எழுத்தாளனை சந்தித்தல்

ஒரு நீண்ட நாள் வாசகர்/நண்பர் ஜூனில் சென்னை வருவதாகவும், சந்திக்க விருப்பம் என்றும் வாட்ஸப்பில் தெரிவித்திருந்தார்.  அமெரிக்காவில் வசிக்கிறார். 

இதை வாசித்ததிலிருந்து இது பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  அந்த யோசனைகளையெல்லாம் தொகுத்தால் பல பக்கங்கள் போகும்.  கொஞ்சம் சுருக்கமாக எழுதி விடலாம். 

எழுத்தாளர்களை சந்திப்பது பற்றி சுஜாதா சொன்னது மிகவும் தவறானது.  அவர் அப்படி நினைத்திருந்தால் அவர் ஏன் சுந்தர ராமசாமியை சந்திக்க விரும்பி சு.ரா.விடம் விருப்பம் தெரிவித்திருக்கிறார்?  சு.ரா. கடைசி வரை சுஜாதாவை சந்திப்பதைத் தவிர்த்து விட்டார்.  சுஜாதா சொன்னதை அவரே நம்பியிருந்தால் நினைவுகளின் புதர்ச் சரிவுகளிலிருந்து என்ற என் குறுநாவலைப் படித்து விட்டு, இதை எழுதியவரை நான் சந்திக்க வேண்டும் என்று ஏன் அவர் கஸ்தூரி ரங்கனிடம் சொல்ல வேண்டும்?  அந்தக் குறுநாவல் கணையாழியில் தி.ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது.  அதை எழுதியவர் அய்யங்காராகத்தான் இருக்க வேண்டும், வேறு யாராலும் அப்படி எழுதியிருக்க முடியாது என்றாராம் சுஜாதா.  ”இல்லை, சாரு நிவேதிதா எழுதியதுதான்” என்று கஸ்தூரி ரங்கன் சொல்ல, “அவரா, அவராக இருக்க முடியாது,  அவர் பெயரில் வேறு யாரோ எழுதியிருக்கிறார்கள்” என்பது சுஜாதாவின் அவதானம். 

”இல்லை, சாரு நிவேதிதாவை எனக்குப் பர்ஸனலாகத் தெரியும். அவரேதான்.”  இது கஸ்தூரி ரங்கன்.

“அப்படியானால் அவரை சந்திக்க வேண்டுமே?”  இது சுஜாதா.

பிறகு சுஜாதா வீட்டில் அவரை சந்தித்தேன். 

பேச்சின் இடையே “உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார்?” என்று சுஜாதா கேட்க, பதிலுக்கு நான் சற்றும் யோசிக்காமல், ”எந்த கண்டத்தில்?” என்று கேட்டு விட்டேன்.  நான் எதார்த்தமாகத்தான் கேட்டேன்.  ஆனால் சுஜாதாவுக்கு எப்படித் தோன்றியதோ?  அவர் நண்பர்கள் பலரிடமும் அதை சொல்லிச் சொல்லி மாய்ந்திருக்கிறார். 

இரண்டாவது சந்திப்பு நிகழவில்லை.  அசோகமித்திரனிடம் எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு சுஜாதாவிடம் ஏற்படவில்லை.  இலக்கியத்துக்கும் வெகுஜன/பொழுதுபோக்கு எழுதுக்குமான வித்தியாசம் அது. 

ஆதலால், எழுத்தாளனை வாசகர் சந்திக்கக் கூடாது என்ற சுஜாதாவின் கருத்தை நாம் மதிக்க வேண்டியது இல்லை.  என் எழுத்தின் மூலம் ஒருவர் கற்கக் கூடியது 20 சதவிகிதம்தான்.  ஆனால் நேரில் கற்கக் கூடியது 80 சதவிகிதம் இருக்கும்.  இதில் எனக்கோ, என் நண்பர்களுக்கோ துளி சந்தேகமும் இல்லை.

