ஔரங்ஸேப் 100 விழா (1)

May be an image of 3 people, people sitting, people standing, tree and outdoors

ஔரங்ஸேப் – 100 விழா சிறப்பான முறையில் நடந்து முடிந்தது.  விழாவின் விசேஷம் என்று ஏராளமாக உண்டு.  வெள்ளிக்கிழமை காலை (18 மார்ச்) என் அறைக்கு வந்தார் நண்பரும் வாசகருமான சிவபால கணேசன்.  பொள்ளாச்சியைச் சேர்ந்தவர்.  நகை வைக்கும் சிறிய அலங்காரப் பெட்டி ஒன்றைக் கொடுத்து ஒரு சிறிய பரிசு என்றார்.  அதை வாங்கி ஒரு பக்கம் வைத்து விட்டு அவரோடு பேசிக் கொண்டிருந்தேன்.  பெட்டியைத் திறந்து பாருங்கள் என்றார்.  திறந்து பார்த்தால் ஒரு தங்க செய்னும் 500 ரூ. நோட்டுக் கத்தை ஒன்றும் இருந்தது.  ”ஔரங்ஸேப் நூறு அத்தியாயங்களை முடித்திருக்கிறீர்களே, அதற்காக இதில் ஐம்பதாயிரத்துக்குப் பணமும் ஐம்பதாயிரம் ரூபாய்க்குத் தங்க செய்னும் வைத்திருக்கிறேன்.”  இரண்டு விஷயங்களுக்காக அப்போது நான் பெரும் ஆச்சரியம் அடைந்தேன்.

சிவபால கணேசன், பொள்ளாச்சி

முந்தின இரவுதான், செந்திலின் கழுத்தில் இருந்த செய்னைப் பார்த்து எவ்ளோ அழகு என்று பொறாமைப்பட்டு சொன்னேன்.  நீங்களும்தான் அணிந்திருக்கிறீர்களே சாரு என்றார்.  சரிதான், ஆனால் எனக்கு இரண்டு செய்ன் அணிய வேண்டும் என்று ஆசை, இன்னொன்றுக்கு எங்கே போவது என்றேன்.  மறுநாளே கடவுள் நண்பர் சிவபாலன் மூலம் அனுப்பி வைத்து விட்டது ஒரு ஆச்சரியம்.  இன்னொரு ஆச்சரியம், இப்படியெல்லாம் ஒரு எழுத்தாளனுக்கு செய்வதற்கு எவ்வளவு விசாலமான மனசு வேண்டும் என்பது.  சிவபாலனுக்கு என் மனப்பூர்வமான நன்றி.  சிங்கப்பூரைச் சேர்ந்த சிவகுமாரும் இப்படிப்பட்டவரே.  இந்த நிகழ்ச்சிக்காகவே சிங்கப்பூரிலிருந்து வந்தவருக்கு வேறொரு முக்கிய வேலை வந்து விட்டதால் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. ஔரங்ஸேப் நாவல் குறித்துப் பலரும் தூற்றி எழுதிக் கொண்டிருந்த வேளையில் இம்மாதிரியான அங்கீகரிப்புகள் பெரிதும் உற்சாகமும் உவகையும் ஊட்டக் கூடியவை.   

நிகழ்ச்சிக்கு சுமார் 70 பேர் வந்திருந்தார்கள்.  சென்னைத் தலைமைச் செயலகப் பணியில் ரொம்பவும் பிஸியாக இருக்கும் பிரபுவைப் போல் பல நண்பர்கள் தங்கள் வேலைகளை விட்டு விட்டு வந்து சிறப்பித்தார்கள்.  யாரையும் நான் தனிப்பட்ட முறையில் அழைக்கவில்லை.  ஒரு போன் அழைப்பு கூட இல்லை.  ஆனாலும் இத்தனை பேர்.  இவர்களில் சீனி, ஸ்ரீதர் (கோவை), செல்வகுமார் ஆகிய மூவரைத் தவிர மற்ற அத்தனை பேரும் புதிய வாசகர்கள்.  இளைஞர்கள்.  சில பேராசிரியர்கள்.  சில ஆசிரியர்கள்.  இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள்.  இந்த இருவரில் கண்ணன் என்ற நண்பரிடம் சாரு என்ற பெயரைச் சொன்னால் போதும், அழுது விடுவார்.  அந்த அளவுக்கு என் வாழ்க்கை உங்களுடைய எழுத்தால் மாறி இருக்கிறது என்று விழாவிலேயே குறிப்பிட்டார்.  ஆனாலும் வழக்கம் போலவே பெண்களின் வருகை ஏமாற்றம்தான்.  ஃபாத்திமா பாபு, தாரிணி, மனுஷி, அகிலா ஸ்ரீதர் ஆகிய நான்கு பேர்தான் பெண்கள். 

