வில் ஸ்மித் என்ற நடிகரின் மனைவியை ஆஸ்கர் மேடையில் ஒரு காமெடி நடிகர் bodyshame பண்ணி விட்டார். அதற்கு எதிர்வினையாக வில் ஸ்மித் அந்தக் காமெடி நடிகரை மேடைக்குப் போய் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். காணொலியைப் பார்த்தேன். பளார் என்றுதான் அறைந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தமிழகத்தின் புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் அத்தனை பேரும் வில் ஸ்மித்தைப் பாராட்டி எழுதிக் குவிக்கிறார்கள். உலகெங்கிலும் ஒடுக்கப்படும் இனம் என்று பார்த்தால் பெண்களும் அதில் உண்டு. பெண்களை விட அதிகமாக ஒடுக்கப்படும் இனம் திருநங்கைகள். கறுப்பின மனிதர்களும் பெண்கள் அளவுக்கு ஒடுக்கப்படுபவர்களே. பெண்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து நமக்கு இருக்கும் கோபமே வில் ஸ்மித்தின் காட்டுமிராண்டித்தனத்தைப் பாராட்ட உந்துகிறது என்று நினைக்கிறேன். காமெடி நடிகரின் செயல் கண்டிக்கத்தக்கது, தண்டனைக்கும் உரியது. இங்கே ஒரு மனிதனை சாதியைச் சொல்லித் திட்டுவது எப்படி தண்டனைக்கு உரிய குற்றமோ அப்படிப்பட்டதுதான் அது. அமெரிக்க சமூகத்தில் ப்ளாக் என்ற வார்த்தையையே வெள்ளை இனத்தவர் இப்போது உச்சரிக்கத் தயங்குகிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். ”அந்தக் கருப்புக் கலர் ஷர்ட்டை எடுங்கள்” என்று சொல்ல வேண்டும் என்றால் கூட கருப்பு என்று சொல்வதில்லை. ஆனால் அதே சமூகத்தில்தான் சமீபத்தில் ரோட்டிலேயே வைத்து ஒரு போலீஸ்காரன் ஒரு கருப்பின மனிதனைக் கழுத்தை நெறித்துக் கொன்றான். வடிகட்டின இனவாதத்தின் வெளிப்பாடு. அப்போது அந்தத் தெருவில் இருந்தோர் அந்தக் காட்டுமிராண்டித்தனத்தை வேடிக்கைதான் பார்த்தனர்.
அமெரிக்க சமூகம் எனக்குக் காட்டுமிராண்டிகளின் சமூகத்தையே ஞாபகப்படுத்துகிறது. வன்முறைதான் அமெரிக்க சமூகத்தின் அடியோட்டமாக இருக்கிறது. அந்த அளவு வன்முறை கொண்ட சமூகம் உலகில் வேறு எதுவும் இல்லை என்றே கருதுகிறேன்.
நான் சொல்வதை சரியாகப் புரிந்து கொள்ளும்படி வேண்டுகிறேன். வில் ஸ்மித் செய்தது திட்டமிட்டது அல்ல. மனைவி கிண்டல் செய்யப்பட்டார். அடித்தார். ஆனால் இது பற்றி எழுதும் நாம் யோசித்து, நன்கு சிந்தித்து இதை நியாயப்படுத்துகிறோம். அப்படியானால், கண்ணுக்கு முன்னே தப்பு நடந்தால் அடிக்கலாம். இல்லையா? வில் ஸ்மித் போலவே நாம் எல்லோரும் நடக்க ஆரம்பித்தால் உலகில் ஒரு மனிதன் உயிரோடு இருக்க மாட்டான். யோசித்துப் பாருங்கள், அந்தக் காமெடி நடிகன் கன்னத்தில் அறை வாங்கியதோடு, அவனும் திருப்பி அடித்திருந்தால் அங்கே பெரியதொரு களேபரம் நடந்திருக்கும்தானே?
ஷங்கர் இயக்கும் எல்லா படங்களிலும் கருப்பு நிறத்தவர்களையும் திருநங்கைகளையும் அவமதித்து காட்சிகள் வைக்கிறாரே? அவரையும் அடிப்பீர்களா? இந்து மதத்தை அவமதித்துக் கொண்டே இருந்தாரே காமெடி நடிகர் விவேக், அவரை அடித்தீர்களா? இன்னும் முஸ்லிம்களையும் கிறித்தவர்களையும் பிராமணர்களையும் தமிழ் சினிமா அவமதித்துக் கொண்டே இருக்கிறதே, அந்த இயக்குனர்களையெல்லாம் அடிப்பீர்களா?
சில ஆண்டுகளுக்கு முன் ஞாநி மனுஷ்ய புத்திரனை மேடையில் வைத்துக் கொண்டே ”மனுஷ்ய புத்திரன் படித்திருக்காவிட்டால் இந்நேரம் பஸ் ஸ்டாண்டில் லாட்டரி டிக்கட் விற்றுக் கொண்டு இருந்திருப்பார்” என்றாரே, அப்போது யாரும் போய் ஞாநியை அறைந்தீர்களா?
நான் மட்டுமே மறுநாள் என் ப்ளாகில் ஞாநியைக் கடுமையாகத் திட்டி எழுதினேன். மான நஷ்ட வழக்கு போடும் அளவுக்குத் திட்டியிருந்தேன். போட வேண்டும் என்றே எதிர்பார்த்தேன்.
ஞாநி சொன்னது பற்றி மனுஷ் தவிர வேறு யாருக்கும் புகார் இல்லை. அந்த அளவுக்கு சுரணை இல்லாத சமூகமாக இருக்கிறது. ஆனால் வில் ஸ்மித் அடித்ததை மட்டும் கொண்டாடுகிறது. இது என்ன இரட்டை வேடம்?
வில் ஸ்மித் வன்முறையில் ஈடுபட்டதை உலகம் கொண்டாடுகிறது என்றால், இந்த உலகம் வன்முறையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றே அர்த்தம். அப்படியானால் பிரபாகரன் செய்தது சரி. தீவிரவாதிகள் செய்யும் எல்லாமே சரி. அடிக்கு அடி. கண்ணுக்குக் கண். வன்முறைக்கு வன்முறை.
வில் ஸ்மித் என்ன செய்திருக்க வேண்டும் என்றால், தன் மனைவியின் உடலை வைத்துக் கிண்டல் செய்த காமெடி நடிகரை அந்த மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அநியாயத்தை நானே தண்டிப்பேன் என்று கையில் தடியை எடுத்து விட்டால் உலகம் அழிந்து விடும். உலகில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மனிதர்கள் தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே உலகை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். சராசரிகளைப் பற்றிக் கவலையில்லை. புத்திஜீவிகளே இப்படி வன்முறையை ஆதரிப்பது மிகவும் ஆபத்தான போக்கு.
வில் ஸ்மித் எல்லாம் தன் வாழ்வில் ஒரு புத்தகத்தைக் கூட படித்திருப்பாரா என்று சந்தேகமாக இருக்கிறது. அமெரிக்க சமூகம் காட்டுமிராண்டிகளின் சமூகம் என்பதற்கு இந்தச் சம்பவம் இன்னொரு எடுத்துக்காட்டு.