ஔரங்ஸேப் – 100 கொண்டாட்டம்

ஒருநாள் திருப்பூரிலிருந்து மாசாணியம்மான் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தோம்.  காரிலிருந்து Wim Mertensஇன் Struggle for Pleasure என்ற பியானோ இசை ஒலித்துக் கொண்டிருந்தது.  அதிர்ச்சியாக இருந்தது.  எப்படி என்றேன்.  உங்கள் எழுத்துதான் என்றார்.  சாருவுக்கு முன், சாருவுக்குப் பின் என்றும் தொடர்ந்தார்.  என் எழுத்தைத் தவிர வேறு எந்த எழுத்தையும் படித்திராதவர்.  ஒரு பனியன் தொழிற்சாலையின் முதலாளியாக ஏராளமான தொழிலாளர்களோடும் ஏராளமான பிரச்சினைகளோடும் சாதாரண குடும்ப வாழ்க்கையோடும் பிணைக்கப்பட்டிருந்தவர் இன்று இசை, இலக்கியம், தத்துவம் என்று அறிமுகமாகி, வாழ்க்கை குறித்த பார்வை எல்லாமே மாறி ஒரு கலா ரசிகனாக மாறி விட்டார்.  இப்படி எத்தனையோ ஆயிரக்கணக்கான வாசகர்கள்.  இன்று இப்படி ஒரு கடிதம் வந்திருந்தது.

அன்புள்ள சாரு,

நான் 24 வயது இளைஞன். மூன்று வருடங்களாக தங்களின் எழுத்தை வாசித்து வருகிறேன். கோவை புத்தக கண்காட்சியில் நேரில் சந்தித்திருக்கிறேன். zoom உரையாடல்களில் பூனைகள் தங்கள் தோள் மீது அமர்வதையும் சுற்றி வருவதையும் பார்த்திருக்கிறேன். ஒரு surreal அனுபவமாக இருந்தது உங்களுடைய அந்தப் பேச்சு. இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்குளம் சிவன் கோவிலில் கொடிமரம் பின் இருக்கும் ஆமை வடிவகல்லில் அமர்ந்து கண்களை மூடினேன். யாரோ என் கையைத் தொடுவது போல் இருந்தது. கண்களைத் திறந்து பார்த்தால் ஒரு வெள்ளை பூனைக்குட்டி. தடவிக் கொடுத்தேன்.  வந்து மடியில் அமர்ந்து கொண்டது. கண்களை மூடி பூனைக்குட்டியை தடவிக் கொடுத்தபடி அமர்ந்திருந்தேன். அது ஒரு அற்புதத் தருணம்.

பணிவன்புடன்,

அஸ்வின் குமார்.

இந்தக் கடிதத்தில் பல அம்சங்கள் எனக்குப் பிடித்திருந்தன.  24 பையன் என்னை சாரு என்று விளித்திருந்தது.  அந்த வயது இளைஞர்கள் என்னை அத்தனை அணுக்கமாக உணர்கிறார்கள் என்பது எனக்கு ஒரு கொடுப்பினை.  அடுத்து, அந்தக் கடிதத்தின் வார்த்தைகளில் தெரியும் வாத்ஸல்யமும் பணிவும். 

ஔரங்ஸேப் 100 அத்தியாயங்கள் முடிவுற்றதைக் கொண்டாடும் விதத்தில் ஆரோவில் கிராமத்தில் ஒரு விழா 19ஆம் தேதி நடக்கவுள்ளது.  ஒரு தூரத்து நண்பர் போன் செய்து இன்னாரை அழைத்தீர்களா, அன்னாரை அழைத்தீர்களா என்று அன்புடன் விசாரித்தார்.  அவருடைய அக்கறை புரிகிறது.  ஆனால் நான் என்ன சஷ்டியப்த பூர்த்தியா கொண்டாடுகிறேன்?  இது வாசகர் வட்டம் நடத்தும் விழா.  வாசகர் வட்டம் என்ன செய்கிறது, வாசகர் வட்டத்தை என் நண்பர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று எழுதி விட்டேன்.  மீண்டும் எழுதுகிறேன்.

