கேள்வி 100: 16ஆவது கேள்வி. நேரில் சந்திக்க இயலுமா?

16. வணக்கம், நான் நேசராஜ் செல்வம். ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியன். உங்களுடன் CPMG அலுவலகத்தில் பணியாற்றி இருக்கிறேன். தற்போது ஓய்வூதியம் மட்டுமே பெற்று வருகிறேன். நான் உங்களுக்கு என்னால் இயன்ற போது பணம் அனுப்ப விரும்புகிறேன்.உங்களது நிபந்தனைகள் கடுமையாக இருப்பதால் ஓய்வூதியம் பெறும் நான் பண உதவி செய்ய தடையேதும் உளதோ என தெரிவியுங்கள்.  மேலும் தற்போது நான் கிருஷ்ணகிரி நகரில் வாசம். பெரும்பாலான உங்கள் நூல்களை வாங்கிப் படித்துள்ளேன். ஔரங்ஸேப் பற்றி சொல்ல வார்த்தைகள் போதாது. இதற்கு மிகப் பெரிய விருது கிடைக்க வேண்டும் என விழைகிறேன். ‌

சென்னை வரும்போது உங்களை நேரில் சந்திக்க இயலுமா? அதற்கான வழிகாட்டு நெறிகள் என்ன? உங்கள் முகவரியும் தேவைப்படுகிறது.

நேசராஜ் செல்வம்

கிருஷ்ணகிரி

பதில்: நேசராஜ், உங்களை எப்படி எனக்குத் தெரியாமல் இருக்கும்.  என்.எஃப்.பி.டி. நேசராஜ்தானே?  உங்களை நான் ராஸ லீலாவில் ஒரு கதாபாத்திரமாகக் கொண்டு வந்திருக்கிறேனே?  அஞ்சல் துறை மத்திய மந்திரியைப் பார்த்து, உங்களுக்குக் கருணை அடிப்படையில் மந்திரி வேலை கிடைத்து விட்டது சார், அதேபோல் உங்கள் ஊழியர்களுக்கும் கிடைக்க வழி செய்யுங்கள் என்று மந்திரியை வைத்துக் கொண்டே மேடையில் சொன்னவர் அல்லவா நீங்கள்?  அந்த மந்திரியின் அப்பா இறந்து போனதால் அவருக்கு மந்திரி பதவி கிடைத்தது. அதேபோல் மத்திய அரசு ஊழியர்களுக்கு தந்தை பணியில் இருக்கும்போது இறந்து போனால் தந்தையின் வாரிசுகளுக்குப் பணி தருவதில் பெரும் தாமதம் ஏற்பட்ட போது நீங்கள் அப்படிக் கூறினீர்கள்.  உங்களுடைய அந்தப் பேச்சு அப்போது தமிழக அஞ்சல் துறையில் பெரிய அளவில் பேசப்பட்டது.  அதேபோல் இன்னொரு அதிகாரியிடம் – அவர் பிராணிகள் நல ஆர்வலர் – பிராணிகள் மீதெல்லாம் இரக்கம் காட்டுகிறீர்கள், மனிதர்களாகிய எங்கள் மீதும் கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள் என்று சொன்ன நேசராஜ்.  நீங்கள்தானே அது?

நேசராஜ், நாம் அப்போது நண்பர்கள் இல்லையா?  நிறைய சிறு பத்திரிகைகள் பற்றியும் இலக்கியம் குறித்தும் பேசி இருக்கிறோமே? 

ஸ்டெனோக்களான எங்களுக்கு யூனியன் இல்லை.  ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டுக்கே ரெண்டு டஜன் ஸ்டெனோதான் என்றால் எங்கேயிருந்து யூனியன் வைப்பது?  மேலும், இருபத்து நாலில் இருபது ப்ராமின்.  அவர்கள் யூனியன் வைப்பதில் ஆர்வம் காட்டவில்லை.  5000 ஆண்டுப் பழக்கம்.  எதிர்த்திருந்தால் எப்போதோ இனமே அழிந்திருக்கும்.  நாணல் வாழ்க்கை.  யூனியன் இல்லை.  ரெக்ரியேஷன் க்ளப் மாதிரி ஒரு சங்கம்.  அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?  அதிகாரிகள் எங்களைத் தெருநாய்களைப் போல் நடத்தினார்கள்.  மீறிக் கேட்டால் நாகர்கோவிலுக்கு மாற்றுவேன், திருநெல்வேலிக்கு மாற்றுவேன் என்று மிரட்டுவார்கள். 

என்னுடைய நண்பர் ஒருவர்.  வாயில்லாப் பூச்சி.  இருபதில் ஒண்ணு.  அதிகாரி அவரை எங்க வீட்டுப் பிள்ளை நம்பியார் சாது எம்ஜியாரை சவுக்கால் அடிப்பது போல் அடித்துக் கொண்டிருந்தார்.  அதிகாரி வயதில் ரொம்பப் பெரியவர்.  அதனால் ர் போடுகிறேன்.  ராகவாச்சாரி என்று அதிகாரிக்கு ஒரு பொய்ப் பெயர் சூட்டுவோம்.  ஆராய்ச்சியாளர்.  டாக்டர் பட்டமெல்லாம் வாங்கின பிஸ்தா.  என் ஸ்டெனோ நண்பர் பாவம்.  தினந்தோறும் காலையில் எழுந்தால் ராகவாச்சாரி சாக வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என்று என்னிடம் அழுது கொண்டே சொன்னார் ஒருநாள்.  இன்னமும் ராகவாச்சாரி உயிரோடுதான் இருக்கிறார்.  கல்லூரிகளுக்குப் போய் லெக்சர் கொடுக்கிறார்.   