இத்தனை பெண் சுதந்திரத்துக்குப் பிறகும் பெண்கள் ஊரை விட்டு ஊருக்குச் சென்று ஒரு இலக்கிய நிகழ்வில் கலந்து கொள்வதில் சிக்கல்தான் இருக்கிறது. 

விழாவுக்கான சகல ஏற்பாடுகளையும் செய்தது வினித்தும் ராஜா வெங்கடேஷும்தான்.  அவர்களுக்கு நம் எல்லோருடைய நன்றியும் அன்பும்.  செந்தில் குமரனும் உதவிகள் செய்தார்.  ஆனால் அவர்களின் சிரமத்தைக் குறைக்க நாமும் கொஞ்சம் பிரயாசை எடுத்துக் கொள்ள முடியும்.  சாப்பிட்ட தட்டை அப்படியே போட்டு விட்டுப் போவது இன்னமும் தொடர்கிறது.  எத்தனை சொல்லியும் யாரும் கேட்பதில்லை.  பெற்றோரின் வளர்ப்பு சரியில்லை. 

வாசகர் வட்டத்தைச் சேர்ந்த பழைய நண்பர்களில் மூன்று பேர், மீதி 67 பேர் புதியவர்கள், இளைஞர்கள் என்பது என் எழுத்துக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம்.  இவர்களில் சிலர் மாணவர்களும் கூட.  ஆக, இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், பழைய வாசகர்கள் முதுமை அடைந்து விட்டார்கள்.  அவர்களால் என் எழுத்தோடு ஓடி வர முடியவில்லை.  இளைஞர்களும் மாணவர்களும் என்னோடு இணைந்து கொள்கிறார்கள்.  என் எழுத்து காலம் காலமாக நிற்கும் என்பதற்கு இது சாட்சி. 

காலை அமர்வில் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தோம்.  அது ஒரு குட்டி வனம்.  எல்லா விதமான மரங்களும் இருந்தன.  முந்திரி அதிகம்.  பாம்பும் பூராவும் அவ்வப்போது வரும் போகும்.  நாங்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தோம்.  முதல் நாளே தரையைப் பெருக்கி சுத்தம் செய்திருந்தார்கள்.  மின்விசிறியே தேவையில்லாமல் குளிர்ந்து இருந்தது சூழல்.  ஒரே ஒரு பூரான் ஓடியது.  அதை யாரும் அடிக்காமல் வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தினார்கள் என்பது எனக்குப் பெரும் திருப்தியை அளித்தது. 

மதிய உணவு சைவமும், அசைவமும்.  கெண்டை மீன் வாங்கச் சொல்லியிருந்தேன்.  ஏனோ கெண்டைக்கு சென்னையில் ஆதரவு இல்லை.  வஞ்சிரமெல்லாம் கிலோ 1500க்குக் கிடைக்கையில் கெண்டை கிலோ 80 ரூபாய்க்குக் கிடைக்கும்.  ருசியாகவும் இருக்கும்.  ஒன்றிரண்டு மெல்லிய முள் இருக்கும் என்ற ஒரே காரணத்துக்காக சென்னை ஜனம் கெண்டையை ஒதுக்கி விட்டது.   கெண்டையில் ஜிலேபி கெண்டை இன்னும் ருசியாக இருக்கும்.  மீன் மார்க்கெட் போய் வாங்கிக் கொண்டு வந்ததெல்லாம் வினித்தும் ராஜா வெங்கடேஷும். 

