முதல் நூறு: 15: எழுத்தாளர்களுக்குள் மண உறவு

கேள்வி:  ஒரு தொழிலதிபர் தன் தொழில் சார்ந்த ஒருவர் குடும்பத்துடனும், ஒரு திரைப்படக் கலைஞர் திரைப்படத்துறை சார்ந்த ஒருவருடனும் திருமண சம்பந்தம் செய்து கொள்கிறார்கள். பெரும்பாலான துறைகளில் அப்படி பார்க்க முடிகிறது. ஆனால் எழுத்தாளர்கள் மட்டும் ஏன் தம் எழுத்துத் தொழில் சார்ந்த எழுத்தாளருடனோ, அவரது குடும்பத்தாருடனோ திருமண சம்பந்தம் செய்து கொள்வதில்லை? உலகில் அப்படி எங்கேனும், யாரேனும் செய்து கொண்டிருகிறார்களா?  (வாசகியாக வந்து பழகி மனைவியாய் மாறியதை எல்லாம் கணக்கில் சேர்க்கக் கூடாது.)

ஆர்.எஸ்.பிரபு, சென்னை.

பதில்: கேள்வியில் ஒரு திருத்தம்.  எழுத்து என்பது தொழில் அல்ல.   சே குவேராவுக்கு புரட்சி தொழில் அல்ல.  ரமணருக்கும் மகா பெரியவருக்கும் தவம் தொழில் அல்ல.  மதர் தெரேஸாவுக்குத் தொண்டு செய்தல் தொழில் அல்ல.  அதேபோல் எழுத்தும் தொழில் அல்ல.  அது தவம்.  யோகம்.  சமூகத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வாழும் வாழ்க்கை. 

எழுத்தை வாழ்க்கையாகக் கொண்டோரின் முதல் அடையாளம் தனக்கும் தன்னைச் சார்ந்தோருக்குமான சுதந்திரத்தைப் பேணுதல்.  எழுத்தாளர்களின் மனைவிமாரும் அவர்களை விட குழந்தைகளும் அதிர்ஷ்டசாலிகள்.  தன்னுடைய புதல்வர்களே ஆனாலும் ஒரு எழுத்தாளர் அவர்களின் விஷயத்தில் தலையிட மாட்டார்.  மாப்பிள்ளை அல்லது பெண் பார்த்துத் திருமணம் செய்தல் என்பது அடுத்தவர் சுதந்திரத்தில் குறுக்கிடுவதாகும். 

என் மகன் எங்களிடம் பெண் பார்க்கச் சொன்னான்.  நாங்கள் இருவருமே மறுத்து விட்டோம்.  எங்கள் விருப்பப்படி பார்க்கும் பெண் அவனுக்கு ஒத்து வராவிட்டால்?  அவந்திகா எங்கள் வீட்டுப் பணிப்பெண்ணின் மகளை மணமுடிக்கலாமா என்று மகனிடம் கேட்டாள்.  இரண்டு ஆண்டுகள் அவன் வீட்டுப் பக்கமே தலை காட்டவில்லை.  பிறகு அவனே மேட்ரிமனி நிறுவனத்தின் மூலம் ஒரு மராட்டிப் பெண்ணைப் பார்த்து மணந்து கொண்டான்.  காதல் திருமணம் அல்ல. 

எனவே, எழுத்தாளர்களை சமூகத்தின் மற்ற பிரிவினரோடு சேர்க்க இயலாது.  மேலும், எழுத்தாளர்கள் சமூக மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்பவர்கள்.  கேள்வி கேட்பவர்கள்.  கலகக்காரர்கள்.  அதனால்தான் சில எழுத்தாளர்கள் திருமணமே செய்து கொள்ளவில்லை. 

இன்னொரு அடிப்படையான விஷயம், எழுத்தாளர்கள் பொருள் சார்ந்த எதையுமே நிராகரிப்பவர்கள்.  ஆனால் தொழிலதிபருக்கோ சினிமாத் துறையினருக்கோ பணம் அடிப்படை.  எனவே, இவ்வகையான ஒப்பீடே தவறு. 

தனிப்பட்ட முறையில், என் புதல்வனுக்கோ புதல்விக்கோ திருமணம் செய்து வைப்பது ஒரு தந்தையாக என் கடமை அல்ல என்று கருதுபவன் நான்.  நான் ஒரு பொறியியலாளனாக இருந்தாலும் இதுதான் என் கருத்தாக இருந்திருக்கும்.  குழந்தைகளுக்குக் கல்வியையும் ஞானத்தையும் தருவதே பெற்றோரின் கடமையாக இருக்க வேண்டும்.  அதுவே ஒரு நல்ல சமூகத்தின் அடையாளம். 

மேலும், எழுத்தாளர்கள் போராளிகள்.  அதனால் எப்போதுமே இழப்பின் பக்கம் நிற்பவர்கள்.  இந்த நிலையில் என் மகனும் என்னைப் போலவே பொருள் சார்ந்த வசதிகளை இழந்து வாழும் இன்னொரு எழுத்தாளனின் மகளைத் திருமணம் செய்வதை நானே விரும்ப மாட்டேன்.