என் வாசகியும் தோழியுமான ப்ரியாவும் அவர் கணவர் செல்வராஜும் சேர்ந்து வளவன்கோட்டை (திருநெல்வேலி) கிராமத்தில் 20.3.2022 அன்று குழந்தைகளுக்கான (5 வயதிலிருந்து 15 வயது வரை) ஒரு நூலகத்தைத் தொடங்கியுள்ளனர். இப்போதைக்கு 300 புத்தகங்கள் உள்ளன. மாதந்தோறும் குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறையும் நடக்க உள்ளது.
இதை நான் வெகு காலமாகச் சொல்லி வருகிறேன். திராவிடக் கட்சிகள் இலக்கியத்துக்காக என்ன செய்ததோ செய்யவில்லையோ, நான் உருவானதே நூலகங்களால்தான். ஆரம்பத்தில் படிப்பகங்களாக இருந்தன. எம்ஜியார் படிப்பகம்தான் முதல். தரையில் பாய் போட்டிருக்கும். ஓலைக் குடிசை. மின்விசிறி கூட இருக்காது. சில புண்ணியவான்கள் தண்ணீர்ப் பானை வைத்திருப்பார்கள். செய்தித்தாள்களும் வாரப் பத்திரிகைகளும்தான் கிடக்கும். பிறகு அறிஞர் அண்ணா படிப்பகம். அதற்குப் பிறகுதான் மாவட்ட நூலகங்கள் வந்தன. அங்கேதான் நவீன இலக்கியப் பரிச்சயம் ஏற்பட்டது.
மண்ணில் தெரியுது வானம் புத்தகத்தையும் செல்லப்பாவின் சுதந்திர தாகத்தையும் அக்குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம். அதாவது, 12, 13, 14, 15 வயதுகளில். அந்நூல்களிலிருந்து சில பத்திகளை வாசித்துக் காண்பிக்கலாம். Tomoe Library என்பது நூலகத்தின் பெயர்.
ப்ரியாவுக்கும் செல்வராஜுக்கும் என் அன்பும் ஆசீர்வாதமும்.