ஒரு பெண் அதிகாரிக்கு நான் தூரத்துணிதான் துவைக்கவில்லை.  மற்ற எல்லா எடுபிடி வேலையும் செய்திருக்கிறேன்.  செய்யவில்லையானால் தண்ணியில்லாக்காட்டுக்கு மாற்றல் உத்தரவு கை மேல் கிடைக்கும்.  கிளார்க்குகளுக்கு அந்தப் பிரச்சினை இல்லை.  அதிகாரி திட்டினால் யூனியன் தட்டிக் கேட்கும்.  அதையும் மீறி தண்டித்தால் அதிக பட்சம், பூக்கடை ஏரியாவிலிருந்து சைதாப்பேட்டை ஏரியாவுக்கு மாற்றல்.  அவ்வளவுதான்.  ஒஸாமா பின் லாடனின் வைப்பாட்டியாக இருந்த கோலா பூஃப் என்ற பெண் எழுதியிருக்கிறார், ஒஸாமாவின் நண்பர்கள் அவரைப் பார்க்க வரும் போது கோலா பூஃபை நிர்வாணமாக்கி நாயைப் போல் வீடு பூராவும் நாலு காலால் நடந்து வர செய்வாராம். பிருஷ்டத்தில் சவுக்கால் அடி வேறு. கோலா பூஃபே எழுதியிருக்கிறார்.  வாயில் செருப்பைக் கவ்வக் கொடுத்தாரா இல்லையா என்று எழுதவில்லை.  ஸ்டெனோக்களின் வாழ்க்கை இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.  என் காலத்தில் அப்படித்தான் இருந்தது.  திருமணமாகாத நடுத்தர வயதுப் பெண்மணிகளிடம் நாங்கள் ஸ்டெனோவாக மாட்ட மாட்டோம்.  ஏதாவது மெடிகல் லீவ் போட்டு விட்டுப் பதுங்கி விடுவோம்.  இல்லாவிட்டால் மேலே உள்ள கோலா பூஃப் அனுபவம்தான்.  உதாரணமாக ஒன்று.  நான் வேலூர்க் கோட்டத்தில் ஸ்டெனோ. அப்போது இன்ஸ்பெக்‌ஷனுக்காக வந்த ஒரு ஸ்பின்ஸ்டர் அம்மாள் எனக்கு டிக்டேஷன் கொடுத்தாள்.  டைப் பண்ணும் போது ஒரு வார்த்தை தெரியவில்லை.  கூர்மையாக யோசித்தேன்.  அதைப் பார்த்து விட்டாள் போலிருக்கிறது அவள்.  Hey idiot, why are you staring at me?  என்று கத்தினாள்.  செருப்பைக் கழற்றி அடிக்க வேண்டும் போல் இருந்தது.  அடிமை வாழ்க்கை.  வெளியே வந்தால் என் குழந்தை பட்டினி கிடக்க வேண்டும்.  தனியாள் என்றால் செய்திருப்பேன். 

இன்னொரு பெரிய அதிகாரி இப்படித்தான் டார்ச்சர் செய்து கொண்டிருந்தான்.  அசோக்குமாரிடம் சொன்னேன்.  அவர் பி.பி.ஈ.யூ.  எந்தக் கட்சியாக இருந்தால் என்ன?  குண்டி கிழிந்து கொண்டிருக்கும் போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே?  அசோக்குமார் அதிகாரியின் அறைக்குள் போனார்.  என்ன நடந்ததோ?  வெளியே வந்ததும் அதிகாரியே வெளியே வந்து வேசி போல் என்னிடம் இளித்தான். 

பிறகு தனியாக அஷோக்கிடம் அவனிடம் என்ன பேசினீர்கள் என்றேன்.  கையை வெட்டுவேன் என்றேன் என்றார். 

அஷோக் குமார் இருந்திருக்காவிட்டால் நாலு ஆண்டுகள் நான் வேலூரில் ஸ்டெனோவாக பணியாற்றி இருக்க முடியாது.

நேசராஜ், நீங்கள் பணம் அனுப்புவதற்குப் பதிலாக ராஸ லீலா பிரதிகளை வாங்கி அஞ்சல் துறை நண்பர்களைப் படிக்கச் செய்யுங்கள்.  ஒருத்தர் கூடப் படிக்கவில்லை என்று தெரிகிறது.  உங்கள் கவனத்துக்கே வந்ததா என்று சந்தேகமாக இருக்கிறது.  அது மட்டும் அதிகாரிகளின் கவனத்துக்கு வந்திருந்தால் இந்நேரம் என்னைக் கோர்ட்டுக்கு இழுத்திருப்பார்கள்.  இழுக்க வேண்டும் என்றுதான் காத்திருக்கிறேன். 

சென்னை வந்தால் சொல்லுங்கள்.  சந்திப்போம்.  வீட்டில் சந்திக்க இயலாது.  வெளியே சந்திக்க இயலும்.