நட்சத்திர எழுத்தாளர் என்கிறார்கள். கூட்டத்தில் என்னையே இறுதியாய்ப் பேச வைக்கிறார்கள். இடையிலே பேசினால் கூட்டம் போய் விடுமாம். ஆரோவில்லில் கொண்டாட்டம் என்றால் தனிப்பட்ட அழைப்பு இல்லாமலேயே 80 பேர் வருகிறார்கள். ஐஃபோன் இல்லை என்று எழுதினால் மறுநாளே ஒரு புதிய ஐஃபோனை வீட்டுக்கு வந்து கொடுக்கிறார்கள். (சிங்கப்பூர் சிவக்குமார்). ஔரங்ஸேப் நூறு அத்தியாயம் முடித்ததும் நூறு ஆயிரம் கொடுக்கிறார்கள் (பொள்ளாச்சி சிவபால கணேசன்). நீங்கள் என் கடவுள். நீங்கள் என் ஆசான். நீங்கள் என் ஞானத்தந்தை. தினந்தோறும் வருகின்றன கடிதங்கள். பெரும் கொண்டாட்டமான வாழ்க்கை. ஆனால் இரண்டு நிமிடங்களுக்கு முன்னால் ஸீரோ டிகிரியிலிருந்து காயத்ரியின் ஃபோன். ”ஸ்மாஷன் தாரா அச்சுக்குப் போகிறது. 200 காப்பி ஆர்டர் கொடுக்கலாமாப்பா?”
இப்படிக் கேட்பதற்குக் காரணம், அவ்வளவுதான் விற்கிறது. முன்பெல்லாம் 1200 காப்பி போடுவார்கள். அதில் 200 காப்பி மதிப்புரைக்காக இலவசமாகக் கொடுப்போம். இப்போது ஆர்டர் போடுவதே 200. சூழல்தான் காரணம். பதிப்பகங்கள் ஒரு சிறிதும் காரணம் இல்லை. பதிப்பகங்களின் இந்தக் கேள்வியை மாற்ற வேண்டியது உங்கள் கையில்தான் இருக்கிறது. நானே ஒரு ஐம்பது காப்பி விலைக்கு வாங்கி என் நண்பர்களுக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் எனக்குச் செய்ததைக் கணக்குப் பார்த்தால் நட்சத்திரங்களை எண்ணுவது போன்றதாகி விடும்.
முன்பதிவுத் திட்டத்தில் ஒரு ஆயிரம் பிரதிகளுக்கு பதிவு செய்யப்பட்டால் இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படாது. அதற்கு மேல் உங்கள் விருப்பம். ஸ்மாஷன் தாரா கவிதைத் தொகுதிக்கு மனுஷ்ய புத்திரன், ஆத்மார்த்தி, அராத்து மூவரும் முன்னுரை கொடுத்திருக்கிறார்கள். நேசமித்ரன் அணிந்துரை அளித்துள்ளார்.