இம்சை அரசன்

காலையில் நாலரை மணிக்கு எழுந்து விடுவேன்.  உடனே தியானம்.  பிறகு இஞ்சியை நறுக்கி இஞ்சி சாறு.  கொஞ்ச நேரம் படிப்பேன்.  ஆறு மணிக்கு நாகேஸ்வர ராவ் பூங்கா.  ஒன்றரை மணி நேரம் நடை.  பத்து நிமிடம் பிராணாயாமம்.  சரியாக எட்டு மணிக்கு நானும் ராகவனும் மகாமுத்ராவில் காஃபி குடிப்போம்.  ஸ்ரீவில்லிப்புத்தூர் நாவலுக்கு இப்போது குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.  ஒன்பது மணிக்கு வீடு திரும்பியதும், உடனடியாக ஃப்ரீஸரில் இருக்கும் சுறா மீன் துண்டுகளை எடுத்து வெளியே வைத்து விடுவேன்.   இல்லாவிட்டால் பத்து மணிக்கு பப்பு, ஸோரோவுக்கு உணவு தர முடியாது.  அதற்கு மேல் நேரமானால் குட்டிகளுக்குப் பசி தாங்காது.  அடுத்த வேலை, வீட்டின் வெளி கேட்டின் அருகே ஒய்ட்டி எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும்.  நான் தெருவில் வைத்து வளர்க்கும் நாய்க்குட்டி.  அதற்கு நாலு பிஸ்கட் கொடுத்து அனுப்பி விட்டு, பப்புவை வாக்கிங் அழைத்துக் கொண்டு போவேன்.  பிறகு, பப்புவை வீட்டில் விட்டு விட்டு ஸோரோவை fake வாக்கிங் அழைத்துக் கொண்டு போவேன்.  நிஜ வாக்கிங் சாத்தியமில்லை.  குதிரைக் குட்டி சைஸில் இருக்கும் நாயை தெருவில் அழைத்துக் கொண்டு போனால் மற்றவர்கள் பயந்து விடுவார்கள்.  அவர்கள் பயந்தால் ஸோரோ பயந்து விடும்.  ஸோரோ பயந்தால் காடு தாங்காது.  அதனால் சும்மா கேட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்து வேடிக்கை காட்டி விட்டு (”வாவ், ஈஸிட் டாக்?!” என்று கண்கள் விரிய ஆச்சரியப்பட்டுக் கொண்டு தெருவில் செல்லும் கல்லூரி மாணவிகளை விழித்து விழித்துப் பார்க்கும் ஸோரோ) உள்ளே அழைத்து வருவேன். 

உள்ளே வந்ததும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்து வைத்த சுறா மீன் துண்டுகளை அடுப்பில் வைப்பேன்.  அது வெந்ததும் மின்விசிறியின் கீழே வைத்து ஆற வைத்து, அந்தத் துண்டுகளை பெடிக்ரியில் போட்டுக் கலந்து முதலில் ஸோரோவுக்கும் பிறகு பப்புவுக்கும் வைப்பேன். இந்த வேலையே அரை மணி நேரம் எடுக்கும். ஏன் ஸோரோவுக்கு முதலில் என்றால் அதில் ஒரு விஷயம் இருக்கிறது.  சமயங்களில் ஸோரோ சாப்பிடாது.  அப்படி ஆனால் அதை பப்புவுக்கு வைத்து விடலாம்.  பப்பு என்னைப் போலவே ஒரு உணவு விரும்பி. எப்போதுமே பத்து நாள் பட்டினி கிடந்தது போல் ஓடிப் போய் சாப்பிடும்.      

அதற்குள் எனக்குக் கொலைப்பசி ஆரம்பித்திருக்கும்.  மற்றவர்களைப் போல் பெண் சமையல் செய்து போட, ’காலை’ ஆட்டிக் கொண்டு சாப்பிட்டு விட்டுப் போகும் ஆள் அல்ல நான். பெண்ணியவாதம், பெண் விடுதலை எல்லாம் பேசும் பல புத்திஜீவிகளுக்குத் தங்கள் வீட்டு சமையலறை எங்கே இருக்கிறது என்றே தெரியாது.  இதை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.  பெண் விடுதலையெல்லாம் சும்மா காகிதத்தில்தான்.  நடைமுறை வாழ்க்கையில் அல்ல.  ஆனால் நான் அப்படிப்பட்ட ஆள் அல்ல. 