ஆனால் யார் என்னை சந்திக்க முடியும்?  கொஞ்சமாவது என் இயக்கத்துக்குத் தோள் கொடுத்திருக்க வேண்டும்.  டெட்ராய்ட்டில் சின்னய்யா பாண்டியன் என்று ஒரு நண்பர்.  அவர் எனக்குத் தேவையான நூல்களை அமெரிக்க நூலகங்களில் தேடி எடுத்து மின்னூலை அனுப்பி வைக்கிறார்.  மிக அரிதான நூல்களையெல்லாம் அனுப்பியிருக்கிறார்.  வித்யா சுபாஷ் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன்.  1500 வார்த்தைகள் கொண்ட கட்டுரையைக் கூட அவசரத் தேவை கருதி ஒரே இரவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்புபவர்.  அவர் இருந்திருக்காவிட்டால் ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவில் நான் எழுதியிருக்கவே முடியாது.  ப்ரஸன்னா அமெரிக்காவில் மிகவும் பிஸியான ஒரு வேலையில் இருப்பவர்.  அவர் ஔரங்ஸேப் நாவலுக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறார்.  இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் என் இயக்கத்துக்கு உதவியாக இருக்கிறார்கள்.  மற்றபடி நம் தளத்துக்கு சந்தாவோ நன்கொடையோ ஒரு பைசா கொடுக்காமல், உழைப்பை நல்காமல் என்னை சந்திக்க வேண்டும் என்று விருப்பப்பட்டால் அதற்கு என்ன அர்த்தம்?

என் எழுத்தும் இலவசமாக வேண்டும்.  நானும் உங்களைச் சந்திக்க வேண்டும்.  அதாவது, என் நேரமும் உங்களுக்கு இலவசமாக வேண்டும்.  இது என்ன நியாயம்? 

இங்கே வளன் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.  பாதிரியாரின் அங்கியில் யேசு கிறிஸ்துவின் பெயரோடு சாரு நிவேதிதாவின் பெயரையும் எழுதிக் கொண்டவன்.  பத்தாம் வகுப்பு மாணவனாக இருக்கும் காலத்திலிருந்து என் வாசகன், என் நண்பன், என் புதல்வன்.  திடீரென்று அவனிடமிருந்து ஒரு பெரிய தொகை வந்தது.  ஒரு ஆண்டு இருக்கும்.  என் முதல் மாத ஊதியத்திலிருந்து உங்களுக்கு அப்பா என்று மெஸேஜ் அனுப்பினான்.  பாதிரியார்களுக்கு என்ன ஊதியம் கிடைத்து விடும்?  அவன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள என் வீட்டுக்கு அருகே வந்து நின்று கொண்டு உங்களைப் பார்க்க முடியுமா என்று போன் செய்தான். 

வீட்டில் நிலைமை சரியில்லை.  நாய் பூனைகளுக்கு சேவகம் செய்யும் ஒரு எடுபிடி நான்.  ஒரு மணி நேர அனுமதிக்கே மூன்று நாட்களுக்கு முன்பு சொல்ல வேண்டும்.  அது மட்டுமல்லாமல் முந்தின நாள்தான் இரவு எட்டு மணிக்குத் திரும்புவதாக சத்தியப் பிரமானம் கொடுத்து விட்டு நள்ளிரவு இரண்டு மணிக்குத் திரும்பியிருந்தேன்.  இந்த ஜென்மத்தில் ஆண்களாகப் பிறந்தவர்கள் எல்லாம் அடுத்த ஜென்மத்தில் பெண்களாகப் பிறக்க வேண்டும் என்று சாபம் கொடுத்துக் கொண்டிருந்தாள் என் மனைவி.  (நான் பெண்ணாகப் பிறந்தால் லோகம் தாங்காதேம்மா என்று சொல்ல நினைத்தேன்.  சொல்லவில்லை.) அப்போதுதான் வந்தது வளன் ஃபோன். 

தம்பி, இப்போது நிலைமை சரியில்லை, பிறகு பார்ப்போம் என்று சொல்லி விட்டேன்.  அன்றைய தினமே அமெரிக்கா கிளம்பி விட்டான்.   அதற்குப் பிறகுதான் கொரோனா.  பார்த்தே ஐந்து ஆண்டுகள் இருக்கும்.  இப்படித்தான் வாழ வேண்டியிருக்கிறது. 

