ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் ஓடுபவர்களின் வேகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். மின்னஞ்சல்களுக்கு பதில் கூட எழுதவில்லை. ஔரங்ஸேப் சம்பந்தமாக ஒரு அவசர வேலை. ஆனாலும் வாசகசாலை நண்பர்கள் நேர்காணல் என்று அழைத்ததால் போய் விட்டேன். ஆறு மணிக்குத்தான் நேர்காணல் என்றாலும் பன்னிரண்டுக்கே அண்ணா நகர் கிளம்பி விட்டேன். மதிய உணவை ராம்ஜி பட்டியாலா ஹவுஸில் வாங்கிக் கொடுத்தார். நான் பஞ்சாபி உணவின் தீவிர விசிறி. சாப்பாடு பிரமாதமாக இருந்தது. நேர்காணலுக்கு நிறைய நேரம் இருந்ததால் கிங் ரிச்சர்ட் படம் பார்த்தோம். மிக நல்ல பொழுதுபோக்குச் சித்திரம். அமெரிக்கா பற்றிய என் மோசமான கருத்துகள் மேலும் வலுவாயின. பிறகு நேர்காணல் இரண்டு மணி நேரம். சுவாரசியமான கேள்விகள். பதில்கள் பற்றி நீங்கள்தான் சொல்ல வேண்டும். இந்தச் சந்திப்பு பற்றி வாசகசாலை கார்த்திகேயன் எழுதியிருக்கிறார். அது கீழே:
வாசகசாலை யூ ட்யூப் சேனலில் புதிதாக ஒரு நிகழ்வுத் தொடர் துவங்க உள்ளது. அதற்கான முதல் படப்பிடிப்பு இன்று மாலை அண்ணா நகரில் உள்ள ‘அரங்கா கிரியேட்டிவ் ஸபேஸஸ்’ ஸ்டூடியோவில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் சாரு! பிஞ்ச் தமிழ் செயலியில் வெளியாகியுள்ள அவரது ‘நான்தான் ஔரங்ஸேப்’ நாவலை அடிப்படையாக வைத்த நேர்காணல் இது. அன்புக்குரிய நண்பர் சுதர்ஸன் ஹெச்.தான் ஹோஸ்ட்.
படப்பிடிப்பின் போது ஓரமாக உட்கார்ந்து நானும் அருணும் நேர்காணலை மனம் விட்டு ரசித்துக் கொண்டிருந்த தருணங்கள் ஏகப்பட்ட பழைய நினைவலைகளை மனதில் கிளறி விட்டது.
நுங்கம்பாக்கம் ஹாடோஸ் க்ளப்பில் சாரு வாசகர் வட்டத்தின் அதிகாரப்பூர்வ முதல் சந்திப்பு நடைபெற்றது. அப்போதுதான் முதன்முறையாக சாருவை நெடுநேரம் அருகிலிருந்து பார்த்து, அவரது பேச்சை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தேன். பின்னர் பனையூரில் நடைபெற்ற வாசகர் வட்ட சந்திப்பில் காலை அமர்வில் ஷேக்ஸ்பியரின் “தி லாஸ்ட் லியர்” குறித்து உணர்ச்சி மிகுதியில் அவர் பேசியதை மிக அருகில் சோபாவில் அமர்ந்து பிரம்மித்துக் கொண்டிருந்தேன். அந்த அமர்வின் இறுதியிலானதோர் உரையாடலில் எனது பெயரைக் குறிப்பிட்டு பாராட்டி சாரு பேசியபோது ஏறக்குறைய அப்படியே உறைந்து விட்டேன்! (ஒரு முக்கிய வேலையாக சாருவை சென்று பார்க்குமாறு ஞாபாரா கூறியதால் ஆபிஸில் இருந்து வேர்க்க விறுவிறுக்க ஓடிச் சென்று அவரைப் பார்த்ததைத்தான் குறிப்பிட்டார்). அப்படி பேஸ்தடித்து நின்றதற்காக அன்று மதிய உணவின் போது நண்பர் பிரபு ராமகிருஷ்ணனும் என்னை கலாய்த்தது நினைவில் உள்ளது. அன்று மாலை அமர்வின் போது ராச லீலாவில் இடம்பெற்ற ‘cuckolded’ என்ற வார்த்தைப் பிரயோகம் குறித்து நண்பர்களின் கருத்துகளுக்குப் பிறகு சாருவின் விளக்கம்…ஆஹா!!
அதையடுத்து ஏற்காடு வாசகர் வட்ட சந்திப்பில், மாலை கேம்ப் பயரின் போது ‘நேநோ’ தொகுப்பு குறித்த நண்பர்களின் உரையாடல்…பின் சாருவின் பதில், எக்ஸைல் வெளியீட்டு விழாவிற்கு பின்னர் நடந்த சந்திப்பு, நண்பர் தயாநிதி தமிழ்நாடு கல்யாணத்தின் போது ‘நீண்ட இடைவேளைக்குப்’ பிறகு சாருவுடன் சந்திப்பு, அப்புறம் ஞாபாரா & பார்த்தி உபயத்தில் குறிப்பிடத்தக்க எத்தனையோ தனிப்பட்ட உரையாடல்கள் என…சாரு எப்போதும் ஒரு ஈர்க்கும் மேக்னட்!!
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் அவர் பேசப் பேச அப்படியே எங்களை மறந்து லயித்திருந்தோம். ஒளிப்பதிவு நடக்கும் இடம் என்பதையும் மறந்து சில இடங்களில் வாய்விட்டு சிரித்தும் இருக்கிறோம். இதுதான் சாரு! லவ் யூ சாரு. சற்றும் குறையாத இந்த ஈர்ப்புதான் அவரது ஸ்பெஷல்!! இது நிகழ்வதற்கு அடிப்படையாக இருந்த அன்புக்குரிய நண்பர் கருந்தேள் ராஜேஷுக்கு விசேஷமான நன்றி.
அட்டகாசமான நேர்காணல் வீடியோவை வெகுவிரவில் வாசகசாலை யூ ட்யூப் சேனலில் எதிர்பாருங்கள்!