வாசகர் வட்டத்தினால்தான் நான் இத்தனை உற்சாகமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.  என்னை வாழ வைப்பது அவர்கள்தான்.  விரிவாகவே எழுதியிருக்கிறேன்.  ஒரு நண்பர் ஆஸ்திரேலியாவுக்குப் பயண ஏற்பாடு செய்கிறேன், போய் வாருங்கள் என்றார்.  எனக்கு ஆஸ்திரேலியா தெரியாது, எனக்கு அங்கே வேலை இல்லை என்றேன்.  எனக்கு மெக்ஸிகோ போக வேண்டும்.  தென்னமெரிக்கா, மத்திய அமெரிக்கா இரண்டு பிராந்தியங்களிலும் உள்ள அத்தனை நாடுகளுக்கும் போக வேண்டும். 

என்னை இதுவரை எந்த வெளிநாட்டு அமைப்புகளும் அழைத்தது இல்லை.  எல்லாம் என் செலவில்தான் போய் வந்து கொண்டிருக்கிறேன்.  சீலே சென்று வந்ததே பத்து லட்சத்துக்கு மேல் செலவு.  நாலு லட்சம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் கொடுக்க, மீதியை வட்டத்தைச் சேராத வாசகர்கள் அளித்தனர்.  எல்லா பயணமும் இப்படித்தான்.  என் எழுத்து இயக்கமே வாசகர் வட்டத்தின் ஆதரவில்தான் நடக்கிறது. 

இப்போது ஔரங்ஸேப்.  முந்தா நாள் இரவு பதினொன்றுக்குப் படுத்தேன்.  எல்லாம் ஔரங்ஸேப் கனவுகள்.  வரி வரியாக வார்த்தை வார்த்தையாக கனவில் ஓடிக் கொண்டிருக்கிறது.  மூணு மணிக்கு முழிப்பு தட்டியது.  அதற்கு மேல் உறங்க முடியாது போல் தெரிந்தது.  போய் உடனடியாகத் தட்ட ஆரம்பித்து விட்டேன்.  அப்புறம் நடைப் பயிற்சி.  அப்புறம் கொஞ்ச நேரம் நாவல்.  பதினோரு மணிக்கு பாத்திரம் தேய்க்க ஆரம்பித்தேன்.  தேய்த்துக் கொண்டிருக்கும்போதே தூக்கக் கலக்கத்தில் முழங்கால் மடங்கி விட்டதால் கீழே விழத் தெரிந்தேன்.  சமாளித்துக் கொண்டதால் விழவில்லை.  பன்னிரண்டு மணிக்கு பாத்திரம் தேய்த்து முடித்தேன்.  பிறகு சமையலுக்கு உதவி.  பிறகு இரண்டு கிலோ சிக்கன் லிஷியஸிலிருந்து வந்தது.  அதைச் சுத்தம் செய்து டப்பாவில் போட்டு ஃப்ரீஸரில் வைத்தேன்.  அதிலேயே கொஞ்சத்தை எடுத்து அவித்து பத்து பூனைகளுக்கும் கொடுத்தேன்.  ஆம், லக்கி ஐந்து குட்டிகள் போட்டதால் இப்போது மொத்தம் பத்து பூனைகள். மூன்று மணிக்கு ராஜேஷ் என்னை அழைத்துப் போக வந்த போது தூக்கக் கலக்கத்தில் ஆடிக் கொண்டிருந்தேன்.  அதோடுதான் புத்தக விழாவுக்குப் போனேன்.

டீஜீக்கு ஒரு மெஸேஜ் அடித்தேன்.  இன்ன மாதிரி, இன்ன மாதிரி.  அங்கே வந்து தூக்கக் கலக்கத்தில் ஆடினால் போதை என்று நினைத்து விடாதீர், கடின உழைப்பே காரணம் என்று.  ஏன் என்றால், அருண்மொழி நங்கை புத்தக வெளியீட்டுக்கு நான் பதினைந்து நிமிடம் தாமதம் என்றதும் டார்ச்சர் கோவிந்தன் எனக்கு போன் செய்து “எங்கே, பாரில் இருக்கிறீர்களா?” என்று கேட்டார். 

(டார்ச்சர் கோவிந்தன் என்பது நீளமாக இருப்பதால் அதைச் சுருக்கி சீனி வைத்த பெயர்.  டார்ச்சர் கோவிந்தன், டீஜீ.)

சீனி கொஞ்சம் புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று சொன்னதால், அதெல்லாம் எதிர், அடையாளம் அரங்குகளில் கிடைப்பதால் வாங்கிக் கொடுக்க அவருடன் சென்றேன்.  கொடுத்து விட்டு, எதிர் ஸ்டால் வாசலில் காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்து தூங்கி விட்டேன். திடீரென்று “என்ன சாரு, இங்கே உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று ஒரு பெண் குரல் கேட்டது.  பார்த்தால் சல்மா.  ஹி, ஹி, களைப்பாக இருந்தது, தூங்கி விட்டேன் என்று சமாளித்தேன்.   

