என் அன்புக்குரிய வாசகி ப்ரியதர்ஷினி ஒரு கடிதத்தில் என்னை மிகவும் நெகிழச் செய்து விட்டார். அந்தக் கடிதத்தைப் பலமுறை படித்தேன். டியரஸ்ட் சாரு என்று ஆரம்பித்திருந்த அந்த முதல் வார்த்தையில் எல்லையற்ற அன்பின் ஓர் வெளிப்பாட்டைக் கண்டேன். அக்கடிதத்தில் அவர் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார். ஒன்று, என்னுடைய மன அழுத்தத்துக்கான தீர்வு எதுவும் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அந்த மன அழுத்தத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. கடிதம் ”Despite such intolerant stuff happening around, you are able to give us your ocean of knowledge everyday” என்று முடிகிறது.
இது பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். எனக்கு மன அழுத்தம் என்றால் என்னவென்றே தெரியாது. காரணம், மகிழ்ச்சியான விஷயங்களைத் தவிர வேறு எதுவும் என்னை பாதிப்பதில்லை. துயரமான விஷயத்துக்கு மட்டும் என் மனம் மரத்துப் போய் விட்டது.
இது மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரணமாகத் தோன்றும். ஆனால் மிகவும் தத்துவார்த்தமானது. யாதெனின் யாதெனின் நீங்குவான் நோதல் அதனின் அதனின் இலன் என்று ஒரு குறள். நீங்கள் நீங்காத பல விஷயங்களிலிருந்து நான் நீங்கி விட்டேன். அச்சம், பயம், பாசம், அன்பு, பணம், சொத்து, புகழ், வாழ்க்கை நெருக்கடி, கூச்சம், அவமானம், மரண பயம் என்ற பலவற்றைச் சொல்லுவேன். அதனாலேயே எனக்கு மன அழுத்தம் ஏற்படுவதில்லை. மனிதர்கள் மீதான கருணை (empathy) கூட என்னிடம் இல்லை. மிருகங்கள் மீது அந்தக் கருணை குவிந்து கிடக்கிறது.
ஆனால் எனக்கும் கோபம் வரும். கோபம் வந்தால் அவர்களைத் தவிர்த்து விடுவேன். ஒருவன் என்னிடம் 25 ஆண்டுகளுக்கு முன், சிலி என்று ஒரு நாடு இருக்கிறது சாரு என்று ஆரம்பித்தான். இனி உன் மூஞ்சியில் முழிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டுப் பிரிந்து விட்டேன். 25 ஆண்டுகளில் இரண்டு மூன்று முறை இலக்கிய விழாக்களில் பார்த்துச் சிரிப்பதோடு சரி. அவனுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. அவன் என்னிடமிருந்து எதுவும் கற்க முடியும் என்று நினைக்கவில்லை. ஆனால் அவனிடமிருந்து நான் அதிகம் கற்றேன். எந்த ஃப்ரெஞ்சுத் தத்துவவாதியாக இருந்தாலும் அவனிடம்தான் சந்தேகம் கேட்பேன். இருந்தாலும் பிரிந்து விட்டேன். அகந்தை பிடித்தவர்களோடு பழகலாம். மூடர்களோடு பழக முடியாது. எனக்கு சீலே எத்தனை நெருக்கமானது என்று கூட அவனுக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்ட மூடனோடு எப்படிப் பழகுவது.
இருந்தும் இல்லாமல் இருப்பதே துயரத்திலிருந்து விடுதலைக்கான வழி.