்தால் காறித்துப்புவான்.
எனக்கு வங்க தேசம் பற்றி எந்த பெரிய மரியாதையும் இருந்ததில்லை. ஒரு நாட்டின் மாந்தர்கள் , அவர்கள் வெளிநாட்டில் எப்படி நடந்துகொள்கிறார்கள், அவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் இமேஜ் இதை வைத்துதானே ஒரு நாட்டைப் பற்றிய இமேஜ் உருவாகும்? அதன்படி , இந்த மொழிபெயர்ப்பு புத்தகத்தைப் பார்த்ததும் , இதெல்லாம் ஒரு நாடு , இதுக்கு ஒரு இலக்கியம் , அதுக்கு ஒரு மொழி பெயர்ப்பு என கடும் எகத்தாளத்துடன் தான் இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். படிக்கப் படிக்க தஸ்தாவஸ்கி போல , அவரைத் தாண்டியும் போடு போடென்று போட ஆரம்பித்தார். அட , என்னடா இது ..என தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தால் , சாரு ராஸ லீலாவில் போஸ்ட் ஆஃபீஸை காட்டு காட்டு என காட்டுவது போல வங்க தேச மருத்துவமனையை காட்டு காட்டென்று காட்டுகிறார். ஒரு நவீன இலக்கியம் எப்படி இருக்க வேண்டும் என ஹஸன் வகுப்பெடுப்பது போலவே இருந்தது எனக்கு. இங்கேதான் முக்கியமான ஒன்றை சொல்லத் தலைப்படுகிறேன். ஒரு சமூகத்துக்கு வெகு முன்பாக ஒரு படைப்பாளி பீடு நடை போட்டுக்கொண்டு செல்ல வேண்டும்.
100 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டு , இப்போது படித்தாலும் தஸ்தாவஸ்கியின் சூதாடி , அழையா விருந்தாளி படித்தாலும் பழைய நெடி அடிக்காமல் , இன்னும் நூறு வருடம் தாண்டியும் நிற்கக்கூடிய வசீகரத்தன்மையும் , புதுமையும் இருக்கும். சாருவின் ஜீரோ டிகிரி இப்போது வெள்ளி விழா ஆண்டு. அது இன்னும் 100 வருடம் தாண்டியும் புத்தம் புது மொட்டாக இருக்கும் (மலர் கூட அல்ல). அப்படி ஒரு இலக்கிய படைப்பாளன் மட்டுமே காலத்தைத் தாண்டி , டைம் மெஷின் இல்லாமலேயே எதிர்காலத்தில் பயணித்துக்கொண்டு இருப்பவன். அப்படித்தான் வங்காள தேச காமன் மேன்களைப் பற்றி கேள்விப்பட்டும் , ஒரு சில மனிதர்களைப் பார்த்தும் பழகிய வகையில் ரொம்ப இளக்காரமாக நினைத்துக்கொண்டிருந்த எனக்கு இலக்கிய சவுக்கடி கொடுத்து விட்டார் ஹஸன். நான் இளகாரமாக நினைத்துக்கொண்டிருந்த வங்காள தேசத்திலேயே இலக்கியம் நாலு கால் பாய்ச்சலில் உலகத்தரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. சங்க இலக்கியம் , கல் தோன்றி முன் தோன்றா காலத்து என பஜனை செய்துகொண்டிருக்கும் தமிழ் நாட்டில் அதே நாலு கால் பாய்ச்சலில் பின்னோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது நவீன தமிழிலக்கியம்.
ப்ளாக் ஹ்யூமர் என்று ஓரளவு புரிந்து கொண்டு ப்ளாக் ஹ்யூமரையே ப்ளாக் ஹ்யூமர் செய்துகொண்டிருக்கிறார்கள் நம்மூர் ஆட்கள். சிறு பிசிறு கூடத் தட்டாமல் ப்ளாக் ஹ்யூமரில் ரத்தத்தைத் தோய்த்து கத்தியால் கதை எழுதி இருக்கிறார் ஹஸன். கதையில் கதாசிரியரின் சிறு குறுக்கீடு கூடக் கிடையாது. நம்மூர் ஆசாமிகள்(அதான் எழுத்தாளர்கள்) செய்வது போல உங்கள் கண்ணில் விரலை விட்டு நோண்டுவதில்லை. உங்கள் ஆசனவாயில் கையை நுழைத்து இதயத்தை நெருங்கி , அதைப்பிடித்து அமுக்குவதில்லை. அதே போல வலிந்துத் திணிக்கப்பட்ட திடுக்கிடும் திருப்பம் அல்லது சினிமாட்டிக் முடிவு கிடையாது. இன்னொன்று ஒரு சிறுகதைக்கு முடிவு என்பதே தேவையில்லை என நான் நினைத்திருக்கிறேன்.அதை சில சிறுகதைகளில் முயன்றும் பார்த்திருக்கிறேன். ஹஸனும் அதையே செய்திருக்கிறார் இந்தச் சிறுகதையில். இசைக்கு ஒரு முடிவிருக்கிறதா என்ன ? ஓவியத்துக்கு ஒரு முடிவிருக்கிறதா என்ன ? சிறுகதைக்கு ஏன் ஒரு முடிவு ?இவரை மனமார இவ்வளவு பாராட்டினாலும் , தலைவர் இன்னும் நான் லீனியர் – போஸ்ட் மாடர்னிஸம் கான்செப்டுக்குள் எல்லாம் செல்லவில்லை. அதிலெல்லாம் நாம் இடது கையால் படம் வரைந்து பாகங்களைக் குறித்து விட்டு வேப் அடித்துக்கொண்டிருக்கிறோம் என்பதில் மட்டும் ஒரு திமிர் திருப்தி.