மேலும், என் சாப்பாட்டு முறை பெரிதும் வித்தியாசமானது.  அதனால் என் சமையல் அறையை ”கிச்சன் ஃபேக்டரி” என்றே நான் அழைப்பது வழக்கம்.  என் காலை உணவு, நறுக்கிய காய்கறிகள்.  கேரட், ஸுக்னி, கேப்ஸிகம், கோவைக்காய், ஆலிவ் காய், முள்ளங்கி, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சிறிய அளவில் நறுக்கி அதில் எலுமிச்சையைப் பிழிந்து சாப்பிடுவேன்.  யார் இதையெல்லாம் நறுக்குவது?  அடியேன் தான்.  நறுக்கினால் இரண்டு பேருக்கு வரும்.  ஒரு பாதி அவந்திகாவுக்கு.  அவளுக்கு எலுமிச்சை ஆகாது என்பதால் நான் உண்ணும் பகுதியில் மட்டும் எலுமிச்சையைப் பிழிவேன்.  காரம் தேவையெனில் சில வேளைகளில் நாலைந்து குறுமிளகையும் சேர்த்துக் கொள்வேன்.  குறுமிளகு பச்சை நிறத்தில் எலுமிச்சை சாறில் ஊறியது எப்போதும் வீட்டில் இருக்கும்.  இந்த ஸலாத் காலை உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ இருக்கும்.  தினமுமே ஸலாதை சாப்பிட முடியுமா?  ஒருநாள் குஸ்குஸ்.  (2001-இல் பாரிஸ் சென்றிருந்த போது என் நண்பர் கலாமோகன் குஸ்குஸ் என்ற மொராக்கோ தேசத்து உணவை அறிமுகம் செய்தார்.  அதிலிருந்து நான் குஸ்குஸ் ரசிகனாகி விட்டேன்.  நானே அதைச் செய்யவும் கற்றுக் கொண்டு விட்டேன்.  குஸ்குஸ் அம்மா நானாவில் கிடைக்கிறது.) ஒருநாள் பாஸ்தா.  சனிக்கிழமை மட்டும் நாரத கான சபா எதிரில் உள்ள சாயி மெஸ்ஸில் நண்பர்களுடன் இட்லி.  சாயி மெஸ்ஸுக்கு முன்னால் ராயர் கஃபேவெல்லாம் சும்மா தூசு.  சாயி மெஸ்ஸில் மதிய உணவும் உண்டு.  இதுவரை போனதில்லை.  ஒருநாள் போக வேண்டும்.  சென்னையின் மிகச் சிறந்த உணவகங்களில் ஒன்று சாயி மெஸ். 

காலை உணவு முடிந்த பிறகு ஏபிஸி ஜூஸுக்கான தயாரிப்பு ஆரம்பம்.  ஐந்து கேரட், மூன்று பீட்ரூட் எல்லாவற்றையும் தோல் சீவி துண்டுகளாக்கி வைத்து விட்டு மாதுளம் பழத்தை உரிப்பேன். நெல்லிக்காயையும் நறுக்கி வைப்பேன். ஆப்பிளை தோல் சீவி வைத்து விட்டு ஜூஸரை எடுத்து ஒவ்வொன்றாகப் போட்டு ஜூஸ் தயாரிப்பு.  இந்த வேலைக்கு முக்கால் மணியிலிருந்து ஒரு மணி நேரம் வரை ஆகும்.  இந்த ஜூஸ் மாலை நான்கு மணி வரை இரண்டு பேருக்கும் தாங்கும்.  ஆளுக்கு இரண்டு கிளாஸ் வரும். 