இப்படி ஒரு கடினமான, ஓய்வு ஒழிவே அற்ற வாழ்விலும் நான் புத்துணர்ச்சியுடன் எழுதுவதற்குக் காரணமே வாசகர் வட்ட நண்பர்கள்தான். அதனால் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடும்போது அதற்குத் தனிப்பட்ட அழைப்பெல்லாம் எதிர்பார்க்கலாகாது. 

என் எழுத்து உங்களுக்குப் பிடித்திருந்தால், வினித்துக்குத் தெரிவித்து விட்டு வாருங்கள்.  இது எப்படி என்றால்,

நான் எழுதுவது வெறும் கதை அல்ல.  வெறும் இலக்கியம் அல்ல.  என் அன்புக்குரியவர்கள் கூட என்ன சொல்கிறார்கள், கவனித்தீர்களா?  சாருவின் புனைகதைகள் எனக்கு உகந்தவை அல்ல; அவரது அ-புனைவே பிடித்திருக்கிறது.  என்னைப் பொறுத்தவரை வெறும் அ-புனைவில் நிற்பவர்கள் எழுத்தாளனே அல்ல.  இப்போது இந்த இரண்டு வாக்கியங்களையும் ஒப்பிடுங்கள்.  சாரு எழுத்தாளரே அல்ல என்று வரும். 

நான் சொல்ல வருவது என்னவென்றால், இது ஊர் கூடித் தேர் இழுக்கும் விவகாரம்.  இங்கே போய் அழைப்பெல்லாம் எதிர்பார்ப்பது அழகல்ல.  என் எழுத்து கொண்டாடப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?  ஆரோவில் வர வேண்டியது உங்கள் கடமை.

நான் என்ன சூழ்நிலையில் எழுதுகிறேன் என்று மேலே சொல்லி விட்டேன்.  ஆகஸ்ட் 2021இல் ஆரம்பித்து இதோ மார்ச் முதல் வாரம் – 1,50,000 வார்த்தைகள் வந்திருக்கிறது ஔரங்ஸேப்.  இன்னும் ஒரு 30,000 வார்த்தைகள் வரலாம்.  இந்த நாவலுக்காக நான் படித்த புத்தகங்களின் பட்டியலே நூறு பக்கம் வரும்.  நான் முக்கியமாக கவனம் செலுத்துவது எதில் என்றால், நாவலில் நாவலுக்குத் தேவையில்லாத ஒரு வார்த்தை கூட இருக்கக் கூடாது.  ஏனென்றால், என் மூளையில் இருக்கும் சமாச்சாரம் ஒரு பத்தாயிரம் பக்க நாவலுக்கானது.  அது எல்லாவற்றையும் நான் இறக்கி விடக் கூடாது.  நாவல் ஒரு சிலந்தி வலை மாதிரி.  ஒரு சின்ன பிசகு நடந்தாலும் வடிவமும் உள்நேர்த்தியும் பழுதாகி விடும்.  அதே சமயம் ஏதோ ஆய்வு நூலைப் படிப்பது போலவும் இருந்து விடக் கூடாது.  நான் Name of the Rose நாவலையெல்லாம் படித்து நொந்து போயிருக்கிறேன்.  என் நாவலில் ஒரு வார்த்தை கூட அப்படி இருந்து விடக் கூடாது.  அதனால் சீனிக்கும், சமீப காலமாக ப்ரஸன்னாவுக்கும் அனுப்பி அவர்களிடம் கருத்து கேட்ட பிறகே பிஞ்ஜுக்கு அனுப்புகிறேன். 

