முதல் நூறு: 14. அதி பயங்கர டார்ச்சர்

14. டார்ச்சர் கோவிந்தன் என்ற பெயரில் நீங்கள் உருவாக்கியிருக்கும் கேரக்டர் சுவாரசியம்.  அதிலும், அருண்மொழி நங்கையின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு நீங்கள் தாமதம் என்றதும், எந்த பாரில் இருக்கிறீர்கள் என்று கேட்டது அதகளம்.  ஆணா பெண்ணா தெரியவில்லை. ஏன் என்றால், அவர் உங்கள் மீது வைத்திருக்கும் நட்பு, நட்பு என்ற வட்டத்துக்குள் வராது போல் தெரிகிறது.  பாசம் என்று சொல்லலாம்.  ஆண்கள் இப்படி இருக்க மாட்டார்களே என்று யோசனையாக இருக்கிறது.  ஆனால் நீங்கள் அது பெண் என்று சொல்லி விட்டால் நிச்சயம் ஏமாந்துதான் போவேன்.  ஆண் ஆண் தன்மை இல்லாமல் இப்படி இருப்பதுதான் அந்த கேரக்டரை சுவாரசியப்படுத்துகிறது.  இவரை வைத்து நீங்கள் தனியாக ஒரு நாவல் எழுதலாமே?   

இன்னொரு கேள்வி, டார்ச்சர் கோவிந்தனின் டார்ச்சர்களிலேயே அதி பயங்கர டார்ச்சர் எது?

ஜெனிஃபர்

பதில்:  ஏமாற்றத்துக்கு வாய்ப்பு இல்லை.  டீஜீ ஆண்தான்.  நாவல் அளவுக்கு கண்டெண்ட் கொடுத்தால் எழுதலாம்.  அதில் ஒன்றும் தடையில்லை. 

அதி பயங்கர டார்ச்சர் இப்போதைக்கு எது என்றால், ப்ளாகில் என் எழுத்து எதையுமே படிக்காமல் தினமும் காலையில் நான் வாக்கிங் செல்லும்போது அரை மணி நேரம் என்னோடு பேசுவது.  இதில் என்ன டார்ச்சர் என்றால், அவர் சீரியஸாகக் கேட்கும், ஆர்வத்துடன் விவாதிக்கும் பிரச்சினைக்கு அதற்கு முதல் நாள்தான் மாங்கு மாங்கென்று முழ நீளத்துக்கு விளக்கம் எழுதியிருப்பேன்!