இதற்குப் பிறகுதான் நிஜமான ஃபேக்டரி வேலை ஆரம்பம்.  சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி எல்லாவற்றையும் உரித்து நறுக்க வேண்டும்.  அடுத்து, தக்காளி.  அடுத்து, குழம்புக்கு வேண்டிய காய்கறி.  அடுத்து, கீரை.  எனக்கு தினமும் கீரை இருக்க வேண்டும்.  அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை அல்லது முருங்கைக் கீரை.  இதில் ஏதாவது ஒன்றை ஆய்ந்து மண் போக தண்ணீரில் சுத்தப்படுத்தி நறுக்கி வைக்க வேண்டும்.  இந்தக் கீரை வேலை மட்டும் 20 நிமிடம் எடுக்கும்  முருங்கைக் கீரையாக இருந்தால் 30 நிமிடம்.  பசலைக் கீரை வேலை வாங்காது.  பொன்னாங்கன்னிக் கீரை எல்லாவற்றையும் விட அதிக வேலை வாங்கும். அவந்திகாவும் என் கூடவே ஏதாவது செய்து கொண்டிருப்பாள்.  எல்லாவற்றையும் முடித்து விட்டுப் பார்த்தால் ஒரு மணி ஆகியிருக்கும்.  அதுவரை குளித்துக் கூட இருக்க மாட்டேன்.  குளித்து விட்டு சமையல் வேலை செய்தால் சரியாக இருக்காது.  மேலும் காலை உணவுக்குப் பிறகு உடனே குளிக்க முடியாது.  நான் சினிமாவுக்கும், இலக்கியத்துக்கும் தீவிர ரசிகன் என்று என் எழுத்தை வாசிக்கும் யாருக்குமே தெரிய வரும்.  சினிமா, இலக்கியம், இசை, பெண்கள், ஒயின், பயணம்… இந்தப் பட்டியலில் உணவுக்கும் பெரிய இடம் உண்டு.  அதனால் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை என் உணவில் நிச்சயமாக வாழைப்பூ பருப்பு உசிலியும் இடம் பெறும்.  வாழைப்பூவை முழுசாக ஆய்ந்திருக்கிறேன் என்று ஒரு ஆண் மகனை என்னிடம் சொல்லுங்கள்… அவரை நான் கையெடுத்துக் கும்பிடுவேன்.  அப்படிப்பட்ட ஆணை நான் இதுவரை பார்த்ததில்லை. ஆனால் நான் மாதத்துக்கு இரண்டு முறை வாழைப்பூவை ஆய்ந்து கொண்டிருக்கிறேன்.  ஒரு வாழைப்பூவை ஆய்ந்து முடிக்க குறைந்த பட்சம் முக்கால் மணி நேரம் ஆகும்.  ஒவ்வொரு பூவிலும் உள்ள கள்ளனையும் எடுக்க வேண்டும்.  அதற்கு நேரம் ஆகும்.  இதையெல்லாம் நானே தான் செய்வேன்.  நீங்கள் உணவின் ரசிகனாக இல்லாவிடில் இதெல்லாம் பிரச்சினையே இல்லை.  நான் ஐரோப்பிய உணவு, இஸ்லாமிய உணவு மற்றும் பிராமண உணவின் ரசிகன். அதனால்தான் இவ்வளவு பாடும்.   

ஆக, இதையெல்லாம் முடித்து விட்டு வரும் போது நாக்கில் நுரை தள்ளி விடும்.  இன்னொரு மிக முக்கிய விஷயத்தைச் சொல்ல மறந்து விட்டேன்.  ஞாயிற்றுக் கிழமையாக இருந்தால் மீன் மார்க்கெட் வேறு போக வேண்டும்.  மற்றவர்களைப் போல் எனக்கு ஞாயிற்றுக் கிழமை தான் அசைவம் சாப்பிட வேண்டும் என்ற கணக்கெல்லாம் கிடையாது. ஆனால் ஞாயிற்றுக் கிழமையில்தான் மீன் வரத்து ஏராளமாக இருக்கிறது. அதிலும் எனக்குப் பிடித்த விரால் மீன் ஞாயிற்றுக் கிழமை மட்டுமே வரும்.   சுறாவையும் விராலையும் வாங்கி வந்து அதை சுத்தம் செய்ய ஒரு மணி நேரம் ஆகும்.  மற்றவர்கள் பத்து நிமிடத்தில் சுத்தம் செய்து விடுவார்கள்.  ஆனால்… கொஞ்சம் பொறுங்கள்.  ஒரு முக்கியமான பிரச்சினை இருக்கிறது.

பல பிராமணர்கள் என்னிடம் சொல்லிப் புலம்பி இருக்கிறார்கள்.  ”அடுக்குமாடிக் குடியிருப்பில் அசைவம் சாப்பிடுபவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருக்கவே முடியவில்லை.  நாற்றம் குடலைப் பிடுங்குகிறது.”  இதைக் கேட்கும் போதெல்லாம் அப்படிச் சொல்பவர்களை நான் கன்னாபின்னா என்று திட்டியிருக்கிறேன்.  நீங்களெல்லாம் ஜாதி வெறியர்கள், இனவாதிகள், இத்யாதி, இத்யாதி.  ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மந்தைவெளியில் நாங்கள் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த போது அங்கேயிருந்த பத்துக் குடித்தனத்தில் ஒரே ஒரு வீடு மட்டும் அசைவம்.  அவர்கள் அசைவம் சமைக்கும் போது பிணத்தை எரிப்பது போல் நாறும்.  அடக் கடவுளே, அசைவம் சாப்பிடும் எனக்கே இப்படி இருக்கும் போது இங்கே உள்ள மற்ற பிராமணக் குடும்பங்களுக்கு எப்படி இருக்கும் என்று யோசிப்பேன்.  ஆனால், அவந்திகாவோ நானோ சமைக்கும் போது மல்லிகை போல் மணக்கும்.  இதை உங்களுக்கு ருசுப்படுத்த வழியில்லை.  ஆனால் நான் சொல்வது உண்மை.

ஒருமுறை வாத்துக் கறி சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.  பத்தாண்டுகள் இருக்கும்.  இப்போதெல்லாம் ஜீவகாருண்யன் ஆகி விட்டதால் அசைவம் என்றால் மீன் மட்டுமே.  வாத்துக் கறி ரொம்பவும் கவுச்சி அடிக்கும் என்றார்கள்.  நண்பர் மணியிடம் செய்முறை கேட்டேன்.  அவர் பிராமணர் என்றாலும் பலதரப்பட்ட சமையலில் விற்பன்னர். ஆனால் அவருக்குமே வாத்துக் கறி சமைப்பது பற்றித் தெரியவில்லை.  ஆனால் தன் தோழி ஒருவரிடம் என்னைப் பேசும்படி சொன்னார்.  அந்தப் பெண் ஒரு நட்சத்திர விடுதியில் செஃப்-ஆக இருந்தார்.  அவரிடம் கேட்டேன்.  செய்முறை சொன்னார்.  சொல்லி விட்டு, “ஆனால் வாத்துக் கறியில் அதிகம் ஸ்மெல் வருமே?” என்றார்.  இதை அவந்திகாவிடம் சொன்னேன். 

அப்போது அவள் மீன் மார்க்கெட்டுக்குப் போய் மீன் வாங்கி வந்து அவளே கருவாடு போடுவாள்.  கடையில் வாங்கும் கருவாட்டில் உப்பு அதிகம் இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு.  உப்பு உயர் ரத்த அழுத்தத்துக்கு ஆகாது.  வாத்து பற்றி மணியின் தோழி சொன்னதைச் சொன்னேன்.  அவ்வளவுதானே என்று சொல்லி விட்டு சமைக்க ஆரம்பித்தாள்.  எப்போதும் போல் மல்லிகை மணம்.  எப்படி என்று கேட்டேன். ரொம்ப சிம்பிள்.  மஞ்சள் தூள் போட்டு வேக வைக்க வேண்டும்.

சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  சமையலை முடித்து விட்டு என் பத்துக்குப் பத்து அறைக்கு வரும் போது மதியம் ஒன்று ஒன்றரை ஆகி விடும்.  ஒரு மணிக்குள் எல்லாம் முடிந்து விட்டால் நான் அதிர்ஷ்டசாலி.  அதற்குப் பிறகுதான் குளியல். 

இரண்டு மணியிலிருந்து இரவு பத்து மணி வரை மட்டுமே என் எழுத்து, படிப்பு, இசை, சினிமா எல்லாம்.   எட்டு மணி நேரம்.  இந்த நேரத்தில் நான் அவ்வளவாக ஃபோனில் பேசுவதில்லை.  சமையல் உள்ளில் இருக்கும் போதும் பேசுவதில்லை.  ஒரு கையில் போனையும் ஒரு கையில் தாளிப்பையும் வைத்துக் கொண்டு பேசும் பெண்களை எனக்குப் பிடிக்காது.