இலக்கியத்தைப் பரிபாலிக்கும் சமூகம் என்றால், இந்த நாவலுக்காக எனக்கு நிதியுதவி கொடுத்து மூன்று ஆண்டுகள் ஒரு பல்கலைக்கழகத்திலோ அல்லது வேறு ஏதாவது இலக்கிய அமைப்பிலோ அமர்ந்து எழுத வைக்க வேண்டும்.  மூன்று வருட காலம் நான் இந்த நாவலைத் தவிர வேறு எது பற்றியும் சிந்திக்கக் கூடாது.  ஆனால் நானோ இங்கே பாத்திரம் தேய்த்துக் கொண்டு, சமைத்துக் கொண்டு, பத்து பூனைகளை பராமரித்துக் கொண்டு இவற்றுக்கு இடையே கிடைத்த நேரத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  வீட்டு வேலை செய்ய பணிப்பெண் வைத்துக் கொள்ளலாமே என்று கேட்கலாம்.  வைத்தால் ஒரே நாளில் தெறித்து ஓடி விடுகிறார்கள்.  கரண்டி, ஸ்பூன், சட்டி, இட்லி தட்டு எல்லாம் பற்று பற்றாக இருக்கிறது.  முதல் நாள் உணவு பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டு, அதிலேயே சாப்பிட்டால் விஷம் இல்லையா?  சரியாகத் தேய்க்கச் சொன்னால் ஓட்டம்.  எனக்கு ஒரு மணி நேரம் ஆகும் பாத்திரத்தைத் தேய்க்க அவர்கள் பத்தே நிமிடத்தில் தேய்த்துத் தூக்கி எறிகிறார்கள். 

இது பற்றி என் நண்பர் Allan Sealyயிடம் (Trotter-nama) பேசினேன்.  ஏனென்றால், அவரும் பணிப்பெண் இல்லாமல் – இல்லை, பணிப்பெண் வைத்துக் கொள்ளாமல் – அவரேதான் பாத்திரம் தேய்க்கிறார்.  ஆனால் அவர் ஆங்லோ இண்டியன்.  இந்த அளவுக்குப் பாத்திரம் விழாது.  மேலும் அவரிடம் பத்து பூனைகள் இல்லை. 

சமயங்களில் இரவு பதினோரு மணியளவில் அவந்திகா பாத்திரம் தேய்த்துக் கொண்டிருப்பாள்.  கேட்டால் ”நீ தேய்த்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்பாள். 

நான் வளைத்து வளைத்து எழுதுவதெல்லாம் என்னை வாழ வைப்பது வாசகர் வட்ட நண்பர்கள்தான் என்பதை எப்படியாவது உங்களுக்குச் சொல்லி விடுவதற்காகத்தான்.  அவர்கள் குடிக்கிறார்களா, படிக்கிறார்களா என்பது என் கவலை அல்ல.  என்னை அவர்கள் எழுத வைக்கிறார்கள்.  என் சுமையைக் குறைக்கிறார்கள்.  அவர்கள் குடிப்பது பற்றி நீங்கள் ஏன் அத்தனை கவலைப்படுகிறீர்கள்? 

ஒரு நண்பர்.  பத்து ஆண்டுகளாக என் எழுத்தைப் படிக்கிறார்.  மூன்று ஆண்டுகளாக நேரடி நட்பு.  உங்களுக்கு மாதம் பத்தாயிரம் தருகிறேன் என்றார்.  கொடுத்தார்.  பூனை உணவுக்கு மிகவும் ஒத்தாசையாக இருந்தது.  சென்ற ஆண்டு திடீரென்று அவருடைய தொடர்பு விட்டுப் போயிற்று.  வாட்ஸப் போகவில்லை.  போன் போகவில்லை.  எந்தத் தொடர்பும் இல்லை.  எனக்கு ஒன்றும் புரியவில்லை.  கொஞ்சம் கோபமும் உண்டாயிற்று.  பத்தாயிரம் பணமும் நின்றது. 

இப்படியே ஆறு மாதம் ஆயிற்று.  எனக்குப் பெரும் குழப்பமாகவும் கோபமாகவும் இருந்து வந்தது. 

ஆறு மாதம் கழித்து அவரிடமிருந்து ஒரு மெஸேஜ்.  உடனே வரச் சொல்லி சந்தித்தேன்.  அவருக்கு மூளையில் ஏதோ பிரச்சினையாகி சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்.  வாய் பேச முடியாத நிலை.  அதனால் போனின் செயல்பாட்டை நிறுத்தி விட்டார். 

ஒரு மெஸேஜ் போட்டிருந்தால் வந்து பார்த்திருப்பேனே?

பார்த்திருந்தால் பெரிதும் பயந்திருப்பீர்கள்.  பாதிக்கப்பட்டிருப்பீர்கள்.  அது உங்கள் உடல்நலனுக்கு நல்லதல்ல.  அதை விட நீங்கள் என் மீது கோபமாக இருப்பதே உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று இருந்து விட்டேன்.