வரலாறே பெரிதாக இல்லாத வங்காள தேச இலக்கியத்துக்கு இதுவே பெரும் பாய்ச்சல்தான். ப.சிங்காரம் , புதுமைப்பித்தன் போன்ற ஆட்களெல்லாம் நடமாடிக்கொண்டு இருந்த தமிழிலக்கியம் இப்போது தரைக்குள் தலையை விட்டுக்கொண்டு கால்களை மட்டும் மேல் நோக்கி ஆட்டிக்கொண்டிருக்கிறதே , அதைப் பார்த்து எல்லோரும் எஜாக்குலேட் ஆகிக்கொண்டு இருக்கிறார்களே என்பது மட்டுமே இங்கத்திய இலக்கிய சோகம். அவர்கள் டாக்கா மொழிபெயர்ப்பு மையம் அமைத்து அதிகம் வெளியே தெரியாத வங்காள தேச இலக்கியத்தையே தமிழ்நாடு வரை கொண்டு வந்து விட்டார்கள். ஒரு தமிழ்ப்படைப்பாவது வங்காள தேசத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகம் தான். ஜீரோ டிகிரியின் இந்த மொழிபெயர்ப்பு நடவடிக்கை பாராட்டத்தக்கதுதான். ஆனால் இதை ஏதோ ஒரு தீவிரவாத ரகசிய செயல்பாடு போல அவர்கள் செய்வதுதான் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தப் புத்தகத்தைப் பற்றிய தகவல் எனக்கேத் தெரியவில்லை. அடிக்கடி ஜீரோ டிகிரி செல்வதால் , கண்ணில் பட்டதால், அட என்னடா இது என எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு படைப்பின் காப்பிரைட் வாங்கி , அதை மொழிபெயர்த்து , பிழை திருத்தம் செய்து வெளியிடுவதென்பது எவ்வளவு பெரிய வேலை? அதை இப்படி ரகசியமாகவா செய்வது ?
ஜீரோ டிகிரி காயத்ரிக்கு இலக்கிய உலகில் பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகி வருவது அனைவருக்கும் தெரிந்ததுதான். வாசகர்களை விடுங்கள். மூத்த எழுத்தாளர்கள் முதல் இளம் எழுத்தாளர்கள் வரை காயத்ரிக்கு “கார்ஜேஸ்” “வாவ்” “ப்யூட்டிஃபுல்” என கமெண்ட் போடும் வரிசை நீண்டது. காயத்ரியும் பதிப்பக லிபரல் என பெயரெடுத்தவர். பதிப்பகங்களுக்குள் இருந்த இறுக்கமான சூழலை உடைத்தெறிந்தவர். தான் மற்ற பதிப்பகங்களில் தோன்றி காட்சி கொடுப்பதால் மட்டுமே இதை சாதித்துக் காட்டியவர். இப்படிப்பட்ட ஒரு ஆளுமையை தமிழகப் பதிப்புச் சூழல் கண்டதேயில்லை. எழுத்தாளர்களில் கூட அவ்வப்போது அத்தி பூத்தாற்போல ஒரு சில தற்காலிக அழகுப் பெண்கள் தோன்றி மறைவதுண்டு. ஆனால் பதிப்புச் சூழல் எப்போதும் ஆண்டி மடமாகவே இருந்து வந்துள்ளது. காயத்ரி பதிப்புத்துறைக்குள் வந்ததும் ஏதோ வசந்தம் வந்தது போல பதிப்பாளர்கள் அகமகிழ்ந்து போனார்கள். இது நூற்றாண்டு கால அடிமைகளுக்கு சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியை விட பெரிது என்ற அளவில் புரிந்துகொள்ள வேண்டியது. இவ்வளவு பெரிய புரட்சியை உண்டாக்கி இருக்கும் காயத்ரி அவர்கள் மது இந்தியாவை வைத்து போட்டோ எடுத்து தன் புகைப்படங்களைப் போட்டுக்கொள்ளும் ஆர்வத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இந்த புத்தகத்தில் காட்டவில்லை என்பது என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.
காயத்ரி இந்தப் புத்த்கத்தைப்பற்றி ஓரிரு வரிகள் எழுதி இருந்தால் நிறைய ரீச் ஆகி இருக்கும். அவ்வளவு ஏன் ? என்னை ப்யூட்டிஃபுல் என கமெண்ட் போடும் எழுத்தாளர்கள் எல்லாம் இந்தப் புத்தகத்தைப் பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று சொல்லியிருந்தால் , இந்தப் புத்தகம் வைரல் ஆகி இருக்கும். என் புத்தகத்தை நானே அவ்வப்போது (வேறு வழியில்லாமல்) விளம்பரப்படுத்திக்கொள்வேன். வங்காள தேச ஹஸனால் அதை எப்படி இங்கே தமிழகத்தில் செய்ய முடியும் ? காயத்ரி , நீங்கள் அடுத்த பதிப்பகத்துப் புத்தகங்களை கவனப்படுத்தும் அதே நேரத்தில் உங்கள் பதிப்பக மொழிபெயர்ப்புப் புத்தகங்களை மட்டுமாவது உங்களுக்கு இருக்கும் பெரும் இலக்கிய ரசிகர் படையை வைத்து கவனப்படுத்தும் படி கோரிக்கொள்கிறேன்.
சிறுகதையில் ஹுஸூர் என்ற வார்த்தை அடிக்கடி வருகிறது. சாரு நிவேதிதாவின் நான் தான் ஔரங்கசீப் படித்திருப்பதால் கதையில் இந்த வார்த்தைப் பிரயோகம் எனக்குப் புரிந்தது. அதைப் படிக்கவில்லையெனில் புரிந்திருக்காது. இதுதான் நுட்பமான விஷயம். சாருவும் அதை நான் தான் ஔரங்கசீப்பில் விளக்கவில்லை. அந்த வார்த்தை வரும் இடத்தைப் பொறுத்து , யாரிடம் அதைப் பேசுகிறார் எனபதைப் பொறுத்து சுலபமாகப் புரிந்து விட்டது. ஆனால் இந்தக் கதையில் அப்படி இல்லை. நான் தான் ஔரங்கசீப் படிக்காமல் இதைப்படிப்பவர்களுக்கு இந்த வார்த்தைப் பிரயோகம் புரியாது. இதிலெல்லாம் மொழிபெயர்ப்பாளர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். நம்மூரில் “தலைவா “ என்று விளிப்பதை மொழிபெயர்ப்பதில் மற்றவர்கள் கவனமாக இருக்க வேண்டியதைப்போல. கதையில் வங்காள தேசத்தில் ஒரு இந்து வருகிறான். அவனை விளித்து ஒருவன் சொல்வது போல ஒரு வசனம்.
“வாயை மூடு ! உன் மதம் மாட்டுச் சாணத்தைச் சாப்பிடுவது நல்லதென்றுதானே சொல்கிறது? அப்புறம் எங்கள் சாணத்தைச் சாப்பிடுவதில் என்ன தவறு ?”
இப்படி எழுதுவதற்கு அங்கே சுதந்திரம் இருக்கிறது. அதாவது , இது எழுத்தாளரின் கருத்து அல்ல. அதில் வரும் ஒரு வங்காள தேச முஸ்லீமின் கருத்து. ஆனால் இங்கே அப்படி ஒரு கதாபாத்திரத்தின் கருத்தாகக் கூட மற்ற மதங்களைப் பற்றி ஒரு எழுத்தாளரால் எழுத முடியுமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். படைப்புச் சுதந்திரம் இல்லையெனில் , மூளை மழுங்கி விடும். எழுதும்போதே மூளைக்குள் எடிட்டிங்க் நடந்துகொண்டிருந்தால் எங்கே உருப்படியான படைப்புகள் வெளிவர முடியும் ? எல்லோரும் நிஜ வாழ்வில் தாயை காலால் எட்டி உதைத்து விட்டு , இலக்கியத்தில் தாயைக் கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருங்கள். அதுதான் உங்களுக்கு விதிக்கப்பட்டது. இனி அடுத்த நூற்றாண்டுகளுக்கு தமிழில் “தாய்ப்பாச எழுத்தாளர்கள்” புற்றீசல் போல வருவார்கள். அவர்கள் விடும் சிறுநீரை தாய்ப்பால் என நினைத்துக் குடித்துக்கொண்டிருங்கள். ஒரு சிறுகதை படித்து விட்டே இவ்வளவு எழுதத் தோன்றியது. உடனடியாகச் செய்து விட்டேன். தொகுப்பில் மொத்தம் 12 சிறுகதைகள் உள்ளன. அனைத்தையும் படித்து விட்டு மீண்டும் எழுதுகிறேன்.
ஆவியின் வாதை – ஜீரோ டிகிரி பதிப்பகம். விலை ரூ 280 /-
மதிப்புரை: அராத்து