இப்படி ஒரு கொத்தடிமையைப் போல் என் வீட்டில் வேலை செய்யும் என்னைப் பல நண்பர்கள் புரிந்து கொள்வதில்லை.  நண்பர்கள்தான் எனக்கு இம்சை தருபவர்கள் என்று நான் பலமுறை எழுதியிருக்கிறேன்.  அரசு என்று எனக்கு ஒரு நண்பர்.  வயது 21 இருக்கும். மாணவர். என்னை அப்பா என்றே அழைப்பார்.  ஒருநாள் நான் சமையல் உள்ளில் இருக்கும் போது அழைத்தார்.  நான் சமயம் கிடைக்கும் போது அழைக்கிறேன் என்று மெஸேஜ் தட்டி விட்டேன்.  அதிலிருந்து தினமும் ஏன் என் அழைப்பை ஏற்பதில்லை என்று மெஸேஜ்.   நான் அதற்கு, “காலை ஒன்பது மணிக்குள்தான் போனில் பேசுவேன்… நாளை அழைக்கிறேன்” என்று பதில் அனுப்பினேன்.  மறுநாள் அழைக்க முடியாதபடி வேலை.  அதற்குள் அரசுவிடமிருந்து மின்னஞ்சல்.  ஏன் என் அழைப்பை ஏற்பதில்லை?

அதற்குள் நான் அரசு பைத்தியமாகி விட்டேன்.  எந்நேரமும் அரசுவின் சிந்தனை.  அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு  அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு  அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு  அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு  அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு  அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு  அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு  அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு  அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு அரசு      

இதைத் தவிர என் மனதில் வேறு சிந்தனையே ஓடவில்லை.  எந்நேரமும் அரசுவின் பெயரே என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.  எதுவும் படிக்க முடியவில்லை.  எழுத முடியவில்லை.  இந்த ஒரு விஷயம் மட்டுமே என் மனம் முழுவதையும் ஆக்ரமித்திருந்தது. 

இதெல்லாம் எனக்குத் தேவையா?  இது உளவியல் சித்ரவதை இல்லமல் வேறு என்ன?  அரசுவின் அன்பை நான் சந்தேகிக்கவே இல்லை.  அன்புதான் இவ்வளவு வேலையையும் செய்கிறது.  நான் அரசுவின் அழைப்பை ஏற்காததால் இன்றும் காலை ஒன்பது மணியிலிருந்து மதியம் வரை அரசுவின் ஐந்து போன் அழைப்புகள்.  ஒருவர் உங்கள் போன் அழைப்பை ஏற்காவிட்டால் அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.  அதற்காக அவருக்குத் தொடர்ந்து போன் செய்து கொண்டே இருப்பீர்களா?  இந்த அடிப்படை விஷயத்தைக் கூட கற்றுக் கொள்ளாமல் நீ என்ன என் மாணவன்?  அரசு, நீ முதல் பரீட்சையில் தோற்று விட்டாய்.  அடுத்தவரைத் துன்புறுத்தக் கூடாது.  போன் செய்தால் அது துன்புறுத்தலா?  ஆம்.  துன்புறுத்தல் மட்டும் அல்ல.  சித்ரவதை. 

அரசு, இதை நான் கோபமாக எழுதவில்லை.  இது உனக்கு ஒரு தகுதித் தேர்வு. அவ்வளவுதான்.  இனிமேல் நீ எனக்கு மே 15-க்கு மேல் தான் போன் செய்யலாம். 

எப்படி அமைதியாக இருப்பது? எப்படிப் பதற்றம் இல்லாமல் இருப்பது?  சகிப்புத் தன்மை, பொறுமை என்றால் என்ன?  இதையெல்லாம் இந்த ஒரு மாதம் உனக்குக் கற்றுக் கொடுத்தால் நீ அதிர்ஷ்டசாலி. 

    

     

    

     

    

   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

    

    

 

 

 

 

 

Comments are closed.