உண்மைதான் என்று நானும் விட்டு விட்டேன்.  பணம் பற்றி நான் எப்போதுமே பேசுவதில்லை.  நானும் கேட்கவில்லை.  அவரும் சொல்லவில்லை. 

ஒருநாள் வங்கிக் கணக்கில் கண்ணை ஓட்டிய போது யாரோ உதயன் என்பவரிடமிருந்து மாதம் பத்தாயிரம் வந்து கொண்டிருந்திருக்கிறது. 

நண்பரை அழைத்து ”நீங்கள் உடல்நலமின்றி இருந்த போது எனக்குப் பணம் அனுப்பினீர்களா?” என்று கேட்டேன். 

“ஆமாம் சாரு, நான்தான் சொன்னேனே. என் உயிர் உள்ளவரை அனுப்புவேன் என்று.”

“யார் மூலம் அனுப்பினீர்கள்?”

“உதயன்.”

மூளையில் ரத்தக் கசிவாகி, வாய் பேச முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தபோதும் யாரிடமோ சொல்லி பணம் அனுப்பியிருந்திருக்கிறார்.  பெயர் ராஜேஷ் (வேளச்சேரி).  இவருக்குத்தான் அ-காலம் புத்தகத்தை சமர்ப்பணம் செய்தேன்.

இப்படிப்பட்ட நண்பர்கள்தான் வாசகர் வட்டத்தில் இருக்கிறார்கள்.  இப்படிப்பட்ட நண்பர்கள்தான் ஆரோவில் கிராமத்தில் நான்தான் ஔரங்ஸேப் நாவலின் நூறாவது அத்தியாயம் நிறைவடைவதைக் கொண்டாடுகிறார்கள்.  இதில் கலந்து கொள்ளச் சொல்லி வாசகர் வட்ட நண்பர் ஒருவர் 50 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பியிருக்கிறார்.  இந்த அழைப்பிதழை ரத்து செய்யச் சொல்லி விட்டார் சீனி.

இங்கே யாருக்கும் நான் விருந்து கொடுக்கவில்லை.  கடந்த ஆறு மாதமாக என் உயிரை உருக்கி உங்களுக்கு எழுதி விருந்து வழங்கியிருக்கிறேன்.  பிஞ்ஜ் செயலி நண்பர்கள் அதை உங்களுக்கு இலவசமாகப் படிக்கத் தருகிறார்கள்.  இதற்காக நீங்கள் எனக்குக் கொடுக்கும் மரியாதை இது.   இதில் கலந்து கொள்ள விரும்புவோர் வினித்தைத் தொடர்பு கொண்டால் விவரம் சொல்வார் என்று எழுதி அவர் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி எல்லாம் கொடுத்திருக்கிறேன்.  அவ்வளவுதான்.  நீங்கள் செய்ய வேண்டியது, 19ஆம் தேதி விழாவில் கலந்து கொள்வது, நம் பிரபுவின் கைவண்ணத்தில் தயாராகும் விருந்தை உண்ண வேண்டியது மட்டுமே.  பேசுவதாக இருந்தாலும் பேசலாம்.  தங்குமிடம் நீங்கள் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.  ஆரோவில்லிலேயே நல்ல குடில்கள் உண்டு.  கலந்து கொள்வதற்குக் கட்டணம் எதுவும் இல்லை.  நன்கொடை செலுத்துவதாக இருந்தால் வினித்திடம் கொடுக்கலாம்.  என்னிடமும் கொடுக்கலாம்.  இதுவரை 10,000 ரூ. வந்துள்ளது.  ஒரு லட்சத்துக்கு மேல் செலவாகும்.  பணம் வராவிட்டாலும் நாங்கள் பகிர்ந்து கொண்டு விடுவோம். 

என்னோடு பேசுவது உங்களுக்கு உவப்பானது என்றால் 18 அல்லது 20 தேதிகளில் என்னோடு பேசலாம்.  அப்போது கூட்டம் கொஞ்சம் கம்மியாக இருக்கும்.  ஆனால் பகலிலேயே தண்ணியைப் போட்டு விட்டு வந்து என்னை அறுக்கக் கூடாது.  பாண்டிச்சேரி பக்கம் என்பதால் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.  மற்றபடி மது பற்றி எனக்கு எந்தவித tabooவும் இல்லை.

வினித் எண் 84384 81241

மின்னஞ்சல்: charuniveditareadersmeet@gmail.com

சந்தா/நன்கொடை அனுப்ப:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai