நிழலைத் தொலைத்தவனின் பிராது: சாரு நிவேதிதா & ஆத்மார்த்தி

1
நான் சொல்லப் போகும் பிராதினை
நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்றெனக்குத் தெரியும்.
உங்களுக்கு வேறு வழியில்லை என்பதனால்
நீவிர் நம்பித்தான் ஆக வேண்டும்
அறிக; எனக்குப் பொய் சொல்லத் தெரியாது
அதைவிட எது பொய்
எது உண்மையெனப் பிரித்தறிகின்ற சூட்சுமமும்
தெரியாது
ஆகவே  இதை நீங்கள் நம்பியாக வேண்டும்
ஏனெனில்
எனக்கு உங்கள் உதவி தேவை
நமக்குள் இருபுறப் புரிதல் இல்லையேல்
நீங்கள் எனக்கு உதவ இயலாது
கவனமாகக் கேளுங்கள்
நம்பிக்கையுடன் கேளுங்கள்
அப்போதுதான் எனக்கு உதவுவது பற்றி நீங்கள்
தெளிவு கொள்ள முடியும்.

2
சமீப காலமாக என் நிழலைக் காணோம்
எப்போது தொலைத்தேன்
எவ்விடத்தில் தொலைத்தேன்
என்றெதுவும் தெரியவில்லை
சன்னலினூடே வந்து விழுகின்ற கிரணங்களிலொன்று
எப்பொதும் நெற்றி வருடுன்கிற காலைக்காற்று
அள்ளி முகம் கழுவுகையில் கண்களினூடே தழுவிச் சரிகின்ற நீர்த்துளி
கனவில் வேண்டாப்போது கிடைத்து விடுகின்ற நெடிய முத்தம்
இவற்றிலொன்றைக் காணவில்லையெனில்
எப்படித் துடித்திருப்பேன்
அப்படித் துடிக்கவில்லையென்பதும்
துணுக்குறச் செய்கிறது.
என் நிழலைக் காணவில்லை.
அதனோடு வேறேதாவதும் சேர்ந்து தொலைந்திருக்கலாம்
சொல்லியழத் தோதாயிருந்திருக்கும்.

3
ஒரு அடிமையைப் போல்
என் நினைவறிந்த தினத்திலிருந்து
என்னைப் பின் தொடர்ந்து கொண்டிருந்த நிழல்
எஜமானை விட்டு ஒரு போதும்
உயிர்த்திருக்க விரும்பாத செல்லப்பிராணியின் ஆன்மாவைத்
தனதாய்க் கொண்டிருந்த நிழல்
ஆயிரம் காதல்களுக்கு நடுவிலும்
தனது போல் இன்னொன்று இல்லை காண்
என்று இறுமாந்திருக்கும்
பேரழகுக் காதலொன்றின் கர்வம் போல் தனித்திருந்த நிழல்
என் உடலுக்கு வெளியே எனதான உறுப்பொன்றாகவே நான் கருதியிருந்த என் நிழல்
அதைத் தான் காணவில்லை.
எப்போது தொலைந்ததென்று கிஞ்சித்தும் உணரவில்லை
சட்டென்று திரும்பிப் பார்க்க நேர்கையில்
நிழலின் இன்மை என்னைப் பார்த்துக் கெக்கலித்தது.
நிழலின்றி எதுவாவேன் நான்

4
என் பிராது இதுதான்
என் நிழலைக் காணவில்லை.
தொலைந்ததோ களவு போனதோ
இருந்துகொண்டிருந்தது, இல்லாமற் போயிருக்கிறது.
என்னுடையது. எனக்குத் திரும்பவும் வேண்டும்.
அவ்வளவுதான்.
என் பிராதினைப் பதிவுசெய்துகொள்ள
மறுக்கிறது போலீஸ்.
நிழலோடு நீயுமல்லவா காணாமற் போயிருக்கவேண்டும்
என்று கேட்கிறார் ஒரு கனவான்.
இனி உங்களுக்குப் பகலென்றேதுமில்லை இரவு மட்டும்தான்
என்று நகைக்கின்றார் ஒரு நல்மனக் காவலர்
உங்கள் முகப்புத்தகத்தில் இதைப் பற்றிப் பதியலாமே என்று
எடுத்துக் கொடுத்தார் வேறொரு வழக்குக்காக அங்கே வந்திருந்தவர்
(பரபரப்பான நேரத்தில் ஃபேஸ்புக்கில் இதைப் பதிவிட்டபிறகு
ஒன்றரை மணி நேரத்தில் அதற்குக் கீழே தென்பட்டது
பதின்மூன்று விருப்பக்குறிகள்
அதில் இரண்டு ஹார்ட்டின் சிம்பல்.
சிவந்த கோபமுகம் ஒன்று
ஹாஹா என்று இளித்து வைத்தவை இரண்டு)
நீங்கள் காணாமல் போகலாம்
வேறாரும் வந்து அதைப் பிராதளிக்கலாம்
அப்போது உங்கள் நிழலும் சேர்த்துத் தேடப்படும்
என்றது போலீஸ்

5
சக கவிஞனொருவன்
“நிழலுக்கு நிழலேது?
நீயே நிழல் தானே நண்ப
இதற்கேன் கலங்குகிறாய்.
நீ பாட்டுக்கு நீ
நிழல் பாட்டுக்கு நிழல்
எதையும் வற்புறுத்தாமல்
சற்றுச் சும்மா இரேன்”
 என்று இலக்கியமாகப் பேசிவிட்டு
அழைப்பைத் துண்டித்தான்.

6
என்னை நம்புவதற்கு யாராவது இருங்கள்
இதை நீங்கள் நம்பியாக வேண்டும்
ஏனெனில்
எனக்கு உங்கள் உதவி தேவை
நமக்குள் இருபுறப் புரிதல் இல்லையேல்
நீங்கள் எனக்கு உதவ இயலாது
கவனமாகக் கேளுங்கள்
நம்பிக்கையுடன் கேளுங்கள்
நிழல்தானே என்று எளிதாகப் பரிகசிக்காதீர்கள்
இன்றெந்தன் நிழல், போகட்டும்.
நாளை உங்கள் பிராதினைச்
சான்றளிக்கச்சொல்லி
என் வாசலில் வெகுநேரம்
காத்துக் கிடப்பீர்கள்