வினித்

சுவையாகவே சமைத்திருந்தார்கள்.  மதியத்துக்குப் பிறகு நான் பெரியதொரு உரை ஆற்ற வேண்டும் என்றார்கள் வந்திருந்த நண்பர்கள்.  எனக்கு அப்படியான பேருரையில் விருப்பம் இல்லை.  இல்லை, அதை எதிர்பார்த்துத்தானே இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்திருக்கிறோம் என்றார்கள். 

நான் நம்முடைய தமிழ் மாஸ்டர்ஸ் பற்றி நான்கு மணி நேரம் சர்வ சாதாரணமாக உரையாற்றி இருக்கிறேன். ஆனால் அதெல்லாம் நீண்ட தயாரிப்புக்குப் பிறகு பேசியது.  எந்தத் தயாரிப்பும் இல்லாமல் திடீரென்று எதைப் பற்றி நீண்ட உரையாற்றுவது? சிறிது நேரத் தயக்கத்துக்குப் பிறகு, எனக்கும் மற்ற எழுத்தாளர்களுக்கும் என்ன வித்தியாசம் என்பது பற்றியும், பிறழ்வெழுத்து என்றால் என்ன என்பது பற்றியும் மூன்று மணியிலிருந்து நான்கு வரை பேசினேன்.   ஆ, சொல்ல மறந்து விட்டேன்.  ஷ்ருதி டிவி கபிலன் தன் கேமராவோடு வந்திருந்தார்.  எல்லாவற்றையும் பதிவு செய்து கொண்டார்.  விரைவில் உங்களுக்கும் காணக் கிடைக்கும். 

புதுச்சேரியைச் சேர்ந்த நண்பர் சிற்றரசுவிடம் பதநீர் வேண்டும் என்று சொல்லியிருந்தேன்.  மறுநாள் புத்தம் புதிய பதநீர் கிடைத்தது.  தேன் போல் இனித்தது. 

இன்னும் எவ்வளவோ இருக்கிறது…  எழுதுவேன்.   

ஒரு கடிதம்:

கொண்டாட்டத்தின் காதலன் சாரு அவர்களுக்கு,

நான்தான் ஔரங்ஸேப் விழாவில் உங்களது எழுத்தில் இருக்கும் கொண்டாட்டத்தை நேரிலேயே உங்களிடம் கண்டதில் மகிழ்ச்சி சாரு.அதிலும் குறிப்பாக DJ நிகழ்வின்போது நள்ளிரவு இரண்டு மணி வரை நீடித்த உங்களது அசராத ஆட்டத்தை உங்களது அலைபேசியிலேயே பதிவு செய்த தருணத்தை மறக்க மாட்டேன்.

இந்த இரண்டு நாட்களில் நான் உங்களிடம் பெரிதும் கண்டு வியந்தது அதிகாரத் தொனி என்பது உங்கள் பேச்சில் இல்லை, அவ்வளவு ஏன் உங்கள் உடல் மொழியில் கூட இல்லை.விழாவுக்கு வருகை தந்தவர்களை இவ்வளவு அணுக்கமாக உணரவைக்க வேறு எந்த எழுத்தாளராலும் முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை.வெளிப்படைத்தன்மையில் ஒரு மனிதன் இவ்வளவு பாய்ச்சலை ஏற்ப்படுத்த முடியுமா என்பதும் தெரியவில்லை.

நீங்கள் உங்கள் மீதான விமர்சனத்தை கையாண்ட விதத்தில் நாங்கள் கற்றுக் கொள்ள ஏராளம் உண்டு. இந்த நிகழ்வுகளில் நான் புரிந்து கொண்டது சாருவுக்கு எழுத்துதான் வாழ்வு,வாழ்வுதான் எழுத்து.

எழுத்தாளனை சந்திப்பது அவ்வளவு உவப்பானது அல்ல என்ற கூற்றை மாற்றி அதனை கொண்டாட்டமாக செயல்படுத்தியிருக்கும் சாருவுக்கு நிகர் சாரு மட்டுமே.விழாவில் சிலர் என்னிடம் கேட்டார்கள் ஏன் பேசவில்லை என்று.நான் மௌனத்தில் உங்களிடம் உரையாடிக் கொண்டுதானே இருந்தேன் சாரு!

இப்படிக்கு,

தினேஷ் குமார்,

ஈரோடு.