ஸ்ரீவில்லிப்புத்தூர் – நோங்காய் – அராத்து – ஃப்ரெஞ்ச் பெண்கள்

மூன்று மாதம் ஓய்வாக இருந்து படிக்கலாம், இசை கேட்கலாம் என்று நினைத்தேன்.  ஆனால் விதி வேறு திசையில் இழுத்துக் கொண்டு போகிறது.  சந்தானம் ஸ்ரீவில்லிப்புத்தூர் கதையைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்.  காலை ஏழிலிருந்து எட்டு.  எல்லாவற்றையும் மனதில் குறித்துக் கொண்டு வந்து எழுதும் போது பல நுணுக்கங்கள் தொலைந்து விடுகின்றன.  ஒரு voice recorder வாங்கலாம் என்று யோசிக்கிறேன்.  போகிற வேகத்தைப் பார்த்தால் ஆறே மாதத்தில் நாவல் முடிந்து விடும் என்று தோன்றுகிறது.  19-20-ஆம் நூற்றாண்டு ஸ்ரீவைஷ்ணவர்களின் கதை.  என் வாழ்வில் முதல்முதலாக சுயசரிதைத் தன்மை இல்லாத நாவல் ஒன்றை எழுதுகிறேன்.  life is beautiful என்ற படம் பார்த்திருக்கிறீர்களா?  ஸ்ரீவில்லிப்புத்தூர் அப்படி இருக்கும்.  சௌந்தரவல்லியின் கதையைச் சொன்ன போது எதற்குமே உணர்ச்சிவசப்படாத பரப்பிரம்மமான சந்தானமே அழுது விட்டார்.   எத்தனையோ கதை கேட்டிருக்கிறேன்.  ஆனால் இப்படி ஒரு சோகம் பாரதத்தில் கூட கண்டதில்லை.  சந்தானத்தின் தந்தை இறந்து விட்டார்.  சடலம் கிடக்கிறது.  அந்த சடலத்தை உதைக்க வேண்டும் என்று தோன்றுகிறது சந்தானத்துக்கு.  அத்தனை வெறுப்பை எந்தக் காவியத்திலும் கண்டதில்லை சந்தானம் என்றேன்.  ஏன் அத்தனை வெறுப்பு என்று ஒரு நீண்ட கதை சொன்னார் சந்தானம்.  voice recorder வேண்டும்.  எந்த பிராண்ட் வாங்கலாம் என்று புரியவில்லை.

இடையில் தாஸ்தாவஸ்கியின் இடியட் படித்துக் கொண்டிருக்கிறேன்.  எல்லா க்ளாஸிக்குகளையும் திரும்பப் படிக்கத் தொடங்கியிருக்கிறேன்.  Kiss of the Spider Woman – Manuel Puig எழுதியது படித்துப் பார்த்தேன்.  30 பக்கத்துக்கு மேல் படிக்க முடியவில்லை.  அவரது கதை சொல்லும் முறை ரொம்பவே அலுப்பூட்டுகிறது.  தென்னமெரிக்காவில் மரியோ பர்கஸ் யோசாவை அடிக்க ஆள் இல்லை என்று நினைத்துக் கொண்டேன்.  சென்ற வாரம் கூட யோசாவின் who killed palomino molero என்ற நாவலை இரண்டே நாளில் படித்து முடித்தேன்.  படு அட்டகாசமான நாவல்.  பிறகு   Kiss of the Spider Woman படம் பார்த்தேன்..  அற்புதமான படம்.  நீங்கள் எல்லோரும் பார்க்க வேண்டிய படம்.  யூட்யூபில் சப்டைட்டிலுடன் கிடைக்கிறது.  இவ்வளவு ரகளையான கதையை புய்க் ஏன் அவ்வளவு அலுப்பூட்டும் விதத்தில் சொன்னார் என்று புரியவில்லை.  மேலும் ஒருமுறை படிக்க முயல்வேன்.

நோங்காய் என்ற தாய்லாந்தின் எல்லைப்புற ஊரில் நானும் அராத்துவும் கருப்பசாமியும் மேகாங் நதிக்கரையில் அமர்ந்திருந்தோம்.  இரவு ஒன்பது இருக்கும்.  கைகளில் பியர்.  அப்போது பக்கத்தில் இரண்டு இளம்  ஃப்ரெஞ்ச் பெண்கள் ஏதோ தாயம் மாதிரி ஒரு விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  கொஞ்சமும் லஜ்ஜையின்றி அவர்கள் ஆட்டத்தில் அராத்துவும் கலந்து கொண்டு ஆடினார்.  (அதற்கு முன்பு ஒரு 90 வயது ஜெர்மன்காரர் அராத்துவிடம் என்னென்னவே பேசி உரையாடலுக்கு அழைத்தார்.  அதை அராத்து கண்டு கொள்ளவே இல்லை).    ரொம்ப நேரம் போனது ஆட்டம்.  கருப்பு ஞானியைப் போல் நதியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.  நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு அந்த ஃப்ரெஞ்ச் பெண்களிடம் Lara FFabian ஐப் பிடிக்குமா என்று கேட்டேன்.  முகத்தைச் சுளித்தார்கள்.  ரொம்ப புத்திஜீவி டைப் போல என்று நினைத்தேன்.  அவர்களுக்குப் பிடித்த பாடகர்களின் பெயர்களைக் கேட்ட போது நான் நினைத்தது சரி என்று தெரிந்து விட்டது.   நீங்கள் யுவன் ஷங்கர் ராஜா என்றால் உங்கள் சகா பாபநாசம் சிவம் என்றால் எப்படி இருக்கும்?  அப்படி.  அடப் பாவிகளா, வெளிநாட்டுக்குப் போனாலும் கிழடுகளைத்தான் சந்திக்க வேண்டுமா என்று நினைத்துக் கொண்டேன்.  அந்தப் பெண்களுக்கு வயது 20, 22 தான் இருக்கும்.  ஆனால் ரசனை 50 ஆண்டுகளுக்குப் பின்னால் இருந்தது.  அதைச் சொன்னேன்.  அராத்துவுக்கு லாரா ஃபாபியானாவது மண்ணாங்கட்டியாவது… அந்தப் பெண்களின் கிட்டத்தில் போய் அவர்கள் வியக்கும் வண்ணம் விரல் வித்தை காண்பித்துக் கொண்டிருந்தார்.  தப்பாக நினைக்காதீர்கள்.  இரண்டு கைகளின் விரல்களையும் வைத்துக் கோர்த்து மேஜிக் மாதிரி பிரிப்பார்.  எவனாலும் அதைச் செய்ய முடியாது.  அந்தப் பெண்கள் ஃப்ரெஞ்சில் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.  ஆனால் ஜெர்மன் கிழவர் குறுக்கே புகுந்து அந்தப் பெண்களிடம் என்னென்னவோ பேச ஆரம்பித்து வ்ட்டார்.  அராத்துவுக்கு அண்ணன் போல என்று நினைத்துக் கொண்டு நான் வேறு இடத்தில் போய் அமர்ந்து கொண்டேன்.

ஆனால் இசை என்றால் – நவீன வெகுஜன இசை என்றால் – அமெரிக்காவிலிருந்து சீனா தைவான் வரை ஒன்றே போல் தான் இருக்கிறது என்பதை மலேஷியாவில் நான் சென்ற சீனத்து பப் ஒன்றில் கண்டு கொண்டேன்.  பாடுபவர் பற்றிய விபரம் கேட்டுக் குறித்துக் கொண்டேன்.  Hit 5 என்ற குழு.  கேட்டுப் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=VVUpD6iqfXY

 

Comments are closed.