இதைப் படித்து உங்கள் மனதில் என்ன சித்திரம் கிடைக்கிறதோ அது தவறு.  நான் எப்போது வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம்.  ஆனால் முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும்.  அனுமதி வாங்காமலும் செல்லலாம்.  வீட்டின் லயம் கெட்டுப் போகும்.  லயம் கெட்டால் நான் அமைதியாக எழுத முடியாது. 

”என்ன இது, சாரு ஒரு டெரர் ஆயிற்றே, ஏன் 70 வயதில் இப்படி பயந்து பயந்து வாழ்கிறார்?” என்று ஒரு நண்பர் கேட்டார்.  எனக்கு எழுத்து மட்டுமே முக்கியம்.  அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்.  எத்தனை சிரமங்களையும் பொறுத்துக் கொள்வேன்.  என் ஈகோ, என் சுதந்திரம் எதுவுமே முக்கியம் அல்ல.  எழுதுவதற்கான லயம் மட்டுமே முக்கியம்.

என் ஹார்ட் ஸ்பெஷலிஸ்டைப் பார்க்க வேண்டுமானால் ரெண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.  மூவாயிரம் ரூபாய் கட்டணம் கட்ட வேண்டியிருக்கிறது.  நண்பர் என்னடாவென்றால், படு சாதாரணமாக உங்களைப் பார்க்க வேண்டும் என்கிறார்.  போயும் போயும் ஒரு உடம்பை கவனிக்கும் டாக்டருக்கு இத்தனை மரியாதை.  இவ்வளவு பெரிய கட்டணம். உங்கள் ஆன்மாவையே கவனித்துக் கொள்ளும் இலக்கியவாதி எல்லாவற்றையுமே உங்களுக்கு ஓசியில் தர வேண்டுமா? 

ஜக்கியின் ஆசிரமத்தில் தியான அறையைப் பார்க்கப் போனேன்.  அப்போது மகாயோகி சிலை கட்டப்பட்டிருக்கவில்லை.   தியான அறையைப் பார்த்து விட்டு வெளியே வரும்போது சுமார் இருபது பேரழகிகளும் பத்து யுவர்களும் என்னிடம் உண்டியல் குலுக்கி இந்த மகா பெரிய விஷயத்துக்குப் பங்களியுங்கள் என்று கேட்டார்கள்.  ஒவ்வொருவராக.  முதலில் ஒரு பெண்.  அவரைக் கடந்தால் இன்னொரு பெண்.  அவரைக் கடந்தால் இன்னொரு பெண்.  எதுவும் கொடுக்காமல் இத்தனை பேரையும் தாண்டிப் போவதற்குக் கடும் சித்தம் வேண்டும்.  நான் பொய் சொல்லவில்லை.  கண்டதை எழுதுகிறேன். 

இத்தனையும் ஒரு தியான அறையைப் பார்த்துச் சென்றதற்கு.  ஜக்கியை சந்திக்க வேண்டுமானால்?

அன்பரே, நான் ஜக்கியை விடப் பெரிய ஆள்.  நான் சொல்லவில்லை.  மஹா பெரியவர் சொல்கிறார்.  ஆன்மீகவாதிகளை விட எழுத்தாளர்களும் கவிகளும்தான் பெரியவர்கள் என்கிறார் அந்த ஞானி.  ஒரு மொழியையும், கலாச்சாரத்தையும், நிலத்தின் அடையாளத்தையும் காப்பாற்றுபவர்கள் எழுத்தாளர்களே என்கிறார் அவர்.

அப்படிப்பட்டவர்கள் உங்களுக்கு இலவசமாக எழுத்தையும் கொடுத்து, உங்களைச் சந்திப்பதற்காகத் தங்கள் நேரத்தையும் கொடுக்க வேண்டும், இல்லையா? 

என்னை சந்திக்க வேண்டுமானால் என்னுடைய இருபது பூனைகளுக்கும் (கீழே பத்து, வீட்டில் பத்து) ஒரு வார உணவுக்கான செலவை ஏற்க வேண்டும்.  சந்திக்கிறேன்.  ஒரு வார செலவு 12,500 ரூ.