ஔரங்ஸேபும் டால்ஸ்டாயும்

அன்புள்ள சாரு…

ஒரு கூர்மையான வாசகன் “கூடு விட்டுக் கூடு பாய்தல்” என்பதை உங்கள் எழுத்துகளில் பல இடங்களில் காண முடியும் என்றாலும் 106ஆவது அத்தியாயத்தை கண்டிப்பாக சாரு எழுதும் வாய்ப்பு கிடையாது.

கடித உதாரணமாக சாருவாகிய நீங்கள் இலக்கிய கடிதங்கள் எத்தனையோ கொடுத்திருக்க முடியும்

Letter to a Hindu என்ற டால்ஸ்டாய் கடிதத்தை அந்த இடத்தில் ஒளரங்ஸேப் மட்டுமே நினைவுகூர்ந்திருக்க முடியும்

அந்தக் கடிதத்தைப் பெற்ற தாரக் நாத் தாஸ் மிகப் பெரிய வங்காள ஆளுமை என்பதன்று முக்கியம்; ஒளரங்ஸேப்  நாவலில் வரும் பல்வேறு பாத்திரங்களுடன் தாரக் நாத் தாஸ் ஒப்பிடத்தக்க ஒருவர்.

ரத்தம், கொலை, போர் போன்றவற்றை தனது வாழ்க்கையாகக் கொண்டவர் பேரரசர் ஔரங்ஸேப்.  அதே போன்ற மனநிலையில் இருந்தவர்தான் தாரக் நாத் தாஸ்.

ஆங்கிலேய ஆதிக்கத்தை விரட்டி அடிக்க மதவாதம் கலந்த யுத்தமே சிறந்தது என (பாபர் பேருரை நினைவுக்கு வருகிறதல்லவா) நினைத்தவர் அவர்.   அன்றைய இத்தாலி, ஜெர்மன் ராணுவங்களுடன் சேர்ந்து கொண்டு  வன்முறை மூலம் ஆங்கிலேயர்களை துரத்த முடியுமா என முயன்றவர்.  இந்த வன்முறை முயற்சிகளுக்காக வெளிநாடுகள் சென்றவர். சிறைத்தண்டனை பெற்றவரும்கூட. 

வ.உ.சி.,  சுப்ரமண்யம் சிவா,  நீலகண்ட பிரம்மச்சாரி போன்றோர் இவரை மானசீக குருவாக கொண்டவர்கள்.

இதற்காக Free Hindustan இதழை நடத்தியவர்.  இப்படி ரத்தவாடையில் திளைக்கும் தரக் நாத் தாஸ்,   ஒளரங்ஸேப் ஆகியோர் காந்தியுடன் கைகுலுக்கும் அபூர்வ தருணம்தான் அந்தக் கடித நினைவுகூரல்.    

என் போன்ற பழைய வாசகர்களுக்கு சாருவின்  சபரிமலைப் பயணம்,   துக்ளக் கட்டுரைகள்,   பல்வேறு இஸ்லாமிய இந்து ஞானியர்குறித்த அந்த காலகட்டத்தில் அளித்த வியப்பு கொஞ்சநஞ்சமல்ல.

ரோலர் கோஸ்டர் வாழ்வு என்பது இம்மூவரையும் இணைக்கும் கண்ணி என்பதை அக்கடிதம் உணர்த்துகிறது.  எழுத்தாளனையும் மீறி  அக்கடிதம் இடம் பெற்றுள்ளது என்பதை ஒரு தேர்ந்த வாசகன் சுலபமாக உணர முடியும்.  

டால்ஸ்டாயால் தாரக் நாத் தாஸுக்கு எழுதப்பட்டு காந்தியால் வெளியிடப்பட்டு சாருவின்  நாவல் மூலம் எங்களை அடைந்த இக்கடிதம்  நாவலின் மணிமுகடம் என நினைக்கிறேன்

என்றென்றும் அன்புடன்,

பிச்சைக்காரன்.

டியர் பிச்சை,

ஒவ்வொரு அத்தியாயத்தைக் குறித்தும் நீங்கள் எழுதும் விளக்கங்களைக் குறித்துக் கொள்கிறேன்.  நீங்கள் சுட்டும் பிழைகளையும் மூலத்தில் திருத்தம் செய்து கொள்கிறேன்.  பதில் மட்டுமே உங்களுக்கு எழுதுவதில்லை.  இந்தக் கடிதத்தை மட்டும் நாவலின் பின்னே ஆய்வுக் குறிப்புகளில் சேர்க்கலாம் என்று இருக்கிறேன்.  தாரக் நாத் பற்றி நாவலில் எதுவும் இல்லை.  இது போன்ற விவரங்களையும் சேர்த்தால் நாவல் புனைவுத் தன்மையை விட்டு வேறு திசையில் போய் விடும் என்பதால் தவிர்க்கிறேன்.  உங்களுக்குப் புரிந்திருக்கும்.  தீவிர வாசகர்கள் தாங்களே அந்தப் பெயரைக் கொண்டு நூல் பிடித்துப் போய்க் கொள்வார்கள். 

மற்றபடி உங்கள் பாராட்டு வார்த்தைகளை என் ஆசான்கள் உங்கள் மூலம் என் தோளில் தட்டி என்னை ஊக்குவிப்பதாகவே எடுத்துக் கொள்கிறேன், எப்போதும்.

சாரு